
தனிமனிதன், அனைத்தையும் விட மிக முக்கியமாக கருதப்படுவது, மதத்திலிருந்து விலகி அறிவியல் அடிப்படையில் அமைந்த நவீனயுகத்தில் தான் என்ற பொதுப்புரிதலை சற்று குலைத்திருக்கிறது இருத்தலியத்தின் வேர்களை தேட முயலும் இப்புத்தகம். சமூகத்தின் அடிப்படை அலகு தனிமனிதன் என்று பகுத்திருக்கும் இந்த நவீன யுகம், நான் இச்சமூகத்தின் விளைவல்ல; இச்சமூகம் தான் என்னுடைய விளைவு என்று அத்தனிமனிதனை அறைகூவச் செய்கிறது. பகுத்தறிவுக்கு முந்திய மதக் காலத்திலும், இக்குரல் வலுவாக ஒலித்திருக்கும் என்பதை கீர்கேகார்ட் (Søren Kierkegaard
Danish theologian and philosopher, 1813-1855)
மற்றும் ஹைடெக்கர் (Martin Heidegger
German philosopher, 1889 – 1976)
வழியாக உணரமுடிகிறது. இவ்விருவரையும், இருத்தலியவாதிகளாக இப்புத்தகம் வரையறுக்கிறது. கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு, இவ்வுலகம் புனிதமடைந்து விட்டது; தனிமனிதனை வழிநடத்துவது, அவன் உள்ளொளியான கடவுள் மட்டுமே என்கிறார் கீர்கேகார்ட். இதனை ஹெகலின் (Georg Wilhelm Friedrich Hegel German philosopher, 1770-1831) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உலக ஆன்மா தன் மெய்யுருவை கண்டுகொண்டது கிறிஸ்துவின் வழியாக எனலாம். ஆனால், மனிதகுலம் அல்லது உலக ஆன்மா தன் மெய்யுருவை கிறிஸ்துவிற்குப் பிறகு நிறுவனப்படுத்தப்பட்ட மதம், அரசு என தொடர்ந்து மறுவார்ப்பு எடுத்துக் கொண்டது. இந்த ஒட்டு மொத்த பரிணாமத்தையும் வீண் முயற்சி என்று மறுதலிக்கிறார்கள் கீர்கேகார்ட்டும், ஹெடெக்கரும்.
இருத்தலியத்தின் விதை
கீர்கேகார்ட்டின் ஆன்மீக உணர்விற்கு, மதத்திற்கு பிறகு உருவான அரசு என்ற அமைப்பு மட்டுமே தடையாக இருந்திருக்க முடியாது. கிறிஸ்துவிற்கு பிறகு தோன்றிய நிறுவனப்படுத்தப்பட்ட மத அமைப்புகளும் தடையாக இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. இருத்தலியச் சிக்கல்களின் விதை, அமைப்புகள் அல்லது அதன் அடிப்படையில் அமைந்த சமூகங்கள் தனி மனிதனுக்கு தரும் அழுத்தங்கள் அல்லது கட்டுப்பாடுகள் தான் என்ற புரிதலை நோக்கி ஒருவாறு நகர முடிகிறது. நான், நானாக இருக்க முடியாதது அல்லது தத்துவ மொழியில் சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதன் தன் சுயத்தை உணர முடியாமல் இருப்பதற்கான காரணம் இச்சமூக அமைப்புகள் தான் என்று இருத்தலியத்தை எளிமைப்படுத்தலாம். தனிநபருக்கும், பொதுசமூகத்திற்கும் இடையில் உள்ள முரண் தான் இருத்தலியம் என இதனை இன்னமும் எளிமைப்படுத்தலாம். இன்னமும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஊரோடு ஒத்துப்போனால், வாழ்க்கை இனிமையானது எனலாம்.
