
சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய வால்டேர் என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று இருந்தது. ரூஸோ, மனிதனை அசுத்தப்படுத்துவது கலையும், விஞ்ஞானமும் தான் என்ற தன்னுடைய இயற்கைவாதம் (The Naturalism)பற்றிய புத்தகத்தை ஃபிரெஞ்ச் தத்துவ அறிஞரும், இலக்கியவாதியுமான வால்டேரிடம் தருகிறார். கொஞ்சம் வாய்த்துடுக்கு கொண்ட வால்டேர், “நான் மீண்டும் நான்கு கைகளால் தவழ விரும்பவில்லை” என்கிறார். ஃபிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வால்டேர்.
சோர்பா நாவலில் வரும் கதைசொல்லியும், சோர்பா என்ற கதாபாத்திரமும் முறையே வால்டேரையும், ரூஸோவையுந்தான் நினைவு படுத்தினார்கள். ஆனால், ஒரு சிறு வித்தியாசம்; கதைசொல்லியும், சோர்பாவும் ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் நம்பிக்கை கொண்டவர்கள். வால்டேர், ரூஸோ போல தங்களுடைய தத்துவங்கள், சித்தாந்த நம்பிக்கைகளில் இறுகிப்போனவர்கள் அல்ல.
வால்டேராகத் தோன்றும் கதைசொல்லியின் பார்வையில், சோர்பா நிலத்தில் ஊறும் பாம்பாக தெரிந்தாலும், காலால் மட்டுமே பூமியுடன் தொடர்பு கொள்ளும் தன்னைவிட இப்பூமியைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார். ரூஸோவாகத் தோன்றும் சோர்பாவின் பார்வையில், கதைசொல்லி ஒரு புத்தகப் புழுவாகத் தெரிந்தாலும், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நவீன சமூகம் நிர்பந்தித்த சில ஒழுக்கங்களை அவர் போல் நானும் ஏற்றிருந்தால் தன் வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் இருந்திருக்கும் என்றும் எண்ணுகிறார். இப்படி, இருவரும் ஒருவரையொருவர் மிக இயல்பாக நிரவிக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நாவலின் சித்தரிப்பு சோர்பாவை, கதைசொல்லியின் Alter Egoவா? என்றும் எண்ண வைக்கிறது.
Shorba – The Greek என்ற நாவலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் தளம் வழியாக அறிந்ததிலிருந்தே, இதை எழுதிய நிகாஸ் கஸண்டகீஸ் மீது ஒரு இயல்பான ஈர்ப்பு இருந்து வந்தது. இவர் கிறிஸ்துவை கிறிஸ்துவத்துக்கு வெளியே இருந்து அறிய முயன்ற ஒரு இலக்கியவாதி. எழுத்தாளர் அருண்மொழி நங்கையும் இந்நாவலைப் (English Edition) பற்றிய ஒரு சிறு அவதானிப்பை எழுதியது அந்த ஈர்ப்பை வளர்த்தெடுத்தது. எழுத்தாளர் கோ.கமலக்கண்ணனின் தனித்துவமான தமிழ் மொழிபெயர்ப்பு சோர்பாவின் மேலும், கதைசொல்லியான நிகாஸ் கஸண்டகீஸ் மேலும் இருந்த ஈர்ப்பை குலையாமல் அப்படியே தக்கவைத்திருக்கிறது. It is a bliss indeed to read his translation!!!
கதைசொல்லியின் பொன்னுலகம்
ஊர்ந்து கொண்டிருப்பதைவிட, நடப்பது பரிணாம வளர்ச்சி என்றாலும், நடப்பதின் அழுத்தங்களை, அதிலுள்ள குறைபாடுகளைக் களைவதற்கான கனவில் இருக்கிறார் புத்தகப் புழு என்று பரிசகிக்கப்படும் கதைசொல்லி. ஊறும் பாம்பிலிருந்து, பறக்கும் பறவையாக விரும்பும் பயணத்தின் இடைநிலைதானோ நடக்கும் மனிதப்பிறவி என்றும் எண்ண வைக்கிறது கதைசொல்லியின் இயல்பு. புத்தரின் வெறுமை என்ற கருத்தாக்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக, ஆசைகளைத் துறப்பதே துன்பங்கள் களையப்பட்ட பொன்னுலகத்தை சாத்தியப் படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.
