வாஜ்பாயி – சேற்றில் முளைத்த செந்தாமரை

சில வருடங்களுக்கு முன்பு படித்த, நரசிம்மராவ் அவர்கள் பற்றிய புத்தகம்தான், வாஜ்பாயி பற்றிய இந்தப் புத்தகத்தை ஏதேச்சையாக Odyseeyல் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.  ராமசந்திர குகாவின் The finest biography of an Indian prine minister that I have read என்ற பரிந்துரையும் இப்புத்தகத்தின் முகப்பட்டையிலேயே இருந்தது. நரசிம்மராவின் வாழ்க்கை (அரசியல்) பற்றி எழுதியிருந்த வினய் சீதாபதி பற்றி எதுவும் நான் அறிந்திருக்க வில்லை. இப்புத்தகத்தை எழுதிய அபிஷேக் சவுத்திரி பற்றியும் தான். அப்புத்தகத்தை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு உரையாடலின் போது சுட்டிக் காட்டியிருந்தார். இப்புத்தகத்தை கையில் எடுக்க வைத்தது குகாவின் பரிந்துரைதான்.

பதேஸ்வர்

அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் குடும்பப் பின்னனியை (அவருடைய தாத்தா ஷ்யாம்லால் வாஜ்பாயின் காலத்திலிருந்து) மிகத் தெளிவாகவும், கூராகவும், மிகக் குறிப்பாக தான் அடல் பிகாரியை இப்புத்தகத்தில் எப்படி வைத்து மதிப்பிடப் போகிறேன் என்பதற்கு ஏதுவான துல்லியமான விவரங்களுடனும் விவரிக்க ஆரம்பிக்கிறார் அபிஷேக். சாஷ்திரங்கள், சடங்குகள் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெரும்பான்மையான பிராமணக் குடும்பங்களில் ஒன்று தான் வாஜ்பாயின் குடும்பமும். பதேஸ்வர் (Bateshwar) என்ற இடத்தில் தான் இவர்களின் குடும்பம் வாழ்ந்திருக்கிறது. ஆல மரத்தினடியில் நிறுவப்பட்ட சிவன் கோயில்களின் இருப்பிடம் என்பது இந்த ஊர்ப் பெயரின் காரணம் என்கிறார் ஆசிரியர். சமஸ்கிருதத்தில் Vat என்பது ஆலமரம். இங்கிருந்து சற்று தூரத்தில்தான் மொகலாயர்களின் சாம்ராஜ்யம் நிறுவப்பட்ட ஆக்ரா உள்ளது. 

அடிப்படைவாதிகளால் பண்பாட்டு சிதைவின் காரணமாக பார்க்கப்படும் நவீன மாற்றங்கள், அறிவுஜீவிகளால் வளர்சிதை மாற்றமாக பார்க்கப்படுகிறது. மொகலாய மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்புகளால், பதேஸ்வர் தன் முக்கியத்துவத்தை இழக்கிறது. ஷ்யாம்லாலின் சமஸ்கிருதம் மட்டுமே அவருக்கு போதுமானதாக இல்லை. கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த எல்லாப் பிராமணர்களுக்குமே இதுதான் நிகழ்ந்தது. ஆர்ய சமாஜ் போன்ற அமைப்புகளின் வழியாக இந்த வரலாற்று மாற்றத்தின் காரணிகளை புரிந்து கொள்கிறார் அவருடைய மகனான கிரிஷ்ணன் பிகாரி. ஆர்ய சமாஜ் Hindu Sangathan (இந்துக்களின் ஒற்றுமை) என்பதை முன்னிறுத்துகிறது.  நாத்திகம் அதிகமாக பேசுமிடத்தில் ஆத்திகம் விஸ்வரூபம் எடுக்க முயல்வதைப் போல வாஜ்பாயின் குடும்பத்திலும் இந்த மதப்பற்று நுழைகிறது. ஆங்கிலமும் கற்று சரிந்திருந்த தங்கள் பொருளாதார நிலையையும், சமூக அந்தஸ்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்,  மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று 1924ம் ஆண்டு பிகாரிக்கு அடல் பிறக்கிறார். சோதிடக் கலையில் வல்லுநரான அடலின் தாத்தா, அப்போதைய கிரகங்களின் நிலையைக் கணித்து மகழ்ச்சி கொள்கிறார். அவர்தான் அடல் (வலிமையான) என்று அக்குழந்தைக்குப் பெயரிடுகிறார்.

