முதல்வன் எனும் கனவு

அருகாமையில் உள்ள நகரத்தின் நெரிசல்களை தொலைத்திருந்த அந்த கிராமத்தின் பசுமையை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்து அச்சாலை. நண்பகல் வெயிலும், பசுமையும் சேர்ந்து ஆள் அரவமற்றிருந்த அத்தார்ச் சாலையின் பளபளப்பை மெருகேற்றியிருந்தன. சாலையின் ஒரு முனை முடிவற்று சென்று பசுமையை முழுதும்  போர்த்தியிருந்த பெரிய மலையின் அடிவாரத்தை தொட்டு, அதன் முகட்டிலிருக்கும் தெய்வத்தை நோக்கி பயணிக்க எத்தனிப்பது போலிருந்தது. ரம்யமான இப்பொழுதின் அமைதியை சன்னமாக கிழித்தவாறு புகழேந்தி தன்னுடைய மோட்டார் சைக்கிளில், அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். அணிந்திருந்த அடர் சிவப்பு நிற சட்டையை தன்னுள் மென்மையாக கவ்வியிருந்த க்ரீம் கலர் பேண்ட் (Allen Sollyன் friday dressing?) அவனை மேலும் இளமையாக்கியிருந்து. அந்த கிராமத்தில் இருக்கும் புகழேந்தியின் காதலி இதில் சொக்கிப் போகலாம். ஆனால், தன் நெல் அறுவடையை அப்போதுதான் முடித்திருந்த ஒட்டு மொத்த கிராமமுமே சொக்கிப் போவதற்குத் தகுதியானவராக இருந்தார் புகழேந்தி.

ஒரே நாளில், பெரும்பான்மையான மக்களின் பிரச்சனையை அரசாங்கம் எப்படித் தீர்க்க முடியும் என்பதை, தன்னை ஆள்பவர்களை தன்னுடைய தெய்வமாக கருதும் சாமானியனின் பார்வையிலிருந்து கனவு கண்ட படமிது. தன்னுடைய சீர்திருத்தங்களால் பலனடைந்த அந்த கிராமத்து விவசாயி, மலை முகட்டிலிருந்த தெய்வத்திற்கு படைக்க வேண்டிய முதல்படி நெல்லை நன்றியுணர்ச்சியில் கலங்கிய கண்களுடன் தனக்கு வழங்கியதை தானும் கலங்கி தன்னுடைய சட்டையில் வாங்கிக் கொள்கிறார் புகழேந்தி. ஆள்பவர்களை எப்போதும் தெய்வங்களாகக் கருதும் மரபின் வெளிப்பாடிது. நம்முடைய அனைத்து பலவீனங்களையும் மறைத்துக் கொண்டு சாய்வதற்கு வசதியான தோள்கள் இத்தெய்வங்கள். 

மகத்தான முயற்சிகளுக்குப் பின் அடைந்த வெற்றி, அதற்கு ஈடாக கொடுத்தவற்றை அல்லது இழந்தவற்றை கொண்டுதான் இங்கு மதிக்கப்படுகிறது. IITல் இடம் வாங்குவது தொடங்கி, நாட்டை ஆளுவது வரை உள்ள அனைத்து வெற்றிக்கும் இது பொருந்திப் போகிறது. புகழேந்திக்குக் கிடைத்த ஒரு நாள் முதல்வர் வாய்ப்பிற்காக, அவர் தன்னுடைய வாழ்நாளில் இழந்தது அந்த ஒரு நாளை மட்டும்தான். மனதளவில், அவர் இன்னமும் தன்னை தான் வாழும் ஒரு சமூகத்தின் அங்கமாகத்தான் எண்ணுகிறார். சுற்றியிருப்பவர்களின் கண்களும், உடல் மொழியும் அவரை முதல்வராக அங்கீகரிக்காதது புகழேந்தியின் கூடுதல் பலம். இழப்புகளைப் பற்றிய கவலையோ, வரப்போகிற பொன்னுலகம் பற்றிய கனவோ இல்லாமல் தனக்கிடப்பட்ட பணியை செய்வதில் மட்டுமே குறியாக இருந்தது இயல்பாகவே புகழேந்தியை தெய்வத்திற்குச் சமமாக்கியது.

ஆனால், அரங்கனாரின் இழப்புகள் சாமானியர்களுக்கு தெரிவதில்லை. இவ்விழப்புகள், அவர் அடைந்த வெற்றியை நோக்கி அறை கூவிக் கொண்டே இருக்கின்றன. வெற்றியால் கிட்டிய பதவியை, இழப்புகள் தான் வழி நடத்திச் செல்கின்றன. இதனால்தான், முதல்வரின் இருக்கையையும், கீரிடத்தையும்  எப்போதும் குத்திக் கொண்டிருக்கும் முள் என்கிறார். இந்த இழப்புகள்தான், வெற்றியாளர்களை ஆளும் தெய்வங்கள். இத்தெய்வங்களை உதறும்போதுதான், அவர்கள் மக்களின் தெய்வங்களாக முடிகிறது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s