அறிவியல் vs ஆன்மீகம் vs இருத்தலியம்
சமூகத்தின் அடிப்படை அலகு இனம், குலம் என்றிருந்த மதங்களுக்கு முந்திய காலங்களில் இந்த இருத்தலியச் சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சமூகத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தன்னை உணர்ந்திருந்த மனிதன் தன்னை மட்டுமே ஒரு பெரும் இருப்பாக உணர்ந்த தருணம் வரமா இல்லை சாபமா என்று தெரியவில்லை. இத்தருணத்தை இறை நம்பிக்கையாளர்கள் கடவுள் அல்லது அவர்களுடைய தூதர்கள் வருகையோடு இணைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பின் நடந்த அனைத்துப் பரிணாம வளர்ச்சிகளும், அந்த இருப்பை உணர முடியாமல் தடை செய்வதாக உள்ளன என்பதாகவே அவதானிக்கிறார்கள். இவர்களை தேங்கியவர்களாக, மாற்றத்தை எதிர் கொள்ள முடியாதவர்களாக நவீன மனம் கருதினாலும், அத்தேங்கியவர்கள் பட்டியலில் பாஸ்கல் (Blaise Pascal
French mathematician and physicist, 1623-1663) போன்ற நவீன அறிவியல் மனம் படைத்தவர்களும் இருப்பதை உணரும் நவீன மனம் சற்று துணுக்குறத்தான் செய்கிறது. டெகார்த்தேவின்( René Descartes
French philosopher and scientist, 1596- 1650) அறிவுக் கொள்கையை, அவலக் கொள்கை என்கிறார் பாஸ்கல். கடவுள் என்ற சாத்தியப்பாட்டை அறிவு சாத்தியப்படாத ஒன்றாக மாற்றி விட்டது என்கிறார். கிட்டத்தட்ட அறிவின் வளர்ச்சியும், விரிவும் கடவுளை எட்டாக்கனியாக்கி விட்டன என்ற இந்த புலம்பலை விட, அறிவின் சரியான பயன் என்பது இந்தப் பிரபஞ்சம் அத்தனை எளிதாக மனிதர்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது அல்ல என்ற வியப்புதான். அறிவு கடவுளின் வருகையை ஒத்திப் போடவில்லை. அவர் பற்றிய ஆச்சரியத்தை பன்மடங்காக்கியுள்ளது. அறிவியலும், ஆன்மீகமும் சந்திக்கும் ஆச்சரியப்புள்ளி இதுவாகத் தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட, இப்புத்தகத்தில் SVR (S.V. ராஜதுரை) அவர்களால் பொருட்படுத்தப்படும் இருத்தலியலாளரான சார்த்தரின் (Jean-Paul Sartre
French philosopher and playwright, 1905-1980)
நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்குமென என் வாசிப்பின் அடிப்படையில் ஊகிக்க முடிகிறது.
தத்துவங்களின் வறட்டுத்தனம்
அனைத்துமே மனம் (அகம்) தான் என்ற கருத்துமுதல்வாத மோசடியை எதிர்கொள்வதற்கு, அனைத்துமே பொருள் (புறம்) தான் என்ற பொருள்முதல்வாத கட்டுக்கதை தேவை என்கிறார் சார்த்தர். ஒரு தத்துவம் அல்லது தரிசனம், அதனுடைய பற்றாளர்களால் குறுக்கப்படும் பொழுது ஏற்படும் வறட்டுத் தன்மையைத் தான் மோசடி, கட்டுக்கதை என்கிறார் சார்த்தர். தனிமனித அகம் மட்டுமே
உள்ளது, சமூகம் என்பது கடவுளிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பயத்தால் உருவான மனிதக்கும்பலை புனிதப்படுத்த முயலும் (society is a polite form of mob) ஒரு சொல் மட்டுமே என்கிறார் ஹைடெக்கர். தனிமனித அகத்தின் சாரத்திற்கு இந்தக் கும்பலால் அல்லது சமூகத்தால் எந்தப் பயனுமில்லை. அதற்கான தேவையும் தனிமனித அகத்திற்கு இல்லை என்கிறார் கீர்கேகார்ட். கடவுளுக்கும், எனக்குமிடையே நீ யார் என ஒட்டுமொத்த சமூக அமைப்புகளையும் புறக்கணிக்கிறது இந்த இருத்தலியச் சிந்தனை. தன் அகம் நோக்கி தன்னை திருப்பிக் கொண்ட இந்த இருத்தலியப் போக்கு, சாதுக்களையும் (Introverts?) அவர்களின் விஸ்வரூபமான சர்வாதிகாரிகளையும் உருவாக்குகிறது என்ற ஊகங்களுக்கும் இட்டுச் செல்கிறது. நாஜி இயக்கத்தோடு தான் தொடர்பில் இருந்ததை ஹைடெக்கர் கடைசிவரை மறைத்திருக்கிறார் என இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. கிட்டத்தட்ட, இந்த சிந்தனைப் போக்கு, வறட்டு கருத்துமுதல்வாதத்தின் விளைவென்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்த வறட்டுத்தனம் களையப்படும் பொழுது, தன் சுயம் பற்றிய இந்த சிந்தனைப் போக்கு தனி மனிதனுக்கு அளிக்கும் ஆசுவாசம் அளப்பரியது. தன் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தின் பாதிப்பில் இருந்து விலகி நின்று அதனை அவதானிப்பது ஒரு படைப்பூக்கம் கொண்ட செயல். கிட்டத்தட்ட இது சமூக மாற்றத்திற்கான விதையும் கூட. இந்த சுயம் தன் மெய்யுருவை அடைவது புறத்தில் அல்லது சமூகத்தில் தான் என்கிறார் ஹெகல். அதாவது தன் சுய தேர்வுகளுக்கு அல்லது ஹைடெக்கர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் அசலான, அர்த்தபூர்வமான வாழ்க்கைக்கு வடிவம் கிடைப்பது புறத்தில் மட்டுமே என்கிறார் ஹெகல். தன் சுய தேர்வுகளுடன் முரண்படும் சமூகத்தை எதிர் கொள்வது மட்டுமே நமக்குள்ள ஒரே எதார்த்தமான வாய்ப்பு. அதுவே தனிமனிதனையும் சமூகத்தையும் மேம்பட்ட அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது தான் ஹெகலின் இயங்கியல்.
சார்த்தரின் இருத்தலியச் சிந்தனை ஹெகலுடன் ஒத்துப் போவதையும் இப்புத்தகத்தின் வழியாக அனுமானிக்க முடிகிறது. கீர்கேகார்ட் மற்றும் ஹைடெக்கரிடம் இருந்த வறட்டுத் தனத்தை மட்டும் சார்த்தர் உதறவில்லை. சில மார்க்சியர்களிடம் இருந்த தனித்த மனித அகம் என்ற ஒன்று இல்லை. அது சமூகத்தின் விளைவு மட்டுமே; சமூகத்தை மாற்றியமைப்பதால், தனிமனிதனையும் மாற்றி விட முடியும் என்ற வறட்டு பொருள்முதல்வாதத்தையும் உதறுகிறார் சார்த்தர். மார்க்சியர்களிடம் இருந்த இந்த வறட்டுத்தனம், தன்னலமற்ற தியாகிகளை உருவாக்கும் அதே சமயத்தில், அவர்களை நிர்வகிக்கும் ஒரு சர்வாதிகார அமைப்பையும் உருவாக்கி விடுகிறது. பொன்னுலக கனவிற்காக ஏன் நிகழ்காலத்தை காவு கொடுக்க வேண்டும்? என்னுடைய நிகழ்காலம் முக்கியமில்லையா எனக் கேட்கும் காம்யூக்களை (Albert Camus
French philosopher and author, 1913-1960) சர்வாதிகாரம் பொறுத்துக் கொள்ளாது.
