கிராதம் – On the job Training for Arjuna

பெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா?” என்று குதிரையிலமர்ந்தவாறே   அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந்த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார். 

சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை வெட்டியெறிந்த வாளுடன் ஆக்ரோசமாக, “வீணனே உண்ணும் நீயும் உணவென்றாயே,  எங்கே இந்தக் காதையும் உண் பார்க்கலாம் “ என்கிறான். அதே புன்னகையுடன் தன்காதையும் சுவைக்க ஆரம்பிக்கிறார் அந்த வெண் சாம்பலாடையார், ‘சிவமேயாம்’ என்ற உரத்த குரலோடு. அந்த இளவரசன் மட்டும் விக்கித்துப் போவதில்லை. ‘கிராதத்தில்’ எழும் இந்தப்புனைவைப் படிக்கும் நாமும்தான். 

இந்தப்புள்ளியில் இ்ருந்தே ‘கிராதம்’ பற்றிய என்னுடைய அவதானிப்பான விளிம்பும் மையமும் ஒரு வட்டத்தின் இருவேறு பகுதிகள்தானேயொழிய, முற்றிலும் வேறான இருவடிவங்களல்ல என்ற கருத்தாக்கம் கருக்கொள்கிறது. அர்ஜுனனை தன்னுயிர் நண்பனாக கருதிய கிருஷ்ணரும்; அதே நண்பனை மனைவியின் மானம்காக்கத் தவறிய பேடி என்று வெறுத்தொதுக்கும் கிருஷ்ணரும் இருவேறு மனிதர்களல்ல. பெருச்சாளியின் ஊனை, தன் ஊனென சுவைக்கும் யோகிகளால் நிரம்பி வழிகிறது அர்ஜுனனின் மெய்மைத் தேடலை விவரிக்கும் ‘கிராதம்’ என்ற இந்நாவல்.

 தருமனின் அறச்சிக்கல்களை விவரிக்கும் ‘சொல்வளர் காடு’ நாவலை உபநிடதங்களை மாலையாக கோர்த்துக்கொண்ட ஒரு பிரம்மசூத்திரமாகத்தான் நான் உருவகித்துக் கொண்டேன். அதுபோல, கெடுமணத்தால் ஆட்கொள்ளப்பட்ட கிருஷ்ணனால் சீண்டப்பட்டு  தன்னைக் கண்டடைய மேற்கொள்ளும் அர்ஜுனனின் இப்பயண நாவலை ஒரு சைவசித்தாந்தமாகவே உருவகிக்க விழைகிறேன்.

தர்மனின் பயணம் (சொல்வளர்காடு) ‘அது’ எதுவென்று அறிய விழைவதால் விளையும் ஒரு வகையான anxietyயால் நிரம்பியிருந்தது என்றால், அர்ஜுனனின் பயணம் (கிராதம்) ‘அது’ என்ன என்னைவிட…அதையும்தான் பார்த்துவிடுகிறேன் என்பதாய் இருக்கிறது. தர்மன் பயணத்தின் முடிவில் ஞானியாகிறானென்றால்; அர்ஜுனன் யோகியாகிறான்.

கர்மபந்தம் 

மிகவும் ஈர்த்து என்னை உள்வாங்கிக்கொண்டச் சொல்லிது. ரத்தபந்தத்தைவிட, தான் அடைவதற்கரிய தன்னைவிட பெரிய இலக்குகளை இலட்சிய கனவாகக் கொண்டவர்களுக்கு, அச்செயலின் பொருட்டு இணையும் கர்மபந்தமே மிகவும் பொருட்படுத்தக்கூடிய பிணைப்பாக இருக்க முடியுமென்று அர்ஜுனன் கிருஷ்ணர் நட்பை விளக்க முயல்கிறது இச்சொல். 

பெருங்கனவுகளை துரத்தி அடைந்த ஒவ்வொரு அர்ஜுனர்களுக்கும் பின்னால் கிருஷ்ணர் போன்ற நண்பர்களின் உழைப்பும் சீண்டலும் தூண்டலும் இருந்திருக்கும்.  அந்தச் சீண்டலின் விளைவே அர்ஜுனனை நான்கு திசைகளின் தெய்வங்களையும் வென்றறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இந்த வேட்கையின் பொருட்டு அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணமே ‘கிராதம்’ எனும் நாவலாக வெகு பிரமாண்டமாய் இப்பிரபஞ்சத்தை நம்முன் விரித்து, அதன்முன் நம்மை ஒரு துளியென நிறுத்துகிறது.

நான்கு திசைப்பயணம்

கிடைப்பதற்கரிய படைக்கலன்களை பெறுவதற்காக அடைவதற்கரிய நான்கு திசை தெய்வங்களின் இருப்பிடங்களை நோக்கி அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணங்களை, எவ்வளவு கற்றிருந்தாலும் தன்னை நிரம்பி வழியாமல் வைத்துக் கொண்ட சண்டன் என்ற சூதன் சொல்வதாக பயணிக்கிறது இந்நாவல். பல்வேறு குருநிலைகளில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த நான்கு அந்தண இளைஞர்களும் சண்டனோடு பயணிக்கிறார்கள்.  நிரம்பி பொங்கிக் கொண்டிருந்த அவர்களின் கற்றறிந்த வேதமெய்மையை வழிந்தோட வைத்து அவர்களுடைய கலன்களை வெறுமையாக்கி ‘கற்றது கைமண் அளவே’ என்று தன் சூத ஞானத்தால் உணர்த்துகிறார் சண்டன்.

தெற்கில் யமனையும், வடக்கில் குபேரனையும், மேற்கில் வருணணையும், கிழக்கில் சூரியனோடு உறவுகொண்டு பாலியைப் (வாலியின் மறு அவதாரம்) பெற்றதால் அத்திசையின் தெய்வமாக தன்னை நிறுவிக்கொண்ட இந்திரனையும் சந்தித்து அவர்களுடைய அஸ்திரங்களை பெறுகிறான் அர்ஜுனன். இந்நான்கு திசைத் தெய்வங்களை வெல்வதைவிட, அவர்களிருக்கும் இடத்தை அடைவதற்கான பயணம்தான் அர்ஜுனனுக்கு பெருந்துயர்களையும் இடர்களையும் தருவதாக உள்ளது. பயணத்தால் உளம் செம்மைப்பட்ட பிறகு, அதன் வழி அடையும் இலக்குகள் நம்மை ஆச்சரியப்பட வைப்பதில்லை.  பயணங்கள் தனதானவையாக இருக்கும்போது, பயணந்தோறும் இலக்குகள் தான் என்பதை அர்ஜுனனின் இந்த நான்கு திசை பயணங்களும் உணர்த்துகின்றன. 

மேலும் இந்த நான்கு திசைகளின் நிலப்பரப்புகளும், வான்பரப்புகளும் சித்தரிக்கப்படும் விதம் நம்மை அப்பரப்புகளின் உள்ளேயே தூக்கி போட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்திரலோகத்தின் சாளரங்கள் வழியாக அர்ஜுனன் காணும் பனியருவி கொட்டிக் கொண்டிருக்கும் மேகமலைகள் போன்ற சித்தரிப்புகள் கற்பனாவாதத்தின் காலமற்ற தன்மை என்றே எண்ண வைக்கிறது. நோக்கித் தீர்வதில்லை இந்திர தேசத்தின் அழகு என்ற ஊர்வசியின் வார்த்தைகள் ஆழமானவை. நாம் காண நினைப்பதையே அங்கு காண்கிறோம். இங்கு காண்பவையெல்லாம் நம் அகத்தின் பிரதிபலிப்புதான் என்றுணரும்போது, சொல்லெனும் தேகம் பொருளெனும் ஆடையைத் துறந்து நிர்வாணமடையும் நிலையைப் பெறுகிறான் அர்ஜூனன். இந்திரம் கருத்துமுதல்வாதத்தின் நிலம் என்பதை உணரமுடிகிறது.

மகாவஜ்ரம் – இந்திரனில் உறைந்திருக்கும் அசுரன்

  1. கரிபிளந்தெழல்
  2. திசைச்சூழ் செலவு
  3. பொருள்கோள் பாதை
  4. மகாவாருணம்
  5. மாகேந்திரம்
  6. மகாவஜ்ரம்
  7. பாசுபதம்

என ஏழு பகுதிகளாக விரிந்து செல்லும் இந்நாவலின் ஐந்தாவது பகுதியான மகாவஜ்ரத்தில் நுழையும் போதே, வேதங்களின் தோற்றமும், அதன் பரிணாம வளர்ச்சியில் அடிப்படையில் அமைந்த அரசியலையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 

அசுர வளர்ச்சி தீராத விழைவின்றி சாத்தியமில்லை. இப்பூமியில் தோன்றி, அதை வளர்த்தெடுத்த முதல் மனிதகுலம் பிரஜாபதிகளில் ஒருவரனான கசியபருக்கும் நாகதெய்வங்களும் பிறந்த அசுரர்களே. மாநாகத்திலிருந்து இப்படித்தான் அசுர வேதம் தழைத்தோங்கி எழுகிறது. இவர்களின் அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்தவே சில அறக்கோட்பாடுகளான பகிர்ந்தளித்தல், உபகாரம், நிவேதனம் என்பவை அசுரர்களாலேயே வரையறுக்கப்படுகின்றன. சமகாலத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினையான சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராகவும் இந்த அறக்கோட்பாடுகள் ‘ருதம்’ என்றும் பேசியிருக்கின்றன என்பது ஆச்சரியத்தையும் உவகையும் ஒருசேர அளிக்கிறது. 

இந்த அறக்கோட்பாடுகளுக்கு செவிசாய்த்த அசுரர்கள் தேவர்களாக எழுகிறார்கள். அவர்களுக்கு முதன்மையானவராக இந்திரன் ஆகிறார். அசுரர்களின் வேதத்திலிருந்து எழுந்த மாகேந்திரத்தின் துணையுடன் இவ்வுலகின் அவியனைத்தையும் பெற்று கொழிக்கிறது இந்திரனின் நிலம். அவரைத் தொடர்ந்து மேற்குதிசை தெய்வமான வருணணின் குலத்திலெழுந்த  மகாவருண வேதத்தின் துணையுடன் விருத்திரன் இந்திரப்பதவியை எடுத்துக் கொள்கிறான். ஆனால் இந்திரனுள் இருக்கும் அசுரன், விருத்திரனை வருணனின் துணைகொண்டு வென்று மீண்டும் இந்திரப்பதவியை தக்கவைத்துக் கொள்கிறான். மீண்டும் வேள்விகளின் அவி இந்திரனுக்கே உரியதாகிறது.

இந்திரப்பதவி என்பது அவ்வளவு எளிதாக தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல போலும். ஹிரண்யனின் வழியாக மகாநாராயண வேதம் எழுந்து வருகிறது. அதையும் சூரியனின் துணைகொண்டு வென்றெடுத்து மகாவஜ்ரமெனும் வேதத்துடன் தன் அவியை மீண்டும் உறுதி செய்து கொள்கிறான் இந்திரன். என்னதான் அறக்கோட்பாடுகளை கடைபிடித்தாலும் இந்திரனை இயக்குவது, அவனுள் உறைந்திருக்கும் விழைவொன்றே கர்மமென கொண்டிருக்கும் ஆசுரமே. இவ்விழைவிலெழும் செயலூக்கமே தொல்வேதத்தை மாநாகத்திலிருந்து ஆசுரம், மாகேந்திரம், மகாவாருணம், மகாருத்ரம் மற்றும் மகாவஜ்ரம் என பரிணமிக்கச் செய்திருக்கிறது. 

கிருஷ்ணன் – இந்திரனின் பார்வையில்

இந்திரப்பதவிக்கான போட்டி அடுத்து கிருஷ்ணனின் ரூபத்தில் எழுந்து வருகிறது. அதிலும் தன் மைந்தனே தனக்கு எதிராக திரும்பியிருப்பதில் அயர்ச்சி கொள்கிறான் இந்திரன். இது களியாட்டு கரியோனின் சதிதான் என்பதை அர்ஜுனனுக்கு உணர்த்த மாலி, பாலி மற்றும் ஊர்வசி வழியாக இந்திரன் எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர்களிருவரின் நட்பிற்குமுன் தோல்வியிலேயே முடிகின்றன. இவ்வுலகை வெல்லும் சொல் அவனிடம் உள்ளது. உன்னிடம் உள்ள வில்லுக்காகத்தான் உன்னை இந்த நான்கு திசைப் பயணத்திற்கு தூண்டியுள்ளான் என்ற சொற்களுக்கு அர்ஜூனனின் சிந்தை செவிமடுக்கவில்லை.

குறிப்பாக இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த வாலியின் மறுபிறவியான பாலியின் சகோதரப்பாசம், முன் பிறவியில் கரிய சான்றோனிடம் சுக்ரீவன் கொண்ட நட்பிடம் தோற்றதைப்போலவே இப்பிறவியில் களியாட்டு கரியோனிடம் அர்ஜூனன் கொண்ட நட்பிடம் தோற்றுப் போகிறது. விதியின்முன் காலம்கூட தோற்றுத்தான் போகிறது. 

அர்ஜூனனுக்கும் ஊர்வசிக்கும் இடையே நடக்கும் களியாட்டு உரையாடல்கள் மகாவஜ்ரப்பகுதியின் உச்சம் எனலாம். அர்ஜூனனின் ஆணவ முள்ளைத் தொட்டெழுப்பி தன்னை நிறைத்துக் கொள்ள விழைகிறாள் ஊர்வசி. தன்னுடைய அழகு, அறிவு, ஆற்றல் என எல்லாவற்றையும் இதன்பொருட்டே செலவிடும் ஊர்வசி முன் அர்ஜுனன் துரும்பாகவே நமக்குத் தெரிகிறான். தன்னுடைய ஆணவத்தை மறுவார்ப்பு எடுத்து வைத்திருக்கும் ஊர்வசியிடம் கலந்தபின் தன்னிடம் எதுவும் எஞ்சப்போவதில்லை என்பதை உள்ளுணர்ந்து கொண்டு அவளிடமிருந்து விலகுகிறான். தன்னுடைய நிறைவை கிருஷ்ணனுக்காக தவிர்க்கிறான் அல்லது தள்ளிப்போடுகிறான். இந்திரனின் கடைசி முயற்சியும் தோற்கிறது. துளியளவும் எஞ்சாத எதுவும் மீண்டும் துளிர்ப்பதில்லை என்பதை உணர்ந்த அவன் இன்னமும் தன்னுள் எஞ்சியிருக்கும் காமத்துடனும் வேட்கையுடனும் மகாவஜ்ர அஸ்திரத்தை பெற்றுக் கொண்டு இந்திரபுரியிலிருந்து மீண்டு தன் நான்கு திசை பயணத்தை நிறைவு செய்கிறான்.

நாவல் முடிந்து விட்டது என்று நினைக்கையில் பாசுபதத்தை தன்னுள் அடக்கிய கடைசிப் பகுதியின் பக்கங்கள் காற்றில் படபடத்தன. அதிலுள்ள மீறும் பார்வதியும், அடக்கும் காளியும் அர்ஜுனனை நோக்கி உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறையாத வரை உன்னுடைய இந்தப்பயணம்  முடியப்போவதில்லை என்று கண் சிமிட்டுகிறார்கள்.

