2020ம் ஆண்டிற்கான குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் கவிஞர்களுக்கான விருதைப் பெற்ற வேணு வேட்ராயன் அவர்களுடைய கவிதைகள் பற்றிய சிறப்புரையின் காணொளியும் அதன் கட்டுரை வடிவமும்.
நிகழ்வு பற்றிய அறிவிப்பு:
https://www.jeyamohan.in/166789/
அனைவருக்கும் வணக்கம். கவிஞர் குமரகுருபன் அவர்கள் நினைவாக வழங்கப்படும் இவ்விருது விழாவில், இந்த வாய்ப்பை எனக்களித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி.
இந்த வாய்ப்பு கிடைத்தபோது சற்றுத் தயங்கினேன். இன்னமும் , நான் கவிதைகளின் ஆரம்பகட்ட வாசகன் தான். படிமங்களுக்கு சிறகளித்து பறவை போல் பறக்கச் செய்து கொண்டிருப்பவர்கள் கவிஞர்கள். என்னைப் போன்றவர்கள் அவற்றை அணுகுவதற்கு, அப்படிமங்கள் தரைக்கு வர வேண்டியிருக்கிறது. இவை தரை இறங்குவதற்குத் தேவையான கால்களை தன் நாவல்களில் அளிக்கும் சிறந்த நாவலாசிரியர்களை இங்கு நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன். இவ்வுரையை அவர்களுக்கு சமர்ப்பிக்கவும் விழைகிறேன்.
கவிஞர் தேவதேவன் அவர்களுடைய கவிதை ஒன்று இவ்வுரையைத் தயாரிக்கும் போது நினைவுக்கு வந்தது.
இரை பொறுக்கவும்
முட்டையிடவும் மாத்திரம்
பூமிக்கு வந்தமரும்
வான்வெளிப் பறவை ஒன்று
சமீபகாலமாக எனது நாளை தேவதேவனின் கவிதை ஒன்றின் வழியாகவே தொடங்குகிறேன். இப்பழக்கத்திற்கு காரணமான வம்சி மற்றும் தன்னறம் பதிப்பகத்தாரின் தேவதேவன் கவிதைகளின் பெரும் தொகுப்புக்களுக்கு நன்றி. இந்த விழா பற்றிய அறிவிப்புக்கள் வந்த நாளிலிருந்து வேணு அவர்களின்
புருவங்களிடையே
சரியான மத்தியில்தான்
பொட்டு இருக்கிறதா என்பதிலிருந்து
ஆரம்பமாகும் அவள் குழப்பம்
என்ற கவிதையும் இரவில் இணைந்து கொள்ள ஆரம்பித்தது. இப்படி கவிதையில் தொடங்கி கவிதையில் நிறைவுற்று கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும். ஆசிர்வதிக்கப்பட்டவனாய் உணர்கிறேன்.
கவிதையின் பிறப்பிடம்
நண்பர்களே, சமீபத்தில் நிகாஸ் கஸண்டகீஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க எழுத்தாளரின் Shorba The Greek என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகாஸ் கஸண்டகீஸ் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்ந சிந்தனையாளரும் கூட. கிறிஸ்துவை கிறிஸ்துவத்திற்கு வெளியே நின்று அறிந்து கொள்ள முயன்றவர்களில் ஒருவர் என இவரை குறிப்பிட்டுச் சொல்லமுடியும். இந்நாவலை கோ.கமலக்கண்ணன் அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார். தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. இந்நாவலில் கதைசொல்லிக்கும் அவருடைய முதிய நண்பரான சோர்பாவுக்கு இடையில் நடக்கும் ஒரு உரையாடலை இங்கு நான் நினைவு கூர விழைகிறேன்.
சோர்பா ஒரு கரடுமுரடான மனிதர். இவ்வுலகியல் அளிக்கும் அனைத்தின் வழியாகவும் திளைத்து மெய்மையை அடைய முனைபவர். கிட்டத்தட்ட ஆணவ, கண்ம மாயை எனும் மலத்தை மலத்தால் அழித்து பசுவை பதியிடம் சேர்ப்பிக்கும் சைவசித்தாந்த வழியிது எனலாம். கதைசொல்லியோ பௌத்தம் காட்டும் வெறுமையின் வழியாக மெய்மையை அடைய முனைபவர். இவ்வுலகை ஆசையிடமிருந்து காப்பாற்றி மாற்று உலகை சிருஷ்டிக்கும் லட்சியவாத கனவில் இருப்பவர். நிறைய வாசிப்பவர், எழுதுபவர். சிந்தனையாளரும் கூட.
