How long does the Train stop here? என்பதை மென் முகத் தசைகள் மட்டுமே அசையும் மிகையற்ற உடல் மொழி முதல், தன் குதி காலிலிருந்து, அடிவயிறு, கைகள் வழியாக முகம் வரை அதிரும் மிகையான உடல் மொழி வரை கேட்க வைக்கிறது, அதற்குத் திரும்பத் திரும்ப அந்த ஸ்டேஷன் மாஸ்டரால் சொல்லப்பட்ட Two to Two to Two two என்ற பதிலை புரிந்து கொள்ள முடியாத அன்பரசு என்ற A.Ars (not Ass 🙂) என்ற மாதவனை. அர்ஸின் விசித்திரமான மற்றும் சற்று நக்கலான அந்த உடல் மொழி, மக்கு மாணவர்களிடம் ஆசிரியர்கள் காட்டும் உடல் மொழியை ஒத்திருந்தது.

Generative AI pic
அப்போது அர்ஸூடன் பயணிக்கும், ஒரு விபத்தில் சிதைந்து போன முகத்தைக் கொண்ட நல்லா என்கிற நல்லசிவம் என்கிற கமலஹாசன் ‘ஆஹ்…எனக்கு புரிஞ்சிருச்சு…’ என்று சொன்னதும் அப்பாடா தன் கேள்வியை இவராவது புரிந்து கொண்டாரே என்ற அர்ஸின் ஆசுவாசம், The train will stop here from Two to Two to Two two என்று நல்லாவும் அதே பதிலைச் சொன்னபின் காணாமல் போய் விடுகிறது.
அமைப்புகளும் பொதுச் சமூகமும்
தன்னுடைய கேள்விக்கு அளிக்கப்படும் பதில் புரியாத பட்சத்தில், அதை தன்னுடைய கேள்வியை பதிலளித்தவர் புரிந்து கொள்ளவில்லை என்று நம்பத் தலைப்படுவராக அர்ஸ் இருக்கிறார். உங்களுடைய பதில் எனக்குப் புரியவில்லை என்று கேட்கும் மனப்பான்மை அமையாத அர்ஸின் இந்தப் போக்கை, நமது கம்யூனிசத் தோழர்கள் மேல்வர்க்கத் திமிர்த்தனம்; அல்லது நமது திராவிடக் கண்மணிகள் பிராமணிய மேட்டிமைத்தனம்; அல்லது நமது வலதுசாரிகள் அதீத தன்னம்பிக்கை எனலாம். ஆனால் இந்த இசங்களுக்குள்ளும், சாரிகளுக்குள்ளும், அமைப்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத அல்லது அதற்கான தேவையோ வாய்ப்போ அமையாத பொதுச் சமூகத்தின் பார்வையில் இது அர்ஸின் அசட்டுத் தனமாகவேத் தோன்றும். பொதுச் சமூகத்திற்கென்று ஒரு தரப்பு இல்லாத பட்சத்தில், அதனை நிறுவுவதற்கும்; அதற்கெதிரான ஒன்றை சிதைத்தழிப்பதற்கும் தேவையற்றுப் போகிறது. இந்த அசட்டுத் தனத்திற்கான காரணங்களைப் பற்றியெல்லாம் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள முற்படுவதில்லை. காலம், இந்த அசட்டுத் தனத்தைப் போக்கி விடும் என்ற நம்பிக்கையில் எளிதாக கடந்து செல்கறார்கள்.
தனது அனுபவங்களைப் பெறுவதற்கான வாசலில் காலடி எடுத்து வைத்திருக்கும் முதிர்சசியற்ற அர்ஸை முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற உறைக்குள்ளும், தன்னுடைய கசப்பான அனுபவங்களின் வழியாக முதிர்ந்திருக்கும் நல்லாவை கம்யூனிச உறைக்குள்ளும் அடைத்து விட முயன்ற கம்யூனிச பிரச்சார நெடியிலிருந்து இப்படத்தைக் காத்திருப்பது அர்ஸ், நல்லா என்ற மையக் கதாபாத்திரங்களில் தங்களை இயல்பாக பொருத்திக் கொண்ட மாதவன் மற்றும் கமலின் மேதைமையே. It is treat indeed to watch both of them in the screen!!!
அமைப்புகளின் திறனின்மை
ஏழைகள், பணம்படைத்தவர்களை எதிர்த்து போராட வேண்டியவர்கள் என்று கம்யூனிசத்தை எளிமைப்படுத்துவது; பணம்படைத்தவர்கள், ஏழைகளை முட்டாளாக கருத வேண்டியவர்கள் என்று முதலாளித்துவத்தை எளிமைப்படுத்துவது என்ற இருமைகளில் சிக்கித் தவிக்கிறது உலகை மாற்றிய அல்லது மாற்றியமைக்க முயலும் இந்த இசங்கள். கிட்டத்தட்ட இந்த எளிமைப்படுத்தப் பட்ட இசங்களே, அந்தந்த இசங்களின் அமைப்புகளால், இந்த இசங்களில் சிக்கிக் கொள்ளும் அவசியமற்ற பொதுச் சமூகத்தில் அந்தந்த இசங்களின் சாரமாக கொண்டு சேர்க்கப்படுகிறது.
