தன்னைத் தன் உணர்வுகளுக்கு ஏற்ப வெளிப்படுத்திக் கொள்ள முடியாத முகம், இயல்பாகவே ஒரு சோகத்தன்மையை கொண்டிருக்கிறது. சலங்கை ஒலியில் வரும் கமல் மற்றும் குறிப்பாக ஜெயப்பிரதாவின் முகங்கள் போல.
ஆனால், புறவுலத்தின் சீண்டல்கள் ஒரு எல்லையை மீறும்போது இயல்பாகவே கமலின் உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த நாட்டிய கலைஞனின் செருக்குணர்வு உடம்பு முழுவதும் முகமாய் மாறி வெளிப்படுகிறது. இடுப்பில் தன் இரு கைகளையும் அமர்த்தியவாறு, தன் வலக் காலணியை இடப்பக்கமும், இடக்காலணியை வலப்பக்கமும் உதறி வீசுவதில் ஆரம்பிக்கும் அந்த நளினம் கலந்த செருக்குணர்வு பஞ்சபூதங்ளை நாட்டிய சாஸ்திரத்தின் வெவ்வேறு வகைமைகளில் எப்படி வெளிப்படுத்துவது என்று ஆடி காண்பிப்பதில் முடிவடைகிறது.
பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்
ஆறு காலங்களும் அவன் ஆடைகளாகும்
என்று சிவனைப் போற்றிப்பாடும் பாடல், இறைவனை இப்பிரபஞ்சமாகவே உருவகிக்கிறது. பௌத்தம் புத்தரை இப்படித்தான் தர்மகாயம் என உருவகிக்கிறது. ஆனால், இவ்வரிகளுக்கு நாட்டியமாடிய இளம் பெண், தன் தகுதிக்கு மீறிய நாட்டிய மயூரி என்ற பட்டத்தை சுமந்தலைய விரும்புபவர். பஞ்சபூதங்களை, தன் இருகைவிரல்களையும் விரித்து தன் முகமருகே வைத்து வெளிப்படுத்துகிறார். இரு கண்களும் விரிந்திருந்து முறைத்தது, கிட்டத்தட்ட பஞ்சபூதத்தை பேயாக்கி நம்மை பயமுறுத்துகிறது.
இக்குறையச் சுட்டிக் காட்டிய நாட்டிய விமர்சகரான கமலை, அப்பெண்ணும் அவரைச் சார்ந்தவர்களும் இழிவுபடுத்தியது தான் நாட்டியக் கலைஞனுமான கமலை சீண்டியிருக்கிறது. இப்படித்தான் நாட்டியசாஸ்திரம் பஞ்சபூதங்களை வெளிப்படுத்தச் சொல்கிறது என்பதை ஆடிக் காண்பித்து விட்டு,
யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி
யதோ த்ருஷ்டி ததோ மன
யதோ மனஸ் ததோ பாவோ
யதோ பாவஸ் ததோ ரஸ
என்ற நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படை ஸ்லோகத்தை நிதானமாக எடுத்துச் சொல்கிறார். கைகளின் அசைவுகளை பின்தொடரும் கண்களை மனமும் பின்தொடர்கிறது. அவ்வசைவுகளில் லயித்திருக்கும் மனம் இயல்பாகவே பொருத்தமான உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படச் செய்கிறது என்று விளக்கிவிட்டு, பார்வையாளர்களின் பாராட்டிற்காக அவர்களை நோக்கித் திரும்பிய கண்களையும் மனத்தையும் கொண்ட முகத்தில் எந்தவித பொருத்தமான உணர்ச்சிகளும் வெளிப்பட வாய்ப்பில்லை என்று அந்த இளம்பெண் செய்த தவறையும் சுட்டிக்காட்டுகிறார்.
சலங்கை ஒலி திரைப்படத்தில் வரும் இக்காட்சியை இப்போது பார்க்கையில் இலக்கணம் மீறப்படும் போதுதான் இலக்கியம் உருவாகிறது என்ற கூற்றும் நினைவுக்கு வருகிறது. ஒரு நடனக் கலைஞனின் படைப்பூக்கத்தை முன்வரையறை செய்யப்பட்ட சாஸ்திரங்கள் கட்டுப்படுத்த முயல்வது பார்வையாளர்களுக்கு ஒரு லட்சணமான நடனத்தை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று எண்ணுகிறேன். ஆனால், படைப்பூக்கம் எப்போதும் லட்சணங்களை மீறிய லட்சிய வடிவையே கனவாகக் கொண்டிருக்கிறது. ஆனால் லட்சணங்களே தெரியாமல், அதை மீற முயல்வது பஞ்சபூதத்தை பூதமாக்கும் அவலட்சணத்தைத் தான் தருகிறதே தவிர லட்சிய நடனத்தை அல்ல.