
நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிக்கொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்
– கொபயாஷி இஸ்ஸா
Insects on a bough/ floating downriver,/ still singing
– Kobayashi Issa
நிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present ( கணத்தில் வாழ்வது ) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும், வரப் போகின்றவைகளையும் நிகழ்காலத்தில் கரைத்து இல்லாமலாக்கி விடுவதுதான்.
இஸ்ஸா-sanன் இக்கவிதை சடுதியில் நம்மை பிணைத்திருக்கும் ஏதோ ஒன்றிலிருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு உணர்வைத் தருகிறது. வழி தெரியாமல் முழி பிதுங்கி சிக்கியிருக்கும் கூட்ட நெரிசலிருந்து நம்மை ஒருவர் வெளியே இழுத்துப் போடும்போது கிடைக்கும் ஆசுவாசத்தைத் தான் நதியோட்டத்தில் மிதந்து சென்று கொண்டிருக்கும் மரக்கிளைகளில் பாடிக் கொண்டிருக்கும் இப்பூச்சிகளும் நமக்குத் தருகின்றன. பூமியும் இப்பிரபஞ்ச நதியோட்டத்தில் மிதந்து செல்லும் ஒரு மரக்கிளைதானே🙂!!!
நம் நினைவுகளில் இல்லாத ஒரு புதிய நிகழ்விலிருந்து உருவாகும் இது போன்ற ஒரு ஜென் தருணத்தைத் தான் பௌத்தம் அந்தகர்ண விருத்தி என்கிறது. இதனை உடனடியாக மனித புலன்கள் அனுபவமாக்கி நம் நினைவுக்கு கடத்துவதை விகல்பம் என்றும் கூறுகிறது. ஒரு நிகழ்வின் மீது படியும் அனுபவமெனும் இத்தூசிபடலத்தை படரவிடாமல் தடுக்கப் பிரயத்தனப்படுகின்றன ஜென் கவிதைகள். வாள் கொண்டு நீரை வெட்டுவது போல, வெட்டியதற்கான எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்ல விரும்பாதவை இக்கவிதைகள் என்கிறார் யுவன். மேலும் இதனை எப்படி இக்கவிதைகள் சாத்தியமாக்க முயல்கின்றன என்பதையும் ஒரு அபாரமான உருவகம் கொண்டு விளக்கியிருக்கிறார். ஒரு நிகழ்வின் கால-வெளி என்னும் எழும்புக் கூட்டை உருவி எடுத்துவிட்டு அதனை இரத்தமும், சதையும், நிணமுமாக நம்முன் வைக்க முயல்பவை…ஆஹா…உருவமும், உள்ளடக்கமும் ஒன்றாகிப் போகும் ஒரு ஜென் அல்லது மோன நிலை. கவிதைகளைப் போலவே யுவனின் முன்னுரைகளும் நமக்கு பெரிய திறப்புகளை அளிக்கின்றன.
என்னளவில், இக்கவிதைகள் நமது அனுபவங்களெனும் தூசிப்படலத்தில் சிறைபட்டிருக்கும் நிகழ்வுகளைத் துலக்கி காட்டுவதை விட, இன்னொரு தூசி படலத்தை அதன் மேல் படரவிடாமல் இருப்பதில்தான் கவனம் கொள்கின்றன என்று எண்ணுகிறேன். தூசிகளை விலக்குவதற்கு கேளடா மானிடா என்றோ, உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள் என்றோ, இருளை நீக்க ஒளியாய் பிறந்தான் என்றோ இன்னொரு தூசி நிரம்பிய துடைப்பான்களை கையில் எடுப்பதில்லை இக்கவிதைகள். மிகக் குறைவான சொற்களுடன், எந்த வித திட்டவட்டமுமில்லாமல் வெளிப்படும் இக்கவிதைகள் ஒரு ஜென் மனோதளத்தில் இருந்து எழுபவை என்கிறார் யுவன்.
பெயரற்ற யாத்ரீகன் என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தின் வடிவமும், உள்ளடக்கமும் நூல்வனம் பதிப்பகத்தாரின் தொழில்முறை நேர்த்திக்கு ஒரு சான்று. தீவிர இலக்கிய வாசகரும், விமர்சகருமான கடலூர் சீனு அவர்களின் இப்புத்தகம் பற்றிய அவதானிப்புகளை (http://www.kavithaigal.in/2023/02/blog-post_78.html?m=1) மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.
அவன் வனத்தில் நுழைகையில்
புற்கள் நசுங்குவதில்லை
அவன் நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
