நிலமெல்லாம் ரத்தம்

தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். உலகெங்கும் பரவி, தங்களுடைய அறிவாற்றலால் தனக்கென மரியாதைக்குரிய இடத்தை (பிரிட்டிஷ் பிரதமராகவும் ஒரு யூதர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) அடைந்த பின்பும் கூட, எது யூதர்களை அமைதியிழக்கச் செய்திருக்கும் என்பது அவர்களுடைய வரலாறு மற்றும் பண்பாடுகளிலிருந்து விலகி நின்று பார்ப்பவர்களுக்கு எப்போதுமே  புதிர் தான்.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை, யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மதப் பிரச்சினை என மேலோட்டமாக அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அல்லது வலிந்து குறுக்கியிருப்பவர்களுக்கு அல்லது இப்புத்தகத்தின் சிவப்பு நிற அட்டையைப் பார்த்து இது கம்யூனிசப் புத்தகமா என வினவிய ஒரு கட்சியின் ஸ்டார் பேச்சாளருக்கும் ( இரயிலில் சந்தித்த சக பயணி) இப்புத்தகம் நிறைய திறப்புக்களை அளிக்கக் கூடும். ஆப்ரகாமிய மதங்களின் தோற்றுவாயின் தொன்மக் கதையான ஆப்ரகாமிற்கு பிறந்த ஈஷாக் மற்றும் இஸ்மாயிலிருந்து ஆரம்பித்து, யூதர்கள் மேல் மேற்குலகம் கொண்டிருந்த வெறுப்பு;அவர்களின் ஒரு பிரிவினரான பரிசேயச் சாயலில் (ஆன்மா, மறுபிறவி என்ற கொள்கைகளைக் கொண்டவர்கள்) இருந்து தோன்றிய கிறிஸ்துவ மதம்; ஒட்டு மொத்த மேற்குலகமும் கிறிஸ்துவத்தை தழுவிக் கொண்ட பிறகும், அதனிலிருந்து விலகியே இருந்த பெரும்பான்மையான யூதர்கள்; அரேபியர்களின் எழுச்சி; நபிகளுக்குப் பின் வந்த கலிஃபாக்களின் ஆட்சி; யூதர்களின் தனி நாட்டுத் தாகமும் அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட Zionism என்ற கொள்கை; இதன் பொருட்டு யூதர்களால் உருவாக்கப்படும் நில வங்கிகள், பாலஸ்தீனிய அரேபியர்களின் நிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குவது; ஹிட்லரின் யூத ஒழிப்பு; இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டனின் உதவியோடு பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி இஸ்ரேல் என்ற நாடாக உருவாவது; ஒட்டுமொத்த பாலஸ்தீனையும் இஸ்ரேலாக்க முயலும் யூதர்கள்; பாலஸ்தீனைச் சுற்றியுள்ள அரேபிய தேசங்களும் பாலஸ்தீனிய அரேபியர்களை கைவிடுவது; சூயஸ் கால்வாயை மூடிய எகிப்து நாசரின் ராஜதந்திரம்;  மேற்குக் கரையில் யாசர் அராபத்தின் எழுச்சி; காஸாவில் ஹமாஸின் தோற்றம் என மிக விரிவாக இப்பிரச்சினை பற்றிய தன்னுடைய வரலாற்று வாசிப்பை பகிர்ந்திருக்கிறார் பா.ராகவன்.

மிக எளிமையான நடை. தார்மீக நெறி என்ற பெயரில் எழுத்தாளர்கள் எப்பொழுதும் மேற்கொள்ளும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலிருந்தும், பாலஸ்தீனிய அரேபியர்கள் மேல் கொள்ளும் பரிதாப உணர்விலிருந்தும் பா.ராகவனால் விலக முடியவில்லை. ஆனால், அவருடைய விரிவான வரலாற்று வாசிப்பும், அதை அப்படியே பகிர்ந்து கொள்ள எத்தனித்ததும், இந்த பக்கச் சார்பிலிருந்து இப்புத்தகத்தை மீட்டெடுத்திருக்கிறது. பாலஸ்தீன அரேபியர்களின் வலி பேசப்பட்ட தொனியும், யூதர்களின் வலி பேசப்பட்ட தொனியும் தான் வெவ்வேறேயொழிய இருவரின் தரப்பு நியாயங்களையும் இப்புத்தகம் வலுவாக பதிந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

இஸ்ரேல் தன்னுடைய தற்போதைய வலுவான இடத்தை அடைய கொடுத்த உழைப்பை/இழப்பை, எந்த சாதாரண மனிதரும் கொச்சைப் படுத்தி விட முடியும். தார்மீக நெறியின் படி பாலஸ்தீனிய அரேபியர்களின் பக்கம் நின்றாலும், பா.ராகவன் அப்படிச் செய்யாததும் அதே தார்மீக நெறியின் அடிப்படையில் தான் என்றும் எண்ணுகிறேன்.

இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். புனைவு, தத்துவம் போல் வரலாற்றின் மேல் ஒரு ஈர்ப்பு வருவது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இப்புத்தகம் மிகப்பெரிய தகவல் தொகுப்பு. நிறைய உழைப்பிருக்கிறது இப்புத்தகத்தின் பின்னால்.

Leave a comment