ஏன் தலைவா நீங்கள் இப்படி இங்குள்ள எதையுமே அனுபவிக்காமல் இருக்கிறீர்கள்? எப்போதும் சிந்தனையும் எழுத்துமாக உங்களை இருக்க வைப்பது எது? என்ற சோர்பாவின் கேள்விக்கு சற்று யோசித்து விட்டு இப்பதிலைத் தருகிறார் கதைசொல்லி. சோர்பா, இப்பிரபஞ்சம் இலைகள் அடர்ந்த ஒரு பெரு மரம். இதிலுள்ள ஒரு இலைதான் நாமிருக்கும் இப்பூமி. பெரும்பாலானவர்கள் இந்த இலையின் மத்தியிலோ அல்லது அதைச் சுற்றியோ வாழ்ந்து விட்டு மடிகிறார்கள். துணிச்சலான சிலர் அதன் விளிம்பு நோக்கிப் பயணிக்கிறார்கள். இந்த விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது உணரும் வெறுமையின் திகைப்பிலிருந்து தான்…என்று நிறுத்தி விட்டு சோர்பாவை நோக்குகிறார். சற்று தயக்கத்துடன் அத்திகைப்பிலிருந்து தான் கடவுள், மதம், சொர்க்கம் எல்லாம் உருவாகிறது என்று சோர்பாவிடம் சொல்லிவிட்டு, அத்திகைப்பிலிருந்து தான் கவிதை பிறக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறார்.
கவிதையின் பிறப்பிடமாக நான் எண்ணுவதும் இந்த விளிம்பு அல்லது உச்சத்தில் நிற்பதைத்தான். விளிம்பில் இருந்து கொண்டு கீழே பார்க்கும் போது எழும் தனிமை, துயரம், அச்சம், அவநம்பிக்கை போன்றவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் ஒருவகை. கலகக்ககார கவிதைகள் இவை எனலாம். உச்சத்தில் இருந்து கொண்டு இத்துயர்களை களைந்து பறவைகளைப் போல பறக்க எத்தனிக்கும் கவிதைகள் இன்னொரு வகை. ஆன்ம விடுதலைக் கவிதைகள் இவை எனலாம். வேணு அவர்களின் கவிதைகளை இவ்வகையைச் சேர்ந்தவை. அவருடைய ஆதர்சமான தேவதேவன் கவிதைகளைப் போலவே.
வரையறையும் ஆளுமையும்
ஜெ.கிருஷ்ணமூர்த்தியிடம் ஈர்ப்பு கொண்டிருந்த தேவதேவனிடம் ‘desire’ என்றால் என்னவென்று சொல் பார்க்கலாம் என்று அவருடைய ஆசிரியரும் நண்பருமான கவிஞர் பிரமிள் அவர்கள் கேட்டதற்கு, ‘avoidance of present’ என்று ரத்தினச் சுருக்கமாக வரையறுத்திருக்கிறார். தொடர்ந்து புறவுலகம் கவிஞனை வரையறை செய்யத் தூணடிக் கொண்டே இருக்கிறது. அந்த வரையறைக்குள் சிக்காமல் தப்பித்துக் கொள்வது எப்படி என்பது தான் கவிஞர்களுக்கு முன்னிருக்கும் சவால் போல. இப்படி வரையறை , மறுவரையரை என தொடர் கொந்தளிப்பில் இருக்கும் கவிஞனை மெய்ஞானம் பெறமுடியாத ஞானச்சாதகன் என கச்சித்தமாக வரையறை செய்கிறார் கவிஞர் பிரமிள்.
ஒரு புதிய நிகழ்வு அல்லது காட்சி அல்லது பொருள் வரையறுக்கப் பட்டவுடன், அது வெறும் நினைவுகளாக நம்முடைய ஜாக்ரத் அல்லது பிரக்ஞை அல்லது Consciousல் சேமிக்கப்படுகிறது என்கிறார்கள். கவிஞர்களுக்கு மிகப்பெரும் தடையாக அமைவது இந்த நினைவுகள் தான் என்று எண்ணுகிறேன். வேணுவின் கவிதை ஒன்று,
மண்பரப்பில் கால்தடங்களை அழித்துச் செல்கிறது மழை.
வான்பறவை செல்வழியை கலைத்துசெல்கிறது காற்று.
மனவெளி தன் நினைவுகளை மறக்கச் செய்யுமோ காலம்?
தன்னுடைய சுவடுகள் அல்லது நினைவுகளை சுமந்தலையாமல் இருப்பது ஒரு வரம் என்று எண்ணுகிறேன். அவர்களால் தான் தொடர்ந்து புதிய சுவடுகளைப் பதிக்க முடிகிறது. அந்த வரத்தை நோக்கிய பயணமாகவே இக்கவிதையை உணர்கிறேன்.
ஒன்று வரையறை செய்யப்பட்டவுடனே, அதை தொடர்ந்து மறுவரையறை செய்ய முயலும் படைப்பூக்க செயல்பாட்டின் வெளிப்பாடு தான் கவிதைகள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. வரையறைகள் நம் புலன்களின் எல்லைக்குட்பட்டதால் அதை முழுமையான அல்லது அறுதியான ஒன்றாக கருதமுடியாது என்கிறார்கள். எனவே பௌத்தம் இதை விகல்பம் என்று சொல்லுகிறது. அத்வைதம் மாயை என்கிறது. இந்த மாயையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்பவர்கள் கவிஞர்கள். நான் என்னுடைய ஜாக்ரத் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துவதற்காகத் தான் கவிதைகள் எழுதப்படுகின்றன என்றும் எண்ணுகிறேன். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் டி எஸ் எலியட் சொல்லுவது போல், இந்த மாயை உருவாக்கியிருக்கும் தங்களுடைய ஆளுமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத் தான் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள்.
