பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

கருத்தியலின் கூர்மை, கத்தி போன்ற கூர்முனை கொண்ட ஆயுதத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்கிறது ஜெயமோகன் அவர்களின் ‘பின் தொடரும் குரலின் நிழல்’ நாவல். ஸ்டாலினால், ரஷ்யாவில் ஏற்பட்ட அழிவுகளுக்கு அவர் முன்னெடுத்த ‘அரசு முதன்மைவாதம்’ தான் காரணம் என்று சோதிப்பிரகாசம் போன்ற மார்க்சிய அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஸ்டாலின் அதை செயல்படுத்துவதற்கு தன் கையில் வைத்திருந்த கருத்தியல் மார்க்சியம் எனும்போது அதன் கூர்மை நமக்கு அச்சமூட்டுகிறது என்கிறார் ஜெயமோகன்.

மார்க்சியம் மட்டுமல்ல, எந்த கருத்தியலும் மேலும் மேலும் கூர்மை கொள்ளும் போது அதைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்ச்சியே கருத்தியலை விட மிக முக்கியமாகிறது என்கிறது பொதுமைப் படுத்தப்பட்ட மார்க்சியத்தில் உள்ள குறைகளை நெருங்கி அறிய முயலும் இந்நாவல். ‘போர் புரிக பார்த்தா’ என்பதற்கும் ‘புரட்சி செய்யுங்கள் தோழர்களே’  என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

புனித பிம்பத்தை அறிதல்

பொதுவாக தத்துவங்கள், அது உருவாக்கும் கருத்தியலை கூர்மை செய்து கொள்ளும் முயற்சியின் உபவிளைவுதான் சித்தாந்தங்கள். ஒரு நம்பிக்கையை பல்வேறு வழிகளில் திரும்பத் திரும்பச் சொல்வதின் மூலம் அந்த நம்பிக்கையில் உள்ள ஓட்டைகள் அடைபட்டு சித்தாந்தமாக இறுகிப் போய்விடுகின்றன. இதன் மேல் கட்டி எழுப்பப்படும் புனித பிம்பங்களை ஊடுறுவி அந்த நம்பிக்கையின் ஓட்டைகளை அறிந்து கொள்ள முயல்கிறது இந்நாவல்.

அருணாச்சலம் என்ற தொழிற்சங்கவாதியின் வழியாக இந்நாவல் தொடங்கி தொடர்ந்து பயணிக்கிறது. சங்கமற்ற ரப்பர் தோட்டத்து தொழிலாளர்களை ஒன்று திரட்டி பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி அவர்களை ஒரு சங்கத்தின் கீழ் ஒன்றிணைத்தவர் அருணாச்சலத்தின் குருவும், வழிகாட்டியும், தலைவருமான கெகெஎம். தொழிலாளர் வர்க்கத்தை சமரசமற்ற புரோலட்டேரியன்களாக உருவாக்கும் கம்யூனிச தொழிற்சங்களில் ஒன்றாக கெகெம் அதை ஆத்மார்த்தமாக வளர்த்தெடுக்கிறார். தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் இதற்காக அர்ப்பணிக்கிறார். இவரை இயக்குவது மார்க்சின் இயங்கியலும், ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொண்ட உறுதியும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஆனால் அடைவதற்கு பொன்னுலகமிருக்கிறது’ என்ற புனிதக் கூற்றில் புதையுண்டவராக இருக்கிறார் கெகெஎம். புரட்சி வருவதற்கான அறிகுறிகள் இல்லாததையும், தொழிலாளர்களின் சமகால மனநிலைகளையும் உணர்ந்த போதும் அவர்கள் கற்பிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமே என்ற வறட்டு பிடிவாதத்தில் இருக்கும் கெகெஎம்மை தலைமைப் பதவியிலிருந்து அகற்றி விட்டு அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அருணாச்சலத்தை அப்பதவியில் அமரவைக்கிறது கட்சியின் மேலிடம். இதை ஜனநாயகம் என்ற பெயரில் இன்னொரு கம்யூனிச அறிவுஜுவியும், சமகாலத்தின் மாற்றங்களை புரிந்து கொள்வதில் கம்யூனிச அறிவுஜீவித்தனம் ஏற்படுத்தும் தடைகளைக் கடந்த எதார்த்த வாதியுமான கதிர் என்பவரின் மூலம் கட்சி செய்து முடிக்கிறது.

கெகெம் மரபுகளில் புதைந்து போயிருக்கும் அடிப்படைவாதி என்றால், கதிர் அதன் மேல் தைரியமாக ஏறி நின்று கொண்டு சமகாலத்தை உற்றுநோக்கும் நவீனம் புரிந்த ஒரு எதார்த்தவாதி. 

அருணாச்சலத்தின் இருமை

கெகெஎம் போல் நிலை சக்தியாகவும் இருக்க முடியாமல், கதிர்போல் எதிர்சக்தியாகவும் இருக்க முடியாமல் ஒரு கொடிய இருமையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் மனநிலை அருணாச்சலத்துடையது. கெகெஎம்மை பதவியிலிருந்து நீக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அறிந்த பின்பும், உள்ளூர அதை விரும்பியவனாகவே இருக்கிறான். தொழிலாளர்களுக்குத் தேவை புரட்சியோ, பொன்னுலகமோ அல்ல; முதலாளிகளையும், ஏற்கனவே புரோலட்டேரியன்களாக உள்ள தொழிலாளிகளையும் இணைக்கும் சங்கங்கள் தான் என்ற கதிரின் கூற்றை உள்ளூர விரும்பினாலும் கெகெஎம்மின் பதவியை அடைந்தபிறகு அவரைப் போலவே தொழிலாளிகளை பேணிக் காக்கும் அவர்களின் நோயறியா மருத்துவராகத் தான் இருக்க முயல்கிறான்.

கதிர் வலியுறுத்திய உட்கட்சி ஜனநாயகம் தனக்கு சாதகமாக இருக்கும்போது உள்ளூர மகிழ்ந்த அருணாச்சலம், தனக்கு பாதகமாக ஆகும் சூழ்நிலையை நினைத்து கவலை கொள்கிறான். தான் எப்போதுமே மேலே இருந்து கொண்டிருக்க முடியாது என்ற ஜனநாயக நிதர்சனத்தை கதிர் வலியுறுத்தியும் அதை புரிந்து கொள்ள முடியாத மனநிலையோடு, தான் கெகெஎம்முக்கு செய்த துரோகமும் இணைந்து கொள்ள குற்றமனப்பான்மை புயல் காற்றிலாடும் பனைஓலைகள் போல் ஓலமிடுகிறது அருணாச்சலத்தின் மனதில்.

நாகம்மை – இழுத்துக் காக்கும் சக்தி

அருணாச்சலம் தன்னுடைய இருமைகள் அனைத்தையும் கலைந்து வைக்கும் இடம் தன் மனைவி நாகம்மையிடம் மட்டுமே. தன்னுடைய அறிவுஜுவித்தனத்தை ஒரு மெல்லிய புன்னகையால் மட்டுமே கடந்து செல்லும் அவளுடைய நடைமுறை சார்ந்த புத்திக்கூர்மை எப்போதுமே அவனுக்கு ஆச்சரியத்தையும், அவள் மேல் ஒரு சந்தேகத்தையும் ஒரு சேர அளிக்கிறது. மார்க்ஸின் மூலதனம் பெரும்பாலும் எண்ணெய் பாட்டிலையும், நாகம்மையின் தலைமுடிகள் படிந்த சீப்பையும் ஏந்தியதாகத்தான் உள்ளது.

நிறைய நேரங்களில் மார்க்சியத்தால் நடைபெற்ற புரட்சிகளை பெண்கள் பெண்களாக இருந்து நடத்தியிருந்தால் இத்தனை அழிவுகள் நடந்திருக்காதோ என்று எண்ண வைப்பவளாக நாகம்மை இருக்கிறாள். பெண்கள் ஆண்களின் பதாகைகளை ஏந்தி வருபவர்களாகவும், ராணுவத்தைப் புணர்ந்து ராணுவத்தை உருவாக்கும் யோணியை ஏந்தியவர்களாகவும் தான் புரட்சிகளில் பங்கு கொள்கிறார்கள்.

தங்களால் எதையும் சுமந்து உருவாக்க முடியாத மலட்டுத் தனம்தான் ஆண்களை புரட்சி என்ற ஒன்றின் மூலம் தங்கள் தூலத்தை நிரப்பி உப்பிக் கொள்ளச் செய்கிறதோ என்பது போன்ற சித்தரிப்புகள் ஆண்களின் புரட்சியை வெற்று ஆணவமாக உருவகிக்கின்றன. அதிலும் குறிப்பாக, சிவனும், விஷ்ணுவும் சக்தியின் இரு உருவங்கள் தான்; தன்னிலிருந்து எழுந்து ஆர்ப்பரித்து முட்டி மோதி வானத்தை தொட்டுவிடலாம் என்பவர்களை சக்தி ஒரு புன்னகையுடனே கடக்கிறாள் என்று அருணாச்சலம் எண்ணுவது, தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடனைச் செய்ய இன்னமும் மறுத்துக் கொண்டிருக்கும் கம்யூனிசவாதியான அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘வெண்முரசு-கிராதம்’ நாவலில் வரும் சர்வகல்வித மாமேகம் நான்யஸ்தி சனாதனம் என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இத்தனை புரிந்தும், நாகம்மை தன் லட்சியவாதத்தை, அதன் பொருட்டு சுவீகரித்துக் கொண்ட அறிவுஜீவித்தனத்தை நினைத்து பெருமை கொள்ளாததை ஏன் ஏற்க முடியவில்லை என்ற குழப்பத்திற்கு விடை தன்னுள் உருவாகியிருக்கும் அதிகார வேட்கை தான் என்பதை அருணாச்சலம் உணரும் தருணம் இந்நாவலின் பேசுபொருளை நுட்பமாக சுட்டிக் காண்பிக்கிறது. இந்த வேட்கைக்கும், லட்சியவாதத்துக்கும் என்ன தொடர்பு. இந்த அதிகார வேட்கைக்கான உணவு நான் கொண்டிருக்கும் லட்சியவாதம் தானா? இதனை உண்டு செரித்துத்தான் இவ்வேட்கை என்னுள் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறதா? என்று மேலும் மேலும் இருமையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டே செல்கிறான். ‘வெண்முரசு – சொல்வளர்காடு’ நாவலில் தர்மருக்கு வரும் அறக்குழப்பங்கள் நினைவுக்கு வருகிறது.

மார்க்சியமும் பங்குச் சந்தையும்

கட்சி கெ.கெ.எம்மை ஏன் விரும்பவில்லை என்பதை கதிர் விளக்கும் இடங்கள், அருணாச்சலத்தின் இருமையைத் துலக்கிக் காண்பிக்கின்றன.  கதிரின் மார்க்சியம் மற்றும் லட்சியவாதம் பற்றிய வார்த்தைகள், தன்னுள் உள்ளூர நொதித்துக் கொண்டிருக்கும் தொழிற்சங்கம் பற்றிய அவநம்பிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதை அருணாச்சலம் உணர்கிறான்.

குறிப்பாக, லட்சியவாதத்தை நிகழ்காலத்தில் இருக்கும் திருப்தியின்மை + எதிர்கால பொன்னுலகக் கனவு + அதற்கான தியாகம் என கதிர் கட்டுடைத்து இப்போது தொழிலாளர்களுக்கு தேவை பொன்னுலக் கனவை அடையும் புரட்சியோ அல்லது தத்துவ அறிவோ அல்ல; நிகழ்காலத்தில் அவர்களுடைய தேவைகளுக்காக முதலாளிகளிடம் வாதாடும் ஒரு வக்கீல் தான் என்பது அருணாச்சலத்தை மிகவும் சீண்டுகிறது.

அப்போ மார்க்சியத்தால் எந்தப் பயனுமே இல்லையா என்ற அருணாச்சலத்தின் கேள்விக்கு கதிர் அளிக்கும் விளக்கங்கள் நமக்கும் பெரிய திறப்புக்களை அளிக்கின்றன. பொன்னுலகக் கனவான வர்க்கமற்ற சமூகத்தை தொழிலாளர்களை அறிவுஜீவிகளாக (புரோலட்டேரியன்கள்), தத்துவவாதிகளாக ஆக்குவதன் மூலம் அடைய முடியும் என்ற மார்க்சிய சித்தாந்தத்தின் லட்சியக்கனவு அதற்கான பலன்களை ஏற்கனவே அளித்து விட்டது. உலகெங்கும் உருவாகியிருக்கும் welfare states மற்றும் பங்குச் சந்தைகள் மார்க்சியத்தை கையில் வைத்திருந்த தொழிலாளர்களை முதலாளிகள் புரிந்து கொண்டதால் விளைந்தது. கிட்டத்தட்ட மார்க்சியம் உப்பரிகையில் இருந்த அதிகாரத்தை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்து வந்திருக்கிறது.  லட்சியவாதங்களை நோக்கிய பயணத்தில் கிடைத்த பயன்களிவை. ஆனால், சமகாலத்தில் மார்க்சிய சித்தாந்தத்தின் பயன் பூஜ்யம் என்கிறான் கதிர்.

பயணங்களின் அனுபவத்தைப் பொறுத்து, தன்னுடைய இலக்குகளை தேவைப்பட்டால் மாற்றிக் கொள்பவர்கள் அல்லது தங்களைப் புதுப்பித்துக் கொள்பவர்கள் அல்லது சமரச விரும்பிகள் மட்டுமே சமகாலத்தில் வெற்றிகரமாக இயங்க முடிகிறது என்பதைத்தான் கதிர் போன்றவர்கள் பிரதிபலிக்கிறார்கள். மனிதர்கள் நெகிழ்வானவர்கள் தான். ஆனால், அவர்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் நெகிழ்வற்றிருப்பது ஒரு முரண்தான். முதலாளித்துவம் இந்த நெகிழ்வுத்தன்மையை இழக்காததுதான் அதனால் தன்னை நீட்டித்துக் கொள்ள முடிகிறதோ என்றும் எண்ண வைக்கிறது.

குற்றமனப்பான்மையும் நீதியுணர்வும்

கதிருடனான உரையாடலுக்குப் பிறகு ஒரு தெளிவு பிறந்திருக்கிறது என்பதை அறையை விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கியதும் உணர்கிறான் அருணாச்சலம். அத்தெருவில் இருக்கும் ஒழுங்கற்ற ஒருங்கமைவே நிதர்சனம். இதில் கரைந்துவிடத் தான் மனம் விரும்புகிறது. இதில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் அல்லது தன் பார்வைக்கு கிட்டியதாக இருக்கும் ஒழுங்கை அத்தெரு முழுவதும் வியாபிக்க முயலும் சிறுபிள்ளைத்தனத்தைத் தான் இந்த சித்தாந்தங்கள் செய்ய முயல்கின்றன என்பது புரிய ஆரம்பிக்கிறது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் சரி, மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் சரி.

நமக்கு கிட்டிய இந்தத் தெளிவு அருணாச்சலத்திற்கும் கிட்டுகிறது. ஆனால், அவனுடைய இருமை தொடர்ந்து இந்தத் தெளிவை கலைத்துப் போட்டுக் கொண்டே இருக்கிறது. மார்க்சியம் தந்த நீதியுணர்வு (Thesis), அது தந்த அதிகார வேட்கை (Antithesis) என்ற முரண்களிடம் சிக்கி ஹெகலின் இயங்கியல் அவதானித்தது போல் மேம்பட்ட (syntheis) ஒன்றை அருணாச்சலம் அடையவில்லை. இவ்விரு முரண்களின் இயக்கம் அருணாச்சலத்தை குற்றமனப்பான்மைக்கே இட்டுச் செல்கிறது. இதிலிருந்து எப்படியாவது வெளிவந்து விட வேண்டுமென்று எண்ணி அவன் சிக்கிக் கொள்ளும் இடம்தான் வீரபத்திரபிள்ளை என்ற கட்சியிலிருந்து விலக்கப்பட்ட நீதியுணர்வு கொண்ட ஒரு கம்யூனிசவாதி. வறுமையும், பாதுகாப்பில்லாத இளமைப் பருவமும் அதை வெல்வதற்கான முயற்சியும் வீரபத்திர பிள்ளையை சிறந்த வாசிப்பாளராகவும், இலக்கியவாதியாகவும், வாசிப்பற்ற கெ.கெ.எம்மிற்கு மிகவும் பிடித்தவராகவும் ஆக்கியிருக்கிறது.

கொள்கை வேறு; நடைமுறை வேறு

கட்சியில் வீரபத்திரன் என்ற ஒருவர் இருந்ததற்கான சான்றே அழிக்கப்பட்டிருப்பதை எழுத்தாளர் சுந்தர ராமசாமி மூலம் அறிந்து கொள்ளும் அருணாச்சலம் விபரீதமடைகிறான். இவ்விருவருக்கும் நடக்கும் உரையாடல்கள் அருணாச்சலத்தின் மார்க்சியம் சார்ந்த இலக்கிய ரசனையை வெளிப்படுத்துகின்றன. இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் முதிராத, ஆனால் தான் முதிர்ந்து விட்டது போல எண்ணும் விஷ்ணுபுரம் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனும் இருக்கிறார்.

கிட்டத்தட்ட தருக்கமும், கற்பனையும் ஒன்றையொன்று உரசிப்பார்க்கும் தீவிரமான அறிவார்ந்த உரையாடல். நிலையான தருக்கத்திற்கும், மாறிக் கொண்டேயிருக்கும் கற்பனைகளுக்கும் இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதுதான் நாவல் என்ற புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது இவ்வுரையாடல். இதுவே நாவல் ரஷ்ய நிலப்பரப்புக்குள் செல்லும் போது தருக்கத்திற்கு சிறகுகளும்; படிமங்களுக்கு கால்களும் வழங்கும் ஒரு கலைப்படைப்பு தான் நாவல் என்றும் வரும். மார்க்ஸூம், புஷ்கினும் சந்திக்கும் புள்ளிதான் தஸ்தயேவ்ஸ்கி என்ற வரிகள் என்னளவில் நாவல் மற்றும் நாவலாசிரியர்கள் பற்றிய மகத்தான புரிதல் என்பேன். புரியாத ஏதோ ஒன்று புரிந்ததாய் நம்மைக் கிடந்து துள்ள வைப்பவை.

ஸ்டாலினிசத்தின் குறைகளை, அவரால் கொல்லப்பட்ட புகாரின் என்ற பாட்டாளி அறிவுஜூவியின் வாழ்க்கை வழியாக உணர்ந்து கொண்டு எதிர்த்ததால் தான்  வீரபத்திர பிள்ளை கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டு நாதியற்று தெருவில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால், அதே ஸ்டாலினிசத்தை இன்றும் கடைபிடித்ததால் தான் கெ.கெ.எம் ஓரங்கட்டப் பட்டிருக்கிறார் என்ற சுந்தர ராமசாமியின் குரலில் இருந்த ஏமாற்றம் அருணாச்சலத்தின் குற்ற மனப்பான்மையை மேலும் அதிகரித்தது மட்டுமில்லாமல், முதலாளித்துவம் சார்ந்த பிற அமைப்புகளிடம் வெளிப்படையாக இருக்கும் கொள்கை வேறு; செயல் வேறு என்ற இருமையை மார்க்சியம் சார்ந்த அமைப்புகளும் மறைமுகமாக சுவீகரித்துக் கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. 

கதிர் போன்றவர்களால், இந்த மாற்றத்தை நியாயப்படுத்திக் கொள்ள முடிவது போல் மார்க்சியத்தை ஒரு உண்மையான மாற்றுவழியாக ஆத்மார்த்தமாக நம்பிய  சுந்தர ராமசாமியின் இலக்கிய மனத்தால் நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட வீரபத்திரப் பிள்ளையிடம் இருந்த அதே இலக்கிய மனமிது. கதிரால், கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட மதத்தின் இலக்கான சொர்க்கமும்; பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியத்தின் இலக்கான பொன்னுலகமும் வெவ்வேறல்ல என்பதை தீர்க்கமாக புரிந்து கொள்ள முடிகிறது. நடைமுறை என்று வரும்போது இவ்விரண்டு தரப்புகளுமே தங்களுடைய கொள்கையிலிருந்து வேறுபட்டுத்தான் செயல்படுகின்றன என்ற ஏமாற்றத்தில்தான் சுந்தர ராமசாமி மார்க்சியத்திலிருந்து வெளியேறுகிறார். ஆனால், வீரபத்திர பிள்ளையின் தான் சார்ந்த மார்க்சிய அமைப்பின் குறைகளை கலைய வேண்டும் என்ற நீதியுணர்வின் முன், சுந்தர ராமசாமியின் இலக்கிய மனமும், கதிரின் எதார்த்தமும் அருணாச்சலத்திற்கு  மிகவும் சிறிதாகத் தோன்றுகின்றன.

தன்னைச் சுற்றி இறுக்கி அதலபாளத்திற்கு இழுத்துச் செல்லும் குற்றமனப்பான்மையில் இருந்து விடுபட இந்த நீதியுணர்வைத்தான் இறுகப் பற்றிக்கொள்கிறான் அருணாச்சலம். வீரபத்திர பிள்ளையின் கட்டுரைகள், கடிதங்கள் என தொடர்ந்து படிக்கும் அருணாச்சலம் மெல்ல மெல்ல தன்னை இழப்பதை இந்நாவல் சித்தரிக்கும் விதம், A height of mastery indeed.

விரியும் நாவல்

வீரபத்திர பிள்ளயின் வழியாக இந்நாவல் விரித்தெடுக்கும் சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலினிசக் காலங்கள், புகாரினின் பொருளாதாரக் கோட்பாடுகள், அதை ஏற்காத ட்ராஸ்கி, அதன் பொருட்டு ஸ்டாலின் பக்கம் சாயும் புகாரின், செம்படையை உருவாக்கிய ட்ராஸ்கியின் கொலை, அதைத் தொடர்ந்து தன் தவறை உணர்ந்த புகாரினும் கொல்லப்படுவது, உழைப்பையும், சிந்தனையையும் ஒன்றாக்குகிறேன் என்ற பெயரில் ஸ்டாலின் உருவாக்கிய சைபீரிய வதை முகாம்கள் என விரியும் இந்நாவல் பற்றிய அவதானிப்புக்களை இந்த ஒரு பதிவிற்குள் அடைத்து விட முடியவில்லை…. 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தமிழ் விக்கி பக்கம்:

https://tamil.wiki/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

இந்நாவலின் தமிழ் விக்கி பக்கம்:

https://tamil.wiki/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D)

Advertisement

1 thought on “பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s