
புதுமைப்பித்தன், சொ.விருத்தாசலம் என்ற பெயரில் எழுதிய (🙂) கட்டுரைகளில் சிலவற்றை நீண்ட நேரத்திற்கு வாசிக்க வேண்டியிருந்தது. இரண்டு அல்லது மூன்று பக்கங்களே அத்தனை நீண்டதாக இருந்தது எனக்கு. ஒரு புனைவாளுமை, அவ்வாளுமையாக உருவாகி வந்ததை அவர்களுடைய இலக்கியம் சார்ந்த கட்டுரைகளே வெளிப்படுத்துகின்றன. கற்பனைச் சிறகுகளுக்கு முற்றிலுமாக ஓய்வளித்து விட்டு, சிறிதளவு ஊகங்களுடன் பெரும் தர்க்கங்களுடன் நிலத்தில் காலூண்டி நிற்பவை இக்கட்டுரைகள். இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கடவுளுக்கு அடுத்த இடத்தில் கலைஞனை பொறுத்திப் பார்க்கிறார் புதுமைப்பித்தன். கலை பொய்தான், மனிதர்கள் காணும் இவ்வுலகைப்போல. ஆனால் இப்பொய்தான் மகத்தான இப்பிரபஞ்சத்தின் மெய்மையை உணர ஒரே வழி என்று உறுதியாக நம்புகிறார். இப்பொய், அம்மெய்மையின் பிரதிபலிப்பே என்ற அத்வைதத் தொனியிது. ஸ்தூல வடிவத்திற்கும், அதன் சாரத்திற்கும் இடையே ஊசலாடுவது தான் கலை என்றும் புரிந்து கொண்டேன்.
அத்வைதமும் துவைதமும்
சமீபத்தில் வெளியான யுவன் சந்திரசேகர் அவர்களின் நிலவைச் சுட்டும் விரல் என்ற கட்டுரைத்தொகுப்பும் இது போன்ற நிறைய திறப்புக்களை அளிப்பவையாக இருந்தது. யுவன் அவர்கள் தொடர்ந்து முன்நிறுத்தும் மாற்று மெய்மைக்கான ஊற்றுக் கண்ணை இத்தொகுப்பிலுள்ள நிறைய கட்டுரைகளில் காண முடிகிறது. குறிப்பாக வண்ணத்துப் பூச்சிக்கு குழப்பமில்லை என்ற கட்டுரையில். சுவாங் ட்ஸீ என்ற ஒரு சீனத்துறவியின் குறுங்கதையும், அதையொட்டி 20ம் நூற்றாண்டில் ஆக்டேவியோ பாஸ் என்ற கவிஞரால் எழுதப்பட்ட கவிதையையும் முன்வைத்து தன்னுடைய மாற்றுமெய்மை என்பது அறுதியான ஒன்றல்ல; அல்லது தற்போது மெய்மையாகக் கருதப்படும் ஒன்றை மறுதலிக்கும் மனோராஜ்யமும் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறாரோ என்றும் தோன்றியது.
ட்ஸீ, தான் வண்ணத்துப் பூச்சியாய் மாறி விட்டதாக அக்குறுங்கதையில் கனவு காண்கிறார். கனவு முடியும் பொழது அது வண்ணத்துப் பூச்சியின் கனவாக முடிவடைகிறது. கிட்டத்தட்ட, தன்னை இப்பேரண்டமாகவே அல்லது முழுமையான ஒன்றாக ட்ஸீ உணர்கிறார். ஆனால் கவிஞர் பாஸ் தன்னுடைய கவிதையில், அவ்வண்ணதுப்பூச்சி நியூயார்க் நகர சாலைகளில் விரைந்து செல்லும் கார்களுக்கிடையே பறக்கும்போது நான் ட்ஸீ வா இல்லை வண்ணத்துப்பூச்சியா என்ற குழப்பமெல்லாம் கொள்வதில்லை என்கிறார். கிட்டத்தட்ட ட்ஸீ வையும், வண்ணத்துப்பூச்சியையும் ஒரு முழுமையின் இறுவேறு பகுதிகளாக காண்கிறது இக்கவிதை என்கிறார் யுவன். ட்ஸு அல்லது ஆதிசங்கரர் அல்லது பிளேட்டோவினுடையது யுவன் அவர்களின் மாற்று மெய்மை. அதே சமயத்தில் பாஸினுடைய துவைத அல்லது மறுமலர்ச்சி கால சிந்தனை வெளிப்பாட்டை யுவன் நிராகரிக்கவில்லை.
வாசக அனுபவத்தின் பரப்பில் பேதம் எதுவுமே கொள்ளாத எதிர்முனைகள் அவை என்கிறார்.
இலக்கிய வகைமை அல்லது வடிவங்கள்
ஜெயமோகனின் பின்தொடரும் குரலில் வரும் நாவல் பற்றிய வரையறை, இலக்கிய வடிவங்கள் பற்றிய என்னுடைய புரிதலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. மார்க்ஸும் புஸ்கினும் சந்திக்கும் புள்ளி தான் தஸ்தயேவ்ஸ்கி என்ற அவ்வரையறை தத்துவமும் (தர்க்கமும்) கவிதையும் (படிமங்களும்) சந்திக்கும் புள்ளிதான் நாவல் என்கிறது. இன்னும் சற்று மேலேறி கவித்துவமாய், கற்பனைச் சிறகு கொண்டு பறந்து கொண்டேயிருக்கும் படிமங்களுக்கு கால்களையும், தரையில் ஊண்டி நின்றிருக்கும் தர்க்கங்களுக்கு சிறகுகளையும் வழங்குபவை நாவல் என்கிறது.
அனுபவம் குறிப்பாக ஒரு வடிவத்தைத் தேர்ந்துகொள்ளும் செயல்பாடு, முழுக்க முழுக்கப்
பிரக்ஞைபூர்வமானது அல்ல. புனைவெழுத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் எழுத முனைந்தவர்களுக்கு இது சுலபமாகப் புரியும். சொல்ல ஆரம்பித்தபின், அனுபவத்தின் கருமையத்தை எட்டுவது ஒத்திப்போடப்படும்போது, உரைநடை தொடங்குகிறது. கரு மையம், உச்சபட்சத் தொலைவுக்கு நகர்ந்துவிடும்போது நாவல் போன்ற பெருவடிவம் பிறக்கிறது
யுவனின் இவ்வரிகள் (தனித்தனி அச்சுகளும் வார்ப்புகளும் என்ற கட்டுரை) நம் புரிதலை விசாலப்படுத்துபவை. அனுபவத்திலிருந்து தன்னை தொலைவில் நிறுத்திக் கொள்ளும் படைப்பாளி தன் அனுபவம் தரும் குழப்பங்களையும், கொந்தளிப்புக்களையும் சமன்வயப் படுத்திக் கொள்ளும் முதிர்ச்சி கொண்டவன். நாவலே இலக்கியத்தின் முதிர்ச்சியான வடிவம் என்ற என்னுடைய புரிதலை இவ்வரிகளின் வழியாக உறுதி செய்து கொண்டேன் 🙂.
காட்சியும் கருத்தும்
படிமம் என்ற சொல்லை உருவகத்தை விட மேம்பட்ட ஒன்றாக உணர்ந்திருந்தாலும், அதை வார்த்தைகளில் விளக்கிச் சொல்வது அத்தனை எளிதான ஒன்றாக இல்லை. மேதைகளுக்கு மட்டுமே அது சாத்தியம். பெரும்பாலும் கவிதைகளில் உள்ள படிமங்களையே, படிமங்களுக்கு விளக்கமாக சுட்டிக்காண்பிக்கும் போக்கோடு நிற்காமல், அதனை தர்க்கப்பூர்வமாக வரையறையும் செய்திருக்கிறார் யுவன் (படிமம் பற்றி என்ற கட்டுரை).
உவமை, உருவகம் இரண்டிலும் காட்சிக்கும், அதை மொழியில் வெளிப்படுத்தும் கருத்திற்கும் எப்போதும் ஒரு பிளவு இருப்பதை சுட்டிக்காட்டும் இக்கட்டுரை, இப்பிளவை இல்லாமல் ஆக்குவதுதான் படிமம் என்கிற அபாரமான வரையறையைத் தருகிறது.
படிமத்தின் இயல்புத்தன்மையில், இந்தப் பிளவு கிடையாது. காணுதலின் பிரசன்னம் மட்டுமே இருக்கிறது.
கருத்தும் காட்சியும் ஒன்றாகும் தருணம். படிமத்தின் அடுத்தபடி இவ்வத்தைவத் தருணம் தானா? என்ற கேள்வியும் உள்ளூர எழுந்தது. வருடங்களின் ஊர்தலில் தொய்ந்து சரிந்த என் மரியாளின் முலைகள்… (மீகாமரே மீகாமரே என்ற யுவனின் சிறுகதையில் வருவது) என்ற படிமம் காலத்தையும் உடலையும் ஒன்றாக்க முயல்வது.
இத்தொகுப்பில் இன்னும் நிறைய கட்டுரைகள் (மொத்தம் நாற்பது) உள்ளன. இது மூன்று கட்டுரைகளின் அவதானிப்பு மட்டுமே.