
நவீன அல்லது சமகால மாற்றங்கள், ஒரே சமயத்தில் வளர்ச்சியாகவும், சிதைவாகவும் வெவ்வேறு தரப்பினரால் அவதானிக்கப்படுகின்றன. அதனால்தான் என்னவோ, மாற்றங்கள் எப்போதும் வளர்சிதை மாற்றங்கள் என்று உருவகிக்கப் படுகின்றன போலும். சிதைவாக மட்டுமே உணர்பவர்கள் பெரும்பாலும், அச்சிதைவை விரும்பாத அல்லது அதனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர் கொள்ள முடியாத முதியவர்கள். இவர்களை பழமை விரும்பிகள் என்றும் கூட உருவகிக்கலாம். மாற்றங்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தை காவு கொள்ளும் எனில் அச்சிதைவிற்கு பண்பாட்டு என்ற உரிச்சொல்லை வல்லமை இருந்தால் இவர்களால் அளிக்க முடியும். மாற்றங்களை தடை செய்து சமூகத்தை உறைந்து விடச் செய்யவும் இவர்களால் முடியும். பழமைவாதம் அடிப்படைவாதமாக மாறுமிடம் இது எனலாம்.
மாற்றங்களை வளர்ச்சியாக அல்லது அதை எதார்த்தமான ஒன்றாக மட்டுமே காண்பவர்கள், ஆமை தன் வீட்டைச் சுமந்தலைவது போல சுமந்தலைய வீடோ, சொல்லிக் கொள்ளும்படி நினைவுகளோ அல்லது அனுபவங்களோ அற்றவர்கள் அல்லது பொதுவாக இளைஞர்கள் எனலாம். கிட்டத்தட்ட, வளர்ச்சி தரும் சூழலியல், பண்பாட்டு அல்லது சமூகத் சிதைவுகளைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களாக இவர்கள் இருப்பதை காணமுடியும். Progressive Society (முற்போக்கு சமூகங்கள்) என பெரும்பாலும் அடையாளப் படுத்தப்படுபவர்கள். மாற்றங்கள் தான் மாறாதவை என மாற்றத்தை ஆரத் தழுவிக்கொள்பவர்கள். மாற்றத்தின் காரணங்களை தங்களின் தேவைக்கேற்ப நியாயப் படுத்துபவர்கள் எனலாம்.
மேற்சொன்ன இவ்விரு தரப்பினரையும் இயக்குவது சுயநலம் என்று மேம்போக்காக சுருக்கி எளிமைப்படுத்தி விடலாம். சொல்லப்போனால், இப்படி இரு வேறு தரப்பினராக (முதுமை vs இளமை, மரபு vs நவீனம், அடிப்படைவாதம் vs முற்போக்குவாதம், வலதுசாரி vs இடதுசாரி ) சமூகத்தை அவதானிப்பதே ஒருவகையான எளிமைப்படுத்துதல் தான். சிக்கலான சமுக மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கான முதல்படி இவ்வகைப்பாடு எனலாம்.
இவ்விரு தரப்பினருக்கும் உரையாடல் நிகழாதவரை, மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான வளர்சிதை மாற்றங்களாக பரிணமிப்பதில்லை. உலகமயமாக்கலுக்குப் பின்பு, சென்னையில் நிகழத் தொடங்கிய மாற்றங்களை கதைக்களமாக கொண்டிருக்கும் இந்நாவல், இவ்விரு தரப்பினருக்கும் இடையிலுள்ள உறவுகளை, முரண்களை அபாரமான மொழியில் சற்றே வலதுசாரித் தனத்துடன் சித்தரிக்கிறது.
தனிமனிதன் vs குடும்பம்
ஜெயராமன், தன் மகன் அருணை கிட்டத்தட்ட தன் உடலின் தொடர்ச்சியாகவே எண்ணுகிறார். மாயவரத்திலுள்ள தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு அருண் நவீனச் சிறகுகளுடன், நம்பிக்கையான உடல் மொழியுடனும் சென்னைக்கு பறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுள் மருகிப் போகிறார். கிட்டத்தட்ட குடும்பத்தை தன் உடைமையாக கருதும் நிலவுடைமைச் சமூகங்களின் மனநிலையிது. நவீனக் கல்வி முதன்மையாகச் சிதைப்பது இந்த மனநிலையைத் தான். அண்டத்திலிருந்து பிரித்தெடுத்து மனிதனை நடுங்கும் குளிரில் தனியாக நிறுத்தி விட்டது மறுமலர்ச்சி (அறிவியல் வளர்ச்சி) கால கட்டம் என்கிறார் SVR (மார்க்ஸியமும் இருத்தலியமும்). அதன் அடுத்த கட்டங்கள்தான் மனிதனை சமூகத்தில் இருந்தும், குடும்ப அமைப்பிலும் இருந்து பிரித்தெடுத்து தனியனாக, தளைகளற்றவனாக உணரச் செய்தது.