பாசுபதம் – சி செ ந் ல் னை

தன்னுடைய நான்கு ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை கின்னரஜயன்கள் என்ற மக்களின் வழியாக அர்ஜுனனுக்கு கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த அக்குலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்ணின் மீறலால் சீண்டப்பட்டு அவளுடன் கலக்கிறான் அர்ஜூனன். ஊரணநாபன் என்ற தங்களுடைய தொல்குலத் தெய்வத்தால் சிலந்தி வலைபோல பின்னப்பட்டிருந்தது இக்குலம். தான் என்ற தன்னுணர்வற்று ஒட்டு மொத்த குலமும் ஒன்றாய் பின்னப்பட்டிருந்தார்கள். வலை அறுபடும் போதெல்லாம் மீதியிருப்பவர்களை இணைத்துக் கொண்டு புதிய வலையை உருவாக்கும் சிலந்திகளைப் போல தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட சிட்டி 2.0 தான் கலைக்கப்படும் போதெல்லாம் தான் உருவாக்கிய மீதமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு இன்னொரு உருவத்தைப் பெறுவதுதான் நினைவுக்கு வந்தது. ஊரணநாபனை சிட்டி 2.0 என்றே எண்ணத் தோன்றியது. 

ஒரு கட்டத்தில் கின்னரர்கள் வழியாக தன்னுணர்வை அடையும் இக்குலமக்கள் தங்களை மீண்டும் சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்வதன் தேவையிலிருந்து விடுபட்டு கின்னரஜயன்கள் ஆகிறார்கள். ஆனால் கண்களுக்குப் புலப்படாத அதீதக் குலக்கட்டுப்பாடுகள் அக்குல மக்களை, குறிப்பாக பெண்களை, சிலந்தி வலையாய் சூழ்ந்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் மரங்களின் கிளைகளை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாமேயொழிய வேர்களையல்ல. வேர்கள் மரத்தை முற்றுணர்ந்தவை. முற்றுணரும்போது இயல்பாகவே மீறுவதற்கான தகுதியும் அதற்குத் தேவையான வலிமையும் நம்முள் குடிபுகுகிறது. பெண்கள் எப்போதும் இப்பிரபஞ்ச மரத்தின் வேர்கள். சர்வ கல்விதமாமேகம் நான்யஸ்தி சனாதனம் (இங்குள்ள அனைத்தும் நானே, நானன்றி தொடக்கமென்று எதுவுமில்லை). 

இதை உணர்ந்ததால்தான் பெண்கள் மேல் அதீதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன போலும். ஆனால் அவற்றை எப்போதும் மீறும் பெண்களில் ஒருத்தியாக கின்னரஜயன்களிடமிருந்து பார்வதி எழுந்து வருகிறாள். தங்கள் குலத்தாரோடு வணிகம் செய்ய வந்தவர்களுக்கு காவலனாக வந்த அர்ஜூனனால் ஈர்க்கப்பட்டு அவனை அடைகிறாள். அர்ஜுனனின் வீரத்தை அறிந்து கொண்ட அக்குலத்தலைவர்கள் அவனை தங்களால் தண்டிக்கமுடியாது என்பதை உணர்கிறார்கள். அவர்களுடைய குலக்குருவின் அறிவுரைப்படி அவர்களை ஆளும் கின்னரர்களிடம் அர்ஜுன் அனுப்பப்படுகிறான்.  தொடர் பயிற்சிகள் மற்றும் பயணங்கள் வழியாக அவனுடைய அகம் கூர்மை கொண்டிருப்பதை, அர்ஜூனனினுடைய கைகளின் தொடர்ச்சி போலிருக்கும் வில்லில் இருந்து வரும் அம்புகள் கின்னரர்களுக்கு உணர்த்துகின்றன. இவனைத் தண்டிக்க தங்களுடைய தெய்வங்களாலே முடியும் என்று கின்னரர்கள், தங்களுடைய தெய்வங்களை கொண்டிருக்கும் அந்த குகைக்குள் அர்ஜுனனை அனுமதிக்கிறார்கள்.

குகைக்குள் தான் போரில் சந்திக்கவிருக்கும் பீஷ்மர்,கர்ணன் என அனைவரும் தெய்வங்களாக எழுந்து தன்னை வெல்ல வருவது அர்ஜுனனுக்கும் நமக்கும் ஒரு பெரிய பிரம்மையை ஏற்படுத்துகிறது. நான்கு திசை ஆயுதங்களால் அவர்களனைவரையும் வென்று விடுகிறான். கடைசியாக வரும் தெய்வத்தின் மீது எய்தப்படும் அம்புகளனைத்தும் தண்ணீரில் உள்ள மீன்களில் குத்தப்பட்டு, ஆமையின் ஓடென மேலெழும்பி, பன்றியின் முள் உடம்பென மாறுவதைக் கண்டு விக்கித்துப் போகிறான். அது கிருஷ்ணன் என்பதை அர்ஜுனனும் நாமும் உணர்ந்து கொள்கிறோம். அழிக்க அழிக்க அடுத்த அவதாரமெடுக்கும் கிருஷ்ணனிடம் அர்ஜூனன் மீண்டும் நிராயுதபாணியாக அடிபட்டுத் திரும்புகிறான் குற்றுயிராக.

கி்ருஷ்ணனை வெல்ல இன்னமும் ஏதோ ஒன்று தேவைப்படுவதை உணர்ந்து தன்னுடைய இந்தப் பயணம் முற்றுப் பெறவில்லை என்பதை அர்ஜுனன் உணர்ந்து கொள்கிறான். இதற்குப் பின் அவன் சென்று சேரும் இடம் இருண்மைகளற்ற இடம். தான் என்ற ஆணவத்தை கரைக்கும் இடம். பொருட்கள் தங்கள் மேல் போர்த்தப்பட்டிருந்த ஆடையெனும் சொற்களைத் துறந்த நிலம். இறப்பு எனும் காலன் நம் பிறப்பில் இருந்தே கூடப் பயணிக்கும் நிழல் என்பதை உணர்ந்த மனிதர்கள் வாழும் நிலம்.

கடும் பசியில் அக்காட்டிலிருந்த ஒரு பன்றியை வேட்டையாட விழைகிறான் அர்ஜுனன். அவன் அம்பு படுவதற்கு முன்பே அப்பன்றியின்மேல் இன்னொரு அம்பு பாய்ந்திருப்பதைக் கண்டு துணுக்குறுகிறான். இந்த வில்லாளனின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த காட்டாளன் தென்படுகிறான். அவனுடைய பழங்குடித் தோற்றம் இயல்பாகவே அர்ஜுனனுக்குள் இருந்த ஆணவத்திற்கு தீனி போட்டு தன் பராக்கிரமங்களை சொல்லி இந்த பன்றி எனக்குச் சொந்தம் எனச் சொல்ல வைக்கிறது. அதற்கு அந்த காட்டாளன் நக்கலாக உங்களை ஊரே தெரிந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் காளன் எனும் என்னை என் மனைவி காளியும் எனது இரு இளைய மகன்களான கொம்பனும், குமரனும் அறிவர் என்று சொல்லி இந்தப் பன்றி எனக்குத்தான் சொந்தம் என்கிறார். உனக்குப் பசியாக இருந்தால் இதைத் தானமாகத் தருகிறேன் என்றுகூறி அர்ஜுனனின் ஆணவத்தைச் சீண்டுகிறார்.

பன்றியின் பொருட்டு இருவருக்கும் நடந்த வில் போரில் முழுமையாகத் தோற்கடிக்கப்படுகிறான் அர்ஜூனன். தான் எப்படி அம்பு எய்த வேண்டும் என்பதை சிந்திக்கும் போதே காளனின் அம்பு தன்னை வந்தடைவதைக் கண்டு வியப்பும் ஆற்றாமையும் கொள்கிறான். காளனின் சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளியே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மார்க்ஸியம் இதை புராதன பொதுவுடைமை சமூகங்களின் இயல்பாக வரையறுக்கிறது. தனியுடைமைச் சமூகங்களில்தான் சிந்தனையும் செயலும் பிரிந்தது என்றும் வரையறுக்கிறது. செயல்படமுடியாத சிந்தனையாளர்களும், சிந்திக்கமுடியாத செயல்பாட்டாளர்களும் தான் தனியுடைமையின் கொடை போலும். விளைவின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் பாசுபதம், விளைவை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. அவ்விளைவின்  உள்ளடக்கமான சிந்தனையையும் செயலையும் உருவத்திலிருந்து நிழலைப் பிரிப்பதுபோல் பிரித்துக் காட்டுகிறது. அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் பாசுபதத்தை, அது உணர்த்தும் மெய்மையை நெருங்குகிறோம்.

காளன் – சைவ சித்தாந்தத்தின் ஊற்று

தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி தன்னைக் கொள்ளும் படி இரைஞ்சும் அர்ஜூனனின் கோரிக்கையை “நான் உண்ணாதவற்றை கொல்வதில்லை” என்று நிராகரிக்கிறான்.  கழுத்தில் கத்தியோடு காளன் முன் மண்டியிட்டிருந்தவனை அதட்டி,  ” நீ தோற்றிருக்கிறாய் என்றால், நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்காய் என்று தானே அர்த்தம்” என்று அர்ஜுனனின் மாயையை, வினையை, ஆணவத்தை புரிய வைக்கிறாள் அங்கு வந்த காளனின் மனைவி காளி. 

இந்தியாவின் இளமையான சித்தாந்தமான சைவ சித்தாந்தத்தின் வேர்கள் எங்கிருந்து தோன்றியவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உயிர்களைத்(பசு) தளைப்படுத்தும் பாசத்தை 

1.தான் என்ற தன்னுணர்வு கொண்ட ஆணவம், 

2. அதன் பொருட்டு ஆற்றப்படும் கண்மம் அல்லது வினை மற்றும் 

3.அவ்வினையின் வழியாக உணரும் உலகமும் உடலும் மாயை என்ற புரிதல்

 என மும்மலங்களாக பிரிக்கிறது சைவசித்தாந்தம்.

தன்னுடைய வினைகளின் வழியாகவே ஆணவம் கரைந்து மாயை உணர்ந்து பதியை (கடவுளை) அடைய முடிகிறது. தன்னுடைய பயணம் அனைத்தும் இந்த தான் என்ற தன்னுணர்வு கொண்ட இந்த ஆணவத்தின் பொருட்டே என்றுணரும் அர்ஜுனனுக்கு காளனும் காளியும் பதிகளே.

இந்த மும்மலங்களை அவற்றாலேயே அறுத்தெரிந்த அர்ஜுனனுக்கு இருண்மையற்றிருக்கும் நிலையென்றால் என்னவென்று புரிகிறது.  காளன் வாழும் இந்த இருண்மையற்ற நிலத்தில் வாழும் மக்களுக்கு பாசுபதம் “ஓம்” என்ற முதல் சொல்லிருந்தே கிடைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கிறான். அதிலிருந்தே தற்போது இருக்கும் அனைத்து வேதங்களுமே கிளைத்து வளர்ந்திருக்கின்றன. இனி தோன்றி இந்திரனின் அவியை மறுக்கப்போகும் மகாநாராயண வேதம் முதற்கொண்டு என்ற புரிதலுடன் என் கிராதப் பயணம் நிறைவுற்றது.

Advertisements

இது பேட்ஸ்மென்களின் ஆட்டம்

பெரும்பாலும் இந்த உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது எங்கிருந்து தொடங்குவது என்பதில் அவ்வளவாக குழப்பமிருந்ததில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இதுவரை மறைந்திருந்த விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த  இந்த இறுதிப்போட்டியை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. உடைத்துப் பொங்கும் சாம்பெய்ன் போல ஆச்சரியங்களும், உணர்வுகளும் கொப்பளித்து வழிந்து கிடக்கிறது, கிரிக்கெட்டர்களின் கனவு நிலமான லார்ட்ஸ் மைதானத்தில். சூப்பர் ஓவரிலும் அடித்த ரன்கள் சமமாகும் பட்சத்தில், இழந்த விக்கெட்டுகளை விட, அடித்த பௌண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே இங்கிலாந்தை வெல்ல வைத்து “Cricket, Always a Batsmen’s game…” என்ற கூற்றை உறுதி செய்திருக்கிறது ICC.

ஒட்டுமொத்த உடம்பையும் அதன் இயல்பு நிலையில் இருக்க விடாமல் முறுக்கிப் பிழிந்து பந்து வீசியவர்களுக்கும், இது புல்தரையா, இல்லை பனிச்சறுக்குத் தளமா என சந்தேகிக்க வைத்த பீல்டர்களின் சறுக்கிற்கும் எந்த மதிப்புமில்லாமல் போனது நியூசிலாந்தின் துரதிர்ஷ்டமே. அதிலும் கவர் திசையில் குப்புறப் படுத்தார் போல் சறுக்கிய ஃபெர்குசனும், தன் முழங்காலை துடுப்பாக்கி சறுக்கிய சௌத்தியும் பிடித்த கேட்சுகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. எல்லைக் கோட்டருகே நிகழும் தன்னுடைய தடுமாற்றங்கள் அனைத்தையும் எப்போதும் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  டிரெண்ட் பௌல்ட், கடைசி நொடியில் தன் கட்டுப்பாட்டை இழந்து பென் ஷ்டோக்ஸ் மிட் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை பிடித்தவாரே எல்லைக் கோட்டில் தடுமாறி நிலைகுலைந்தது நியூசிலாந்தின் வெற்றியையும் நிலைகுலையச் செய்து விட்டது.

தன்னுடைய தடுமாற்றத்தால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்து விடவேண்டும் என்று ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசத் தயாராகிறார் டிரெண்ட் பௌல்ட். பென் ஷ்டோக்ஸ் இங்கிலாந்திற்கான முதல் உலகக்கோப்பையை பெற்றுத் தருவதற்கு இன்னும் 15 ரன்களை எடுக்க வேண்டும். இருவரும் தங்களை இயல்பாக வைத்துக் கொள்வதிலேயே முனைப்புடன் இருந்தார்கள். தன்னுடைய யார்க்கர்கள் மூலம் ஷ்டோக்சை பேட்டிங் கிரீசிற்குள்ளேயே சிறைவைக்கிறார் பௌல்ட். முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. தன்னுடைய நிதானத்தை இழந்தவர்போல் தோன்றிய இடதுகை ஆட்டக்காரரான ஷ்டோக்ஸ், அடுத்த பந்தை தன் இடதுகாலை வலது ஸ்டெம்ப் திசையில் நகற்றி சற்றே குனிந்து சரிந்த X வடிவமாகி முழு ஆற்றலுடன் மிட் விக்கெட் திசையை நோக்கி பறக்க விடுகிறார். காற்றில் வரைந்த வானவில்லாய்  பார்வையாளர்களை சரணடைகிறது பந்து.

