
பிரபஞ்ச ஒழுங்கு / ஒழுங்கின்மைபற்றிப் பேசுவதும் நீண்டு விட்டது. கலைஞர்களில் பெரும்பாலோர் இதுபோல பிரபஞ்ச ஒழுங்கின்மைக்குப் பலியாவதும் இயல்புதான். சித்தர்களும் சாதுக்களும் பிரபஞ்ச ஒழுங்கின் பக்கம் இருப்பதும் நியதிதான். சராசரி மனுஷர்கள் இப்படியும் அப்படியும் இருக்கிறார்கள் அல்லது ஒன்றில் நிலைகொள்கிறார்கள்.
விக்ரமாதித்யன் அவர்களின் இந்த வரிகளைப் படித்ததும் ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை பற்றிய அறியாமை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று போல் தெரிந்தது. அந்த பிரபஞ்ச ஒழுங்கில் நின்று கொண்டிருக்கும் சித்தர்களுக்கும் சாதுக்களுக்கும் இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு பெரிதாக பொருட்படுத்தப் பட வேண்டியவர்கள் அல்ல தான்.
ஆனால், இந்த பிரபஞ்ச ஒழுங்கின்மையிலிருந்து, அந்த ஒழுங்கிற்குள் சென்று கொண்டிருக்கும் அல்லது முயலும் கவிஞர்களின் நிலைமை பதிக்கும், மும்மலங்களான பாசத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்ட பசுக்களை நினைவு படுத்துகிறது. வேதாந்தத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால் கர்மத்திற்கும், ஞானத்திற்கும் இடையிலிருப்பவர்கள். ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு, இங்கிருக்கும் ஒழுங்கின்மை ஒரு சுமையாக, வெளிவர முடியாமல் உள்ளிழுக்கும் புதைகுழியாக மாறிவிடுகிறது. இதில் சிக்கி மாண்டவர்களாக டால்ஸ்டாய் மற்றும் பாரதி போன்றவர்களை பிரபஞ்ச இயல்பு என்ற தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் விக்ரமாதித்யன். இவருடைய செறிவான கவிதைகளை விரித்தெடுத்துக் கொண்டே போகமுடியும். இக்கட்டுரை நம்மை ஆழங்களுக்கே இட்டுச் செல்கிறது. கவிஞர்களின் மனதை சாமானியர்கள் புரிந்து கொள்ள உதவுகிறது.
இரு வருடங்களுக்கு முன்பு நடந்த கவிஞர் ஆத்மாநாம் விருது விழாவில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் பத்ம விருது பெற்ற சித்தன்சு அவர்களின் உரை, கவிஞர்களின் நிலையாமைக்குக் காரணம் அவர்களால் சராசரிகளைப் போல எந்தவித குற்றவுணர்வுமின்றி ஒழுங்கிற்கும், ஒழுங்கின்மைக்கும் இடையில் ஊஞ்சலாட முடியவில்லை என்ற புரிதலுக்கு இட்டுச் சென்றது (https://muthusitharal.com/2019/11/28/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/).
ஆனால், விக்ரமாதித்யன் அவர்களின் இக்கட்டுரை கவிஞர்கள் தான் கண்டு கொண்ட அல்லது கண்டு கொள்ளப் போகும் ஒழுங்கை இந்த பிரபஞ்சத்தின் ஒழுங்கின்மை மேல் போர்த்த முயலும் குழந்தையின் மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. விக்ரமாதித்யன் அவர்கள் இக்குழந்தைத்தனத்தை தாண்டி முதிர்ந்து கனிந்த ஒருவராகத் தோன்றுகிறார்.
தமிழ்க்கவிதை மரபும் நவீனமும் என்ற இக்கட்டுரைத் தொகுப்பின் இந்த முதல் கட்டுரையே நம்மை வெகுவாக உள்வாங்கிக் கொள்கிறது. மீதமுள்ள பதினைந்து கட்டுரைகளும் என்ன தர காத்திருக்கின்றன என்று தெரியவில்லை.
https://amzn.in/683T2Rd
[…] கவிஞனின் நிலையாமை […]
LikeLike