எதற்கிந்த புத்தகம்?

இப்புத்தகத்தின் ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல, இப்புத்தகம் அடலா (அடல் பிகாரி வாஜ்பாயி அவரது நண்பர்களால் அப்படித்தான் அழைக்கப்படுகிறார்) அல்லது அடல்ஜி மேல் சமகாலத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பிம்பச் சுமையை இறக்கி வைக்க முயல்கிறது எனலாம். கிறிஸ்து, அவரது சீடர்களால் எட்டப்படாத உயரத்திற்கு ஏற்றி வைக்கப் பட்டது போல், BJPயினரால் அடலும் எட்டாத உயரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை தன் ஆய்வு வழியாக முறியடிப்பது தான் இப்புத்தகத்தின் நோக்கம் என்கிறார். ஆய்வு என்பது எந்த முன் முடிவுகளும் இல்லாமல் செய்யப் பட வேண்டியது என்ற தார்மீகமெல்லாம் அரசியல் துருவப்படுத்தல்களுக்கு முன் செல்லு படியாவதில்லை. 

நேருவால், இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று அடல் ஆசிர்வதிக்கப் பட்டார் என்பதையும்; இந்திராவை, அடல் துர்கையின் வடிவாக பார்த்தார் என்பதையும் மறுப்பதற்கு ஒரு ஆய்வு அவசியமா? கிறிஸ்து பிறக்கும் போதே இவ்வுலகை ரட்சிப்பவராகத் தான் இருந்தார் என்பதை மறுப்பதற்கு ஆய்வெதற்கு? அடல் சிறுவனாக இருக்கும் போது பக்கத்து வீட்டுக்கு கொடுப்பதற்காக அவர் தாயார் வழங்கிய ரஸகுல்லாக்களில் பாதியை தானே விழுங்கி விட்டு, கூட வந்த தங்கையிடம் இதை அம்மாவிடம் சொல்லக் கூடாது என மிரட்டியிருக்கிறார் என்ற நிகழ்வை அவர் சிறு வயதில் நாணயமற்றவராக இருந்தார் என்ற தொனியில் சுட்டிக் காட்டுவதற்கு ஆய்வெதற்கு? அடல் தன் முதல் மேடைப் பேச்சின் போது (கல்லூரி மாணவனாக இருந்த போது) தான் முழுவதும் மனப்பாடம் செய்த உரை மறந்து போய் மேடையில் திணறியதை, ஒரு குறைபாட்டை கண்டுபிடித்து விட்ட தொனியில் சுட்டுவதை என்னவென்பது? என் கேள்விகள் முடிய மறுக்கிறது.

அடல் பிறக்கும் போதே மேதையாகத்தான் பிறந்தார் என்ற இந்துத்துவர்களின் தரப்பை மறுப்பதற்கு ஒரு ஆய்வெதற்கு? தேவைக்கான காரணம், இப்புத்தக ஆசிரியர் இந்துத்துவர்களின் எதிர் தரப்பில் இருப்பதால் தானா? கிட்டத்தட்ட, ஒரு ஆளுமை என்பவர் ஒரு நாளில் உருவாகி வருபவரல்ல என்பது கூட தெரியாத பாமரர்கள்  தான் இந்துத்துவர்கள் என்பதை சுட்டிக் காட்டுவது தான் இப்புத்தகத்தின் குறிக்கோளா? இதற்கு இத்தனை பக்கங்கள் கொண்ட புத்தகம் எதற்கு? இப்புத்தகம் முதல் பகுதி மட்டும் தான். இரண்டாம் பகுதி கூடிய விரைவில் வரலாம்.

இப்புத்தகம் நமக்குத் தருவது

முதல் முப்பது பக்கங்களைப் படித்த பின் எழுந்த எரிச்சலுணர்வில் எழுந்தவைதான் இந்தக் கேள்விகள். குகாவின் பரிந்துரை மட்டுமே இப்பக்கங்களைத் தாண்டியும் இப்பத்தகத்தை வாசிக்க வைத்தது எனலாம். இருந்தும் இப்புத்தகத்தில் இருந்த ஒரு தீவிரம், நம்மை ஈர்க்கத் தான் செய்கிறது. நேர்மறையின் நிதானத்தை விட, எதிர்மறையின் தீவிரத்திற்கு ஈர்ப்பு இருப்பது இயல்பான ஒன்று தான் போலும். என்னுடைய இந்தக் குறையை நான் ஒப்புக் கொண்டாலும், நாம் நன்கு அறிந்த ஒரு ஆளுமையின் நமக்குத் தெரியாத இளமைப் பருவம் சித்தரிக்கப்படும் பொழுது, அவர் நமக்குத் தெரிந்த ஒருவராக எப்போது வெளிப்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இந்த புத்தகத்தின் மேல் உள்ள ஈர்ப்பிற்கு ஒரு காரணம். 

