நடையில் ஒரு மெல்லிய துள்ளல் இருந்தது மீனாவிடம். பறக்க எத்தனித்து சற்று தூரம் மட்டுமே பறந்தடங்கும் கோழி போலிருந்த மனத்திற்கு, இன்று உண்மையான சிறகுகள் கிடைத்து விட்டது போலிருந்தது அந்த துள்ளல் நடை. அர்ஜூனை பார்த்து தன் காதலை வெளிப்படுத்தும் தெளிவைப் பெற்றதனால் வந்தது இந்த மென் துள்ளல். இருவருமே தங்கள் துணையை ஒரே ரயில் விபத்தில் இழந்தவர்கள். இது இயல்பாகவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பும், பச்சாதாபமும் கொள்வதற்கு காரணமாகிறது என்ற மையச்சரடை ஒட்டி அருமையா பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை கொண்டது ரிதம் திரைப்படம்.
2000த்தில் பாஸ்போர்ட் உடனே தேவை என்ற என் நிறுவனத்தின் அழுத்தத்தால் தட்கலில் பதிவு செய்து விட்டு திருச்சியில் இரண்டு மூன்று நாட்கள் அலைந்திருந்த ஒரு நாளின் மதியத்தில் இப்படத்தை பார்க்க நேர்ந்தது. ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிந்ததா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், அது தப்பு, இது தப்பு, என்னை டோக்கியோவிற்கு வேலைக்கு அழைத்திருந்த நிறுவனத்தின் அழைப்பிதழில் உள்ள பிழை என என்னை அலைக்கழித்த பாஸ்போர்ட் அலுவலகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அடுத்த நாளே அடர் நீலத்தில் பளபளத்த அந்த பாஸ்போர்ட்டை என் கையில் வழங்கியது. அப்போதுதான் என்னுடைய Career ஆரம்பித்திருக்கிறது என்பதை புரிந்துகொண்ட அந்த முதன்மை அலுவலர் என்மேல் கொண்ட கரிசனமாகக் கூட இருக்கலாம். மீனாவிற்கும், அர்ஜூனுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் காட்டிய கரிசனத்தைப் போல. ரிதம் என்னுடைய பாஸ்போர்ட்டில் பதிக்கப்பட்ட முதல் விசாவானது இப்படித்தான்.
பண்பாடு எப்படி ஒரு சமூகத்தின் பரிணாமத்தை அல்லது இயல்பான வளர்ச்சியை அல்லது மாற்றத்தை தடுத்து நிறுத்துகிறது என்பது இப்படத்தை தற்போது பார்க்கும் போது எண்ணிக் கொள்ள முடிந்தது. பண்பாடு கையில் இருக்கும் விளக்கா, இல்லை காலில் கட்டப்பட்ட சங்கிலியா என்றும் கேட்டுக் கொள்ளத் தோன்றியது. மாற்றங்கள் ஏதுமற்ற அல்லது மாற்றங்களுக்கு இடமளிக்க விரும்பாத பண்பாடு என்ற ஒன்று எதுவுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். நமது பண்பாட்டின் ஒரு அங்கமான சதி இப்போதில்லை. இதனை அன்றைய காலத்தின் நியதிகள் நியாயப்படுத்தினாலும், இப்போது சதியை காட்டுமிராண்டிகளின், சாதிவெறியர்களின் செயல்பாடாகத்தான் பார்க்க முடிகிறது.
பண்பாடு உறையவைக்கப்பட்டு மரபு என்ற பெயரில் காலில் கட்டப்பட்ட சங்கிலியாகவும், நெகிழ்ந்து நவீனம் என்ற பெயரில் கையில் உள்ள விளக்காகவும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இன்றைய நவீனம், நாளைய மரபு என பண்பாடு என்பது ஒரு தொடர் இயக்கம். பனிக்கட்டியும், நீரும் கலந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பாத்திரம் என பண்பாட்டை உருவகித்துக் கொள்ளலாம். பனிக்கட்டி என்ற ஒழுக்கம் தரும் அழுத்தம் சில சமயங்களில் நியாயமற்றுப் போகும் போது, இயல்பாகவே ஒரு சமூகம் அதனை நீராக்கி தன் பண்பாட்டை புதுப்பித்துக் கொள்கிறது எனலாம்.
ஆனால், இந்த தொடர் பண்பாட்டு உருமாற்றம் என்பது மரபை உதாசீனப்படுத்துவதையும் இந்தியச் சமூகங்களில் காணமுடிகிறது. நவீனத்தை தழுவுவது என்பது, மரபை அறவே புறக்கணிப்பது என்ற அறிவீனத்திலும் முடிவது இந்தப் பண்பாட்டு உருமாற்றத்தின் பக்க விளைவுகளில் ஒன்று. இந்தப் பக்கவிளைவைச் சுட்டிக்காட்டி, பண்பாட்டு பாத்திரத்திலுள்ள தண்ணீரை அகற்றி அதை முழுதுறைந்த பனிக்கட்டியாக மாற்ற முயல்வதை அடிப்படைவாதச் செயல் எனலாம். இப்படி நவீனத்திற்கும், மரபிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டே இருப்பதால், பண்பாடு என்பது இதுதான் என்று வரையறுத்துக் கூறி விடமுடியாத சிக்கலான ஒன்றாகத் தான் இருந்து வருகிறது.
இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தன் வழியை நிதானத்துடன் கண்டடைய முயல்பவர்களாகத் தான் ரிதத்தின் நாயகனும், நாயகியும் சித்தரிக்கப்படுகிறார்கள். தன் குழப்பங்களையும் அச்சங்களையும் வெளிக்காட்டிக் கொள்ளாத இறுக்கமான மீனாவும், இவரிடம் தன் கணவான் தன்மையை தக்க வைத்துக் கொள்ள முயலும் அர்ஜூனும் மௌனராகத்தின் மோகனையும், ரேவதியையும் ஞாபகப்படுத்துகிறார்கள். இயக்குநர் மணிரத்னம் எப்போதுமே அவருடைய மாணாக்கர்களால் ஆழமாக உள்வாங்கப்படுகிறவர். இப்படத்தின் இயக்குநர் வசந்தும் இதற்கு விதிவிலக்கல்ல.
Rhythm is a true feel good movie!!!