
Fantastic indeed…
படகை செலுத்துபவரின் கையைத் தேடிக் கண்டடைய முடியாமல், அவருடைய துடுப்பின் அசைவிற்கு ஒத்திசைவாக தலை மட்டும் அசைந்து செல்வதை காண்பதாக வரும் சித்தரிப்பு திகிலூட்டுகிறது. கடல் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த இணையரில் ஒருவரான அவரது தலையைத் தவிர, உடலின் அனைத்துப் பாகங்களிலும் தன்னை வலுவாக நிறுவிக் கொண்டிருக்கிறது அப்பூஞ்சை நோய். தங்களிடம் எஞ்சியிருந்த படகின் துணைகொண்டு ஆள்அரவமற்ற ஒரு தீவில் நீண்ட நாட்களாக இந்நோயின் துணையுடன் தங்கள் முடிவை நோக்கி வாழ்கிறார்கள்..
அவ்வப்போது உணவிற்காக அத்தீவின் வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். எவ்வித விருப்பு வெறுப்புமின்றி அனைத்தின் மீதும் படரும் தன்மை கொண்ட இந்த தொற்று தனக்கு உதவியளிப்பவர்களுக்கு பரவி விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறான் அவன்.
உணவுதவியைப் பெற்றுத் திரும்பும் போது உணவளித்தவர்கள் தூரத்தில் கண்ட காட்சியின் சித்தரிப்பு தான் துடுப்பும், அதை அசைப்பவனின் தலை மட்டுமே தெரியும் காட்சி. ஒரு அனுபவமோ அல்லது கற்பனையோ மொழியாக்கம் செய்யப்படும் போது அதன் வீரியம் குறையவே செய்யும். அதனை இழப்பின்றி கடத்துவதற்கு ஒரு மொழியின் வழமையும், அதை கையாள்பவரின் திறமையும் உதவுகிறது. எழுத்தாளர் நரேன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் இக்கதையில் ( Voice in the Night by William Hope Hodgson) வரும் சித்தரிப்புக்கள், கிட்டத்தட்ட இவ்விழப்பை முற்றிலும் தவிர்த்து விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. சற்று எளிமைப் படுத்தினால், இவ்வனுபவங்கள் நமக்கு காட்டப்படுகின்றன எனலாம். ஆங்கிலத்தில் அவை எப்படி சித்தரிக்கப் பட்டிருக்கும் ? என்ற குறுகுறுப்பை முற்றிலும் தேவையற்றதாக ஆக்கிவிடுகிறது இம்மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம். Fantastic indeed…
On a completly different plane…
பிளேக் நோய் பற்றிய கதையில் (The Plague in Bergamo by Jens Peter Jacobsen) , சிலுவையில் அறையபட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர்த்தெழும் கிறிஸ்துவின் சித்திரம் திடுக்கிட வைக்கிறது. நோயிலிருந்து கடவுளால் நம்மை காப்பாற்ற முடியவில்லை என்றவுடன் மதத்தின் மீதிருந்த நம்பிக்கையும் பயமும் தளர்வதையும், மதத்தின் பெயரால் நிறுவப்பட்ட ஒழுக்கங்கள் காற்றில் பறக்க விடப்படுவதையும் சரி செய்யும் உத்தி அபாரமான உருவகத்தோடு சித்தரிக்கப் பட்டிருக்கிறது. தங்களுடைய பாவங்கள் அனைத்திற்கும் ஈடாகத்தான் கிறிஸ்துவை பழி கொடுத்து விட்டோமே, இனி நான் பாவங்கள் செய்தால் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அறிவுஜீவித்தனத்திற்குப் பதிலாகத் தான் இக்கதை அமைகிறது எனலாம். சிலுவையில் அறையப்பட்டுக் கொண்டிருக்கும் போதே தன்னைச் சிலுவையிலிருந்து பிய்த்துக் கொள்ளும் கிறிஸ்துவின் இந்த உயிர்த்தெழல் மக்களுக்காக அல்ல; இந்த மக்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்று உணர்ந்த கிறிஸ்துவுக்காக. A story on a completly different plane…
It is blissful indeed…
Masque of Red Death by Edgar Allan Poe கதை ஒரு அனுபவமாகவே என்னுள் எஞ்சிப் போயிருக்கிறது. இவ்வுணர்வனுபவத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியவில்லை. இருந்தாலும் முயல்கிறேன். நோயை மறக்க அல்லது அதிலிருந்து தப்பிக்க முடியும் என்ற பொய் நம்பிக்கையோடு, அது பொய் என்று தெரிந்தும் உண்மை என்று பாவனை செய்து கொண்டு அவ்வரண்மனையில் நிகழும் களியாட்டத்தை அத்தனை தத்ரூபமாக உருவகப்படுத்த முடியுமா? ஏழு வண்ணங்களும் மயங்கி முயங்கி ஆடிய அசைவின் நடனத்திற்கான தாளத்தை, அவ்வண்ண அறைகளில் தங்களை அடைத்துக் கொண்டவர்களின் கால்கள் வெளிப்படுத்தின என்ற உருவகம் நம்மையும் அவ்வறைகளில் அடைத்துப் போடுகிறது…காட்சியும் கருத்தும் காண்பவனும் ஒன்றாகும் ஒரு அத்வைதத் தருணம்? I know it is not a good try…but i don’t know how to…it is blissful indeed.
கதையின் தேர்வுகள் நரேனின் இலக்கிய வாசிப்பின் விரிவையும், ஆழத்தையும், ரசனையையும் நமக்கு உணர்த்துகின்றன. பெருந்தொற்று பற்றிய இப்பத்து கதைகளில் பெரும்பாலானவற்றில் நோய் பற்றிய சித்தரிப்புக்கள் குறைவு அல்லது இல்லவே இல்லை. நோய் பற்றிய தங்கள் உள்ளுணர்வுகளுக்கு அலங்கார ஆடை போர்த்தி வருகின்றன இக்கதைகள். அவை ஆடைகள் என்பதை ஆங்காங்கே விழும் சில மென் கீறல்கள் மட்டுமே நமக்கு உணர்த்துகின்றன.
நரேனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்…