ஏதாவது ஒன்றை பற்றிக் கொண்டு வாழ நிர்பந்திக்கப் பட்டவர்கள், இயல்பாகவே இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளாகிறார்கள். இவர்கள் தங்களைக் கொண்டே ஒட்டு மொத்த பொதுச் சமூகத்தின் அறிவுத் திறனை மதிப்பிடுகிறார்கள். இவர்களால் முன் வைக்கப்படும் உலகின் மாற்றங்களை கணித்த அல்லது மாற்றங்களுக்கு காரணமான இந்த இசங்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவை, பொதுச்சமூகத்தின் மேம்பட்ட அறிவாற்றல் மிக எளிதாக புறக்கணித்து விடுகிறது. அதன் உள்ளடக்கங்களை, சிடுக்குகளை அறிந்து கொள்வதற்கு முன்பாகவே இந்த இசங்கள் எல்லாம் காலாவதியானவை என்ற முடிவிற்கு வந்து விடுகிறது.
தவறே செய்தாலும், தந்தைக்கு மைந்தனின் பக்கம் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. கிட்டத்தட்ட இது குல அல்லது சாதிய அல்லது ரத்த பந்த மனநிலையின் ஊற்றுக்கண் எனலாம். இதன் அடுத்தக் கட்ட வளர்ச்சிதான் தவறே செய்தாலும் தொழிலாளி பக்கம் தான் நிற்பேன் என கம்யூனிசத்தை சுருக்கிக் கொள்வது; உடலுழைப்பாளிகள் சிந்திக்கும் திறனற்றவர்கள் அல்லது அதற்கான தேவையற்றவர்கள் என முதலாளித்துவத்தை மேட்டிமைவாதமாகச் சுருக்கிக் கொள்வது.
இடதுசாரி சிந்தனை வர்க்கமற்ற, அது வர்க்கமற்றிருப்பதாலேயே அதனை நிர்வகிக்கும் அரசு என்ற கருவியே தேவைப்படாத பொதுவுடைமைச் சமூகத்தை தனது லட்சியக் கனவாக முன் வைக்கிறது. கிட்டத்தட்ட வலதுசாரிகளின் வசுதைவக் குடும்பம் (ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே குடும்பாக காண்பது) என்ற லட்சியக் கனவுபோலத் தான் இதுவும். ஆனால், இச்சிந்தனைகளின் ஸ்தூல வடிவமான அதன் அமைப்புகள் இந்த கனவுகளுக்கு எதிராக செயல்படுவதின் முரண் விளங்கிக் கொள்ள முடியாதது. தான்/பிறர் என்று கட்டமைப்பதிலேயே இந்த அமைப்புகளின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படுகிறது. மனிதன் நல்லவன் தான், ஆனால் அவனை நம்பி ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற சோப்பனோவரின் தீர்க்கதரிசன வார்த்தைகள் தான் இங்கு நினைவுக்கு வருகின்றது.
அன்பே சிவம்
அர்ஸ் தன்னுடைய அன்பரசு என்ற பெயரிலிருந்து தவிர்த்த அன்பையும், நல்லா தன்னுடைய நல்லசிவம் என்ற பெயரிலிருந்து தவிர்த்த சிவத்தையும் பொறுக்கி எடுத்து வைத்த அன்பே சிவம் படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த என்னை ஏதேதோ எழுத வைக்கும் இன்னொரு என்னை நினைத்தால், ஒரு உயர்வர்க்கப் பார்ட்டியில் கைதவறி தரையில் சிந்திப் போன குழம்புணவை கையால் ஒழுங்குபடுத்தி ஒரு ஓவியமாக்க முயற்சிக்கும் நல்லாவை உற்சாகப்படுத்தும் கார்ட்டூனிஸ்ட் மதனின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. “Come on Nalla…you are getting into a good mood…” 🙂
இந்த எளிமைப்படுத்துதல்களின் எரிச்சலூட்டும் தன்மையை இப்படத்தின் காட்சியமைப்புகளும், அதன் கலைஞர்களின் திறனும் வெகுவாகவே போக்கி விடுகின்றன. இவையனைத்தையும் தாண்டி இப்படத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு ஒளிக் கீற்று, படத்தின் இறுதியில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்திற்கு முதலாளியை நிர்பந்தித்த பிறகு… நல்லாவின் “அவ்வளவுதான்…வேல முடிஞ்சிருச்சு. இனிமே இந்த கருவிய எடுத்து தூரமா வச்சுரணும்…” என்ற நுட்பமான வார்த்தைகள் தான். இந்தப் புரிதலை நல்லா எப்படி அடைகிறார் என்பது சூட்சுமமாக இருந்தாலும், கம்யூனிசம், முதலாளித்துவத்தை செப்பனிட உதவும் ஒரு கருவியாகத் தான் வளர்ந்த நாடுகளில் கருதப்படுகிறது. அதனால், அங்கு உருவாகியிருக்கும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் அரசாங்க எந்திரங்களே இதற்கு சாட்சி. கிட்டத்தட்ட ஜனநாயகச் சாலையில் விரைந்து செல்லும் முதலாளித்துவ காரின் பிரேக் போன்றுதான் கம்யூனிசம் அங்கு செயல்படுகிறது. அதுவே, எதார்த்தமான ஒன்றாகவும் படுகிறது.