ஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல் பத்திகளின் இரண்டாவது வரிகளில் அல்லது இரண்டாவது பத்திகளின் ஆரம்பங்களில் நிகழ ஆரம்பிக்கும் இந்த உருமாற்றம், கதைகளின் இறுதி வரிகளில் நம்மை ஒரு துளியென அவருடைய கதைமாந்தர்கள் முன் நிறுத்தி விடுகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகள், தொடர்ந்து இவர் போன்ற எழுத்தாளர்களை கண்டு கொள்வதில் ஆச்சரியமில்லை.
கடந்த வருட விஷ்ணுபுர விருது விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்ட சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் வாசகர் சந்திப்பு, அவரை ஒரு முன் தயாரிப்பற்றவராகக் தான் காட்டியது. இயல்பான மற்றும் பதற்றமேதுமற்ற அல்லது பதற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாத அவருடைய உடல்மொழி என்னை இப்படி ஒரு முன்முடிவிற்கு இட்டுச் சென்றிருக்கலாம். அவர் கதைகளில் நிகழும் உருமாற்றத்தை அவரிடம் மேடையில் காண முடியவில்லை. நிகழ்வின் ஆரம்பத்தின் போது இருந்த அதே இயல்பு இறுதி வரைக்கும் தொடர்ந்தது. இந்த வருடம் விஷ்ணுபுர விருதையும் பெற்றிருக்கிறார்.
இவருடைய சிறுகதைத் தொகுப்பான ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் தான், இங்கு நான் பகிர்நது கொள்ளும் என்னுடைய அவதானிப்புகளுக்கு காரணம். இத்தொகுப்பிற்கான கதைகளைத் தேர்ந்தெடுத்த எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் முன்னுரை கதைகளைவிட நீண்ட செறிவான ஒன்று. ‘நடன மங்கை’, ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’, ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’ போன்ற கதைகளைப் படித்து முடித்த பிறகுதான் அந்த நீண்ட முன்னுரையின் முக்கியத்துவம் புரிந்தது.
இந்த முன்னுரையில் வரும், “எதுவுமே புனிதம் அல்ல எனும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் வாழ்க்கைத் தரிசனம் குடும்பம் எனும் அமைப்பின் உன்னதப்படுத்துதலையும் கேள்விக்கு உட்படுத்துகிறது” என்பதை இத்தொகுப்பிலுள்ள நிறைய கதைகளில் நம்மால் உணரமுடிகிறது. ‘ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பெண்’ என்ற கதையில் விபச்சாரத் தொழிலில் உள்ள பெண்ணிடம், கல்யாணமாகாதவரும், அவருடைய கல்யாணமான நண்பரும் ஒரு சில மாதங்கள் ஒப்பந்தம் போடுவது சற்று திடுக்கிட வைக்கிறது. கல்யாணமாகாத நண்பர் நிறைய வருடங்களுக்குப் பிறகு இன்னமும் அதே இளமை வனப்புடன் இருக்கும் தங்கள் வாடகை மனைவியை சந்திக்க நேரும் போது அவர்களிருவரையும் பற்றி பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறாள். தான் இப்போது மிகவும் நல்ல நிலைமையில் இருப்பதையும், அவர்களிருவருக்குப் பிறகு தன் வாழ்வில் நடந்த அனைத்துத் திருப்பங்களையும் அவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். உங்களிருவரிடம் இருக்கும்போது மட்டுமே எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், அது நடக்கவில்லை என்று கூறிய மறுகணத்திலேயே, தான் ஏறிச் சென்ற காரின் பின்னால் அமர்ந்திருந்த இளம் பெண்ணை உங்களிருவரின் மகள் தான் என்ற பொய்யை உண்மையாச் சொல்லிச் செல்கிறாள். வாசகர்களாகிய நாமும் சற்றுநேரம், கல்யாணமாகாத, ஆனால் தற்போது கல்யாணமாகி இருக்கும் அந்த நண்பனைப் போலத் தடுமாறி அவள் செல்லும் காரை நோக்கி கொண்டிருக்கிறோம். விபச்சாரிகள் பற்றிய இக்கதையில், விபச்சாரி என்ற சொல்லே எங்கும் இருக்காது.
