
தனக்கென உடைமை எதுவும் சேகரிக்க முடியாதவர்களை அல்லது அதற்கான வாய்ப்பு வழங்கப்படாததால் உடமைகளற்று இருப்பவர்களை பாட்டாளி வர்க்கம் என்று வரையறுத்துக் கொண்டால், தனக்கென உடைமை எதுவும் தேவையற்றவர்களை முதலாளி என்பதா? பாட்டாளி என்பதா? இவ்விரு வர்க்கங்களிலிருந்தும் அவர்கள் தோன்ற முடியும். புத்தர் நம்மை வசீகரிப்பது போல பாட்டாளி வர்க்கத்திலிருந்து எழும் உடைமைகள் எதுவும் தேவையில்லை எனும் புத்தர்கள் நம்மை வசீகரிப்பதில்லை. இல்லாதவன் துறப்பதற்கு என்னவிருக்கிறது என்பதாலா?
பிளேட்டோ, இவர்களைப் போன்ற தேவைகளற்றவர்கள் அல்லது தன்னிறைவு கொண்டவர்கள் தான் தத்துவஞானிகளாக பரிணமிக்க முடியும் என்றாரா? இவர்கள் போன்றவர்களால் ஆளப்படும் சமூகங்கள் உன்னத நிலையை எட்டும் என்பது தான் பிளேட்டோவின் லட்சியவாதமா? இக்கனவைத் தான் மார்க்ஸ் சற்று மேம்படுத்தி சுவீகரித்துக் கொண்டாரா? இத்தனை முதிர்ந்தது போல் பாவனை கொண்டிருக்கும் இம்முதிரா கேள்விகளுடன் வருபவர்களைத் தான் பல்வேறு சித்தாந்தங்கள் அல்லது கருத்தியல்களைக் கொண்ட இயக்கங்கள் (வலதோ, இடதோ) ஆற்றுப்படுத்தி தன்வயப்படுத்திக் கொள்கின்றவனா?
எத்தனை கேள்விகள். இன்னும் நிறைய எழும் என்றே தோன்றுகிறது. கொடைமடம் நாவலின் கொடையிது.
The Craft
இந்நாவல் வெளியீட்டின் ஏற்புரையின் போது, அன்பும், அறிவும் கொண்ட ஒரு நட்பு வட்டத்திற்காக ஏங்கிய போது கிடைத்தவர்கள் தான் கம்யூனிசத் தோழர்கள் என்றார் சாம்ராஜ். இந்நாவலின் மையக் கதாபாத்திரமான முகுந்தனின் நிலையும் இதுதான். தன்னைச் சுற்றி நடக்கும் எதையுமே சற்று விலகி நின்று பார்க்கும் ஒரு முதிர்ச்சி கொண்ட முகுந்தனின் வழியாகத் தான் இந்த ஒட்டுமொத்த நாவலும் பயணிக்கிறது. சொல்வளர்காடு (ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் வருவது) நாவலில் வரும் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அறிவென்று மாறாத அன்பு நம்மைச் சுற்றிச் சூழும் வலை…அன்பிலிருந்து எழாத அறிவு வெற்று ஆணவம். கிட்டத்தட்ட ஆணவக்காரர்களிடம் சிக்கிக் கொண்ட அப்பாவிகளாய்த்தான் தனக்குக் கிடைத்த கம்யூனிசத் தோழர்களைப் பார்க்கின்றான்.
முகுந்தன் இல்லாத அத்தியாயங்களில் கூட முகுந்தன் தன் விமரிசனக் கண்ணோடும், தன்முனைப்போடும் சுற்றித் திரியும் பிரமை உண்டாகிறது. இது இந்நாவலின் பலவீனமாக அல்லது என்னுடைய வாசிப்பின் பலவீனமாகத் தெரிந்தாலும், பலமும் கூடத்தான். முகுந்தன் என்ற கதாபாத்திரத்தின் ஆளுமையை அதன் நிறை குறைகளோடு இதனால் உணர
முடிகிறது. எத்தனை கதாபாத்திரங்கள், ஆனால் எங்கு சென்றாலும் முகுந்தன் உருவமாகவும், அருவமாகவும் வெளிப்படும் படிச் செய்திருக்கும் உத்தி அல்லது Craft is adorable.
மார்க்சிய ஈர்ப்பு
இலக்கியத்தை தன்னுடைய அறிதலின் வழியாகக் கொண்ட எவரையுமே தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்வது மார்க்சியம். முகுந்தனும் இதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ந்து தன் சுற்றுப்புறத்தின் போதாமைகளால் அங்கிருந்து வெளித்தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கும் முகுந்தன் இயல்பாகவே அவன் வாழும் மதுரை நிலப்பரப்பில் உள்ள மார்க்சியத் தோழர்கள் பக்கம் சாய்கிறான். தான் பற்றிக் கொள்வதற்கு யாராவது வேண்டும் என்ற தன்னியல்பாக இச்சாய்வு இருந்தாலும், முகுந்தனின் விமர்சனத் தன்மை அத்தோழர்களையும், அவர்கள் சார்ந்த இயக்கங்களையும் (குறிப்பாக மார்க்சிய-லெனினிய ML இயக்கங்கள்) விட்டு வைக்கவில்லை. முதலாளித்துவம் சார்ந்து இயங்கும் பொதுச் சமூகத்திடம் மார்க்சியவாதியாகவும், கம்யூனிச பொன்னுல கனவில் திளைக்கும் ML இயக்கத்தினரிடம் முதலாளித்துவ சீர்திருத்தவாதியாகவும் இந்நாவல் முழதும் முகுந்தன் பயணிக்கிறான்.
முகுந்தனின் இந்த ஊசலாட்டத்தை கிட்டத்தட்ட நிறுத்தி விட முயல்பவராக ஜென்னி வருகிறார். முகுந்தனை அவன் இவன் என்று இங்கு எழுதுவதற்கு எனக்கில்லாத தயக்கம் ஜென்னியை அவள் இவள் என்று எழுத நினைக்கும் போது எழுகிறது. பால் பேதத்திலிருந்து அனைத்து பேதங்களையும் வெற்றுப் பாவனை பூச்சென்று உணர்ந்தவர், மார்க்சிய ஒளியின் துணை கொண்டு. தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க என்பதே நினைவுக்கு வருவதால் ர் விகுதியே ஜென்னி பற்றி எழுதும் போதல்லாம் மனதில் எழுகிறது. முகுந்தனே நெடுங்காலம் ஜென்னியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். முகுந்தன் மேல் உள்ள காதலைவிட ஜென்னிக்கு மார்க்சியத்தின் மேல் உள்ள காதல் பெரியது. உடலெங்கும் புறம் நோக்கியிருக்கும் முகுந்தனின் விமர்சனக் கண்களை அவன் அகம் நோக்கி திருப்பி விடுபவள் மஞ்சள் நைட்டி தாரகை ஜென்னி. இப்படிச் சொல்வதற்குக் கூட ஜென்னி கோபிக்கலாம்.
அத்தனை உயிரோட்டமாக படைக்கப்பட்டிருக்கிறது ஜென்னியின் கதாபாத்திரமும், அவர்களிருவரின் காதலும் காமமும். மார்க்சியத்தைப் பற்றிக் கொண்டதாலேயே தன்னைச் சுற்றி உள்ள அனைத்தையும் கைவிட்டவராகத் தோன்றுகிறார் ஜென்னி. ML அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் இணைவதற்கான முதன்மைத் தகுதி போல இது. அவர் வாழும் வீடு கிட்டத்தட்ட தெருமுனையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டி போல் பேணப்படுவதை முகுந்தன் மிக சிரமப்பட்டே ஜீரணித்துக் கொள்கிறான். வீட்டின் அறைகளெங்கும் குப்பையாய் சிதறடிக்கப் பட்டிருக்கும் ஜென்னி வீட்டாரின் உடைமைகள்; நிறைய வளர்ப்பு விலங்குகள். அவைகளுக்காக சில நாட்களாக சேமிக்கப்பட்ட எழும்புத் துண்டுகள் (ஜென்னி குடும்பத்தாரின் சாப்பாட்டின் மிச்ச மீதிகள்) அடங்கிய சமையலறை என விசித்திர கோலமாய் தோன்றுவதற்கான காரணத்தை ஜென்னியிடம் கேட்கும் தைரியம் முகுந்தனுக்கில்லை. கேட்டிருந்தால், முதலாளித்துவம் இப்படித்தான் தங்கள் குப்பைகளை அள்ளி எளியவர்கள் மேல் விசிறியடிக்கிறது என்றிருக்கலாம். பாட்டாளி வர்க்கம் எப்போதுமே முதலாளிகளின் குப்பைத் தொட்டி தானே என்றிருக்கலாம்.
மார்க்சியத்தின் கொடை
ஆனால், ஜென்னியின் தீவிரம் நம்மை சற்றேனும் அசைத்துப் பார்க்காமலுமில்லை. குறிப்பாக, ML அமைப்புகள் எதிலும் இணையாத போதும், முகுந்தன் மற்றும் தன்னுடைய சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பிக்கும் மார்க்சியப் படிப்புக் குழுவில் ஜென்னி எதிர்பார்க்கும் ஒழுங்கும் இறுக்கமும் ஆசிரமக் கல்வியை ஞாபகப்படுத்துகின்றன. இந்தத் தீவிரமும் ஒழுங்குமின்றி எந்த கற்றலுமே சாத்தியமில்லை. மார்க்சியத்தின் பெருங்கொடைகளில் ஒன்றிது. பாட்டாளிகளை, புரோலட்டேரியன்களாக (அறிவுஜீவிகளாக) மாற்றுவதே மார்க்சிய அரசியலின் அரிச்சுவடி. இந்நாவலின் உபகதைகளில் வரும் பெரும்பாலான தோழர்களை ஈர்ப்பது இந்த கற்றலே எனலாம்.
நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகமாக மாறுவதற்கான காரணங்கள்; ஏன் நிலப்பிரபுத்துவ அடிமைகளை விட, முதலாளித்துவ பாட்டாளிகள் மேம்பட்டவர்கள்; முதலாளித்துவ சமூகத்தை விட மேம்பட்ட சமூகம் எப்படி இருக்கும்; அப்படி ஒன்றை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த மார்க்சிய மனம் அறவுணர்வும் எழுச்சியும் ஒர சேரக் கொள்கிறது. SVR, தன்னுடைய மார்க்சியமும் இருத்தலியமும் என்ற நூலில், முதலாளித்துவ சமூகத்தில் அறம் என்பது திறமையாகவும்; நேர்மை என்பது மதிநுட்பமாகவும்; நன்மை- தீமை என்பது அறிவுக்கு உகந்தது-ஒவ்வாதது எனவும் சுருங்கி (அல்லது மாறி) விட்டது என்கிறார்.
திறமையற்றவர்களிடம், அல்லது திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பில்லாதவர்களிடம் அல்லது தன்னிடம் இருக்கும் திறமைக்கு தகுந்த மதிப்பு கிடைக்கவில்லை என்று உணர்பவர்களிடம் முதலாளித்துவ சமூகத்தை அறமற்ற ஒரு சமூகமாக காணும் போக்கு இயல்பாகவே அமைகிறது. மார்க்சிய அமைப்புகள், இவர்களை எளிதில் சுவீகரித்துக் கொள்கிறது. தங்களுடைய அரசியல் வடிவத்தை செயல்படுத்த முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து அமைப்புகள் மேலும் இவர்களை ஐயம் கொள்ளச் செய்கின்றன; நம்பிக்கை இழக்க வைக்கின்றன. ஜென்னியால், பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி எழுதாத எந்த இலக்கியமும் இலக்கியமல்ல என்று முகுந்தனின் ஒட்டுமொத்த இலக்கிய ரசனையையும் கொச்சைப்படுத்த முடிகிறது. உபகதைகளில் வரும் ML அமைப்புகளில் உள்ள ஒரு தோழியால், ஒரு IPS அதிகாரியை கன்னத்தில் எந்தக் காரணமும் இல்லாமல் பதட்டத்தில் ஓங்கி அறைய முடிகிறது. மார்க்சியத்தால் விளைந்த கொடுமைகளில் ஒன்றிது என மார்க்சியத்தின் உயர் லட்சியத்தையும் அதன் தத்துவங்களையும் எளிதில் இவர்களின் எதிர்தரப்பு கொச்சைப் படுத்தி விடுகிறது. இது மார்க்கியத்தின் குறைபாடா அல்லது அதனுடைய அரசியல் வடிவம் என்னவென்ற உள்முரண்களால் பல்வேறு தரப்புகளாக உடைந்த ML இயக்கங்களின் குறைபாடா? முரணியக்கம் (ஒரு தரப்பு, Thesis + அதன் எதிர் தரப்பு, Anti Thesis = மேம்பட்ட ஒரு தரப்பு, Syntheis) என்ற கருத்தாக்கத்தை முன் வைத்த மார்க்சியர்களால் அவர்களுடைய அமைப்புக்களின், கட்சிகளின் உள் முரண்களை அவதானிக்க முடியாது போனது துரதிருஷ்டம் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
நாவலின் இறுக்கமும் தளர்வும்
இந்நாவலின் உபகதைகளை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. உயர் விழுமியங்களைக் கொண்டத் தோழர்கள் அனைவரின் ஆற்றலும், வாழ்க்கையும் எப்படி பொறுப்பற்ற அமைப்புகளால் வீணடிக்கப் பட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது. மார்க்சியம் மட்டுமல்ல, சிந்தாந்தங்களால் இறுகிய எல்லா அமைப்புகளாலும் உள்ளிழுக்கப் படுபவர்களுக்கு நேரும் அவலமிது.
ஒரு புகைப்படத்திற்காக சிரிக்க முயன்று தோற்று நான் எப்போது கடைசியாய் சிரித்தேன் என்பதை மறந்து போய் அழும் தோழர், வெகு நாட்களுக்கு அப்புறம் தான் அழுவதை உணர்கிறார். எத்தனை இறுக்கமான வாழ்க்கை. அஜிதாவின் மரணத்திற்குப் பிறகு இந்நாவலைப் படிப்பதற்கான ஊக்கத்தை முற்றிலும் இழக்க நேரிட்டது. புரட்சிக்கான தருணம் தானாக அமையும் என்ற ML (மென்சிவிக்) அமைப்பைச் சேர்ந்தவர் அஜிதாவின் தந்தை. இது போன்ற ஒரு தந்தையும், கணவரும், தோழரும், அரசாங்க ஊழியரும் அமைவது எவ்வளவு கொடுப்பினை என்பதை சில பக்கங்களிலேயே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அஜிதா, புரட்சியே உடனடித் தேவை என்ற ML(புதிய உதயம்?) என்ற அமைப்பால் ஈர்க்கப்படுவதை அவர் தடுக்கவில்லை. விளைவு, அவருடைய மரணத்திற்குக் கூட வரமுடியாத தலைமறைவு வாழ்க்கைக்குச் செல்கிறாள். இறுதியில் ஒரு encounterல் கொல்லவும் படுகிறாள். இதையெல்லாம் படிக்கும் பொழுதும், திரும்பி எழுதும் பொழுதும் கண்கள் கசியவே செய்கின்றது. சித்தாந்தங்களும், கருத்தியலும் எவ்வளவு கூர்மையான ஆயுதங்கள். அதைப் பயன்படுத்துபவரிடம் ஓர் உயரிய விழுமியம் இல்லையெனில் அவ்வாயுதத்தால் அழிவு மட்டுமே சாததியம் எனும் போது, சித்தாந்தங்களின் ஓட்டைகள் அதை நம்பியவர்கள் முன் பல்லிளிக்கின்றன. அந்த ஓட்டைகள் முழுதும் இது போன்ற தோழர்களின் நம்பிக்கையால் அடைக்கப்பட்டிருந்தவை.
உபகதைகளில் மார்க்சிய தோழர்களின் சரிவு மட்டுமல்ல, முதலாளிகளின் சரிவு அல்லது அவர்கள் முதலாளி ஆவதற்காக சுரண்டப்பட்ட எளியவர்களின் வாழ்வும் சித்தரிக்கப்படுகின்றன. நாவலாசிரியர் சாம்ராஜின் இந்த உபகதை உத்தி, நாவலாசிரியரை மட்டுமல்ல நம்மையும் சற்று ஆசுவாசப்படுத்துகிறது. சற்று சாம்ராஜ் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், உபகதைகள் Week daysன் அழுத்தத்தையும், முகுந்தன் ஜென்னியின் அத்தியாயங்கள் weekendன் தளர்வையும் நமக்களிக்கின்றன. அஜிதாவின் தந்தை சார்ந்திருந்த ML (மென்ஷ்விக்) அமைப்பை Harmless party என்று Qbranch போலீசார் குறிப்பிட்டதாக வரும் வதந்தியை பிற ML அமைப்பினர் அவர்கள் Harmless party இல்ல…Armless party…முள்ளும் மலரும் ரஜினிகாந்த் மாதிரி அத சிவப்புத் துண்டால் மறைத்திருப்பார்கள் என்பார்கள். இதுபோன்ற நுண்பகடிகளால் நிரம்பி வழிகிறது இந்நாவல். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார நிலப்பகுதிகளை ஒவியம் போல தீட்டியிருக்கும் மொழியும் இந்த நாவலுடன் நம்மை பிணைக்கின்றன.
மேம்படுத்தப்பட்ட முதலாளித்துவம் vs கம்யூனிசம்
உடனடி புரட்சியே தேவை என்பதுதான் ஜென்னியின் நிலைப்பாடும். ஒரு விவாதத்தில் தற்போதைய முதலாளித்துவ சமூகத்தில் இருந்து கொண்டே பாட்டாளிகளின் நிலைமையை உயரவைக்க முயற்சிக்கலாமே என்ற முகுந்தனின் எதார்த்தவாதம் மிக முக்கியமானது என்று எண்ணுகிறேன். நிலப்பிரபுத்துவத்தின் இறுக்கத்தை முதலாளித்துவம் சுவீகரித்துக் கொள்ளவில்லை. சற்று நெகிழ்வுத் தன்மையுடன் தன் வடிவத்தை அல்லது உருவத்தை உள்ளடக்கங்கள் அல்லது உள்முரண்கள் சார்ந்து மாற்றிக் கொள்கிறது. உலகெங்கிலும் உருவாகியிருக்கும் welfare states, minimum labour wage, 8 மணி நேர வேலை நேரம், பங்குச் சந்தைகளின் தோற்றம் போன்றவை மார்க்சியத்தைக தன் கையில் வைத்திருந்த தொழிலாளர் வர்க்கத்தால் முதலாளித்துவ சமூகத்தில் சாதிக்க முடிந்தவை எனலாம். மார்க்ஸின் முரணியக்கத்தை முதலாளிகள் புரிந்து கொண்டது போல் ML அமைப்புகளால் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்று தோன்றுகிறது. இதெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்று இவ்வியக்கங்கள் மார் தட்டலாம். இருக்கலாம். ஆனால், மாற்றங்கள் படிப்படியாக
நிகழ வேண்டும் என்பது தான் மார்க்ஸின் அரசியல் வடிவமாகவும் உள்ளது. SVR அவர்களின் மார்க்சிய கலைச்சொற்கள் மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இதைப்பற்றி சில விளக்கங்களை அளிக்கிறது.
உழைப்புத் திறனின் மதிப்பிற்கேற்ப ஊதியம் வழங்கப்படாததையே முதலாளித்துவச் சுரண்டல் என்கிறார் மார்க்ஸ். உபரியின் விளைநிலமிது. இதனை கம்யூனிச சமூகம் பின்வரும் படிநிலைகள் வழியாக மாற்றியமைக்கும் என்கிறார்.
1. உழைப்புத் திறனின் மதிப்பிற்கேற்ப ஊதியம்
2. தேவைக்கேற்ப ஊதியம்.
முதல் படி என்பது கிட்டத்தட்ட லாபத்தில் பங்கு அல்லது சுரண்டலற்ற சமூக வடிவம். இதனை மார்க்ஸிக்கு பின்வந்தவர்கள் தான் சோஷலிச சமூகம் என்றார்கள். இதைத்தான் வளர்ந்த நாடுகளில் முதலாளித்துவம் சாத்தியப் படுத்தியிருக்கிறது. கம்யூனிச சமூகத்தின் இரண்டாம் நிலை, உழைப்புத் திறனின் மதிப்பு எவ்வளவு இருந்தாலும், உழைப்பவரின் தேவைக்கேற்ப ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட ஏற்றத்தாழ்வுகளை இல்லாமலாக்கும் இந்த நிலை ஒரு பெரும் மானுடக் கனவு எனலாம். சமகாலச் சூழலில் இருந்து கொண்டு இதன் சாத்தியப்பாட்டை கனவிலும் நிகழாத ஒன்றாக; உடைமைகள் தேவையற்ற ஞானிகளும், துறவிகளுமாய் நிறைந்துள்ள சமூகங்களில் மட்டுமே சாத்தியமாகும் ஒன்றாக எண்ணலாம். ஆனால் இது போன்ற கனவுகளே நிலப்பிரபுத்துவத்திலிருந்த அடிமைகளை இல்லாமலாக்கின. முதலாளித்துவத்திலுள்ள பாட்டாளி வர்க்கத்தையும் இல்லாமல் ஆக்கும் என்று நம்ப வைக்கின்றன.
இப்பதிவை எழுதி முடித்தவுடன், அஜிதாவின் மரணம் தந்த கனத்திலிருந்து விலகி, இந்நாவலை அங்கிருந்து தொடர முடிந்தது. முகுந்த், ஜென்னியை இன்னொரு அஜிதாவாக மாறுவதிலிருந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு…