
சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தின் ஆண்டு முடிவு கொண்டாட்டங்களுக்காக, ஒட்டு மொத்த அலுவலகமும் கண்ணை பசுமையில் நனைக்கும் ஒரு Resortல் கூடியிருந்தோம். ஒரு 500 நபர்களுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்வது. கும்பல் கும்பல்களாக அங்கு பரந்திருந்த பசும்புல் மேடுகள் மேல் புரண்டு கொண்டிருந்தனர். எந்நேரமும் மழை வரலாம் என்பதற்கான குளிர் காற்று இதனை ஏதுவாக்கியிருந்து. ஆனால் ஒரு சில பெண்கள் மட்டுமே கொண்ட கும்பல், அந்த மேட்டிலிருந்து தவ்வி வரவிருக்கும் மழையை முதன் முதலாக தொட்டு விட விரும்பினார்கள். ஆனாலும் பூமி விடுவதாய் இல்லை. அவர்களை தொடர்ந்து கீழே இழுத்துப் போட்டுக் கொண்டே இருந்தது. மழை வரும் அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் பெண்களுடைய இந்த தவ்வல் இருந்திருக்கும் என்றே நினைக்க வைத்தது சமீபத்தில் பார்த்த ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம்.
இந்த பூமி ஆண்கள் புரண்டு உழல்வதற்கு இணக்கமானது போல் இன்னமும் பெண்களுக்கு இணக்கமாகவில்லை என்பதை மிக நுட்பமாக மூன்று வெவ்வேறு காலகட்டத்துப் பெண்களின் வழியாக சித்தரித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் வசந்த். இவருடைய ரிதம் படத்தில் வரும் கதாநாயகியின் அதே அழுத்தம் கொண்டவர்களாகவும், பெண் என்று கழிவிரக்கம் கொள்ளாதவர்களாகவும், தங்களுடைய சூழலைப் புரிந்து கொண்டு நிதானமாக அதிலிருந்து தங்களுடைய வழிகளை கண்டு கொள்ள முயல்பவர்களாகவும் இருக்கிறார்கள் இம்மூன்று பெண்களும்.
வசனங்களுக்காக மட்டுமே காட்சிகளை அமைப்பதைவிட, காட்சிகளை மீறாத வசனங்களே திரைமொழியின் இலக்கணம் எனலாம். இது என்னுடைய புரிதல் மட்டுமே. ரசிகர்களுக்கு எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற பதற்றத்திலேயே திரைமொழியை கைவிடும் தவறைத் தவிர்ப்பவர்களே திரைப்பட இயக்குநர்களாக மிளிர்கிறார்கள்.
முதல் பெண்
நாள் முழுவதும் தன் குழந்தையையும், வேறு பல மனச் சுமைகளையும், புறச்சுமைகளையும் தன்னந்தனியாக கணவனின் அருகாமைத் துணை தவிர ஏதுமின்றி சுமந்தலைந்தாலும் அப்பெண் அவற்றை பெரிதும் சிரமமாகக் கருதவில்லை. தன்னுடைய அவயங்களை தன் சுய தேவைகளுக்குத் தவிர வேறெதற்கும் உபயோகிக்காத அக்கணவனின் இறுக்கம் கலந்த வெறுப்பையும் இயல்பாகத் தான் கடந்து செல்கிறாள். ஆனால், தன் கணவனால் கன்னத்தில் அறையப்படும் போது மட்டும் காட்டும் அழுத்தமான எதிர்ப்பில் இயக்குநர் வசந்தின் அல்லது அவருக்கு பரிட்சயமான பெண்ணாக தெரிகிறார்.
நேருவின் சோஷலிச கனவு நொறுங்கி தாராளமயமாக்கல் இந்தியாவை தொட முயன்று கொண்டிருந்த 80களில் நடக்கும் கதையிது. கணவனின் வேலை சம்பாரிப்பது மட்டுமே என்ற ஒரு சமூகத்தில், அது அவ்வளவு எளிதாக இல்லாத போது உள்ள சூழ்நிலையின் இறுக்கம் மிக ஆழமான திரைமொழியாக இக்கதையில் வெளிப்படுகிறது. குறிப்பாக கணவனின் சம்பாத்தியத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கும் மனைவியின் மேல் சுமத்தப்படும் சுமையும், அவள் கணவனால் உதாசீனப்படுத்தப் படும் காட்சிகளும் வெகுவாய் நம்மை பாதிக்கின்றன. இது எழுத்தாளர் அசோகமித்ரனின் ஒரு சிறுகதையும் கூட (விமோசனம்).