மீதியிருக்கும் மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள். நேர்மறையாக(Positive) விளையாடுகிறேன் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக தன்னுடைய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு மத்தியில் விடி வெள்ளியாய்த் தெரிந்த ஷ்டோக்ஸின் திறமையோடு அதிர்ஷ்டமும் இப்போது கைகோர்த்துக் கொண்டது. மீண்டுமொரு 6 ரன்கள் அடுத்த பந்தில். இம்முறையும் அதே திசையில்  அடிக்கப்பட்ட, ஆனால் தரையோடு உருண்டோடிச் சென்ற பந்திற்காக. மிட் விக்கெட் திசையிலிருந்த பந்து கண நேரத்தில் ஃபைன் லெக் திசைக்கும் தேர்ட் மேன் திசைக்கும் நடுவில் எல்லைக் கோட்டை கடந்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்பொழுதும், தன் இருகைகளையும் உயர்த்திக் காட்டி 6 ரன்களை அறிவிக்கும் நடுவர், தன் நான்கு விரல்களை மடக்கி, மீதியிருக்கும் ஆறு விரல்களை காண்பித்து ஆறு ரன்கள் என்று அங்கு நிலவிய குழப்பத்தை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வருகிறார். ஒட்டு மொத்த மைதானமும் பார்வையாளர்களோடு சேர்ந்து அதிர்ந்து கொண்டிருக்க, எதற்கும் அதிர்ந்து பேசாத கேன் வில்லியம்ஸ் இப்போதும் அதே அமைதியோடு நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஆறு ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். தோனியை ரன் அவுட் செய்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சிதைத்த கப்டில் இங்கிலாந்தின் கனவையும் அதே பாணியில் சிதைக்க முயலும்போதுதான் இந்த துரதிர்ஷ்டம் நிகழ்கிறது. கப்டிலால் விக்கெட் கீப்பரை நோக்கி துல்லியமாக எறியப்பட்ட பந்திலிருந்து தப்பிக்க முயன்ற ஷ்டோக்ஸின் பேட்டில் பட்டுத் திரும்பிதான் எல்லைக் கோட்டை தாண்டியிருக்கிறது அப்பந்து. இதை ஷ்டோக்ஸ் வேண்டுமென்றே செய்திருந்தால் “Obstructing the Field..” என்ற விதியின்படி  தன்னுடைய விக்கெட்டை இழந்திருப்பார். ஆனால் இது மிக எதார்த்தமாக நிகழ்ந்த ஒன்று. எனவே அதிர்ஷ்டவசமாக ‘Overthrow…” விதிகளின்படி ஆறு ரன்கள் கிடைக்கிறது இங்கிலாந்துக்கு. அடுத்த இரண்டு பந்துகளில் ஒவ்வொரு முறையும் இரண்டாவது ரன்னிற்காக ஓடி தன் விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை சமன் செய்கிறது இங்கிலாந்து.

விரக்தியில் ஷ்டோக்ஸின் கையிலிருந்த பேட் சுழன்று கொண்டே கீழே விழுகிறது. மீண்டும் குழப்பங்கள் சூழ்ந்த மைதானமாகியது லார்ட்ஸ். தரப்பட்ட சூப்பர் ஒவரும் கிட்டத்தட்ட ஆட்டத்தின் கடைசி ஓவரையே பிரதிபலித்தது. விம்பிள்டன் பார்ப்பதைப் போல இருக்கையை விட்டு நகராமல் தலையை மட்டும் இருபக்கமும் திருப்பி திருப்பி கிரிக்கெட்டையும் பார்க்கும் கோட் சூட் அணிந்திருந்த லார்ட்ஸ் கணவான்கள் நிலைகொள்ளாமல் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர் ஓவரின் கடைசிப் பந்து, நியூசிலாந்திற்கு தேவை இரண்டு ரன்கள். ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறார் கப்டில். இருவரின் உடல்மொழியும் பதற்றத்தில் முற்றிலும் மூழ்கியவர்களையே ஞாபகப்படுத்தியது. நல்லவேளை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றே எண்ணத் தோன்றியது. இல்லையென்றால் இப்பதற்றம் நம்மையும் மூழ்கடித்திருக்கும்.

இருவருமே எதையும் புதிதாகவோ இல்லை விபரீதமாகவோ முயற்சிக்கவில்லை. நெருக்கடி தருணங்களில் எளிய அடிப்படையான விஷயங்களைப் பற்றிக் கொள்வதே சரியான தீர்வு என்பதைப் புரிந்து கொண்டவர்கள். நல்ல அளவில் இடது திசையில் விழுந்த பந்தை முன் சென்று மிட்விக்கெட் திசையை நோக்கி மெதுவாக தள்ளிவிட்டு இரண்டாவது ரன்னிற்காக; தனது அணியின் முதல் உலகக்கோப்பைக்காக பேட்டிங் கிரீசை நோக்கி ஓடிவருகிறார் கப்டில். வர்ணனையாளர் பதற்றத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்தவாரே உச்சஸதாயில் “Can he make it…” என்கிறார். அப்பந்தை எல்லைக்கோட்டிலிருந்து ஓடி வந்து சேகரித்து ஜோஸ் பட்லரின் பாதுகாப்பான கையுறைகளை நோக்கி வீசுகிறார் ஷ்டோக்ஸ். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்தை 241 ரன்கள்வரை இழுத்துச் சென்ற அதே இரட்டையர்களின் மீண்டுமொரு கூட்டுமுயற்சியில் இங்கிலாந்து ஒரு வழியாக கரைசேர்ந்தே விடுகிறது.

பேட்டிங் கிரீசை நோக்கி சறுக்கியவாரே, அங்கே ஏற்கனவே பட்லரால் சாய்க்கப்பட்டிருந்த இருந்த ஸ்டெம்புகளை நோக்கிப் பயணிக்கிறார் கப்டில். அவருடைய வாழ்வின் துயர்மிகுந்த பயணம் இதுவாகத்தான் இருக்க முடியும். பதற்றம், இயலாமை, வெறுப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்து முகம் துடிக்க, உடலதிர அவர் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைப்பதற்காக விரைந்து வருகிறார் வில்லியம்சன் என்ற தச்சனின் மகன். கூடவே, தனது அணியினரின் பேட்டிங் போதாமைகள்; அந்தப் போதாமையை மட்டுமே காரணம் காட்டி தங்களுடைய உலகக்கோப்பை வெற்றியை பறித்துக் கொண்ட விசித்திரமான ICC விதிகள்; இறுதிப் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து வரும் துரதிர்ஷ்டம் என்ற அனைத்து பாவங்களையும் சுமந்து கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல்.

சாம்ப்பெயின் பாட்டிலின் மூடி

தோனி தன்னுடைய எடையை இவ்வளவு கனமாக இதுவரை உணர்ந்திருக்கமாட்டார் என்றே எண்ண வைத்தது அவருடைய தளர்ந்த நடை. தலயின் தலை பக்கவாட்டில் துவள மனதே இல்லாமல் ஆற்றலிழந்த ரோபோ போல பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்தார். இந்தியாவிற்கு இன்னொரு முறை உலகக்கோப்பை இறுதிக்குச் செல்லும்  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது; இனிமேல் இப்படியொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்ற நிதர்சனம்; எப்பொழுதுமே தத்தளிக்கும் இந்தியப்படகை பாதுகாப்பாக கரை சேர்த்து விடும் தோணியாகிய நான், சமீபகாலங்களாக அதைச் செய்ய முடிவதில்லை என்ற உள்ளுணர்வின் உறுத்தல் என அனைத்தையும் சேர்த்து சுமந்து கொண்டு தான் தோனி தன்னுடைய உலகக்கோப்பையின் கடைசி ஆட்டத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார்.

மீதியிருந்த 10 பந்துகளில் வெற்றிக்கு தேவையான 20 சொச்ச ரன்களை அடித்திருப்பாரா என்ற அவநம்பிக்கையை இல்லாமல் செய்திருந்தது அதற்கு முந்தைய பந்தில் அவர் சிக்சர் அடித்த விதம். வலது ஸ்டெம்புக்கு வெளியே தலைக்குமேல் எழும்பிச் சென்ற பந்தை மணிக்கட்டை மட்டும் சுழற்றி பாயிண்ட் திசையின் எல்லைக் கோட்டிற்கு மேல் பறக்க விட்டது இந்திய ரசிகர்களுக்கு அவர் ஆட்டத்தின் மேலிருந்த அவநம்பிக்கையை மட்டும் போக்கவில்லை. அவர் இதேபோல் மணிக்கட்டைச் சுழற்றி மிட்விக்கெட் திசையில் சிக்சர் அடித்து வெற்றிபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தையும் ஞாபகப்படுத்தியது.

துளிர்த்த நம்பிக்கையை அடுத்த பந்திலேயே அஸ்தமிக்கச் செய்தார் ஃபைன் லெக் திசையிலிருந்து புயலாய் பறந்து வந்து தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ஸ்டெம்புகளை சிதறடித்த கப்டில். தோனியை ரன் அவுட் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. அங்கே இரண்டு ரன்கள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்த காரணத்தினால் தான் முதல் ரன்னிற்கே ஓடினார் தோனி. ஆனால் காலத்தின் கணக்கு கப்டில் வடிவில் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சிதைத்துப் போட்டு விட்டது. நியூசிலாந்து இத்தொடரில் பெற்ற அனைத்து தோல்விகளுக்கும், சறுக்கல்களுக்கும் முக்கியமான காரணமாக அமைந்தவர்களில் ஒருவர் கப்டில். அதையனைத்தையும் இந்த துல்லியமான ஒரு த்ரோ மூலம் சரிசெய்து கொண்டிருக்கிறார்.

தோனி ஒரு முனையில் நிற்கும்போது ஜடேஜாவிற்கு எங்கிருந்துதான் இந்த ஆற்றல் வருமென்று தெரியவில்லை. ருத்ர தாண்டவமாடியிருக்கிறார். 5 ரன்களுக்குள், உச்சத்திலிருந்த ரோகித், கோலி மற்றும் ராகுல் என்ற மும்மூர்த்திகளை சரித்து, 96 ரன்களை எட்டுவதற்குள் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்தின் கையிலிருந்த வெற்றிச் சாம்பெய்னை  தோனியின் துணையுடன் கிட்டத்தட்ட அவர்கள் உதட்டை எட்டவிடாமல் செய்துவிட்டார் ஜடேஜா. தன்னுடைய 50ஐ எட்டிய பிறகு சிலம்பு சுத்துவதுபோல் பேட்டைச் சுற்றி நான் யாருக்கும் சளைத்தவனல்ல என்று பெவிலியனை நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்திக் காட்டினார். “You are Strong…You are strong…” என பெவிலியனில் உட்கார்ந்திருந்த ரோகித் தன் புஜங்களை தொட்டுக்காட்டி ஜடேஜாவின் செய்கையை ஆமோதித்தார்.

தோனி தான் ஆட்டமிழக்கும் அடுத்த நொடியே இந்தியாவின் வால்ப்பகுதியை மிதித்து அதன் துடிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற தவிப்பிலேயே ரன்களை குவிக்க வேண்டிய பாரத்தை 48வது ஓவர்வரை ஜடேஜா மேல்தான் சுமத்தியிருந்தார். ஒரு 45 நிமிடம் மோசமாக விளையாடியதில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் நன்றாக விளையாடியது அர்த்தமற்றுப் போனது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை மூன்று முழுநேர பேட்ஸ்மென்களை மட்டுமே வைத்துக் கொண்டு உலகக்கோப்பையை வெல்லமுடியாது என்பதும். ரிசப்பும், கார்த்திக்கும் எப்போதும் தவானையோ, கேதாரையோ ஈடுசெய்ய முடியாது. தவானிற்குப் பதிலாக அம்பதி ராயுடு போன்றவர்கள் திரும்ப அணிக்கு அழைக்கப்படாததும், அணியிலிருந்தும் கேதாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் எளிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரியாத கிரிக்கெட்டின் வியாபார அரசியல். இந்திய பேட்டிங் வரிசையில் இருந்த இந்த மிகப்பெரிய துளையை மறைத்திருந்த மூடியை தங்களுடைய துல்லியமான பந்துவீச்சின் மூலம் சாம்பெய்ன் பாட்டில் மூடிபோல ‘டொப்..’ என்று திறந்து போட்ட நியூசிலாந்திற்கு வாழ்த்துக்கள்.

Come On India…

மலிங்காவை இந்தியர்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி சவுரவ் கங்குலியும், நாசர் ஹுசைனும் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டுக்குள் அடைபட்ட குருவிகள் மேலெழும்பி பறக்க முயல்வதுபோல் எழும்பி எழும்பி அடங்கும் தங்கச் சாயம் பூசப்பட்ட தலைமுடியும், பேட்ஸ்மென்களை அவர்களது கிரீஷுக்குள்ளேயே சிறை பிடிக்கும் யார்க்கரும்தான் மலிங்காவின் சிறப்பு அடையாளங்கள். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முதல் ஐவர் பட்டியலில் இருக்கும் ஒரே ஒரு சமகாலப் பந்து வீச்சாளர். தன்னுடைய சிறகுகளுக்கு கூடிய விரைவில் ஓய்வு கொடுத்து விடுவார் என்றே தோன்றுகிறது. Base Ballன் பந்து எறிதலுக்கும், கிரிக்கெட்டின் பந்து வீச்சுக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் பந்துவீசும் பாணியைக் கொண்டவர். பேட்ஸ்மென்களின் கால் விரல், பேட் மற்றும் அது காக்கும் ஸ்டெம்ப் என மூன்றையும் நொறுக்கித் தள்ளிய இவருடைய பந்து வீச்சுப் பாணி சந்தேகத்தின் பேரில் ICCன் உடலியங்கியல் (Bio-Mechanical) சோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

பெரும்பாலும் வேகப்பந்து வீச்சில் திணறும் இந்திய பேட்ஸ்மென்கள் மலிங்காவின் பந்துகளை எதிர்கொள்ளும் விதம் பருகிக் கொண்டிருக்கும் சுவையான தேநீரை சற்றுத் தாழ்த்தி ரசிக்க வைப்பது. வில்லிலுள்ள நாணை முடிந்த அளவு பின்னிழுத்து அம்பெய்துவதுபோல முதுகின் பின்னால் தன்கையை முடிந்த அளவு இழுத்து வீசப்படும் மலிங்காவின் பந்தை மிக எளிதாக எல்லைக் கோட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள் நம்மவர்கள். அதிலும் குறிப்பாக ரோகித் லீக் ஆட்டங்களின் கடைசிப் போட்டியில் மலிங்காவை எதிர்கொண்ட விதம், மலிங்காவை மட்டுமல்ல வரும் அரையிறுதியில் டிரெண்ட் பௌல்ட்டையும் ஆச்சரியப்படுத்தும்.

இரண்டு பேர் மட்டுமே எல்லைச் சாமியாக நிற்க முடியும் முதல் பத்து ஓவர்களில், வலது ஸ்டெம்புக்கு வெளியே எழும்பிச் செல்லும் பந்துகளை பாயிண்ட் அல்லது கவர் திசையில் எந்த எல்லைச் சாமியும் இல்லாத பட்சத்தில் சும்மாவேனும் தூக்கித்தான் அடிப்பார்கள். ஆனால் அப்பந்தையும் தன் இடதுகாலை பக்கவாட்டில் சற்று பின்னால் நகற்றி, தன் உடல் எடை முழுவதையும் அக்காலுக்கு கடத்தி அப்பந்தை பாயிண்ட் திசை தடுப்பாளரையும், பேக்வர்ட் பாயிண்ட் திசை தடுப்பாளரையும் ஊடறுத்துச் (அல்லது பிளந்து) செல்லுமாறு எல்லைக் கோட்டிற்கு அனுப்புவது ரோகித் ஏன் தன்னுடைய 5வது சதத்தை ஒரே உலகக்கோப்பையில் பெற்றிருக்கிறார் என்பதற்கானச் சான்று. தவான் தன் கால்களை பந்துகளுக்கு ஏற்றவாறு நடனமாடச் செய்வதைப்போல ரோகித் செய்வதில்லை என்றாலும், அவ்வப்போது அவராலும் இம்மெல்லிய நடனங்களை நிகழ்த்திக் கொள்ள முடிவது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் இருந்த மிகப்பெரிய இடைவெளியை நி்ரப்பி சரி செய்திருக்கிறது. ராகுலின் எழுச்சியும், ரோகித் தன்னுள் அடைபட்டு ஆடும் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தியிருக்கிறது. இவர்களோடு கோலியும் சேர்ந்து மும்மூர்த்திகளாய் இந்தியாவின் பேட்டிங்கைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.


நடுவரிசையில் இருக்கும் தொய்வு ரிஷப், தினேஷ் என்று சரி செய்யப்பட்டதுபோல் தோன்றினாலும், மும்மூர்த்திகளும் ஒரே நேரத்தில் கைவிடும் பட்சத்தில் 50 ஓவர் வரை ஆட்டத்தை இழுத்துச் செல்லும் தகுதியும் நுட்பங்களும் நிறைந்த ஒருவராக கேதார் மட்டுமே தெரிகிறார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கும் இதே நடுவரிசை பிரச்சினை உண்டு.  நியூசிலாந்திற்கு இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையிலும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த உறுதியான பேட்டிங் வரிசையை குலைத்துப்போடும் தகுதி பும்ரா&Coவிற்கு உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. நியூசிலாந்தை குலைப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவையோ இங்கிலாந்தையோ குலைப்பது ஒன்றும் அசாத்தியமான காரியமல்ல. இந்தியா உலகக்கோப்பையை திரும்பப்பெறும் வாய்ப்பும் மிக சாத்தியமான ஒன்றாகவே தோன்றுகிறது. இந்திரா, மன்மோகன் வரிசையில் மோடியும்…

Come On India…

நியூசிலாந்தின் இடம்

வெற்றிக்கு இன்னும் 5 ரன்கள் தேவை நியூசிலாந்திற்கு. ஆட்டத்தின் கடைசிப்பந்துக்கு முந்தைய பந்தை சவுத் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் வீசுவதற்கு தயாராகிறார். சற்று பதட்டம் அவர் உடம்பின் அத்தனை பாகங்களிலும் இழையோடுவதை அவர் முகத்தை நோக்கி குவிந்த கேமிராக்கள் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதை மறைத்து விட அவர் முயன்று தோற்றதற்கு அவருடைய விரிந்த இரு விழிகளுமே சாட்சி. இப்பதற்றப் பந்தை எதிர்கொள்வதற்கு காத்திருந்த. எலியட்டிற்கு பதற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவர் முகத்தை மறைந்திருந்த தலைக்கவசத்தின் முகப்பாதுகாப்பு வளையம் அவருடைய பதற்றத்தை நம்மிடமிருந்து மறைத்து விடுகிறது.

சீரான தப்படிகளில் நடுவரைக் கடந்து உடம்பை வில்லாய் வளைத்து தன் பந்தை அம்பாய் செலுத்துகிறார் ஸ்டெயின். எலியட்டின் வலது திசையில் சற்றுக் குறைந்த அளவில் விழுந்து விலகிச் சென்ற பந்தை துப்பாக்கியிலிருந்து விடுபட்ட தோட்டாவைப்போல லாங் ஆன் திசை நோக்கி பறக்க விடுகிறார் எலியட்ஸ். மட்டையில் பட்டு மேலெழுந்த பந்து வானில் ஒரு மாய அரைவட்டமடித்து எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்து நியூசிலாந்தை 2015 ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒட்டுமொத்த சவுத் ஆப்பிரிக்க அணியினரும் தாங்கள் தவறவிட்ட விமானத்தை கண்ணீர் மல்க பார்ப்பது போல் அப்பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறந்து செல்வதை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து நாமும் நொறுங்கிப் போகிறோம். உலககோப்பை துரதிருஷ்டம் அவர்களை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தான் கொண்டிருந்த பதற்றம் தணிந்திருந்தாலும், சோகத்தில் எடை தாளாமல் கீழே முழங்காலிட்டு விழுகிறார் ஸ்டெயின். உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கீழே சரிவதைப் பார்த்து தங்களுடைய மகிழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு எலியட்டும் மறுமுனையில் நின்றிருந்த வெட்டோரியும் கரம்பிடித்து ஸ்டெயினை தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்துகிறார்கள். சோகத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் கலங்கியிருந்த கண்களிலிருந்த நீரை மகிழ்ச்சியாய் நம் கன்னங்களில் உருண்டோட வைக்கிறது நியூசிலாந்து அணியினரின் இச்செய்கை.

வரலாறு மீண்டும் இந்நிகழ்வை 2019 உலககோப்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இம்முறை சவுத் ஆப்பிரிக்காவிற்குப் பதிலாக கிளைவ் லாய்ட்,   விவியன் ரிச்சர்ட்ஸ்,மால்கம் மார்சல், கோர்ட்னி வால்ஸ், பிரையன் லாரா என உலக கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவனாக இருந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆடும் நிலைக்கு கீழிறங்கி விட்ட வெஸ்ட் இண்டீஸ். இன்னும் ஏழு பந்துகள் உள்ளன. ஆறு ரன்கள் தேவை வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு. கைவசம் இருப்பது ஒரு விக்கெட் மட்டுமே. டேல் ஸ்டெயின் வீசிய அதே மாதிரியான பந்தை நியூசிலாந்தின் நீசம் வீசுகிறார். எலியட் அடித்ததுபோலவே அப்பந்தை எதிர்கொண்ட பிராத்வைட் லாங் ஆன் திசை நோக்கி தூக்கி அடிக்கிறார். எல்லைக் கோட்டுக்கருகில் ஒரு அடி பின்னால் போயிருந்தாலும் சிக்சர் ஆயிருக்க வேண்டிய பந்தை தன்னுடைய தடுமாற்றங்களை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டிரெண்ட் போல்ட்  எம்பிப் பிடிக்கிறார். டேல் ஸ்டெயின் விழுந்ததைப் போலவே பிராத்வைட்டும் துவண்டு விழுகிறார்.அவருடைய ஒட்டுமொத்த செஞ்சுரியும் இந்த ஒரு பந்தில் அர்த்தமற்றுப் போகிறது.

அவரைத் தூக்கிப் பிடித்து தேற்றுகிறார்கள் நீசமும் வில்லியம்சனும். விளையாட்டுகள் நாடு, தேசியம் போன்றவற்றை நிலை நிறுத்துவதற்காகவும், பிற நாட்டவரின் மேல் தேசபக்தி என்ற பெயரில் வெறுப்பை வளர்ப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் என்று சில அறிவுஜீவிகளால் சொல்லப்பட்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அதை பொய்யாக்குகின்றன. வெற்றியில் துள்ளுவதும், தோல்வியில் துவழ்வதும் மனித இயல்பு. ஆனால் தன் வெற்றிக் கொண்டாட்டத்தை சிறிதளவேனும் தோல்வியுற்றவர்களுக்காக தளர்த்திக் கொள்வது, கடவுளின் இயல்பு. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினருக்கென்று ஒரு பிரத்யேகமான இடம் நம் மனதில் எப்போதுமுண்டு.

கவிஞனின் புன்னகை

கண்ணிருட்டும் நண்பகலின் கோடையனல், அணையவிருக்கும் விளக்கு சுடர்விட்டு எரிவதுபோல உடலின் சகலபாகங்களிலும் ஊடுருவி எரித்துக் கொண்டிருந்தது. சென்னையின் கோடை, நிலத்திற்கு அடியிலுள்ள கடைசிச் சொட்டு நீரையும் உண்டு ஆவியாக்காமல் அணைவதுபோல் தெரியவில்லை. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலையாள கவிஞரான பி.ராமன்,  விருதை வழங்கவிருக்கும் கவிஞர் தேவதேவனின் “பாலைவனத்தில் பயணம் செய்வோனுக்கு கைவசமிருக்கும் நீர்க்கலமே சோலை…” என்ற கவிதையை நினைவு கூர்ந்தார். இளம் கவிஞர்களுக்காக வழங்கப்படும் ‘குமரகுருபன் விஷ்ணுபுரம் விருது’ விழாதான் எரிக்கும் இந்த சென்னைக் கோடையை அன்று சோலையாக்க உதவிய நீர்க்கலம். கடைசி நிமிடத்தில் நிகழ்வு நடக்கும் அரங்கிலிருந்த குளிரூட்டியும் வெப்பம் தாளாமல் தம் இயக்கத்தை நிறுத்திக் கொண்டும்கூட, எங்களனைவரையும்  கிட்டத்தட்ட 6.30 மணிநேரம் அங்கிருக்க உதவியதே இந்நீர்க்கலத்தின் வலிமைக்குச் சான்று. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராஜகோபாலன் சொல்லியதுபோல, இலக்கியத்திற்காக அங்கிருந்தவர்களை வியர்வை சிந்தவைத்த பெருமையை இவ்விருது விழா பெற்றுக் கொண்டது.

மறைந்த கவிஞர் குமரகுரபனின் நினைவாக வழங்கப்படும் இவ்விருது, கவிதைகளையும், செய்யுள்களையும் இன்னமும் எவரின் உதவியுமில்லாமல் வாசிக்க முடியாத எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இவ்விருதை வழங்கும் முதல் வருட நிகழ்வில்தான், எழுத்தாளர் ஜெயமோகனை(ஜெமோ) முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதுதான் இதற்கான காரணம். இலக்கியத்தை மட்டுமல்ல, இலக்கிய வாசகர்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், தகுதியுள்ள வாசகர்களை சிறந்த எழுத்தாளர்களாகவும்,விமர்சகர்களாகவும் ஆக்குவதிலும் ஜெமோவின் எழுத்துக்களும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழியாக அவர் மேற்கொள்ளும் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளும் பிரமிப்பூட்டுபவை.

ச.துரை

அதிலும் எழுத்தாளர்களுக்கு தேவையான மொழிச்சாத்தியங்களை அளிக்கக்கூடிய கவிஞர்களினத்தை கூர்ந்து அவதானிப்பதிலும், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை பொதுவெளியில் பெற்றுத் தருவதிலுமுள்ள இவருடைய ஈடுபாட்டை வெளிக்கொணர்ந்தது கவிஞர் குமரகுருபனின் மரணம்தான் என்று எண்ணுகிறேன். மனச்சோர்வளிக்கும் நினைவு தினங்களை செயலூக்கமளிக்கும் ஒன்றாக மாற்றிக் கொள்வதில் ஜெமோவுக்கு நிகர் ஜெமோவும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் மட்டுமே. இச்செயலூக்கம் சபரிநாதன், கண்டராதித்தனைத் தொடர்ந்து இவ்வருடம் ச.துரையை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கவிஞர் சபரிநாதனுக்கு இளம் படைப்பாளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான ‘யுவபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் கறார் தன்மைக்கு ஒரு சான்று.

கவிஞர்களின் ஆளுமை

தனக்கென்று ஒரு ஆளுமையை வடித்துக் கொள்ள விரும்பாத மனிதர்களின் பட்டியலில் சிறந்த கவிஞர்களுக்கு தனித்த இடமுண்டு. எந்த சட்டகத்திலும் அடைக்க முடியாத தனிப்பிறவிகள் இவர்கள்.  ஜெமோ தன் உரையில் கூறியதுபோல ஒரு பூனைக்குட்டியை ஒற்றைக்காலில் தூக்கி மகிழும் குழந்தையின் அறியாமையையும், பயமின்மையையும் ஒருசேரக் கொண்டவர்கள். அவர் ஆதர்சமாகக் கொண்ட தேவதேவன் முதல் ச.துரை வரை இது பொருந்துகிறது. இக்கவிஞர்களின் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் சராசரி வாழ்க்கைப் பற்றிய ஏளனம்தான் இவர்களுடைய பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். இந்த ஒட்டு மொத்த நிகழ்வின்போதும் மேடையில் ஜெமோவுக்கு அருகில் அமர்ந்திருந்த ச.துரை, தன் முகத்தசையைப் பின்னுக்கிழுத்து இறுக்கிக்கொண்டு, புருவமும் கண்களும் சுருங்க  தனக்கான அங்கீகாரத்தை பொதுவெளியில் வழங்கத்தான் இவ்விழா நடத்தப்படுகிறது என்ற எந்தவொரு பெருமிதமுமற்றுதான் அமர்ந்திருந்தார்.

நெய்தல் நிலக்கவிஞனான ச.துரைக்கு நாம் வடிவமற்றதாக, உயிரற்றதாகக் கருதும் கடலலைகளின் இரைச்சல்களை வடிவமும் உயிரும் கொண்டு துள்ளி எழும் ஒரு நாயின் குரைப்பாகவும்; கால்களை நனைத்து நக்கிச் செல்லும் நாக்காகவும் உருவாக்கிக் கொள்வதில் உள்ள  திளைப்பு, மனித கூட்டங்களோடு இருப்பதில் வருவதில்லை. மனிதர்கள், அவர்களைப் பொறுத்தவரை இப்புவிக்கு ஒன்றும் இன்றியமையாதவர்கள் அல்ல. அதனால் தான் மனிதன் உருவாக்கிய அத்தனை அன்றாடங்களையும் மிக எளிதாக இவர்களால் கடக்க முடிகிறது போலும். கவிதை வழங்கிய கூரிய  நுண் அவதானிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அனலரட்டை

அக்னி நட்சத்திரம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே ஒட்டுமொத்த சென்னையும் ஒரு எரியூட்டப்பட்ட அடுப்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு உக்கிரமான கோடையென்பது கடந்த சில வருடங்களில் மேயிலிருந்து ஜூனுக்கு நகர்ந்திருக்கிறது. வெளியே செல்வதற்கான தேவைகளனைத்தையும் சுருக்கிக் கொண்டிருந்த எனக்கு அனலை வெல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. அன்று கோலி வேறு தன் பும்ராக்களுடனும், ரோகித்களுடனும் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மீறி வெளியே செல்வதற்கான ஆற்றலைத் தருவது, ஜெமோவும், அவர்வழி அறிமுகமான இலக்கியமும்தான்.

என்னைப்போலவோ, என் ஆட்டோ சாரதி போலவோ காலை 11 மணி வெயிலால் சுணங்கிப்போகாமல், காளிபிரசாத் whatsappல் பகிர்ந்திருந்த வரைபடத்தைத் தொட்டவுடன் தன் வேலையைச் செவ்வனே ஆரம்பித்து எங்களை ஜெமோவிடம் அழைத்துச் சென்றது கூகுள் வழிகாட்டி. சாத்தப்பட்டிருந்த அறைக்கதவின் வெளியே சன்னமாக ஒலித்த ஜெமோவின் குரலை உறுதிசெய்து கொண்டு உள்ளே நுழைந்தவுடன் கடவுளின் அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. In India, Air Conditioner is the God என்று சென்னையின் பிப்ரவரி மாத வெயிலைத் தாளமுடியாமல் என்னுடைய ஜெர்மானிய மேலாளர் சில வருடங்களுக்கு முன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அந்த குளிரூட்டப்பட்ட அறையின் காற்று சில நொடிகளில் அனல்வியர்வையில் என் உடலோடு ஒட்டிப்போயிருந்த ஆடைகளை தளர்த்தி உலர்த்தியது. Yes, AC is the God!!!