இந்த நினைவுகளின் சுமையை களைய முயலும் வேணுவின் இன்னொரு கவிதை,
மெதுவாக நழுவி
உண்டியலுக்குள் விழுந்துகொண்டிருந்தது அந்திமாலை சூரியன்.
ஒரு நள்ளிரவில்
என் கை நழுவி
மண் உண்டியல் விழுந்துடைந்து
சேமித்த சூரியன்கள் சிதறி உருண்டோடக் கூடும்.
என்னளவில் இது அபாரமான படிமம் என்பேன். சூரியனை வெளிச்சம், ஆற்றல், இந்திரன், வானத்தின் கண் என்றெல்லாம் உருவகித்திருக்கிறார்கள் அல்லது வரையறை செய்திருக்கிறார்கள். ஆனால், சூரியனை நினைவாக உருவகிக்கும் அல்லது மறுவரையறை செய்யும் மனம் கவிஞர்களுக்கே உரியது. இன்னொரு கணத்தில் இக்கவிதை மரணத்தைத் தான் குறிக்கிறதோ என்ற திகைப்பும் ஏற்படுகிறது, மண் உண்டியல் விழுந்துடைந்து என்ற சொற்றொடர் வழியாக.
நினைவுகளை களைவதென்பது லௌகீகம் நினைப்பது போல் பிழைப்பற்றவர்களின் அல்லது பிழைக்கத் தெரியாதவர்களின் செயல் அல்ல என்கிறது வேணுவின் இன்னொரு கவிதை.
சிறு சிறு குட்டைகளில்
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும் உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்.
மாயத்திரை ஒன்று விலகியதுபோல் இருந்தது இக்கவிதையைப் படித்தவுடன். இயற்கையின் மாபெரும் கருணை பாரபட்சமற்றது என்று உணர்த்தும் இக்கவிதை, நான் நினைவுகளை இழக்கவில்லை; தேவையில்லை என வெட்டி எறிந்திருக்கிறேன் என இறுமாந்தும் நிற்கிறது. தேங்கிய குட்டையாக இருக்கும் போதும் கூட என்னால் முழுச் சூரியனையும் கிரகித்துக் கொள்ள முடியும் என்று கம்பீரம் காட்டுகிறது.
கனவும் சாத்தியமும்
நான் முன் குறிப்பிட்டது போல வேணுவின் பெரும்பாலான கவிதைகள் உச்சியிலிருந்து கொண்டு மேலே பறக்கும் பறவையை மட்டும் விடுதலையின் குறியீடாக பார்க்க முயன்றாலும், சில கவிதைகள் கீழ் நோக்கியும் பார்க்கின்றன அல்லது இரண்டுக்கும் இடையே ஊசலாடுகின்றன. இதை துயரத்திற்கும், விடுதலைக்கும்; அல்லது கனவிற்கும் சாத்தியத்திற்கும் இடையிலான ஊசலாட்டம் எனலாம்.
விற்று தீராத இளநீர்க்குலைகளை வெறித்தபடி அமர்ந்திருக்கும் இருவிழிகள்.
வாடும் மலர்ச்செடியை ஏந்திச்செல்லும் சிறுகரங்கள்.
சதுப்பு நிலநீர்மேல்
பறந்து திரியும் ஒருவெண்பறவை.
மங்கிய வானில் அமிழ்ந்துகொண்டிருக்கும் மாலைச் சூரியன்.
எல்லா நாட்களும் கவிதையில் தொடங்கி கவிதையில் முடியும் இனிமையான நாட்களாக அமைவதில்லை. விற்காத இளநீர், விற்பதற்கு முன்பே வாடிவிடும் மலர்ச்செடி என ஒரு மோசமான நாளின் முடிவில், வேணுவின் கண்களில் படும் சதுப்பு நில வெண்பறவை நமக்களிக்கும் ஆசுவாசம் அளப்பரியது. ஆனால் இந்த நிகழ்வுகள் ஒரு நாள் முடியும் தருவாயில்தான் நிகழ்கின்றன எனபதை இக்கவிதையின் கடைசி வரி வரை தள்ளிப்போடும் உத்தி…classic.
சரேலென பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது
சற்று நேரத்திற்கு நம்மை பிரமிக்க வைத்து விடுகிறது இந்த தன்னை அருந்தும் பறவை எனும் படிமம்.
முந்தைய விற்றுத் தீராத இளநீர் கவிதையில், கனவை எட்டிப் பிடிக்க முயன்று, சாத்தியத்திற்கே திரும்பிய வேணுவின் படைப்பூக்கம், கனவும் சாத்தியமும் இணையும் ஒரு அற்புதக் கணத்தை அலகில் அலகு என இக்கவிதையில் சிருஷ்டித்து பார்த்திருக்கிறது.
வேணுவின் படைப்பூக்கத்திற்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.