ஜெயராமன், அவருடைய தந்தையின் தொடர்ச்சியாகத் தான் தன்னைக் கருதிக் கொண்டார். அருண் தன்னை விட்டு விலகுவதை மனதளவில் ஏற்காவிட்டாலும், தடுக்கவில்லை. 90களிலிருந்து நகரமாக இன்னமும் முயன்று கொண்டிருக்கும் சென்னையின் புறநகர் பகுதியில் குடியேறுகிறான் அருண். ஒரு நகரத்தின் விரிவாக்கம், எல்லைக்கருகில் உள்ள சிற்றூர்களை, கிராமங்களை புறநகராக பெயரளவில் உயர்த்திவிடுகிறது. கிட்டத்தட்ட கிராமத்தின் எழிலுமில்லாமல், நகரத்தின் வசதியுமில்லாமல் சபிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பிது.
நாவலின் விரிவு
நாளடைவில் ஜெயராமனும் அங்கு வந்து சேர்கிறார். சிறுகதை நாவலாய் விரிய ஆரம்பிக்கிறது. நிறைய கதாபாத்திரங்கள். ஆனால், எவரையும் எளிதில் புறந்தள்ளி விட முடியாத அளவிற்கு அவர்களை வார்ப்பெடுத்திருக்கிறார் நாவலாசிரியர். குறிப்பாக அப்புறநகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியரான ராமமூர்த்தி. நேர்மையான அதிகாரி. அதிலும் PWDல் இருந்து. நேர்மையாக இருப்பது ஒரு சிறப்பு தகுதியல்ல; அதுதான் மனித இயல்பு என்ற நிதர்சனத்தை உணர்ந்தவர் என்பதை அவர் உடல்மொழி பற்றிய சித்தரிப்புக்கள் நமக்கு எளிதாக கடத்தி விடுகின்றன. அப்புறநகரின் வளர்ச்சியில் இருக்கும் விதிமீறல்களை தனியொருவராக எதிர்த்து நிற்கிறார். மழையால் அங்கு வந்த வெள்ளத்தின் போது ராமமூர்த்தி அவர்களின் போராட்டங்களை அப்புறநகர் வாசிகள் புரிந்து கொள்கிறார்கள். ஜெயராமன் மற்றும் அங்கிருக்கும் அனைவருக்கும் ஆதர்சமாகிறார் ராமமூர்த்தி.
மனோகரி, இப்புறநகர்பகுதியின் பூர்வகுடிகளில் ஒருவர். அதாவது, இப்பகுதி காடாக இருந்தபோது அதைத் திருத்தி கிராமமாக்கியவர்கள். இவளுடைய மகனான முத்துவேலன் அருண் வசிக்கும் அபார்ட்மெண்டின் காவலாளி. தன்னுடைய கணவனின் இழப்பை வெகு இயல்பாகக் கடந்து செல்லும் தீர்க்கமானவளாக; தனக்கும் தன் உடலுக்கும் என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கும் பாமரப் பெண். இளமையில் இருக்கும் இந்த தீர்க்கம், முதுமையில் இல்லாமலாகிறது. காடு கிராமமாக மாறியதை பொறுத்துக் கொண்டவளால், அக்கிராமம் நகரமாவதை அதற்கு தன் இடம் கையகப்படுத்தப் படுவதை பொறுக்க முடியாமல் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.