இவருடைய சுரங்கத் தொழிலில் இணைந்து கொள்கிறார் சோர்பா என்ற 65வயது முதிய இளைஞர். இந்தப் பகுத்தறிவின் எந்த பாவனைகளையும் கிரகித்துக் கொள்ளாதவராக இருக்கும் சோர்பாவை கண்டு, எப்படி இவரால் மூளையை நிகழ்காலத்திற்கு தந்துவிட்டு இதயத்தை இன்னும் ஆதி மனநிலையில் வைத்துக் கொள்ள முடிகிறது என்று ஆச்சரியப்படுகிறார். சொல்லப் போனால், அவருடைய கடுமையான உழைப்பு, சண்டோரி என்ற இசைக்கருவியை அவர் வாசிக்கும் லயம், விதவைகள் (பெரும்பாலும் போரால் கணவனை இழந்தவர்கள்) மேல் அவருக்கிரும் பரிவு மற்றும் கட்டற்ற காமம் என புரியாத புதிராக சோர்பா இருப்பது பொன்னுலகக் கனவிற்காக புத்தரைப் பற்றிக் கொண்டிருக்கும் தன்னைச் சீண்டினாலும், இதுதான் இயல்பான வாழ்க்கை என்று உள்ளூர நம்பவும் செய்கிறார்.
தன்னுள் உறைந்திருக்கும் ஆதி மனிதனுக்கு சோர்பா என்னும் வடிவம் கொடுத்து உலவ விட்டிருக்கிறாரோ கதைசொல்லி என்றும் எண்ண வைக்கிறது. ஓயாத உழைப்பு, கட்டற்ற பேச்சு, உணர்வுகளை வெளிப்படுத்த சொற்கள் கிட்டாத போது உடல்மொழியாக நிகழும் ஆக்ரோச நடனம் அல்லது சண்டோரி வழியாக இசைக்கப்படும் மெல்லிசை என மூளையும் உடலும் ஒத்திசைவு கொண்ட ஆதிமனிதனாகவே தெரிகிறார் சோர்பா. மூளையை தன்னுடைய உடலிலிருந்தும், இச்சமூகத்திலும் இருந்தும் மிகத் தொலைவில் பிரித்தெடுத்து வைத்திருக்கும் கிரேக்கத்தின் அல்லது அது வியாபித்திருக்கும் நவீனத்தின் பிரதியான கதைசொல்லி, தன்னுடைய மீட்பராக புத்தரைக் கொண்டிருந்தாலும், சோர்பாவே அவருடைய மீட்பராகத் தோன்றுகிறார்.
தத்துவமும் சோர்பாவும்
மேலைநாட்டு தத்துவங்கள் அறிவதை அதிசயிப்பதாக வரையறை செய்கின்றன (Philosophy is to Wonder). மேலைத் தத்துவங்களின் பிறப்பிடமான கிரேக்கத்தைச் சேர்ந்த கதைசொல்லி அறிவதை மட்டுமே வாழ்க்கையென்று கொள்ளமுடியாது என்று உள்ளூர நம்புவதே அவரைக் கீழைத்தத்துவமான பௌத்தத்தை நாடச் செய்கிறது. இந்தியத் தத்துவங்கள், அறிவதற்காக வாழ்வதைவிட வாழ அறிந்து கொள் என்பதை வலியுறுத்துபவை; அறிவார்ந்த சமூகத்தையும் தாண்டி ஆன்மீக சமூகத்தை இலக்காகக் கொண்டவை எனலாம்.
சோர்பாவும் சரி, கதைசொல்லியும் சரி, அறிவை மட்டுமே நம்புபவர்களாக இல்லை. அதற்காக மதத்தால் அறிவுறுத்தப்படும் மறுமைப் பலன்களாக சுவனம் (சொர்க்கம்) போன்றவற்றிற்கு தங்களை ஒப்புவித்துக் கொண்டு எல்லாம் அவன் செயல் என்று எதையும் பொருட்படுத்தாமல் வாழ்பவர்களும் அல்ல. இருவருமே இம்மையிலேயே அந்த ஆன்மீக இலக்கை அடையமுடியும் என்று நம்புபவர்கள். சோர்பா, தற்போதைய சமூகத்தின் வழியாக அதை இயல்பாக அடையமுடியும் என்ற உள்ளுணர்வு கொண்டவராகத் தெரிகிறார். கதைசொல்லியோ, அதை தற்போதைய சமூகத்தை மாற்றியமைப்பதின் மூலம் அடையமுடியும் என்று நம்புகிறார். இதுதான் அவர்களிவருக்கும் உள்ள வேறுபாடாகத் தோன்றுகிறது. இருவரின் இலக்குகளும் ஒன்றுதான். ஆனால், அதனை அடைவதற்கான வழிமுறைகள்தான் வெவ்வேறு.
