துறவு
கடல் நீரினின்று மேகங்கள்
எதை உதறி லேசாகின்றன?
பொழிய நோக்கும் திசையிலுள்ள
பூமியை.
– கவிஞர் தேவதேவன்
இங்கிருந்து கிளம்பிச் செல்வது, மீண்டும் இங்கே திரும்பி வருவதற்காகத் தான் என்கிறதா இக்கவிதை? துறவு என்பது விட்டுச் செல்வதல்ல, விலகி நிற்பது என்கிறதா?
இவ்வுலகின் அல்லது பிரபஞ்சத்தின் காரணத்தை ஊகித்தறிய முற்பட்ட பண்டையகால இந்தியத் தத்துவங்கள், குறிப்பாக உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்தத் தத்துவங்கள், அதனை பிரம்மம் என வரையறுத்தன. இப்பிரம்மத்தின் பரிணாம வளர்ச்சியே இவ்வுலகம் என்றன. கிட்டத்தட்ட நான் பலவாக விரும்பினேன் எனும் சிருஷ்டி கீதத்தின் வழியாக இது எட்டப்பட்டது என்று கருதுகிறார் பேராசிரியர் ஹிரியண்ணா (இந்தியத் தத்துவம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்). பிரம்மம், ஆத்மாவாக மாறி மீண்டும் பிரம்மத்தில் ஒடுங்கும் இந்த இயக்கத்தை அல்லது பிரம்ம பரிணாமவாதத்தை (ஸபிரபஞ்சக் கொள்கை அல்லது சற்குணபிரம்மம்) நம் புலன்களால் ஏற்படும் தோற்றப்பிழையாகவும் (நிஸ்பிரபஞ்சக் கொள்கை அல்லது நிர்குணபிரம்மம்) உபநிடதங்கள் உருவகிக்கின்றன.
ஆச்சரியமாக, புகழ்பெற்ற ஜெர்மானியத் தத்துவ அறிஞரான ஹெகலின் இயங்கியல் தத்துவம், சற்குணபிரம்மத்தோடு ஒத்திருப்பதையும் உணரமுடிகிறது. தன்னுள் ஒடுங்கியிருந்த பிரம்மம், தன்னுடைய பரிணாம வளர்ச்சியில் இப்பிரபஞ்சமாக உருமாறி மீண்டும் தன்னுள் அடங்குகிறது என்ற இந்த இயங்கியலின் அடிப்படையில் அமைந்ததுதான் மார்க்சிய தத்துவமும் கூட.
பிரம்மம் விடுப்பு எடுத்துக் கொண்டு, ஆத்மாவாக இவ்வுலகில் வாழ்ந்து மீள்கிறது எனலாம். தேவதேவனின் இக்கவிதையில் வரும் கடல்நீர் விடுப்பு எடுத்துக் கொண்டு மேகமாக மாறி மழையாக மீள்வதைப் போல. தத்துவம் வாழ்வை அங்கிருந்து நோக்குகிறது என்றால், கவிதை இங்கிருந்து நோக்குகிறது.
இடம்
எங்கே எங்கே என
எத்திசையும் கைநீட்டி
ஏமாந்த மரத்தின்
மார்பிலேயே பூத்திருந்தது
கனி
– கவிஞர் தேவதேவன்
மின்னற்பொழுதே தூரம் என்ற தொகுப்பில் இவ்விரு கவிதைகளும் உள்ளன.