இப்படி நிறைய கதாபாத்திரங்கள் அப்புறநகர் நிலப்பரப்பில் உயிர்ப்போடு உள்ளன, அருண் குடும்பத்தைத் தவிர. அருணிற்கு தன் வீடும், அப்புறர்நகர்ப் பகுதியும் ஒரு அஃறிணைப் பொருள் மட்டுமே. மற்றவர்கள் போல் அதனை உயிருள்ள ஒன்றாக கருத வேண்டிய தேவை ஒன்றும் இல்லாமல் போகிறது. பெரும்பாலான புறநகர் அல்லது நகரவாசிகளின் நிலைமை இது தான். அவர்கள் உயிர்ப்புடனும், இறுக்கமற்றும் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் அவர்களுடைய அலுவலகப் பணி அல்லது அது சார்ந்த அல்லது பொழுது போக்கு இடங்களில் மட்டும் தான். வீடு ஒரு அழகிய சிறை மட்டுமே. தான் வசிக்கும் சுற்றுப்புறத்தோடு ஒன்றுவதற்கு நெடுங்காலம் தேவைப்படுகிறது, அல்லது அதற்கான வாய்ப்பை தவிர்த்து விடுகிறார்கள்; இல்லாமலும் ஆக்கிக் கொள்கிறார்கள்.
சென்னையின் பசுமை
பக்கிங்காம் கால்வாய்க்கருகே அமைந்த இப்புறநகர்ப் பகுதியின் பசுமை பற்றிய விவரணைகள் நம் கண்களை பசுமையில் மூழ்கடிக்கின்றன. குறிப்பாக ராமமூர்த்தி மற்றும் மனோகரியி்ன் அப்பசுமை பற்றிய அவதானிப்புக்களுக்கு தன் அபாரமான மொழியை வழங்கியுள்ளார் இந்நாவலின் ஆசிரியர் K.J. அசோக்குமார். இம்மொழியிலிருந்து அக்கதாபாத்திரங்கள் தொலைவில் நின்றாலும், நிலத்தின் மேலும், அதன் பசுமையின் மேலும் அவர்கள் தன்னை ஆத்மார்த்தமாக பிணைத்துக் கொண்டவர்கள் என்பதை உணர்வதில் தடையிருக்கவில்லை.
வாழ்க்கை ஒரு வட்டம்
அருண் தன் தந்தை ஜெயராமனுக்கு செய்ததை, தன் மகன் தனக்குச் செய்யும் பொழுது உடைந்து போகிறான். இளைஞன் அருண் எப்படி தன்னை தனி மனிதனாக, தளைகளற்றவனாக உணர்ந்தானோ, அதைவிட பன்மடங்கு இளைஞனான தன் மகன் உணர்வதை பொறுக்க முடியாமல் மீண்டும் மாயவரத்திற்கே திரும்பச் செல்கிறான். ஹெகல் சொன்னது போல கிட்டத்தட்ட ஆத்மா தன் இருப்பிடத்திற்கே திரும்பி விடுகிறது. இது சற்று வலிந்து திணிக்கப்பட்ட முடிவு போல, அல்லது ஜெயராமனின் ஆற்றாமையை போக்குவதற்காக நாவலின் ஆசிரியரே இத்தண்டனையை அருணுக்கு வழங்குவது போல் உள்ளது. அவர்கள் வசித்திருந்த ரமணிக்குளம் ஃப்ளாட்ஸ்ம் இடிக்கப்படுகிறது.
அப்புறநகர்ப் பகுதியில் புதிதாக ஒரு இளைஞர் கூட்டம் அந்நிலப் பகுதியில் விவசாயம் செய்ய முன் வருகிறது. ரமணிக்குளத்தைப் புனரமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தான் உரையாடுவதற்கு ஒரு இளைஞர் கூட்டம் உள்ளது என்ற மகிழ்ச்சியில், ஜெயராமனின் புன்னகையுடன் நாவல் நிறைகிறது.
கிட்டத்தட்ட மரபுக்கு திரும்புங்கள் என்ற குரல் இந்நாவலில் எழுகிறது. தான் நம்பும் ஒன்றை நம்பும் தரப்பினருடன் மட்டுமே ஜெயராமன் போன்ற பழமை விரும்பிகளால் உரையாட முடிகிறது. இது முதுமையின் முதிர்ச்சியின்மையா அல்லது தளர்வா என்ற கேள்வி எழாமலில்லை.
ஒரு சிறு களத்தில், இத்தனை கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உலவ விடும் சுதந்திரத்தைத் தரும் நாவல் வடிவை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் அசோக்குமார். இவரின் முதல் நாவலிது. களங்கள் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள்.