மொழிபெயர்ப்பு
கிரேக்கத்தில் நடந்த புரட்சியால் தான் மனித விடுதலை சாத்தியமானது என்பதை ஒப்புக் கொள்ள முடியாத சோர்பா, தன் தலைவனான கதைசொல்லியிடம் மனிதர்களைக் கொல்பவர்களுக்கு எப்படி கடவுளால் சுதந்திரம் அளிக்க முடிகிறது என்று வினவுகிறார். அதற்கு சற்று மலுப்பலாக மனிதச் சேற்றில் முளைக்கும் தாமரை தான் சுதந்திரம் என்கிறார் கதைசொல்லி. ஆனால், அதற்கான விதை அன்பும் வாய்மையாகவும் அல்லவா இருக்க வேண்டும்? ஏன் குருதியும் அசிங்கமுமாக உள்ளது என்ற சோர்பாவின் கேள்வி நம்மை சற்று திகைத்து யோசிக்க வைக்கிறது.
தன் வதனம் (முகம்) முழுவதும் பொடி பூசிக் கொண்டு, தனக்கென ஒரு வழலை (சோப்பு) மனதுடன் அந்த கிரீட் தீவில் வலம் வரும் சோர்பாவுடன் மிடைந்து (நெருக்கமாக இணைந்து?) இருக்கும் அவருடைய முதுகாதலியின் எழில் இந்த தனித்தமிழால் சற்று கூடியுள்ளது.
மிகவும் கவித்துவ நடையில், தத்துவ, மதச் சிக்கல்களை அணுகியிருக்கும் இந்நாவலை மொழி பெயர்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. சில இயற்கை வர்ணனைகள் அந்த குட்டித் தீவில் இருக்கும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் உயிர் வழங்கியிருக்கிறது. இரவில் வீடுகள் நட்சத்திரத்திற்கு அடியில் ஆழ்ந்து உறங்குகின்றன. சோர்பாவின் இசைக் கருவியான சண்டோரி, தனக்கான இசையை சோர்பாவின் இதயத்திலிருந்து தேர்ந்தெடுக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்கள், அப்பிரதியோடு தன்னை ஆத்மார்த்தமாக பிணைத்துக் கொண்ட முதன்மை வாசகர்கள் என்ற எண்ணம் எனக்குண்டு. இந்தப் பிணைப்பு அப்பிரதியின் மையக்கதாபாத்திரத்தோடு தன்னைப் பொருத்திப் பார்க்கச் செய்யும் வாய்ப்புகள் அதிகம். அப்பிரதி சிறுகதையாக இருக்கும் பட்சத்தில் இந்த பாதிப்பு மொழிபெயர்ப்பை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஏனென்றால், சிறுகதைகளின் மையக்கதாபாத்திரம் பெரும்பாலும் ஒன்றைத் தாண்டி இருப்பதில்லை. ஆனால் அப்பிரதி நாவலாக இருக்கும் பட்சத்தில், மையம் என்ற ஒன்று இல்லை அல்லது நிறைய மையங்களைக் கொண்டு விரிந்திருக்கும். இந்தக் கதாபாத்திரச் சார்பால், இம்மொழிபெயர்ப்பில் சோர்பாவோ அல்லது கதைசொல்லியோ மட்டுமே ஆழமாக வெளிப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இதை கமலக்கண்ணன் மிகத் தெளிவாகத் தவிர்த்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். இது தான் மொழி பெயர்க்கும் ஒரு நாவலின் சிறந்த வாசகனாக இருந்து அந்நாவலாசிரியனாகவே உருமாற்றம் அடைவதற்குச் சமமானது என்றும் எண்ணுகிறேன்.
கோ. கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
[…] சோர்பா என்ற கிரேக்கன் […]
LikeLike