
மரபுக்கு திரும்புவோம் என்ற கூக்குரல் அதிகரித்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று கேட்கும் கூக்குரலும் ஒலிக்கிறது. பக்தி, மதம்,சாதிக்கு திரும்புவது தான் இது என்றும் அதற்கு பொதுப்படையாக பதிலளிக்கிறார்கள் இந்த திடீர் மரபுக் காதலர்கள். ஆனால் எப்போது நாம் இந்த பக்தி, மதம் மற்றும் சாதியை கைவிட்டோம். சாதியை வேண்டுமானால் சற்று மறைத்திருக்கலாம், ஆனால் இம்மூன்றையும் எக்காலத்திலும் நாம் கைவிட்டதில்லை. இந்த கூர் கத்தியை நவீனம் என்ற கைப்பிடி கொண்டு தான் உபயோகிக்கிறோம். அவர்கள் விடச்சொல்வது இந்த கைப்பிடியைத்தான்.
மரபில் தொலைதல்
சமகாலத்தில் திடீரென படித்த இளைஞர்களிடம் பெருகி வரும் சாதிப் பெருமையால் (கைப்பிடி இல்லா கத்தி கையைக் கிழித்தாலும் பரவாயில்லை என்ற சாதிப்பெருமை) நிகழும் விபரீதங்களை மிக நுட்பமாக மீன்கொத்தி எனும் சிறுகதை சுட்டிக் காட்டுகிறது. இது, எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் பொன்னுலகம் என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒரு கதை. இந்தப் பெருமையை தக்க வைத்துக் கொள்வதற்கு எப்போதும் போல பெண்கள் பலியிடப்படுவதை, சற்றும் எதிர்பார்க்கவே முடியாத ஒரு நிகழ்வின் வழியாக வெளிப்படுத்தி திகைக்க வைக்கிறது இக்கதை.
கதையில் வாசகர்களை ஒரு மாயக்கதாபாத்திரமாகவே உருவகித்து, அவர்களுக்கான இடத்தை அளிக்கும் கதையின் ஓட்டம் இக்கதையோடு மிகவும் ஒன்ற வைக்கிறது. பெருந்தொற்று காலத்தில், ஒவ்வொருவரும் குடும்பத்துடன் இருக்கும் நேரம் அதிகரித்த பின்பு குடும்ப உறுப்பினர்களை நெருங்கி அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரித்திருந்ததை இக்கதை வெகு இலாவகமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது. இது கதையின் சமகாலத்தன்மைக்கு வலுவும் சேர்க்கிறது.
நவீனத்தில் திளைத்தல்
மரபு மட்டுமல்ல, நவீனமும் சுரேஸ் பிரதீப் கதைகளில் பெண்களை விட்டு வைப்பதாக இல்லை. இன்றைய இருத்தலியச் சிக்கல்களுக்கு காரணமாக நாம் உழைப்பிலிருந்து (குறிப்பாக உடலுழைப்பு) அந்நியப் பட்டிருப்பதைக் காரணமாக மார்க்சியம் சுட்டிக்காட்டும். இது இயல்பாக எந்திரங்கள் மேல் நமக்கு ஒரு ஈடுபாட்டை வரவழைப்பது உண்மை. அந்த ஈடுபாடு பொன்னுலகம் என்ற கதையில் ஒரு படி மேல் சென்று மீன்கொத்தி கதையில் வந்த அதே திகைப்பை ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் திளைப்பவர்களின் செயல்பாடுகளையும், மனநிலையையும் மிகத் துல்லியமாக சித்தரிக்க முயன்றிருக்கிறது இக்கதை. அதிலும் நம்முடைய செயல்பாடுகள் எப்படி இந்த சமூக ஊடகங்களால் தரவுகளாக சேகரிக்கப் படுகின்றன என்ற ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனையை மேலும் மிகைப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தொழில்நுட்ப மொழியும் ரசிக்கும்படி உள்ளது.
இத்தொகுப்பிலுள்ள பிற கதைகளும் இதே நுட்பத்தையும், சுவாரஸ்யத்தையும் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.
சுரேஷ் பிரதீப் அவர்களின் தமிழ் விக்கி பக்கம்:
[…] பொன்னுலகம் – மரபும் நவீனமும் […]
LikeLike