
மனிதர்களுடைய வாழ்வதற்கான விருப்புறுதி (The will to live) தான் இந்த உலகத்தை அதாக வடிவமைக்கிறது என்கிறார் சோப்பனோவர் என்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர். இவரிடமிருந்து தான் ஒரு படிமேல் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதே நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞரான நீட்சே வல்லமைக்கான விருப்புறுதியை (The will to power) கையிலெடுக்கிறார் என்கிறது இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய ‘நீட்சே’ என்கின்ற புத்தகம். ஹிட்லர் தனக்குத் தேவையான தத்துவ வலிமையை நீட்சேவிடமிருந்துதான் பெற்றுக் கொண்டார் என்ற கூடுதல் செய்தி கொஞ்சம் அச்சத்தையும் தருகிறது. நீட்சே இருத்தலியல்வாதத்தின் (Existentialism) பிதாமகரும் கூட.
சாதியின் தோற்றம்
இந்த சாதி, இவ்விரண்டில் (Will to Live or Will to Power) எதன் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்ற நினைப்பு எழுத்தாளர் இராஜேந்திர சோழன் அவர்கள் எழுதிய ‘சாதியொழிப்பு’ புத்தகத்தை வாசிக்கும்போது வந்து கொண்டே இருந்தது. இந்த Will to Power என்பதுதான் நீட்சேவை கிறிஸ்துவை மறுக்கச் செய்கிறது. அதாவது நிறுவனப்படுத்தப்பட்ட கிறிஸ்துவை, அவர் மட்டுமே அதிமனிதனாக இருக்க முடியும் என்ற கோட்பாட்டை மறுக்கிறார் நீட்சே. அதீத தன்னம்பிக்கை அல்லது முயன்றால் அனைவராலும் கிறிஸ்துவாக மட்டுமல்ல, எதுவாகவும் ஆக முடியும் என்ற ஒரு Optimism இது. இருத்தலியல் தொந்தரவுகளை பெருங்கனவுகள் மூலம் வெல்ல விரும்பிய ஒரு தத்துவமேதை இவர். கிட்டத்தட்ட ஹெகல் போன்ற ஜெர்மானியத் தத்துவமேதைகள் வெளிப்படுத்திய Optimism இது என்றும் கூட சொல்லலாம். இரு முரண்களுக்கு (Thesis and Antithesis) இடையிலான மோதல், மேம்பட்ட (Synthesis) ஒன்றைத்தான் தோற்றுவிக்கும் என்ற இயங்கியலின் பிதாமகர் ஹெகல். மார்க்ஸ் இவரிடமிருந்துதான் தன் கனவு சமூகத்திற்கான இயங்கியலை எடுத்துக் கொள்கிறார்.
இந்த மேம்பட்ட அல்லது அதிமனித தன்மை அல்லது ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை அடைவதில் உள்ள தடைகள் என்னவாக இருக்கின்றன என்பதைப்பற்றியவைகளைத்தான் சோப்பனோவரின் Will to live முன் வைப்பது போல் தெரிகிறது. இந்த வாழ்வதற்கான விருப்புறுதிதான், வல்லமைக்கான விருப்புறுதியாக மாறுவதற்கு அல்லது மேம்படுவதற்குப் பதிலாக பிழைத்திருப்பதற்கான விருப்புறுதியாக (Will to survive) பரிணமித்திருக்கிறது (Evolve) என்றும் தோன்றுகிறது. நீட்சே இதை பரிணாம வளர்ச்சி என்று ஒப்புக் கொள்ளமாட்டார். இது சுருங்குதல் அல்லது Devolving தான்.
இந்தியாவில் சாதியின் தோற்றத்தைப் பற்றி வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆராய்ந்தவர்களில் ஒருவர் அம்பேத்கர். தனக்குள் சென்று கதவடைத்துக் கொண்ட சமூகங்கள் தான் சாதி என்ற ஒன்றைத் தோற்றுவித்தன என்கிறார். இந்த கதவடைப்பை முதலில் செய்தவர்கள் பிராமணர்கள். அதைப் பார்த்தொழுகி பின்பற்றியவர்கள் பிற சாதியானார்கள் என்பது அம்பேத்கரின் அவதானிப்பு. இது will to survive என்ற பிழைப்புவாதத்தின் வெளிப்பாடு அன்றி வேறென்னவாக இருக்க முடியும். அதிமனித அல்லது சமத்துவ சமூகக் கனவெல்லாம் தத்துவஞானிகளுக்குரியது. சாமானியர்களுக்கல்ல என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்வதுதான் இது. இதை அவதானித்த சோப்பனோவர் ஒரு pessimist அல்ல. மனிதன் நல்லவன் தான்; ஆனால் நம்பிக்கைக்குரியவனல்ல என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டவர்.
சாதிக் கட்டுடைப்பும் ஒழிப்பும்
‘சாதியொழிப்பு’ என்ற இப்புத்தகத்தில் இராஜேந்திர சோழன் சமத்துவ சமூகக் கனவை அடைவதற்கான வழிகளை முன் வைக்கிறார். சாதி என்பது மனிதர்களைகப் பாகுபடுத்தி, அதன் வழியாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அவர்களை படிநிலைச் சமூகமாக மாற்றியிருக்கிறது. இந்த ஏற்றத் தாழ்வுகளை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டுதான் தீண்டாமை உருவாக்கப்பட்டது. சாதி எனற வேரிலிருந்து கிளைத்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளெனும் கிளைகளின் உச்சம் தான் தீண்டாமை என சாதி சார்ந்த சமூகங்களை கட்டுடைக்கிறது இப்புத்தகம். இம்மரத்தின் கிளைகளான ஏற்றத்தாழ்வுகளை வெட்டி எறிந்து விட்டால் தீண்டாமை தானே உதிர்ந்து சாதி தேவையற்று போகும் என்கிறார். கிட்டத்தட்ட மார்க்சின் வர்க்கங்களற்ற சமூகத்தில் அரசு உதிர்ந்து தேவையற்றுப் போகும் என்ற கனவுதான் இதுவும்.
இதைவிட்டு விட்டு நேரடியாக மரத்தின் வேரை வெட்டுவதால் நம்மால் சாதியை ஒழித்து விட முடியாது. அதை வெறும் அடையாளமாக நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் சாத்தியப் பட்டிருக்கும் சாதி அடிப்படையிலான 69 சதவீத இட ஒதுக்கீடே ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் பெரிதும் குறைத்திருப்பது கண்கூடு. அதாவது சாதியின் வழியாகவே சாதியின் உள்ளடக்கங்களை அழிப்பது. ஒரே வகுப்பிலுள்ள (Forward, Backward, Most backwards etc.) பல்வேறு சாதியினரிடைய உள்ள தீண்டாமை அகமண முறையை கடைப்பிடிப்பது என்ற உளவியலில் மட்டும்தான் இப்போதுள்ளது. இரு வகுப்பினரிடையேயான தீண்டாமையும் கூட புறமணத் தடை என்ற அளவில்தான் பெரும்பாலும் நீடிக்கிறது. பார்த்தால், தொட்டால் தீட்டு போன்றவை எங்கோ சில இடங்களில் மட்டுமே இன்னமும் நீடிக்கிறது. இதனை, நம்முடைய சாதியொழிப்பு என்ற இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கிய மைல்கல்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பயணத்தின் பாதை சரியாக உள்ளது என்பதைத் தான் இது காட்டுகிறது.
இந்து மதமும் சாதியும்
அம்பேத்கரின் கூற்றான, அகமணமுறை என்னும் தீண்டாமையை ஒழிப்பது சாதியை இல்லாமல் செய்யும் என்பதை ஏற்றுக் கொள்ளும் இப்புத்தகம், அதற்காக இந்து மதத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற அவர் வழியை சமகாலத்தில் ஒவ்வாத ஒன்று என நிராகரிக்கிறது. இந்து மதத்தின் நெகிழ்வுத் தன்மையை, அதில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்களை, அதன் பன்முகத்தன்மையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒற்றைப்படையாக இந்து மதத்தை பார்க்கும் பார்வைக் குறைபாடு இது என சுட்டிக் காண்பிக்கிறது.
அகமண முறை என்பது தீண்டாமையின் உச்சம். சாதியின் ஆணிவேரும் கூட. அதனை அத்தனை எளிதாக ஒழித்து விட முடியாது என்ற நிதர்சனத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமென்கிறார். மாற்றாக, சாதியொழிப்பு அல்லது சாதியை நீர்த்துப் போகச் செய்தல் என்ற இலக்கை விரைவில் அடைய கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தல், சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம், தமிழ் தேசியம் என பல வழிகளை சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளோடு சேர்ந்து பின்பற்றலாம் என்கிறார்.
தமிழ் தேசியமும் சாதியும்
சுதந்திர இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு சலுகைகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை வளவாழ்வுப் பிரிவனராக (creamy layer) மாற்றிய அளவிற்கு தாழ்த்தப்பட்ட பிரிவினரை மாற்றவில்லை என்ற நிதர்சனத்தை சுட்டிக்காட்டும் இராஜேந்திர சோழன், அதற்கானத் தீர்வாக அவர்கள் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்கிறார். மொழியின் அடிப்படையில் மற்ற சாதியினரிடமும் நட்பு பாராட்டுவதன் மூலம் தீண்டாமை ஒழிப்பை துரிதப்படுத்தப் பட முடியும் என்கிறார். ஆனால் இதற்குத் தடையாக இந்திய தேசியம் இருக்கிறது என அவர் சுட்டுவது சற்று பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. தமிழ் தேசியம் வழியாக சாதி முற்றிலும் களையப்படும் என்பதெல்லாம் பெரும் பகல்கனவாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இது இந்திய தேசியத்தின் வழியாக இது வரை பெற்ற அனைத்து பலன்களையும் நிராகரிப்பது போன்றும் தோன்றுகிறது.
இந்திய தேசியம் இட ஒதுக்கீட்டு சதவீதத்தை 69லிருந்து தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப எத்தனை சதவீதம் வேண்டுமென்றாலும் உயர்த்திக் கொள்ளத் தடையாக இருக்கிறது என்று இவர் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. உயர்ந்து கொண்டே போகும் இச்சதவீதம் ஒரு கட்டத்தில் இட ஒதுக்கீடற்ற உயர்சாதியினரை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஏன் நம்மால் கணக்கில் கொள்ள முடியவில்லை என்றும் இங்கு நாம் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் இது சாதி பிரதிநிதித்துவம், அதாவது அனைத்து சாதியினரும் அவரவர் மக்கட் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு பெறுவது, என்ற சாதியை நிரந்தரமாக்கும் சமூக அமைப்பிற்கு இட்டுச் செல்லாதா?
தற்போது ஒரு வகுப்பிற்குள் வழங்கப்படும் உள் ஒதுக்கீடாவது சாதி அடிப்படையில் வழங்கப்படாமல் பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். இது அவ்வகுப்பிலுள்ள வளவாழ்வுப் பிரிவினரே மேலும் மேலும் சலுகைகளை அனுபவிப்பதைத் தடுக்கும் என்ற நல்ல உத்திகளை முன்வைக்கும் இப்புத்தகம், சாதியொழிப்பை தமிழ் தேசியத்தோடு இணைத்துக் குழப்புகிறது. எனினும் இப்புத்தகம் சாதியொழிப்பு மற்றும் அதற்கான இடைத்தீர்வாக இருக்கும் இட ஒதுக்கீடு பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கான கையேடு என்பதில் சந்தேகமில்லை.
எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் தமிழ் விக்கி பக்கம்: