
யோவான்
தரமான காண்டம் தான வச்சிருக்க என இமானுவலிடம் இருக்கும் காண்டம்களை உறுதி செய்து கொள்ளும் தெளிவை அவள் சற்றுமுன் இமானுவலுடன் சேர்ந்தமர்ந்து பருகிய பியரால் குலைத்து விட முடியவில்லை. குழப்பமெல்லாம், இமானுவலுக்குத் தான். உடனே சாட்சி என்கின்ற இந்நெடுங்கதை, இம்மானுவலை புறத்தில் வார்ப்பெடுத்திருக்கும் அவனுடய சகோதரனான யோவானை நோக்கி நகர்கிறது.
அகத்தே இமானுவலின் எதிர்முனையான யோவான் தன்னுள் ஒடுங்கிய ஒருவன். இதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது இமானுவலின் ஒழுக்கமின்மைக்காக தன் தந்தையால் தான் தண்டிக்கபட்டதாகக் கூட இருக்கலாம். எப்பொழுதுமே எரிந்தணையும் சிவப்பாகத் தான் யோவானின் மாலைப் பொழுதுகள் இருக்கிறது. இமானுவலுக்கோ அவை விஷ்கியின் பொன்னிறமாகவே அமைகிறது.
ஒழுக்கம், அறம் பற்றிய சிக்கலான புரிதல்களால் நம் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பாலியல் வறட்சியே இக்கதையை நகர்த்திச் செல்வது போல் தெரிந்தாலும், யோவான் தன் சகோதரனுடைய பாவங்களை மட்டுமல்ல, தன் தந்தை மற்றும் அனைவரின் பாவங்களையும் சுமந்தலைவதற்கான உள்ளுணர்வை சுமந்தலைவதுதான் இக்கதையை நகர்த்திச் செல்கிறது என்று எண்ணுகிறேன்.
யோவானின் இறுக்கம் தாழாத போதெல்லாம் இயல்பாக கதை இமானுவலுக்குத் தாவுவதும்; இமானுவலின் குற்றவுணர்வு மேலெழும் போதெல்லாம் கதை யோவானுக்கு தாவுவதுமான இக்கதையின் ஊசலாட்டம் வாசகனை அலைக்கழிப்பதற்காக வலிந்து செய்யப்பட்டதல்ல என்பதை உணர்த்துகிறது. இந்த ஊசலாட்டத்திற்கான கயிறாக இருப்பது, இந்த இரட்டைச் சகோதரர்கள் தங்களுடைய சிறுவயதில் நடித்த புகழ்பெற்ற ஒரு தொலைக்காட்சித் தொடரை சமகாலத்தில் ஒரு you tube channel பிரபலப்படுத்துவது. அருமையான உத்தி. வாசகனையும் இந்த ஊசலாட்டம் சுவாரஸ்யப் படுத்துகிறது.
இந்த ஊசலாட்டம் நிற்கும் தருணம், சில நாடகீயத்தன்மைகளைக் கொண்டிருந்தாலும் யோவானின் இறுக்கம் தளர்ந்து தன் உள்ளுணர்வை பற்றிக் கொள்வதும், இமானுவலின் குற்றவுணர்வு விலகுவதுமாய் நம்மை ஆசுவாசப்படுத்தத்தான் செய்கிறது.
திருவருட்செல்வி
கிறிஸ்துவின் ரத்தத்தை ஒட்டுண்ணியாய் உறிஞ்சிக் கொண்டிருக்கும் இந்த பாவ ஜென்மங்களை யோவான் எப்படி இரட்சித்திருப்பான் என்பதை ஒரு மென்புன்னகையோடு திருவருட்செல்வி என்ற கதையில் உணரமுடிகிறது. தன் தந்தையின் செயல்பாடுகளால் அவரிடமிருந்து விலகியிருந்த யோவான், தன் அப்பாவி அப்பாவின் போதாமைகளை பெரிதும் பொருட்படுத்தாத செல்வியாகத் தான் மாறியிருக்க கூடும் என்று எண்ணிக் கொள்ள முடிகிறது. தந்தையை இழந்த பின்பும், தன் மேலும், தன்னைச் சுற்றியிருப்போர் மீதும் செல்விக்கு இருக்கும் நம்பிக்கை அவளை திறனுள்ளவளாக மாற்றுகிறது. தன் தனிமையை இனிய பொழுதுகளாக மாற்றிக் கொள்ள முடிகிறது.
சட்டத்திற்கு வெளியே அல்லது அதற்கு மேலாக மதம், சாதி, அந்தஸ்து, பாரம்பரியம், பாதுகாப்பு என்ற எந்த பெயராலும் ஒழுக்கம் திணிக்கப்படும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தான் யோவான், இமானுவல் போன்றவர்களுக்கு நிகழ்கிறது. இவர்களின் குடும்பம், மதம் தனக்கான மீட்பா இல்லை சிறையா என்ற இருமையில் சிக்கிக் கொள்வதாக இருக்கிறது. செல்விக்கு மதம் தன்னுடைய பயணத்தின் தளர்வுகளை சரி செய்ய உதவும் ஊன்றுகோலாக மட்டுமே இருக்கிறது.
ஒரு எழுத்தாளரின் முதல் தொகுப்பிற்கே உரிய சில குறைகள் இருந்தாலும், ஒரு எழுத்தாளரின் முதல் தொகுப்பா இது என்று ஆச்சரியமளிக்கும் ஏராளமான விஷயங்களையும் உள்ளடக்கிய ஒரு கலவையான தொகுப்பு இது.
விஷால் ராஜாவிற்கு வாழ்த்துக்களும் நன்றியும்.