பேருந்தின் பயணத்தை அனுபவிக்காமல், அதில் நுழைவதற்குக் கிடைத்த பயணச்சீட்டின் வடிவமைப்பு பற்றி ஆராய்பவர்களாக கோட்பாட்டு விமர்சகர்களை உருவகித்திருந்த ஒரு கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்ததை ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ கதையை படிக்கும்போது நினைவு கூர முடிந்தது. கோட்பாடுகளை விட, அதை தங்கள் பதாகையாக ஏந்தி நிற்கும் கோட்பாளர்களை தன் நுண்பகடியால் சீண்டியிருக்கிறது இக்கதை.
இவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தங்கள் மன ஓட்டங்களை நடித்துப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அது நிகழ்வது போலவே சிறிது நேரம் நம்மை நம்ப வைக்கும் உத்தி ஆச்சரியமான ஒன்று. ‘நடன மங்கை’ கதையில், அவளின் நடன அசைவுகளில் மயங்கி அவளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அங்கு செல்லும் வழியில் அவ்வாறு திரும்பினான் என்று ஒரு பத்தி தொடங்கும். அந்த நடன மங்கையின் வீட்டையும், அவளின் நிலைமையையும் சிக்கனமான சொற்றொடர்களில் செறிவாக சித்தரித்து விட்டு அப்பத்தி முடிந்தவுடன், மீண்டும் அவ்வாறு திரும்பினான் என்று அடுத்த பத்தி தொடங்குகிறது. ஏதோ அச்சுப் பிழை என்றே தோன்றியது. ஆனால் அந்தப் பத்தி அவளைப் பற்றிய முற்றிலும் வேறொரு சித்திரத்தை அளிக்கும். இப்படி மூன்று நான்கு வெவ்வேறு சித்தரிப்புக்களைத் தன்னுள் ஓட்டிக்கொண்டே இன்னமும் அவ்வாறு திரும்பாமலே நிற்கிறான் அந்த நடன மங்கையின் அசைவுகளில் கிரங்கியவன்.
கையில் இருக்கும் காசைவிடச் சிக்கனமாக தன்னுடையச் சொற்களை செலவழித்திருக்கிறார். ‘அவரவர் வழி’ என்னும் கதையில் எதிர்பாராத விதமாக தன்னுடைய பால்ய காதலியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கிறார் ஐம்பதுகளைக் கடந்த ஒருவர். இச்சந்திப்பு அவருடைய மனைவி, மகள் மட்டும் அவர் காதலியின் மகன் ஆகியோருடன் தான் நடக்கிறது. ஒரு நீண்ட அறிமுக உரையாடலை எதிர்பார்க்கும் போது, ஓரிரு வரிகள் அடங்கிய பத்தியில் அனைத்து அறிமுகத்தையும் அவரே முடித்து விட்டு அந்த எதிர்பாராத சந்திப்பில் இருவரும் திளைக்க ஆரம்பிக்கிறார்கள். அந்த பரவசத்தில் தன்னுடைய எஞ்சியிருக்கும் வனப்பைக் காட்டுவதற்கு இருக்கும் ஒரே அறிகுறியான கூந்தலை முன்னால் இழுத்துப் போடுவதை ரசித்துக் கொண்டே அந்த பயணத்தை இருவரும் வெகு இனிமையாக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி தன்னுடைய வித்தியாசமான கூறுமுறையாலும், புதிர்தன்மையாலும், நுண்பகடிகளாலும் இத்தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கும்படி செய்திருக்கிறார் சுரேஷ்குமார் இந்திரஜித்.
சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் தமிழ் விக்கி பக்கம்:
[…] […]
LikeLike