இரண்டாம் பெண்
காலம் சற்று முன்னேறியிருக்கிறது. நரசிம்மராவ் மட்டும் மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல் வழியாக. இக்கதையின் நாயகிக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. முதல் கதையில் இருந்த பொருளாதார இறுக்கம் இக்கதையில் சற்று தளர்ந்திருக்கிறது. அவள் மருமகளாகச் சென்ற குடும்பத்திற்கு இது ஒரு வகையான உறுத்தல் கலந்த சந்தோசமும் கூட. வீட்டிற்கு வெளியே மட்டுமே தாராளமயமாக்கலைத் தழுவிக் கொள்ளும் அவளுடைய கணவனின் குடும்பம், அதன் பலன்களை (பொருளாதாரப் பலன் தவிர) வீட்டு வாசலிலேயே கழற்றி விடச் சொல்கிறது அவளிடம். கிட்டத்தட்ட, ஜனநாயகத்தையும், அது தரும் சுதந்திரத்தையும் வெறும் பொருளாதார பலன்களாக மட்டுமே சுருக்கி வைத்திருக்கும் இந்திய மனநிலை இது.
நிலப்பிரபுத்துவத்தின் (கிட்டத்தட்ட பெண் ஒரு உடைமைப் பொருள் என கருதும் மனநிலை) எச்சம் தங்களிடமிருந்து வெளிப்பட்டு விடக்கூடாது என்ற அக்குடும்பத்தின் வரட்டு கௌரவம் அவள் தினந்தோறும் ஒரு டைரி எழுதி வருகிறாள் என்பதை தெரிந்தவுடன் சிதைந்து போகிறது. டைரியை விட அது மிகவும் பிரத்யேகமானது, எனக்கு மட்டுமேயானது என்ற அவளின் கெஞ்சல் வழக்கம் போல் அது நம் குடும்பத்தைப் பற்றிய ரகசியம் என்ற முன்முடிவுகளுக்கே அவர்களை இட்டுச் செல்கிறது. இது தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை உணரும் அளவிற்கு முதிர்ச்சியடைந்த சமூகமாக நாம் மாற இன்னமும் நாள் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றினாலும், அவள் புகுந்த வீட்டாரின் மாமனார் தொடங்கி அனைத்து உறவுகளின் முகத்தில் இருக்கும் பதற்றம் பார்வையாளர்களுக்கு வெவ்வேறு கோணங்களை அளிக்கிறது. தன்னைப் பற்றி அதில் எதுவும் தவறாக எழுதியிருக்குமோ என்ற பதற்றம், வேறெதுவும் திருமணம் மீறிய தொடர்பிருக்குமோ இவளுக்கு என்ற சந்தேகம், அதென்ன அப்படி ஒரு ரகசியம் அதிலுள்ளது கணவனிடமிருந்தே மறைப்பதிற்கு என்ற எரிச்சல் என கலவையான எண்ணங்களை பார்வையாளர் மத்தியிலும் ஏற்படுத்துகிறது.
இறுதியில், தன்னுடைய தனிமனித சுதந்திரத்தை மிக இயல்பாக அந்த டைரியை எரிப்பதின் மூலம் பாதுகாத்துக் கொள்கிறாள். மறுபடியும் வசந்தின் ஒரு பரிட்சயமான பெண்ணாக நமக்குத் தெரிகிறாள். அதற்காக அந்த வீட்டிலிருந்தும் வெளியேற்றப் படுகிறார்.இது எழுத்தாளர் ஜெயமோகனின் ஒரு சிறுகதையும்கூட(தேவகி சித்தியின் டைரி).
மூன்றாவது பெண்
பெண்கள் வேலைக்குப் போவதுமட்டுமல்ல, ஆண்களுக்கு இணையாக எத்துறையில் ஈடுபடுவதற்கான கால கட்டத்தில் நிகழும் கதையிது. பள்ளியில் தன்னை ஒரு தடகள வீராங்கனையாக அடையாளங் கண்டு கொண்ட இக்கதையின் நாயகி, கிட்டத்தட்ட இத்திரைப்படத்தின் முதல் பெண் போல் வீட்டின் அனைத்து சுமைகளையும் தனியாக சுமக்கிறாள். பொருளாதாரத்தை மட்டுமே கணவர் சுமக்கிறார். இது ஒரு வகையில் முதல் கதையிலிருந்த இறுக்கத்தை சற்று குறைப்பது போல் தெரிந்தாலும், முதல் கதையில் வரும் கணவரை விட நிறையவே எரிச்சலூட்டுகிறார் இக்கதையில் வரும் கணவர். ஒரு வேளை தொடர்ச்சியாக இதே போன்ற கதையை மூன்றாவது முறையாக பார்த்ததாக இருக்கலாம். முதலிரண்டு கதைகளிலும் வரும் பெண்களிடம் எழாத பரிதாபம் இக்கதையின் சிவரஞ்சனியிடம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை. இது எழுத்தாளர் ஆதவன் அவர்களின் ஒரு சிறுகதையும் கூட (ஓட்டம்).
மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டிருப்பது சற்று அவநம்பிக்கையைக் கொடுத்தாலும், அவற்றிலிருந்து அப்பெண்கள் தொடர்ந்து வெளியேறி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வது நம்பிக்கையைத் தருகிறது. Still a long way to go!!!
https://www.sonyliv.com/movies/Sivaranjaniyum-Innum-Sila-Pengallum-1000146044
[…] சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – முத்து […]
LikeLike