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்தும் நிறைய வாசகர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட 30 பேர் அமர்ந்திருந்த அந்த நீண்ட செவ்வக அறையில் ஓரிடத்தை கண்டமர்ந்து உரையாடலில் ஐக்கியமானேன். ஜெமோவின் இதுபோன்ற informal உரையாடல்கள் வெறும் அரட்டையாக மட்டுமே இருப்பதில்லை. அங்குள்ள ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். எனவேதான் இதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளை நான் எப்போதும் தவறவிடுவதில்லை. அவருடைய சமீபத்திய ஜப்பானியப் பயண அனுபவங்களை பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்து தடம் இதழுக்காக எழுதிய தோப்பில் முகமது மீரான் பற்றிய நினைவுக் கட்டுரையை நினைவு கூர்ந்தார். அவரது சொந்த ஊரான தேங்காய்ப் பட்டிணத்தைச் சேர்ந்தவர்களுக்கே தோப்பில் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமாவென்று தெரியவில்லை. பசீரின் புறவடிவத்தின் தொடர்ச்சியாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இஸ்லாம் வழியாகவே எதிர்த்த ஒரு கலகக்காரராக, அவருடைய பல்வேறு ஆக்கங்களின் வழியாக தோப்பிலை அருமையாக தொகுத்திருந்தார். மிக முக்கியமாக தோப்பில் கலந்துகொண்ட முக்கியமான அனைத்து நிகழ்வுகளிலும் அவர் பேசியவற்றையும் நினைவு கூர்ந்திருந்தார் இந்த இலக்கியப்பித்தன்.

விஷால் ராஜா மற்றும் சுனீல்  கிருஷ்ணன் அவர்களின் பல்வேறு தரப்பட்ட கேள்விகளின் வழியாக தீவிர இலக்கிய உரையாடலாக மாறி நகர்ந்து கொண்டேயிருந்தது. அதிலும் விஷாலின் கேள்விகள் நான் இன்னமும் இலக்கியத்தில் கடைசி பெஞ்சில்தான் உள்ளேன் என்பதை நிரூபித்துக் கொண்டேயிருந்தன. இவ்விருவரும் ஜெமோ கண்டடைந்த முத்துக்கள். இவர்களுடன் சேர்ந்து மதியம் 2 மணியளவில் சிறுகதை விவாத அரங்கில் பேசவிருக்கும் காளியும், மாரிராஜும் தாங்கள் எழுதிய குறிப்புக்களை ஒரு சின்ன பதற்றத்தோடு புரட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தனர். மதிய உணவாக அனைவருக்கும் புகாரியிலிருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டிருந்தது.

சிறுகதை விவாத அரங்கு

அறையிலிருந்து தி.நகர் வழியாக அரங்கை எந்தவித வாகனச் சிடுக்குமின்றி 5 நிமிடங்களில் அடைய முடிந்தது அனலால் விழைந்த ஒரு பயன். ACக் கடவுள் கடைசி நிமிடத்தில் கைவிட்டிருந்ததால் அரங்கில் நிகழ்வு தொடங்குவதற்கு சற்று தாமதமாகியது. இருந்தாலும் வியர்வையைப் பொருட்படுத்தாமல் தொகுப்பாளர் ராஜகோபாலன் மேடையேறி சுனீல் கிருஷ்ணனை, அனோஜன் எழுதிய சிறுகதைகள் பற்றிய தன்பார்வையை முன்வைக்க அழைத்தார். அரங்கிலிருந்த அனைத்து சாளரங்களும் திறந்து வைக்கப்பட்டு, மின்விசிறிகளனைத்தும் முழு விசையில் சுழன்றும், அனல்தான் அரங்கில் பெய்தது. கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட வாசகர்களின் சுவாசத்தில் இருந்த இலக்கியம் மட்டுமே இந்த அனலை வெல்ல உதவியது.

சுனீல் கிருஷ்ணன்

அனோஜனின் ஆரம்ப காலகட்டத்து சிறுகதைகளுக்கும் தற்போதுள்ளவற்றுக்கும் இடையே உள்ள வடிவச் சிதைவை அல்லது மீறலை ஒரு படைப்பாளியின் படைப்பூக்கத்திற்கான சான்றாகவே சுட்டிக்காட்டினார் சுனீல். மேலும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான இவருடைய கதைகளில் சிங்களவர்களை முற்றிலுமாக வெறுத்தொதுக்கும் ஒற்றைப்படைத் தன்மை இல்லாததை, பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு இணைவாக்கத்தை நோக்கிச் செல்லும் அனோஜனின் Constructive அல்லது நேர்மறைத்தன்மைக்கான குறியீடாகக் எடுத்துக் கொண்டார். புறங்களை கூர்ந்தவதானிப்பது மட்டுமில்லாமல், அவற்றைத் தன் அகத்தோடு கலக்கும் ரசாயன வித்தையை கைகொண்டவரே இலக்கியப் புனைவாசிரியனாக பரிணமிக்க முடியுமென்று புரிந்தது.

புதிதாக எழுதவரும் அனைவரையும் கூர்ந்து வாசிப்பதால் சுனீலால் மிகவும் அழுத்தமாகவும், வெகு இயல்பாகவும் தன் அவதானிப்புகளை முன் வைக்க முடிந்தது. அவரைத் தொடர்ந்து காளி இன்னொரு புலம்பெயர்ந்த எழுத்தாளரான சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளை மிகவும் நகைச்சுவை உணர்வோடு முன்வைத்து பார்வையாளர்களை கேள்விகளுக்குத் தூண்டினார். இறுதியாக விஷால் கதைக்கான தேவைகளையும் அதன் வெவ்வேறு வடிவங்களையும் முன்வைத்த விதம், அவர் இலக்கியம் வழியாகவே தன் வாழ்வின் அறிதல்களை மேற்கொள்ளும் ஒரு நபர் என்று புரிந்தது. எந்தப் புது எழுத்தாளரின் கதையைக் கொடுத்தாலும் தமிழில் அவர் இ.பா. வகையா இல்லை தி.ஜா. வகையா என நொடியில் கூறிவிடக்கூடிய வாசிப்பை உடையவர் இவர். ஏன் ஜெமோ இவரை மிகவும் கூர்ந்து கவனிக்கிறார் என்பதும் புரிந்தது. மிக எளிதாக S.சுரேஷ் என்ற எழுத்தாளரின் பாகேஶ்ரீ கதையை அசோகமித்திரன் பாணி கதைகளோடு பொருத்திக் காண்பித்தார்.

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்கள் செய்த புண்ணியம் என்றே தோன்றுகிறது. அங்கிருந்த அனைத்து வாசகர்களுக்கும் அந்த மூன்று எழுத்தாளர்களையும் மிக நெருக்கமாக்கியிருந்தது இவ்வரங்கு. கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் நடந்த இவ்விவாதம் முடிந்திருந்தபோது, இதுவரை பொருட்படுத்தாமல் இருந்த அனலை உடல் உணரத்தொடங்கியது.

1000 மணி நேர வாசிப்புச் சவால்

முதன்மை நிகழ்வான விருதுவிழா துவங்குவதற்கு இன்னும் ஒரு மணிநேர இடைவெளி இருந்தது. வழக்கம்போல் ஒரு பெரிய கூட்டம் ஜெமோவைச் சூழ்ந்திருந்தது. சமீபத்தில் சுனீல் விளையாட்டாய் துவங்கிய 1000 மணி நேர வாசிப்புச் சவால் பற்றியே ஜெமோ பேசினார். தாமாக முயன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வாசிக்காதவரை நமது மூளை வாசிப்புக்கு பழகப்போவதில்லை என்பதை தன் அனுபவங்கள் வழியாகவே விளக்கினார். மூளை மிக எளிதாக குழந்தைபோல் நாம் செய்வதற்கு பழகிவிடும் என்று அவர் கூறியது வாசிப்புக்கு மட்டுமல்ல, அனைத்துத் துறைக்கும் பொருந்தும். தோன்றும்போது வாசித்தால், எழுதினால் போதுமென்ற மனநிலை உங்களை ஒருபோதும் வாசிக்கவோ எழுதவோ விடப்போவதில்லை என்றார்.

அங்கிருந்த புத்தகக் கடைகளிலிருந்து தோப்பிலின் நாற்காலியையும் ,ச.துரையின் மத்தியையும் வாங்கிக் கொண்டு அப்பள்ளியின் வளாகத்தை ஒரு சுற்று சுற்றியதில், கட்டிடங்களைவிட மரங்களும், திறந்த வெளிகளுமே அதிகமாயிருந்தன. இந்தியர்களிடம் உள்ள பராமரிப்பு வறட்சியில் சிக்கியிருந்தது ஒட்டுமொத்த வளாகமும். ஆனால் நகரத்தின் மத்தியில் இப்படியொரு மரங்கள் நிறைந்து கட்டிடங்கள் குறைந்த வளாகம் காணக்கிடைப்பது அரிது. மணி 6ஐத் தொட்டிருந்தும் நண்பகல் போலத்தான் இருந்தது. விருது விழாவிற்கு தவறான நுழைவு வாயிலில் நுழைந்தவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அரங்கம் தேடி அடைந்தார்கள்.

விருது விழா

இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் அரங்கத்திலிருந்த மேடை வேறு ஒப்பனைக்கு மாறியிருந்தது. அனலரசன் அங்கு வந்திருந்த பெண்களின் முகத்திலிருந்த ஒப்பனையை உரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அரங்கம் முற்றிலும் நிறைந்திருந்தது. கவிதா மற்றும் சௌந்தர் அவர்களின் வரவேற்புரையுடன் சிறப்பு விருந்தினரும் மலையாள கவிஞருமான  பி.ராமன், விருதை வழங்கும் கவிஞர் தேவதேவன், ஜெமோ, இலக்கிய வாசகரும் சிறந்த விமர்சகருமான அருணச்சலம் மகராஜன் மற்றும் விருதைப் பெறும் ச.துரை மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். இவர்களனைவரையும் பற்றி நன்கு தெரிந்த ராஜகோபால் தனக்கேயுரிய அவதானிப்புகளுடனும், நுண்பகடியுடனும் நிகழ்வை தொகுத்தளிக்க ஆரம்பித்தார்.

வீடு திரும்புதல்

மலையாளிகளின் தமிழுக்கு ஒரு ராகமுண்டு. அதை விரும்பாத தமிழர்களே கிடையாது எனலாம். ஆனால் பி.ராமனின் மலையாளத்தில் இருந்த ஏற்ற இறக்கங்களும் முக பாவனைகளும், கையசைவுகளும், அவருடைய உரையை மேடையில் இயல்பாக எந்தவித முன்தயாரிப்புமின்றி நிகழ்வது போல் காட்டின. ஆனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட இவ்வுரைக்குப் பின்னால் அவருடைய நீண்ட கால உழைப்பும், கவிதை வாசிப்பும், அதன் நுட்பங்களை அறிந்து கொள்ளும் திறனும் கொட்டிக் கிடந்தது. இங்குள்ள கவிஞர்களை இவ்வளவு நெருக்கமாக மலையாள இலக்கிய உலகம் பின்தொடர்வது ஆச்சரியமாய் இருக்கிறது. பாரதி முதல் ச.துரை இங்குள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வகையில் என்னை என் சொந்த நிலத்தோடு பிணைக்கின்றன என்று Nostalgic ஆனார். அதற்குச் சான்றாக நிறைய கவிதைகளை முன் வைத்தார்.

பி.ராமன்

முழுதும் மலையாள மொழியிலேயே அமைந்த பி.ராமனின் இவ்வுரையை மேடையிலேயே உரை நிகழ நிகழ தமிழில் மொழிபெயர்த்து எழுதிப் பேசினார் ஜெமோ. அவ்வளவு ஒத்திசைவு இவ்விரு உரைக்கும். It is a treat to watch. நேரம் செல்லச் செல்ல ஜெமோவின் மொழிபெயர்ப்பு இல்லாமலேயே உரையை புரிந்து கொள்ளும் நிலை உருவானது போலொரு பிரமை தோன்றி மணிரத்னத்தின் ரோஜா படத்தில் வரும் மொழிபெயர்ப்பு காட்சியை நினைவூட்டியது.

ஆசியுரையும் அனலுரையும்

தனக்களிக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரத்திலேயே தன்னுடைய ஆழமான ஆசியுரையை வழங்கிச் சென்றார் தேவதேவன். எழுத்தும் பேச்சும் எப்போதும் அவருக்கு ஒரே அளவிலேயே இருக்கின்றன. அவரைத் தொடர்ந்து வந்த அருணாச்சலம் ஒரு அனலுரையைத் தான் ஆற்றிச் சென்றார். ச.துரையின் கவிதைகளின் வழியாக தான் கண்டடைந்தவைகளையும், அவர் சென்றடைய வேண்டிய இலக்கு பற்றியும் கொதிப்போடு சொல்லி விடைபெற்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு எதைப்பற்றிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படியே பற்றினாலும், அதிலிருந்து எதைப்பெறுவது என்ற தெளிவும் கைகூடுவதில்லை. இதுபோன்ற கையறு நிலை கவிஞர்களுக்கு கிடையாது என்றே நம்புகிறேன். அவர்கள் மற்ற இளைஞர்களைப்போல ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்காக எதையும் நாடுவதில்லை. அவ்வாளுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கவிதைகள் எழுதுகிறார்கள். தோப்பில் பற்றிய நினைவுக் கட்டுரையில், ஜெமோ குறிப்பிட்டது போல தோப்பில் எழுத வரவில்லை என்றால் அவர் அனுபவங்களே அவரை சிறைபிடித்திருக்கும். இந்த வாழ்வு தரும் இடர்களின் வழியாகவே ஒவ்வொருவரும் தன்னை முன்னகர்த்திக் கொள்வதைப்போல இலக்கியவாதியும் அதையே செய்கிறான். இலக்கியம் நம் முன்னேற்றத்துக்கு உதவுமா என்றால், விஷால் ராஜா தன்னுடைய சிறுகதை விவாத அரங்கில் கூறியதைப்போல “It depends…அது வாசகனைப் பொறுத்தது…”

அக்காவின் பாட்டுப் பாத்திரம்

தெருவில் கட்டப்பட்டிருந்த குழாய் வடிவ ஒலிப்பானுக்கு தன் மகள் குழந்தையாக இருந்தபோது வைத்த பெயர்தான் இது என்று ஜெமோ தன் உரையை ஆரம்பித்தார். பாடாத போது பாத்திரமாக இருந்து, பாடியதும் பாட்டுப் பாத்திரமாகி, ஒலித்தது பெண்குரல் என்பதால் அது ‘அக்காவோட பாட்டுப் பாத்திரம்’ ஆகியது. இந்த குழந்தைகளின் மனம்தான் மொழியின் சாத்தியத்தை விரித்தெடுக்கக் கூடியது. வளர்ந்தும் இம்மனநிலையை தக்கவைத்துக் கொள்வதால்தான் கவிஞர்களின் மொழியைத்தான் நான் கூர்ந்து கவனிப்பேன் என்று கூறி, நுண் சித்தரிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த கவிதையுலகை மீண்டும் திடமான படிமங்களை நோக்கித் திருப்பிச் சாதித்ததால்தான் ச.துரைக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்று முடித்தார்.

இதைத்தொடர்ந்து தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த உரையை குனிந்த தலை நிமிராமல் வாசித்து விடைபெற்றார் ச.துரை. இன்னமும் மாறாத குழந்தைக் குரலில் வெண்பா நன்றியுரை வழங்க விழா முடிவுக்கு வந்தது. ச.துரையைத் தேடிக் கண்டுபிடித்து அவருடைய மத்தி கவிதைத் தொகுப்பில் கையெழுத்திட கேட்டபோது ஒரு விலக்கமான மெல்லிய புன்னகையோடு கையெழுத்திட்டார். கவிஞர்களின் புன்னகை காண்பதற்கரிது. அதை சாத்தியப்படுத்திய இவ்விழாவிற்கு நன்றி.

பும்ரா…தூள்ரா…பாம்புரா…

பும்ரா …நீ தூள்ரா…பாம்புரா நீ…” என ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட பார் அரட்டைபோல் தமிழ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஸ்டார் தமிழில் இருந்து ஆங்கில அலைவரிசைக்கு மாறும்போது, வேறு ஒரு ஆட்டத்திற்குள் நுழையும் பிரம்மையே இருந்தது. பும்ராவின் முதல் ஐந்து ஓவர்களின் பெரும்பாலான பந்துகளை அம்லாவும், டி-ஹாக்கும் என்ன செய்வதென்றே அறியாமல் திகைக்க, அப்பந்துகளை தோனி முதல் ஸ்லிப்பிற்கு வந்துதான் சேகரிக்க வேண்டியிருந்தது. ஆடுகளத்தின் உயிர்ப்புத் தன்மையை தன்னுடைய பந்துகளுக்கும் கடத்திக் கொண்ட பும்ராவின் விவேகம் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் கைகால்களையும் அவர்களுடைய கிரீசோடு சேர்த்து கட்டித்தான் போட்டிருந்தது. கொஞ்சம் விடுதலையுணர்வோடு அவர்கள் ஆட எத்தனித்து, அதற்கு விலையாக தங்களிருவரின் விக்கெட்டுகளையும் இழந்து SAவின்  உலககோப்பை துரதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொண்டார்கள்.

பும்ரா ஏற்படுத்திய இந்த உடைசலை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயன்ற SAவின் அனைத்து முயற்சிகளையும், சீரிய இடைவெளியில் அஸ்திவாரமற்ற கட்டிடத்தை கலைத்துப் போடுவது போல் கலைத்துப் போட்டு விட்டார் சாகல். அதிலும் கிரேக்கச் சிற்பம்போல் கட்டுமஸ்தான வலதுகை ஆட்டக்காரரான டூசன், பொறுமையிழந்து இடதுகை ஆட்டக்காரராக விரும்பி சாகலிடம் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தது, எதிர்முனையில் நின்றிருந்த டூபெளெசிக்கு எரிச்சலூட்டியிருக்கும். டூசன் தன்னுடைய உபகரணங்களை கலைவதற்குள் தன்னுடன் வந்து சேர்ந்துகொண்ட டூபெளெசியிடம் தன்னுடைய பொறுப்பற்ற ஆட்டத்திற்காக மன்னிப்பு கோரியிருப்பார்.இருவரும் சேர்ந்து சாகலுக்கு சாபமும் கொடுத்திருக்கலாம். இத்தனைக்கும் டூபெளெசி மிகவும் மரியாதையாக, தன் வலதுகாலை முன்வைத்து சாகலின் அப்பந்தை தடுத்தாடத்தான் முயன்றார். ஆனால் தன் எஜமானனின் இலக்கை நிறைவேற்றுவதில் மட்டுமே குறியாய் இருந்தது அப்பந்து.

பாம்பு தன் சட்டையை உரித்துப் புது அவதாரமெடுப்பதுபோல தன் பௌலிங் திறமையை கூர்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. ஒருகாலத்தில் தன்னுடைய பேட்ஸ்மென்களை மட்டுமே நம்பியிருந்த இந்தியா, தற்போது பௌலர்களையே பெரும்பாலும் நம்பியுள்ளது. பும்ரா, புவனேஸ், ஹர்திக், சாகல் மற்றும் குல்தீப் என அனைவரும், தன் பந்துகளை கையிலிருந்து விடுவித்த பின்பும் தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அவற்றை வைத்திருக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நினைத்த இடத்தில் விழுந்து உயிர்பெற்று விக்கெட்டுகளைச்  சரித்து விடுகின்றன இப்பாம்புகள். உலகந்தோறும் பௌலர்களின் இந்த எழுச்சிக்கும், பேட்ஸ்மென்கள் தங்கள் திறமைகளையும் நுட்பங்களையும் இழந்து வருவதற்கும் பெருகிவரும் டி20 கலாச்சாரமும் ஒருவகையில் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

90 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்தது,  SA பேட்ஸ்மென்களின் உடம்பில் இன்னமும் டி20 போட்டிகளே நிறைந்திருப்பது போல் தோன்றியது. மனம் சட்டென மாறிக்கொள்ளும் அளவிற்கு உடம்பு மாறிவிடுவதில்லை. பரிதாப நிலையிலிருந்த SAவை ஸ்ரீகாந்த்& Co தங்கள் எதார்த்த  வர்ணனை என்ற பெயரில் தெருவில் கிரிக்கெட் ஆடும் அணியாக்கி விட்டார்கள். “பெளௌகுவாயா சும்மா இரண்டு சுத்து சுத்திட்டு அவுட்டாயிடுவாம்மா…மில்லர் ஃபார்ம்லயே இல்ல..அவனும் சீக்கிரம் போயிடுவான் …SA 140 அடிக்கிறதே பெருசு…” என்ற பேச்சுத் தமிழில் நமது அறைக்குள் வந்து நமது பக்கத்திலேயே அமர்ந்து விடுகிறார் ஸ்ரீகாந்த். நம்மை நெருங்கிய ஸ்ரீகாந்த் உண்மையான நாயகனான ஆட்டத்தை நம்மிடமிருந்து தள்ளி வைத்து விடுகிறார்.

ஆங்கில வர்ணனையாளர்களிடம் இருக்கும் நேர்த்தியும் நடுநிலையும் தமிழ் வர்ணனையில் நிகழ்வதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. 80களில் வானொலி தமிழ் வர்ணனை மிகவும் தரமாக இருந்தது. ராமமூர்த்தி, ரங்காச்சாரி போன்ற வர்ணனையாளர்களிடம் கிரிக்கெட் ஞானத்தோடு  மொழிவளமும் இருந்தது, ஒரு டெஸ்ட் போட்டியில் அந்த நாளின் ஆட்டம் முடிய இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மீதம் இருக்கும்போது கவாஸ்கர் தன் விக்கெட்டை இழந்து விடுகிறார். Night watchmanஆக யார் வருவார் என்ற விவாதம் வர்ணனையாளர்களிடம் எழுகிறது. அதற்கு ‘பொக்கிஷமே போனப்பிறகு Night Watchman எதற்கு‘ என்பார் ராமமூர்த்தி. வானொலி போல் தொலைக்காட்சி  வர்ணனைக்கு உகந்த தமிழ் மொழியை இன்னமும் நாம் கண்டடையவில்லை என்பதுதான் உண்மை. இதை ஸ்ரீகாந்தை மட்டும் வைத்துக்கொண்டு சாதிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளைப் கொடுத்தாலும் குலைந்துபோன தங்களை அடுக்கிக் கட்டி 227 ரன்களை சேர்த்துக் கொண்டார்கள் SA. ஆரம்பக்கட்ட பீதியைத்தவிர எந்தவிதமான அழுத்தத்தையும் தராத இந்த இலக்கை பொறுமையாக இந்தியா கடந்து சென்றது. ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இவரைவிட நம்பிக்கையாக தோற்றமளித்தவர் தவான்தான். அவர் மிகச்சுதந்திரமாக தன் கால்களை பந்துகளுக்குத் தகுந்தாற்போல் ஒரு மெல்லிய நடனத்திற்கு தயார் செய்து வைத்திருக்கிறார். அத்தனை ஒத்திசைவு.வரும்போட்டிகளில் இந்த நடனம் ரன்னையும் குவிக்குமென்று நம்பலாம்.

கோலிக்கு எந்த தொந்தரவும் தரவில்லை SAவின் பௌலர்கள். ஆனால் டி-காக் தன் உடம்பை வில்லாய் வளைத்து எம்பிப் பிடித்த அந்த சாத்தியமற்ற கேட்ச் கோலியை பெவிலியன் நோக்கி அனுப்பினாலும், இந்திய அணியை பெரிதாக பாதிக்கவில்லை. டேல் ஸ்டெயின் மற்றும் லுங்கியின் பங்களிப்பை SA பௌலிங் இழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களிருவரும் இல்லாததை இந்தியா உணர்ந்ததுபோல் தெரியவில்லை. உணர்ந்திருந்தால் ஒரு ஐந்து ஓவர்கள் முன்னதாகவே தங்களுடைய இலக்கை எட்டியிருக்கலாம். இதை எந்த பௌலரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற இந்திய அணியின் ஜாக்கிரதையுணர்வு என்று எடுத்துக் கொண்டால், இந்தியா அரையிறுதியை எட்டுவதில் சந்தேகமில்லை.

Good Luck India!!!

ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை

இருண்ட அந்த குளிரூட்டப்பட்ட அரங்கின், கீழிருந்த மேடையின் கூரை விளக்கொன்று மொட்டவிழ்ந்து பூ மலர்வது போல மிக மெதுவாக உயிர்பெறுகிறது. அந்த விளக்கின் மங்கிய மஞ்சள் நிற வட்டவடிவ ஒளி இருளில் அம்மேடையில் தொழுது கொண்டிருந்த வயதான ஔரங்கசீப்பை அவ்வரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அச்சதுர வடிவான மேடையின் நட்டநடுவில் விழுந்திருந்த அந்தச் சிறு வட்டவடிவ ஒளியைத்தவிர,  மேடையின் பிற பகுதிகளும், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியும் நிசப்தமான இருளில் இருந்தது.

நபிகள்தான் ஔரங்கசீப்பின் இருளைப்போக்க அவ்வெளிச்சத்தை அனுப்பியிருக்கிறாரோ என்ற பிரமை விலகுவதற்குள் ஒரு பெண்ணின் இனிய குரல் அவ்வரங்கின் நிசப்தத்தை கலைக்காத வண்ணம் மெல்லிய இசையாய் ஒலிக்கிறது. இசை போன்ற கலைகளை மூடர் மற்றும் சோம்பேறிகளின் வேலையாக உருவகித்துக் கொண்ட ஔரங்கசீப் அக்குரல் கேட்டுப் பதறினாலும், அம்மேடையில் அத்தனை தொழில்நேர்த்தியுடன் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் இந்நாடகக் கலையின் மேல் பற்று கொண்டு அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு அக்குரலிருந்த இசைய வைக்கும் இசை ஆவலைத்தான் அதிகப்படுத்தியது.

இசையின் நடனம்

Shraddha மற்றும் Nisha Theatres குழுவினரால் அரங்கேற்றப்பட்ட எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் (இ.பா.) ‘ஔரங்கசீப்’ நாடகத்தின் இறுதிக்காட்சியிது. நம்முள் எழுந்த ஆவலையும், ஔரங்கசீப்பின் பதற்றத்தையும் தணிக்கும் வண்ணம், இருளிலிருந்த மேடையின் விளிம்புகள் அந்த இசைக்குரலால் நீல ஒளிபெறுகின்றன. அச்சதுர மேடையின் நட்டநடுவிலிருந்த மங்கலான வட்டவெளிச்சத்தை மேலும் மங்கலாக்கிய நீலஒளியில், அம்மங்கை இனிய குரலோடு இசைந்து தன்னைச் சுற்றும் ஒரு மெல்லிய நடனத்தோடு ஔரங்கசீப்பையும் சுற்றி அசைந்து செல்கிறார். ‘நான்தான் உங்களால் கொல்லப்பட்ட இசை…இந்த பிரபஞ்சத்தின் முதல் நாதம்…’ என்று முனகி நடனமாடியவாறே ஔரங்கசீப்பின் இன்னும் முற்றுப் பெறாத தனிமையை சீண்டிச் செல்கிறது, இ.பா.வின் எழுத்துக்களில் ஔரங்கசீப்பின் மனச்சாட்சியாக ஒலித்த அப்பெண் குரல்.

இசையின் நடனம்

ஒரு தலைவனுக்குரிய அனைத்து குணங்களையும் உடையவரான ஔரங்கசீப் தன் இறுக்கத்தை கொஞ்சம் நெகிழ்த்திக் கொண்டிருந்தால், அக்பரை விஞ்சியிருக்க முடியும் என்பதே இந்நாடகத்திலிருந்து நான் கண்டுகொள்வது. அவருடைய சகோதரரான தாராவுக்கு அக்பரைப் போல எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைப்பாடு இருந்தாலும், அவருடைய சகோதரியான ஜகன்ஹாரா சுட்டிக்காட்டுவது போல், அதை சாத்தியப்படுத்துவதற்கான திட்டங்களும், திறமையும் தாராவிடம் இல்லை. ஆனால் ஷாஜகான் தன் மகளும் மகனுமாகிய ஜகன்ஹாரா மற்றும் தாராவிடம் காட்டிய பாசத்தில் கடுகளவேனும் தன்னுடைய இன்னொரு மகளும் மகனுமாகிய ரோஷன்ஹாரா மற்றும் ஔரங்கசீப்பின் மேல் காட்டியிருந்தால் மொகலாயப் பேரரசு ஔரங்கசீப்போடு முடிந்திருக்காது என்றே தோன்றுகிறது.


ரோஷன்ஹாராவும் ஔரங்கசீப்பும்

மக்களின் நன்மதிப்பைப் பெறுவதே தாராவின் தலைமைக்கான குணம் என்றால், அவர்களை ஒழுங்குபடுத்துவதே ஔரங்கசீப்பின் தலைமைப் பண்பாக இருக்கிறது. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என மும்தாஜின் ஊடாக மட்டுமே இவ்வுலகை காணும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட நிலையில் இருக்கும் ஷாஜகான். இம்மூவரையும் மையமாக வைத்து இ.பா. எழுதிய இந்நாடகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் Shraddha மற்றும் Nisha Theatres.

ஷாஜகான் ஜகன்ஹாரா மற்றும் தாரா

கதாபாத்திரங்களின் உடை, அலங்காரம், காட்சியமைப்பு, மெல்லியதாக தேவைப்படும்போது மட்டுமே ஒலிக்கும் பிண்னணி இசை என அனைத்தையும் தாண்டி நம்மை ஈர்ப்பது கதாபாத்திரங்களின் மிகையற்ற உடல் மொழியும், அருமையான தமிழ் உச்சரிப்பும்தான்.

அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலும் அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. மும்தாஜ் என்ற கனவை விட்டு வெளியேறாத ஷாஜகானின் பைத்தியக்கார குரலாகட்டும்; தத்துவம், அரசியல் மற்றும் இவர்களுக்கிடையே உள்ள தொடர்பு ஆகியவற்றை கூர்ந்து அவதானிக்கும் ஜகன்ஹாராவின் அதிகாரமும் எள்ளலும் கொண்ட குரலாகட்டும்; தான் கொண்டிருக்கும் அனைவரும் கடவுளே (அகம் பிரம்மாஷ்மி) என்ற கொள்கைப்படி அனைத்து மதங்களையும் இணைத்துவிடும் தகுதி தனக்கிருக்கிறதா? என தன்னைத்தானே சந்தேகிக்கும் தாராவின் தன்னம்பிக்கையற்ற குரலாகட்டும்; தன் தந்தை ஷாஜகானின் அன்பு முழுவதும் மும்தாஜ் போல் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தால் தன் சகோதரி ஜகன்ஹாராவிடம் குவிந்திருப்பதைக் கண்டு வெம்பி வெறுப்பை மட்டுமே கக்கும் ரோஷன்ஹாராவின் குரலாகட்டும்; தான் கொண்ட கொள்கையில் உறுதியும், பற்றும் கொண்டு ஓங்கி ஒலிக்கும் ஔரங்கசீப்பின் நம்பிக்கையான சிம்மக் குரலாகட்டும், இலக்கியத்தைவிட நாடகக் கலையால் ஏன் பெரும்பான்மையான மக்களிடம் நெருங்க முடிகிறது என்பதற்குச் சான்று.

ஷாஜகான் முகத்திலிருந்த குழந்தை அல்லது பைத்தியக்காரத்தனமும், ஜகன்ஹாராவின் ஒட்டு மொத்த உடல்மொழியில் இருந்த தீவிரமும் நக்கலும், எப்போதுமே இறுகிச் சிவந்து கொண்டிருக்கும் ஔரங்கசீப்பின் முகத்திற்கும் பின்னால் புதைந்திருப்பது இக்கலைஞர்களின் ஈடுபாடும் உழைப்பும்.

தாரா

இ.பா.வின் இந்நாடகத்திற்கு இரத்தமும் சதையும் கொடுத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் நம்மை மெய்மறக்கச் செய்திருக்கும் இக்கலைஞர்களின் ஈடுபாடும், உழைப்பும், அதன் ஒருங்கமைவில் உள்ள தொழில்நேர்த்தியும் நம்மை வியக்க வைக்கின்றன. வாழ்த்துக்கள் Shraddha மற்றும் Nisha Theatres!!! It is really a tribute to Indira Parthasarathy.

ரோஷன்ஹாராவும் ஜகன்ஹாராவும்

வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம்

நாகரீக வளர்ச்சிக்கும் உடலுழைப்புக்குள்ளும் உள்ள தொடர்பை பற்றி புரிந்து கொள்வதற்காக எழுதும் ஒரு பதிவிது. வழக்கம் போல் நான் இதுவரை தெரிந்து வைத்திருக்கும் மார்க்ஸியத்தைத் தான் இதற்கு துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. உடனே இது தீவிர கருத்துமுதல்வாதிகளுக்கு அல்லது தற்போதைய சமூகத்தின் வர்க்கப் பிரிவினை இயற்கையானது அல்லது இயல்பானது என்று எண்ணுவோருக்கு அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான பதிவென்று எண்ண வேண்டாம்.

மூன்று சமூக அமைப்புகள்

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால சமூகங்களை முறையே வர்க்கமுன் சமூகம், வர்க்க சமூகம் மற்றும் வர்க்க பேதமற்ற சமூகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறார்கள்.


இந்த வர்க்க பேதமற்ற எதிர்கால சோஷலிச சமூகமானது ஒரு கனவு அல்லது உயர்ந்த இலட்சியம் மட்டுமே. இதை அடைவதற்கு புரட்சி தேவை என்பது மார்க்ஸியம். இல்லை முதலாளியத்தில் செய்யப்படும் சில சீர்திருத்தங்கள் வழியாக சோஷலிசத்தை எட்டமுடியும் என்பது எதிர்தரப்பு.

நிகழ்விலிருக்கும் வர்க்க சமூகமானது இந்த சோஷலிச சமுதாயக் கனவினால் உந்தப்பட்டுதான் அடிமைச் சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என பரிணமித்துள்ளது. இதை மார்க்ஸியத்தின் இயங்கியல் விதி என்கிறார்கள். ஆண்டான்-அடிமை, ஜமீன்தார் (பண்ணையார்) – விவசாயி மற்றும் முதலாளி-தொழிலாளி என வர்க்கங்களின் பெயர்கள்தான் இப்பரிணாம வளர்ச்சியில் மாறினதேயொழிய வர்க்கம் ஒழியவில்லை.

வர்க்கங்கள் என்ற ஒன்று தோன்றியிருக்காத பண்டைய அல்லது புராதனப் பொதுவுடைமைச் சமூகங்கள் அல்லது வர்க்கமுன் சமூகங்களுக்கும் தற்போதைய வர்க்கச் சமூகங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு உழைப்பின் உட்கூறுகள் அல்லது உள்ளடக்கம்தான்.

உழைப்பின் பிளவு

வர்க்கமுன் சமூகங்களில் மனிதர்களின் செயலில் இருந்து சிந்தனை பிரிந்திருக்கவில்லை என்கிறார்கள். அதாவது, சிந்திப்பவன் செயல்படுபவன் என்ற பிரிவினையில்லை. உழைப்பு, மூளையுழைப்பு மற்றும் உடலுழைப்பு என்று பிளவு பட்டிருக்கவில்லை. மனித உழைப்பு என்பது சிந்தனையும் செயலும் கலந்த ஒரு முழுமையான உற்பத்திச் செயல்பாடாக இச்சமூகங்களில் நிலவியிருக்கிறது. மார்க்ஸியத்தின்படி சொல்ல வேண்டுமென்றால் உழைப்பென்ற வடிவம் அல்லது உருவத்தின் உள்ளடக்க முரண்கள்தான் செயலும் சிந்தனையும்.

வர்க்கமுன் சமூகங்களான இனக்குழுச் சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு பிளவுண்டு வர்க்கச் சமூகங்களின் ஆரம்பகட்டமான அடிமைச் சமூக்திற்குள் நுழைகிறார்கள். தங்களிடம் தோற்ற இனக்குழுவினரை, போரில் வென்ற இனக்குழுவினர் அடிமைகளாக்கி கடும் வேலைகளை அவர்களுக்கு பணிக்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் இடைவிடாது உழைத்து மடிய வேண்டியிருந்தது. மூளையும், உடலின் பிற பாகங்களும் சேர்ந்து செய்த உழைப்பு என்பது இங்குதான் முதன் முதலாக உடலுழைப்பு என்றாகிறது.

உழைப்பின் உள்ளடக்க அலகுகளில் ஒன்றான சிந்தனையை உருவி வெளியே எடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அடுத்தடுத்த வர்க்க சமூகங்களான நிலவுடைமை மற்றும் முதலாளித்துவ சமூகங்களில் உச்சம் தொடுகிறது. உழைப்பு அடிமைகளுக்கு அல்லது கீழ்வர்க்கங்களுக்குரியது என்றாகிறது. சிந்தனை மேல் வர்க்கங்களுக்கு என ஆகிறது.

புரட்சியும் மாற்றங்களும்

மார்க்ஸியத்தின் இயங்கியல் தத்துவப்படி வர்க்க சமூகங்களின் உள்முரண்கள் அதிகரிக்கும் போதெல்லாம் எழும் புரட்சி அச்சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. பேரரசுகளுக்கு எதிராக அடிமைகளை இணைத்துக் கொண்டு நிலவுடைமைச் சமூகம் உருவாகியது. நிலக்கிழார்களுக்கு எதிராக விவசாய கூலிகளை இணைத்துக் கொண்டு முதலாளியச் சமூகம் உருவாகியது. இந்த சமூக மாற்றங்களில் கீழ் வர்க்கங்கள் எதிர்பார்த்த வர்க்க பேதங்கள் முழுவதுமாய் ஒழிந்த சோஷலிச சமூகம் உருவாகவில்லை. ஆளும் வர்க்கங்களால் ஏதாவது ஒருவகையில் சுரண்டப்பட்டு உடலுழைப்புக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக ஆனார்கள்.

வர்க்க சமூகத்தின் இம்மனப்பான்மை மேலும் மேலும் உடலுழைப்பை சிறுமைப் படுத்தி, அவை சிந்தனையில் எழும் கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் கருவிகள் மட்டுமே என்ற ஒருவகையான கருத்து முதல்வாதத்திற்கு இட்டுச் செல்கிறது என்கிறார் இந்தியாவின் தலைசிறந்த மார்க்ஸியர்களில் ஒருவரான தேவிபிரசாத் சட்டோபாத்யா. வர்க்க அல்லது தனியுடைமைச் சமூகங்களின் தத்துவமாக இயல்பாகவே கருத்துமுதல்வாதம் நிலைகொண்டு விடுகிறது.


தேவிபிரசாத் சட்டோபாத்யா

முதலாளித்துவ சமூகங்களில் எழும் புரட்சியானது சோஷலிச சமுதாயத்திற்கு வழிவகுக்கும் என்று மார்க்ஸ் உறுதியாக நம்பினார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாத லெனின், பழைய மாற்றங்களுக்கான புரட்சி ஏன் சோஷலிச சமூகத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதையும் உணர்ந்து கொள்கிறார். பேரரசை எதிர்த்தவர்கள், அவ்விடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த நிலவுடைமையாளர்கள். நிலவுடைமையாளர்களை எதிர்த்தவர்கள் அவ்விடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த பூர்ஷ்வாக்கள் அல்லது முதலாளிகள். வர்க்க சமூகத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது தான் இவர்களுடைய புரட்சியின் இலக்கேயொழிய வர்க்கங்களை ஒழிப்பதல்ல.


சோஷலிசத்துக்கான புரட்சியை ஏற்று நடத்தும் அமைப்பு அல்லது கட்சி, அதன் தலைமை மற்றும் நிர்வாகமுறை பற்றி ஒரு பெரிய திட்டத்தை அல்லது வரையறையை உருவாக்குகிறார் லெனின் (லெனினியம்). இத்திட்டத்தில் மிக புதுமையானது தேசிய இனங்களின் விடுதலை பற்றிய கருத்து. இவ்வளவு திட்டங்கள் இருந்தும் வர்க்க சமூகங்கள் உருவாக்கி வைத்திருந்த எதார்த்தங்களை லெனினால் வெல்ல முடியவில்லை. புரட்சியில் வென்றாலும், தனியுடைமையை நீக்க அவர் கொண்டுவந்த அரசுடைமைத் திட்டத்தை நிர்வகிக்க முடியாமல் லெனினியம் தோற்றுத்தான் போனது.

ரஷ்யாவின் மிகச்சிறந்த நாவலாசிரியரான பியோதர் தஷ்தயேவ்ஷ்கி ‘நான் சிந்திப்பதால் செயல்பட முடிவதில்லை’ என்கிறார். செயல்பட விரும்பாத சிந்தனையாளர்களையும், சிந்திக்க திராணியற்ற உடலுழைப்பாளிகளையும் உருவாக்கியதுதான் வர்க்க சமூகங்களின் வெற்றிக்கு காரணம். செயலையும் சிந்தனையையும் ஒருங்கிணைக்க முயன்ற  லெனினியம், இவ்வர்க்கங்களுக்கு முன் தோற்றுத்தான் போயின.

உயிரியல் செயல்பாடுகள் படி நாம் சிந்தனை-செயல் என்று பிளவுபடவில்லை என்பதே அறிவியல் உண்மை. இப்பிளவுகள், வர்க்க சமூகங்களை தக்கவைத்துக் கொள்ள  நாம் நம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட கற்பிதங்கள். பௌத்தம் மனமே ஒரு கற்பிதம்தான் என்று சொல்கிறது.

லெனின் சாதிக்க நினைத்த இந்த ஒருங்கிணைவை காந்தியிடம் நம்மால் காண முடிகிறது. தன் சிந்தனைகளுக்கு தானே செயல்பாட்டு வடிவங்களை உருவாக்கி கொண்டே இருந்தார். ராட்டை சுற்றுவதிலிருந்து தற்சார்புள்ள வாழ்க்கை வரை. அவருடைய உடலுழைப்பு ஏதாவது ஒரு வகையில் உற்பத்தியோடு இயைந்திருந்தது. ஆனால் இன்று பெருமபாலும் சிந்திக்க  மட்டுமே தெரிந்த கூட்டம் தன் உபரி உடலைக் குறைப்பதற்காக உற்பத்தியற்ற உடலுழைப்பில் (Jim, Running etc.) மட்டுமே ஈடுபட வேண்டியுள்ளது.


முதலாளிய சீர்த்திருத்தமும் மாற்றங்களும்

மார்க்ஸின் கூற்றுப்படி முதலாளித்துவம் உச்சத்தில் இருந்த ஐரோப்பாவில் ஏன் புரட்சி தோன்றவில்லை என்பதை புரிந்து கொள்ள மார்க்ஸிய கண்ணோட்டத்திலிருந்து விலகி முதலாளியத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது.

தேவைகள் -» உழைப்பு -» தேவைகளின் ஸ்தூல வடிவம்  என்ற பயணத்தில் உழைப்புச் செயல்பாட்டிற்கான காரணமாக தேவைகளே பிரதானமாக இருந்தன. அதாவது தேவைகளே நமது உற்பத்திக்கான ஆதர்சம்.

ஆனால் முதலாளித்துவ வர்க்க சமூகத்தில் இப்பயணம்

சிந்தனை-»உழைப்பு-» சிந்தனையின் ஸ்தூல வடிவம் என்று உருமாறுகிறது. இந்தப் பயணம் முடிந்தவுடன், உழைப்பு வெகு இயல்பாக மறக்கப்பட்டு அல்லது பின்னுக்கு தள்ளப்பட்டு ஒட்டுமொத்த உழைப்புச் செயலும் சிந்தனையின் விளைவென்று மார்தட்டிக் கொள்கிறது வர்க்க சமூகம். அதாவது காரணம் ‘தேவைகள்’ என்பது மாறி, ‘சிந்தனை’ என்றாகிறது. சிந்தனையும் தேவையிலிருந்துதான் எழுகிறது என்பதை மிக புத்திசாலித்தனமாக ‘கருத்துமுதல்வாதம்’ என்ற தத்துவத்தின் வழியாக முதலாளித்துவம் இருட்டடிப்பு செய்கிறது என்கிறார்கள் ‘பொருள்முதல்வாதத்தை’ அடிப்படையாக கொண்ட மார்க்ஸியர்கள்.

‘நான் சிந்திக்கிறேன்.ஆதலால் இருக்கிறேன்’ என்ற நவீன தத்துவ சிந்தனையாளரான டெகார்த்தேவின் கோட்பாடு முதலாளித்துவத்தை கட்டமைக்கிறது என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யா.

முதலாளித்துவ சமத்துவம்

உழைப்பு செயல்முறையிலிருந்து ‘கற்பனை, திட்டம், இலக்கு’ போன்ற சிந்தனை சார்ந்த உழைப்பை முழுவதுமாக பிரித்தெடுத்தது வர்க்க சமூகத்தின் தற்போதைய வடிவமான முதலாளித்துவம். இப்பிரிவினை, சிந்திப்பது மேல் வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதானது; உடலுழைப்பு கீழ்வர்க்கங்களுக்கானது என நிரந்தர உழைப்பு பிரிவினைக்கு இட்டுச் சென்றது.

பெரிய தொழிற்சாலைகளில் அல்லது அலுவலகங்களில் கீழ்மட்டங்களிலிருப்பவர்கள் முற்றிலும் சிந்தனைக்கு அந்நியமாகிப் போவதைத் தடுப்பதற்காக பல வழிமுறைகளை புகுத்துகிறது முதலாளித்துவம். தகுதியை (அதாவது சிந்திக்கும் தகுதியை) வளர்த்துக் கொண்டால் கிடைக்கும் பதவி மற்றும் சம்பள உயர்வு, அதன் வழி கிடைக்கும் சமூக அந்தஸ்து என வர்க்கங்களை நிரந்தரப்படுத்தினாலும், மனிதர்களை நிரந்தரமாக ஒரே வர்க்கத்தில் இருக்க நிர்பந்திப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்திற்கு முந்தைய வர்க்க சமூகங்களில் இல்லாத ஒரு ஜனநாயகத் தன்மை இது என்று சொல்லலாம்.


ஆடம் ஸ்மித்

மேலே உயர்வதற்கான தகுதிகளை நிர்ணயிப்பது யார்? மற்றும் அத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன? போன்றவையே முதலாளித்துவ சமூகத்தின் ஜனநாயகத்தன்மையை நிர்ணயிக்கின்றன. இதற்கான பொறுப்பை, அதாவது கீழ்வர்க்கத்தினருக்கு கல்வி அளிப்பது போன்றவற்றை முதலாளித்துவ சமூகங்களின் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் முதலாளித்துவத்தின் பிதாமகனான ஆடம் ஸ்மித். இதைத்தான் மார்க்ஸ் பூடகமாக வர்க்க பேதமற்ற அவருடைய இலட்சியக் கனவான சோஷலிச சமூகத்தில் அரசு உதிரும் என்கிறார். வர்க்க பேதங்களிருக்கும் வரை அரசுக்கான தேவையும்  இ்ருக்கும்.

Dignity of Labour

முதலாளித்துவத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம் என இதைச் சொல்லலாம். தகுதிகளை வளர்த்துக் கொண்டு உயர்ந்தாலும், அது உடலுழைப்பு என்பது கேவலமானது என்ற மனநிலையை மறைமுகமாக வளர்த்தெடுக்கத்தான் செய்தது.

பல்வேறு சமூகக்காரணங்களால் (இந்தியச் சமூகங்களில் குறிப்பாக சாதி) தங்களுடைய தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அல்லது விரும்பாத உடலுழைப்பாளிகளுக்கான சமூக அந்தஸ்து, நியாயமான சம்பளம் முதலியவற்றை முதலாளித்துவ அரசாங்கங்கள் உறுதி செய்தன. வீட்டு வேலை செய்பவர்கள், அலுவலகக் கழிவறைகளை சுத்தம் செய்வோர், தெருக்களின் குப்பைகளை அகற்றுவோர் போன்றவர்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்வது, கீழாக நினைப்பது போன்றவை நாகரிகமற்ற செயல்களாக பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டன. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சமூகங்களில் இவற்றைக் கண்கூடாக பார்க்க முடியும்.  இந்த நாகரிகமான சிந்தனை வர்க்கங்களின் தொழில்நுட்ப பாய்ச்சல்தான் முதலாளித்துவ சமூகத்தின் அடுத்த கட்ட சமத்துவ பாய்ச்சல்.

தொழில்நுட்ப வளர்ச்சி

நாகரிகமடைந்த சமூகத்தின் அளவுகோளாக உற்பத்தி திறன் முதலாளித்துவ சமூகத்தில் முன்வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் உடலுழைப்பை முற்றிலும் நமக்கு அந்நியமாக்கி இருக்கின்றன அல்லது இல்லாமல் செய்திருக்கின்றன. அதிலும் அசிமோவின் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரன்கள் (AI Enabled Robots) 2030ல் மனிதர்களை விட அதிகம் சிந்திக்கும் திறனைப் பெற்றுவிடும் என்று பீதி கிளப்புகிறார்கள். சிந்திப்பதிலிருந்தும் நாம் அந்நியப்படுவோமென்று தெரிகிறது. மனிதனை உருவாக்கியவனை மனிதனே உருவாக்குகிறான் என்கிறார் AI தொழில்நுட்ப வல்லுரான Zoho ராஜேந்திரன்.

வர்க்கங்களுக்கிடையில் மத்தியஸ்தம் பண்ணும் அல்லது நம்பிக்கையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் சமூக அமைப்புகள் (அரசாங்கம், வங்கி போன்றவை) அனைத்தையும் இல்லாமல் செய்து விடுவேன் என்று தொடைதட்டி சவால் விடுகிறது இன்னொரு தொழில்நுட்ப புரட்சியான BlockChain.

Good bye ஆடம் ஸ்மித். நாங்கள் மார்க்ஸ் கனவுகண்ட வர்க்கங்களற்ற, அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளற்ற சமுதாயத்தை அடையப்போகிறோம் என்கிறதா இந்த முதலாளியத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப புரட்சி? மார்க்ஸியத்தின் இயங்கியலிடமே விட்டுவிட வேண்டியதுதான் இக்கேள்விக்கான பதிலை.

தமிழும் தத்துவமும்

தமிழ் சமூகத்திடமிருந்து இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட தத்துவம் ஏதும் உண்டா? என்ற கேள்வி தத்துவங்களின்மேல் சமீபகாலமாக  மோகம் கொண்டதிலிருந்தே அலைக்கழிக்கும் ஒன்று. பெரும்பாலும் தத்துவங்களின் அறிமுகம் தத்துவவியல் பயில்பவர்களைத் தாண்டி இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே உள்ளது. அதிலும் வணிக எழுத்துக்களைத் தாண்டி வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகம்கூட சாத்தியம். பெரும்பாலும் தத்துவங்களைப் பயிற்றுவிக்கும் அனைத்து அமைப்புகளுமே நவீனத்தின் பெயரால் சிதைக்கப்பட்டு, இன்று எஞ்சியிருப்பவை அத்தத்துவங்களை குறியீடாகக் கொண்ட சடங்குகளை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகள் மட்டுமே.

ஏன் நவீனத்தால் எந்த நீடித்த தத்துவங்களையோ அதை பயிற்றுவிக்கும் அமைப்புகளையோ உருவாக்க முடியவில்லை என்ற கேள்வியை என்னுள் எழுப்பிக்கொள்ள வைத்தது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற புத்தக வாசிப்புதான். இதற்கான பதில் என் சிற்றறிவுக்கு கிட்டிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அதைநோக்கிய பயணத்தில்தான் நான் இருக்கிறேன் என்பதை ஓரளவு உறுதி செய்கின்றன இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் இரு பெரும் இந்திய மார்க்ஸியர்களின் புத்தகங்களான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் ‘இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்’ மற்றும் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’.

இக்கட்டுரையில் அல்லது இப்பதிவில் வரும் அவதானிப்புகள் ந.முத்துமோகனின் ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ பற்றியதே.

இந்திய தேசியத்தின் உட்பொருளாக கொள்ளப்படும் வேதாந்த தத்துவம் இந்திய தேசியத்திற்கு முந்தைய நிலப்பரப்புகளிலிருந்த ஆதி தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் ஆகியவற்றுடன்  உறவாடி தன்னை அறுதியான ஒன்றாக நிறுவி கொண்டது என்பது ஒருவகையான வலதுசாரிப் பார்வை எனலாம். ஆனால் வேதாந்தம் அந்த ஆதி தரிசனங்களுடன் முரண்பட்டு, அவற்றை அழித்து உட்செரித்து தன்னை இந்திய தேசியத்தின் முகமாக நிறுவிக்கொண்டது என்பது ஒருவகையான தீவிர இடதுசாரிப் பார்வை. ந.முத்துமோகனின் பார்வை இவ்வகையைச் சார்ந்தது. இவ்விரு பார்வைகளுக்குள்ளும் சிக்காமல் இப்புத்தகத்தை அணுகும்போது இந்தியத் தத்துவங்களின் பரிணாம வளர்ச்சியும் (குறிப்பாக வேதாந்த தத்துவங்கள்) தமிழ் இலக்கியங்களில் உறைந்திருக்கும் தத்துவ மெய்யியல் அல்லது புலமையும் நமக்கு பெரும் திறப்பையும் புரிதலையும் அளிப்பவை.

உள்ளடக்கம்

இப்புத்தகம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி இந்திய மரபில் இருந்த தத்துவங்களைப் பற்றியும், அவற்றை வைதீகம் எப்படி வென்று தன்னை முதன்மைப் படுத்திக்கொண்டது என்பதையும் ஒரு தீவிர இடதுசாரிப் பார்வையினூடாக விரித்தெடுத்திருக்கிறது.

இரண்டாவது பகுதி தமிழ் இலக்கியங்களிலிருந்து உருவான தத்துவ வகைமையை மிக சுவாரஸ்யமாக விரித்தெடுக்கிறது.

இவ்விரண்டு பகுதிகளிலும் கிடைத்த புரிதலை அடிப்படையாகக் கொண்டு தமிழப் புத்தாண்டு முயற்சியாக எழுதியதுதான் கீழ்வரும் கட்டுரை.

தமிழும் உடைமைச் சமூகமும்

இனக்குழு தலைவரெல்லாம் இணைக்கப்பட்டு சீறூர் வேந்தராகிறார்கள். அவர்கள் மேலும் இணைக்கப்பட்டு பேரரசு உருவாகிறது. ஒவ்வொரு இனக்குழுவுக்கும் பொதுவில் இருக்கும் தானியங்கிடங்கு பலகூறுகளாக பிரிக்கப்பட்டு அவரவர் சேகரித்த உணவு அவரவரக்கே என்றாகிறது. பகிர்ந்துண்ணல் முடியாத செயலாக மாறிப்போய்விடுகிறது. இனக்குழுத் தலைவனின் புரவலர்களும் கலைஞர்களுமான பாணர் போன்றவர்கள் கைவிடப்படுகிறார்கள். பஞ்சமறியா இனக்குழுக்களுக்கிடையே பசியும் பட்டினியும் தலைதூக்கி, தங்கள் மகவுகளுக்கு பாலூட்டக்கூட முடியாத வறிய முலைகளைக் கொண்டவர்களாகிறார்கள் பெண்கள். இதுதான் ஆரம்பகட்ட சங்ககால தமிழ்ச் சமூகத்தைப் பற்றி புறநானூறு நமக்களிக்கும் சித்திரம்.

விவசாய உபரி

புராதன இனக்குழு பொதுவுடைச் சமூகங்கள் உடைந்து தனியுடைமைச் சமூகம் உருவாக ஆரம்பித்த காலகட்டமது. உணவு சேகரிப்பதிலிருந்து உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிக்கொண்டிருந்த காலகட்டமும்கூட. இன்று நாம் காப்பற்ற நினைக்கும் விவசாயமும்கூட பொதுவுடைமைச் சமூகங்களில் உடைப்பை ஏற்படுத்தி அவற்றை தனியுடைமை நோக்கி மடைமாற்றியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. விவசாயத்தில் கிடைத்த உபரியை திறம்பட நிர்வகிக்க ஆற்றலில்லாத சமூகம், ஏற்றத்காழ்வுகளை உருவாக்கி இனக்குழுக்களிடையே பகைமையை ஏற்படுத்தி அவர்களை தனியுடைமை நோக்கி நகர்த்தியது என்றும் கூறலாம்.

தத்துவங்களின் தீர்வு – அறவியல்

கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் வடஇந்தியாவிலும் இனக்குழுச் சமூகங்கள் மறைந்து இதுபோன்று பல்வேறு வகையான சிக்கல்களை சந்திக்கின்றன. அவர்களுக்கு தேவையான தத்துவ அரசியலை வழங்கியது வைதீகமும், சிராமண மதங்களான சமணமும் பௌத்தமும். தமிழ்ச்சமூகத்திற்கான தத்துவ அரசியலை வழங்கியது புறநானூற்றுப் புலவர்களே.

வைதீகமும், சிராமண மதங்களும் தத்துவத்தின் ஒரு பகுதியான மெய்யியல் (Theory of being, Ontology) வழியாக இச்சிக்கல்களை தீர்க்க முனைந்தபோது, புறநானூறு தத்துவத்தின் இன்னொரு பகுதியான அறவியல் (Theory of Values, Axiology) வழியாக இச்சிக்கல்களுக்கு தீர்வளித்தது. பொதுவுடைமை சமூகத்தின்   பகிர்ந்துண்ணுதல், நலிவடைந்தோரைப் பேணுதல் போன்றவற்றை மன்னர்களின் கடமையாக வலியுறுத்தியது. கிட்டத்தட்ட இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ‘Corporate Social Responsibility’ போலத்தான். வீரம் மட்டுமே வேந்தனுக்கு அழகல்ல. இது போன்ற சமூக மாற்றங்களால் கைவிடப்பட்டவர்களை பேணுதல் மூலம் கிடைக்கும் புகழும் வேந்தனாக தொடர்வதற்கு வேண்டும் என்று வலியுறுத்துகிறது புறநானூறு. அதாவது பொதுவுடைமைச் சமூகத்தின் இயல்புகள் தனியுடைமை சமூகத்தின் விழுமியங்களாக (Values) மாற்றப்படுகின்றன.

தத்துவங்களின் தீர்வு – மெய்யியல்

ஆனால் மதங்களின் மெய்யியல் வைக்கும் தீர்வுகள் இச்சிக்கலுக்கான உளவியல் காரணங்களை ஆராய முற்படுகின்றன.

“பாம்பை கயிற்றில் காண்பது உளமயக்கம் என்றால், கயிற்றை கயிறாய் காண்பது புலன் மயக்கம்.” அதாவது இங்குள்ள அனைத்தும் புலன்களால் உருவான மாயை. இம்மாய உலகத்திற்கு அப்பால் நம் புலன்களால் உணரமுடியாத ஒரு மெய்யுலகமுண்டு. இது வைதீகத்தின் ஏகாந்தம் (ஒன்று மட்டுமே, Singularity).கிட்டத்தட்ட தீவிர துறவு நிலை.

“இங்குள்ள அனைத்தும் மெய்யே.  ஒற்றை உண்மையென்று எதுவுமில்லை.” இது சமணத்தின் அநேகாந்தவாதம் (பன்மீயம், Plurality).  துன்பத்தையும், இன்பத்தையும் ஒரேபோல் பாவிக்கும் ஒரு சலனமற்ற நிலை. கிட்டத்தட்ட ஒரு யோகநிலை.

“இங்குள்ள அனைத்தும் கணந்தோறும் இயங்கி மாறிக்கொண்டே இருக்கிறது. நிரந்தரமான உண்மையென்று எதுவுமில்லை.” இது பௌத்தத்தின் அனான்மவாதம் (சுயமற்றது). இன்பத்தில் திளைப்பதும், துன்பத்தில் துவழ்வதுமாய் ஒரு எதார்த்த நிலை. இந்த சுழற்சியை பௌத்தத்தின் தர்மசக்கரம் என்போரும் உண்டு.

ஆனால் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களும் தத்துவத்தின் மெய்யியலையும் இம்மதங்களின் மூலம் கற்றுக்கொண்டதை புறநானூறுக்குப் பின்வந்த தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் காணலாம்.

தனியுடைமைச் சமூகம் – இன்று

விவசாயத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தனியுடைமைச் சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அது பேரரசு, நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என உருமாறி ஒரு சாராரை எப்போதும் ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக ஏகப்பட்ட சட்டங்கள் வழியாக விழுமியங்கள் நிறுவப்பட்டாலும் அரசு அதிகாரத்திற்கும், முதலாளிகளுக்கும் இடையேயான தகாகூட்டு (Crowny Capitalism) இச்சட்டங்களை கேலிக்கூத்தாகி விடுகிறது. தனியுடைமை தந்த ஆணவம் நம்மை இனி பொதுவுடைமை நோக்கிச் செல்லவும் அனுமதிக்காது. இடியாப்பச்சிக்கல் தான். எந்த மையம் வந்து இதைத் தீர்க்கும் என்று தெரியவில்லை.