சார்த்தரின் செயலூக்கம்
சார்த்தர் இந்த இருத்தலியச் சிக்கலை எதிர்கொள்ளும் விதம் கீதையை நினைவு படுத்துகிறது. என்னுடைய அகத் தேர்வு அசலாக இருக்கும் பட்சத்தில், அது புறவயமாக்கப் படவேண்டும். அதாவது, அத்தேர்வு மெய்யுரு கொள்வது புறத்தில் மட்டுமே என்ற ஹெகலிய எதார்த்தத்தோடு ஒத்துப்போகிறார். அகத்தையும் , புறத்தையும் இணைப்பதற்கான ஒரே கருவி நமது செயல் மட்டுமே என்கிறார். அதே சமயத்தில், இந்த மெய்யுரு ஒரு மேம்பட்ட சமுதாயமாகத் தான் இருக்க முடியும் என்ற ஹெகலின் optimism சார்த்தரிடம் இல்லை. செயல் மட்டுமே நம்மிடம் உள்ள கருவி. அதன் விளைவுகளை நாம் அனுமானிக்க முடியாது. அதற்காக செயலை கைவிடவும் முடியாது என்கிறார். சார்த்தர், செயலூக்கம் கொண்ட நவீன மனங்களை ஈர்ப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று எண்ணுகிறேன்.
இந்த அசலான தேர்வு தன் சுயத்தால் மட்டுமே சாத்தியமானதா? அல்லது அத்தேர்வு சமூக அமைப்புகளால் கட்டமைக்கப்பட வில்லை என்பதை எப்படி உறுதி செய்வது? என்ற இருத்தலியக் குழப்பத்தை ஹெடெக்கரும், கீர்கேகார்ட்டும் சமூகம் என்பதை மாயை ( நேதி…நேதி…)என்று உதறுவதன் மூலம் கடக்க முயல்கிறார்கள். சார்த்தர், சமூகத்தை தன் செயல் வழி (செயல் புரிக பார்த்தா…)எதிர்கொள்வதன் மூலம் தன் சுயத்தின் அசலான தேர்வை பரிசோதித்து பார்க்கிறார். கிட்டத்தட்ட தான் சொக்கத் தங்கம்தானா என்று சமூகத்துடன் உரசிப் பார்த்து இந்த இருத்தலியக் குழப்பத்தை கடக்க முயல்கிறார் சார்த்தர். தன்னுடைய சுயம் பற்றிய இந்த அவநம்பிக்கை தான் (அல்லது எதார்த்தம்?) ஹெகலிடம் இருந்த optimism சார்த்தரிடம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நீட்சே பற்றிய ஒரு நீண்ட அத்தியாயமும் இப்புத்தகத்தில் உள்ளது. இப்புத்தகத்தில் வரும் மற்ற இருத்தலியலாளர்களைப் பற்றிய அத்தியாயங்களை கிரகித்துக் கொண்டது போல் நீட்சேவை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய முக்கோண இருத்தலியலாளர்களில், மேலுள்ள உச்சி முனையில் சார்த்தர் பொருந்திப் போகிறார். கீழுள்ள இருமுனைகளில், கீர்கேகார்ட்டும் ஹைடெக்கரும் பொருந்துகிறார்கள். நடுநாயகமாக ஹெகல் பொருந்துகிறார். இம்முக்கோணத்தை, எப்படி சுழற்றினால் தாங்கள் எதிர்பார்க்கும் புரட்சியும், கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பதை ஆராய்பவர்களாக மார்க்சியர்கள் வருகிறார்கள். அதனைப் பற்றி ஒரு தனிப்பதிவு தான் எழுத வேண்டும். இந்தியத் தத்துவ மரபுகளைப் பற்றிய ஒரு கோட்டோவியத்தைக் கொண்டுள்ள மனம், இப்புத்தகத்தில் வரும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் அதனுடன் இணைத்துக் கொள்ள முயலும். இப்படி ஒரு புத்தகம் தமிழில் எழுதப்பட்டிருப்பது, தமிழிலுள்ள அறிவியக்கத்தின் வலிமைக்கு ஒரு சான்று.