ஆசிரியரின் எரிச்சலூட்டும் துருவப் படுத்தல்களையும், சில சிறுபிள்ளைத் தனத்தையும் விலக்கி வைத்து விட்டால், அடல் பிகாரி வாஜ்பாயி என்ற ஆளுமை உருவாகி வந்ததின் கோட்டோவியத்தை, ஒரு சாமானிய (அதாவது இத்துருவப்படுத்தல்களில் சிக்கிக் கொள்ளாத அல்லது விரும்பாத அல்லது அதற்கான தேவையற்ற) வாசகனால் இப்புத்தகத்தில் இருந்து பெயர்த்தெடுத்துக் கொள்ள முடியும். அடல் அவர்களின் ஆளுமை வளர்ச்சியை அறிந்து கொள்வதென்பது, ஆர்ய சமாஜ் தொடங்கி, இந்து மகா சபா, RSS, ஜன் சங் என BJP என்ற கட்சியின் வளர்ச்சியையும் அறிந்து கொள்வது தான்.

ஆர்ய சமாஜ்லிருந்து RSS வரை

அடலின் தாத்தாவும், தந்தையும் ஆர்ய சமாஜ் போன்ற இந்துக்களின் ஒற்றுமையை, தனித்தன்மையை வலியுறுத்தும் அமைப்பின் தேவையை அவசியமான ஒன்றாக கருதினாலும், அடலின் தந்தை மாறிவரும் சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறார். பதேஸ்வரிலிருந்து, மொகாலயர்களின் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்த மத்தியப்பிரதேசத்தின் குவாலியருக்கு இடம் பெயர்கிறார். ஆனால், குவாலியரில் நீண்ட காலம் இந்து மன்னர்களின் ஆட்சி நீடிக்கும் வாய்ப்பை பிரிட்டிஷாரின் இந்திய ஆக்கிரமிப்பு தடுத்து விடுகிறது. மீண்டும் அந்நிய ஆட்சி. ஆர்ய சமாஜ் என்ற தத்துவப் பின்புல அமைப்பையும் தாண்டி இந்துக்களுக்கு ஒரு வலுவான அமைப்பு தேவை என்பதை உணர்கிறார்கள். அது இயல்பாகவே, ஒரு அரசியல் அதிகாரத்தையும் நோக்கி இந்துக்களை நகர்த்துகிறது. இந்து மகா சபா என்ற கட்சி பிறக்கிறது. சாவார்க்கர்  இக்கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவர். இந்து ராஸ்டிரம் இக்கட்சியின் முதன்மை கொள்கையாக அமைகிறது. இதற்குத் துணை நிற்க, மிக நீண்ட காலமாக உயிர்ப்புடன் இருக்கும் இயக்கங்களில் ஒன்றான RSS உதயமாகிறது. அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான முதன்மை வழியான அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளையும் RSS முன்னெடுக்கிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் (19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில்), பிராமண ஆதிக்கத்திற்கெதிரான திராவிட இயக்கம் தமிழகத்தில் தொடங்கப் படுகிறது என்பது ஒரு நகைமுரண். இந்தியா, இந்த முரண்களின் கூட்டுத்தொகை தானே.

அடல் வளர்த்தெடுக்கப்படுவது RSSல் தான். அடலின் மொழியாளுமை இயல்பாக RSS ன் பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக அமர வைக்கிறது. புத்தகம் jet வேகமெடுப்பது இங்கிருந்து தான். ஒரு இனம் புரியாத தீவிரம் இங்கிருந்து நமக்கும் ஒட்டிக் கொள்கிறது. அடல் என்ற ஆளுமையின் வளர்ச்சியை நம்மால் இங்கிருந்து அவதானிக்க முடிகிறது. தற்போதைய, ரயில் பெட்டிகளில் எல்லாம் எழுதப்பட்டிருக்கும் ‘Dheen dhayal coach’ என்ற வாசகத்தில் உள்ள தீன் தயாள், அடலின் mentor, boss. 

ஆனால், இப்புத்தகத்தின் ஆசிரியர் நேரு RSS மேல் கொண்டிருந்த அதே வெறுப்பைத் தான் பிரதிபலிக்கிறார். ஏழ்மை நிலையிலிருக்கும் இந்துக்களை, குறிப்பாக பிராமணர்களை மூளைச் சலவை செய்து இந்து மகா சபாவின் கனவான அல்லது கொள்கையான இந்து ராஷ்டிராவை நனவாக்குவது தான் RSSன் வேலை என்கிறார். ஆனால், சர்தார் படேலுக்கு இந்து மகா சபாவின் மேல் தான் வெறுப்பிருந்ததே (குறிப்பாக சாவார்க்கர்) தவிர, RSS மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதையும் இப்புத்தகம் சுட்டிக் காண்பித்திருக்கிறது. RSSஐ, எப்படியாவது காங்கிரஸுடன் இணைத்து விட வேண்டுமென்ற படேலின் கனவு, கடைசி வரை கனவாகவே மட்டுமேயிருந்தது.

அடலின் மொழியாளுமை, அவருடைய பேச்சிலும் பிரதிபலித்தது. இந்தியில் கவிதை எழுதும் ஒருவரால், தன் பேச்சாற்றலாலும் பொது மக்களைக் கவர முடிந்தது ஆச்சரியம் தான். இந்து மகா சபா கட்சிக் கூட்டங்களுக்கும் பேச அழைக்கப் படுகிறார். காந்தியின் படுகொலை மிக மோசமான நிலைமைக்கு RSSஐ இட்டுச் செல்கிறது. அடல் எழுதிய ஒரு கட்டுரையில், பிரிட்டிஷார் நம்மை ஆக்கிரமித்தற்குக் காரணம் நம் வளங்களைச் சுரண்டுவதற்குத் தான். அதற்காக மதமாற்றத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் முதன்மை நோக்கம் மதமாற்றம் மட்டுமே, An Isalmic state that they dreamt, என்று குறிப்பிட்டது கூட கோட்சே போன்றவர்களை பாதித்திருக்கலாம் என்கிறது இப்புத்தகம். ஆனால், படேல், காந்தியின் கொலைக்கு RSS அல்ல இந்து மகா சபா தான் காரணம் என்று நேருவிடம் வாதாடியும், RSS இயக்கம் தடை செய்யப்படுகிறது.

ஜன் சங்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு

கிட்டத்தட்ட RSS ஓர் மக்கள் இயக்கமாக மாறியது, அதனுடைய வெளிப்படையான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட பின்புதான் என்று தோன்றுகிறது. கலை, இலக்கியம், சினிமா, சமூக சேவை என பல தளங்களில் தன்னுடைய அடையாளத்தை களைந்து அல்லது மறைத்து செயல் பட ஆரம்பிக்கிறது. இது தான் கொண்ட கொள்கையின் மேல் பெரும் நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டவர்கள் மட்டுமே நிறைந்த அமைப்பால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது. பொன்னுலக கனவிற்காக தங்கள் வாழ்க்கையையே காவு கொடுத்த கம்யூனிசத் தோழர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

இருந்தும், இந்து மகா சபாவால் எந்த தேர்தல்களிலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்துக்கள் அல்லாத பிறரும் இணையலாம் என்று மனமில்லாமல் நெகிழ்ந்ததின் விளைவு தான், ஜன் சங் என்ற இன்னொரு அரசியல் கட்சியின் உதயம். கிட்டத்தட்ட, இதற்குப் பிறகு தான் சங் பரிவார் என்ற சொல்லாடல் பிறக்கிறது. பத்திரிக்கையாளர்கள் நடுவில் அரசியல்வாதியாகவும், அரசியல்வாதிகள் நடுவில் பத்திரிக்கையாளராகவும் இருந்த அடல், முழு நேர அரசியல்வாதியாக இதற்குப் பின் தான் பரிணமிக்கிறார். ஜன் சங் கட்சியின் முதல் தலைவரான் முகர்ஜி, (வங்காளி, நேருவின் அமைச்சரவையில் இருந்தவர். லியாக்கத்-நேரு உடன்படிக்கையை எதிர்த்து நேருவிடம் இருந்து விலகியவர்) அடலின் அரசியலறிவு மேம்படுவதற்கு நிறைய உதவினார் என்கிறது இப்புத்தகம். அடல் முதன் முறையாக (தனது முப்பதுகளில்) பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டபோது, தீன்தயாளுக்கு தன் நன்றியை தெரிவித்த போது முகர்ஜிக்கும் தனக்குள் மானசீகமாக நன்றி சொல்லியிருப்பார் என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர்.

முகர்ஜியின் இறப்பிற்கு பிறகு நடந்த முதல் தேர்தலில் ஜன் சங் சார்பாக போட்டியிட்டு வென்ற வாஜ்பாய், நாங்கள் சிவசக்தியின் குழந்தைகள். எங்கள் தலை வெட்டப்பட்டாலும், எங்களால் பொருத்தமான இன்னொரு தலையைத் தேடிக்கொள்ள முடியும் என்கிறார், சங் பரிவாரின் அரசியல் அதாகாரத்திற்கான கனவு முடிந்து விட்டது என்றவர்களை நோக்கி.

வாஜ்பாயின் நுண்ணுணர்வு

நேருவையும், இப்புத்தக ஆசிரியரையும் ஆச்சரியப்படுத்துவது வாஜ்பாய் அவர்களின் வெளியுறவுத் துறை பற்றிய நுண் அவதானிப்புக்கள் தான். தன்னுடைய முதல் நாள் அவைப் பேச்சில் காஷ்மீர் பற்றி பேசிய பேச்சிற்கு, மாண்புமிகு இளம் உறுப்பினர் தேர்தல் பிரச்சார மனநிலையிலிருந்து வெளியேற வேண்டும். இது பாராளுமன்றம் என்கிறார் நேரு. விவாதங்களுக்கு தயாராவதற்காக, நன்கு ஆங்கிலம் வாசிக்கும் LK அத்வானி அவர்கள் வாஜ்பாயிற்கு உதவியாக சங் பரிவாரால் நியமிக்கப் படுகிறார். அதற்கடுத்து நிகழ்ந்த விவாதங்களில், வாஜ்பாயின் வெளியுறவுத் துறை சம்பந்தப்பட்ட அவதானிப்புக்கள் நேருவை ஆச்சரியப்படுத்துகின்றன. நேருவும் அதற்கு செவி கொடுக்கிறார். நேருவின் அணிசேராக் கொள்கையை பெரிதும் மதிக்கும் வாஜ்பாயி, நேருவே அதை மீறிய சமயங்களை one need voice to speak, but to be at silence one need voice as well as wisdom என்று நேருவை புன்னகைக்கவும், யோசிக்கவும் வைக்கிறார். இது போல் நிறைய தருணங்கள், தன் வெளியுறவுத் துறை சார்ந்த மேதைமையை வெளிப்படுத்துவதற்கு, வாஜ்பாயிக்கு அமைகின்றன. RSS போன்ற குறுகிய மனப்பான்மை உள்ள இயக்கத்திலிருந்து, இத்தனை விரிவாக சிந்திக்கும் ஒருவர் உருவாகி வரமுடியும் எனபதை நம்ப முடியாததனால் வரும் ஆச்சரியமிது. நேருவைப் போலவே, இப்புத்தகத்தின் ஆசிரியரும் வாஜ்பாயியை சேற்றில் முளைத்த செந்தாமரையாகத் தான் சித்தரிக்க முயன்றிருக்கிறார்.

இது மட்டுமின்றி, அப்போது தொடர்ந்து நடந்த ரயில் விபத்துக்களை கண்டித்து, ரயிலில் பயணிக்கும் மக்கள் இப்போதெல்லாம் ஜகத்தை (இவ்வுலகம்) விட்டு தங்கள் ஜீவன் (உயிர்) விலகமாலிருக்க ராம் என்ற மந்திரத்தைத் தான் முணுமுணுத்தவாறு பயணிக்கிறார்கள் என்ற வாஜ்பாயின் நுண்பகடி அங்கிருந்த ரயில்வே துறை அமைச்சரான் ஜக்ஜீவ் ராம் முதல் அனைவரையும் வெடிச் சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இப்படி தொடர்ந்து கொண்டே செல்லும் இப்புத்தகத்தின் மீதி அத்தியாயங்களும், இதன் இரண்டாம் பாகமும் இந்திராவின் நெருக்கடி காலகட்டம், ஜன் சங் BJPயாக மாறுவது, வாஜ்பாய் காலத்தில் நடந்த போக்ரான் சோதனை என முக்கியப் புள்ளிகளைத் தொட்டு விரியும் என நம்புகிறேன். As Guha said it is really going to be the finest biography of an Indian prime minister.

Leave a comment