
வேலைப் பிரிவினை, குலங்களின் அடையாளமாக, வர்ணமாக, சாதியாக உருமாறி உறைந்திருக்கும் கிராமம் அது. கிட்டத்தட்ட, அன்றைய காலகட்டத்தில் இப்பிரிவினை (division of labour) என்பது சாதியாக மாறியதை மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி என்று தங்களுக்குள் நியாயப்படுத்திக் கொண்டவர்களைப் போலத்தான் அக்கிராமத்திலுள்ள பிராமணர்களும், தேவர்களும் மற்ற பிற சாதியினரும் இருக்கிறார்கள்.
வேதம் புதிதில் பாரதிராஜா காண்பிக்கும் இக்கிராமம் சாதி வெறியால் எப்போதும் கொதிநிலையில் இல்லாமல், தங்களின் வேலையையும் மற்றவர்களின் வேலையையும் அவரவர்களுக்கான விதி என ஒத்துக் கொள்பவர்களாக ஒரு சமநிலையில் இருக்கிறது. அதே சமயத்தில், தான்/பிறர் என்ற உள்ளுணர்வை தக்கவைத்துக் கொள்ளும் ஆச்சாரங்களை சிரத்தையாக கடைப்பிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பசும்புல் நிறைந்த பரப்பில் சுவாரஷ்யமாக மேயும் மாட்டின் மீது எந்த சலனமுமின்றி அமர்ந்திருக்கும் காகத்தின் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
வேதம் தனக்குத் தந்த எல்லைகளைத் தாண்டி வாழ்க்கை என்ற ஒன்று இருக்கமுடியாது என்ற தன்னுடைய நம்பிக்கையில் உள்ள உறுதியை எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் வெளிப்படுத்தும் சாருஹாசன். வேதத்தை விட, அதை ஓதுபவர்கள் மீது பற்றும், அது நோக்கி ஓதப்படும் கடவுள் மீது உறுதியான நம்பிக்கையின்மையும் கொண்டவராக சத்யராஜ். பெரும்பாலும், புன்னகையுடனும் நட்புடனுமே ஒருவரை ஒருவர் கடக்கிறார்கள்.
ஆனால் இந்த நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் இணைந்து காவு வாங்குவது அவர்களுடைய வாரிசுகளின் காதலைத் தான். அமலாவைப் பார்ப்பதற்காகவே அவர் வீட்டிற்கு வேதம் கற்கச் செல்லும் ராஜா. அவர் வேதம் கற்காமல் பட்டப் படிப்பு படித்தார் எனபதற்காகவே, அவர் மேல் ஈர்ப்பு கொள்ளும் அமலா என முரண்களின் காதல். தம்முடைய எல்லைகளையே தங்கள் வாரிசுகளுக்கும் கொடுக்க நினைக்கும் பெற்றோர்களால் உருவாக்கப்படும் முரணிது.
இந்த எல்லைகளுக்கு தன் வாரிசுகளைப் பழக்க முடியாத பெற்றோர்கள் சாருஷாசன் போல் தங்களுடைய சமூகத்தின் முன் தோற்றுப் போனவர்களாக நிற்கிறார்கள். விருப்பமில்லா கல்யாணத்தை தவிர்ப்பதற்காக தனக்கு பொய்யான ஈம காரியங்களை அக்கிராமம் செய்யும் படி செய்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறார் அமலா. ஆனால், இதன் பின்விளைவுகளால் தன் காதலனையும், தந்தையையும் ஒரு சேர இழக்கிறாள்.
வேறு வழியின்றி, தன் தம்பி சங்கரனோடு மகனை இழந்திருந்த சத்யராஜின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். இறந்ததாக முடிவு செய்யப்பட்டு அதற்கான வேதச் சடங்குகள் செய்யப்பட்ட ஒருவர் உயிரோடு திரும்பி வருவதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேதத்தை மதிக்கும் சத்யராஜுக்கு இருந்தாலும், வேதங்களைப் போற்றி அதனுள் உறைந்திருக்கும் வைதீகர்களுக்கு வரவில்லை. பிராமணரல்லாத வீட்டில் தஞ்சம் அடைந்த காரணத்தினாலேயே சங்கரனுக்கு வேதம் கற்றுக் கொடுக்கவும் மறுக்கிறார்கள். இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு முன் தாங்கள் நம்பும் வேதம் திகைத்து நிற்பது போலவே வைதீகர்களும் திகைத்து நிற்கிறார்கள். இதை ஒரு மீறலுக்கான வாய்ப்பாக எடுக்கும் துணிவு சங்கரனுக்கு வருவதாக படத்தை முடித்திருக்கிறார் பாரதிராஜா.
வன்முறைக் காட்சிகளுக்கான நிறைய வாய்ப்புகள் இருந்தும், சாருஹாசனின் உருண்டு மிரண்ட விழிகளையும், சத்தியராஜுன் முகத்துடிப்பை மீறிய மீசைத் துடிப்பையும் தான் இந்தப் படம் பெரிதும் நம்பியிருக்கிறது. எல்லா சாதியினரிடமும் எல்லா வகையான மனிதர்களும் உண்டு என்ற நடுநிலைத் தன்மையை காட்சிப் படுத்துவதில் மிக சிரத்தை எடுத்துக் கொண்டதால், இந்த வன்முறைகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன.
அத்வைதம் (அனைத்தும் ஒன்றே என்ற தத்துவம்) தந்த ஆதி சங்கரரை நினைவில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ஆவணப் படம் (Documentary Film) போல் ‘வேதம் புதிது’ தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை.