இடமும் காலமும்: மொட்டை மாடியில் காய்ந்திருந்த துணிகள் எங்களுக்காக காத்திருந்தன.
வெயில் தணிந்திருந்த மாலைக் காற்றில் அசைந்தவாறே, மொட்டை மாடியின் சுவர்களை நோக்கி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த கிளிகளை ரசித்துக் கொண்டிருந்தது.
( நாங்களும் அதன் ரசிப்பில் இணைந்து கொண்டோம்.
முகத்தை வருடிய மென்காற்று வெப்பத்தை முழுதுமாக உதிர்த்திருந்தது, எங்களது ரசிப்பை நீண்ட நேரத்திற்கு நீட்டித்தது. )
Me: கிளி மாதிரி சத்தம் கேக்குது…எங்க இருக்குனு தெரியலயே…
My wife: (சுவற்றை நோக்கி ஆடிக் கொண்டிருந்த மரக்கிளைகளை நோக்கி) அந்தா மரப் பச்சையோட பச்சையா உட்காந்திருக்கு பாருங்க…
Me: ஆங்…ரெண்டும் பச்சைனால தெரியல…மரக்கிள சுவத்துப் பக்கமாக சாயுறப்பதான் கிளி ஒய்யாரமா ஊஞ்சலாடுறது தெரியுது…
(தொடர்ந்து அதன் ஊஞ்சலாட்டத்தை கவனித்ததில் மனமும் ஊஞ்சலாட ஆரம்பித்தது)
இந்த கிளிக்கு ஆடுற அந்த மரத்து மேல எவ்வளவு நம்பிக்க பாரேன்…coolஆ பதட்டமே இல்லாம அது மேல உட்காந்திருக்கு…மனுசனுக்குத் தான் இந்த பதட்டமெல்லாம்…
My wife: என்ன பதட்டம்?
Me: நம்மோட செயலுக்கு நாமதான் பொறுப்புங்குற பதட்டம்…தத்துவார்த்தமா சொல்லனும்னா சுதந்திர மனுஷனோட இருத்தலியப் பிரச்சன…
My wife: இதுக்குத்தான் நானே மேல வந்து துணிய எடுத்துக்குறேன்னு சொன்னேன்…முடியல சாமி உங்களோட அரைவேக்காட்டுப் புலம்பல்…
( கொடியில் இருந்து அகற்றிய கிளிப்புகளை கொண்டு வந்த துணிப்பையில் போட ஆரம்பித்தாள். சுதந்திரமாய் பறக்க எத்தனித்த துணிகளை நான் எடுக்க ஆரம்பித்திருந்தேன்)
Me: எத அரவேக்காட்டுத்தனங்குற ?
My wife: நாம தான் எல்லாத்துக்கும் காரணங்குற பாவனய….
Me: எல்லாத்துக்குனு சொல்லல…என்னோட செயலுக்கு மட்டும் தான் சொன்னேன்.
My wife: தன்னோட செயலுக்கு மத்தவங்க தான் காரணம்னு சொல்லாம இருக்குறது is a sign of wisdomல. இதுக்கெதுக்கு பதட்டம்னு புரியல…
Me: ம்ம்ம்…இருந்தாலும் அந்த கிளி மாதிரி தன்னோட சுதந்திரத்த காத்துல ஆடுற மரத்துட்ட ஒப்படக்கிற நம்பிக்க தர்ற சுகம் இருக்கே…ம்ம்ம்…அதெல்லாம் கொடுப்பின தான்…
(கையில் சேர்ந்திருந்த துணிகளின் எடையை comfortன் வாசம் சற்று இல்லாமலாக்கியது)
My wife: இத்தன வேகமா சுத்திகிட்டு இருக்கிற இந்த பூமி மேல எப்படி உங்களால பதட்டமில்லாம நிக்க முடியுது…நாமலும் அந்த கிளி மாதிரி இயற்கய நம்புறதுனால தான…
Me: குழப்பாத…பூமியோட வேகத்த உணர சாத்தியம் உயிரினங்களுக்கு இல்லங்கறது ஒரு அறிவியல் உண்மை…அது நம்பிக்க இல்ல…
My wife: எல்லா அறிவியல் உண்மைகளயும் புரிஞ்சுக்குற சக்தி எல்லார்ட்டயும் இருக்கா என்ன…நமக்கு புரியாத ஒன்ன உண்மைன்னு ஏத்துக்கறது நம்பிக்க இல்லாம வேறென்ன…
நீங்க நெனக்கிற மாதிரி அல்லது இப்ப நீங்க படிச்சிட்டு இருக்கிற சார்த்தர் சொல்ற மாதிரி சுதந்திரங்றது கைவிடப்பட்ட கையறு நிலை கிடையாது. தன்னால புரிந்து கொள்ள முடியாதவற்றை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிக்கிறதோ தான் சுதந்திரமா இருக்க முடியும்.
Me: என்ன உளர்ரேன்னுட்டு நீ தான் இப்ப உளர்ர…கிட்டத்தட்ட அடிப்படைவாதத்தோட வேர் தான் நீ சொல்றது…பூமி சுத்துதுன்னு நான் நம்ப வைக்கப்படல… என்னால conprehend பண்ண முடியலைன்னாலும் அதுதான் அறிவியல் உண்மை.கடவுள் இருக்கார்னு நான் நம்ப வைக்கப்பட்டிருக்கேன். இது நம்பிக்கை. எனக்கு ஒரு comfort கொடுக்குது.
My wife: சார்த்தர் எந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இந்த Comfortஅ உங்கட்ட இருந்து எடுக்குறார்னு யோசிச்சீங்களா…
Me: தெரியல…அவரோட சொந்த அனுபவங்கள் அல்லது அவரோட காலகட்டம்? அல்லது சுதந்திரங்கறது நாம நினைக்கிறமாதிரி carefree கிடையாது. சுதந்திரங்குறது ஒரு பொறுப்பு…தன்னுடைய தேர்வின் அல்லது செயலின் விளைவுகளுக்கு கடவுள் ஒருபோதும் பொறுப்பாக முடியாதுன்னு நமக்கு உணர்த்துறதுக்காக கூட இருக்கலாம்.
(மரமும் கிளியும் இருளில் மறைந்து போயிருந்தது. பதட்டமின்றி ஆடிக்கொண்டிருந்தாய் நான் நம்பிய கிளி, சுதந்திரமாய் அம்மரத்திலிருந்து பறந்தும் போயிருக்கலாம். Comfortன் வாசனையும் குறைய ஆரம்பித்ததால் கையிலிருந்த துணிகளின் எடை Discomfortஐ உண்டு பண்ணியது.)
My wife: ம்ம்ம்…சரி கிளம்பலாம்…
[Inspired from Jean Paul Sartre’s (1905-1980) Chapter on the Book இருத்தலியமும் மார்க்ஸியமும் By S.V. R]