தாகூரின் ஜப்பான் பயணம்

கூடையை நிறைத்திருக்கும் ஆரஞ்சு பழங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே இருக்கும் ஆப்பிள்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஆனால், கண்ணை உறுத்தாத ஓர் ஓர்மையும் அழகும் கொண்டவையா என்பது, அந்த கூடையின் நிறம், அது வைக்கப்பட்டிருக்கும் இடம், பார்ப்பவரின் அப்போதைய மனநிலை, அவருடைய இயல்பு என நிறைய காரணிகளைப் பொறுத்துள்ளது. தன்னுடைய ஜப்பானிய பயணத்தை தாகூர் விவரிக்கும் விதம் அலாதியானது. கடலைகளின் நிலையாமையையும், அதில் கலக்கும் நதிகளின் நெகிழ்வையும், நிலத்தின் இறுக்கத்தையும் கொண்டிருக்கிறது. காற்றும், வானமும் தொடர்ந்து முயங்குகின்றன. இவ்விவரணைகள் அனைத்தையும் தனது மொழிக்குள் சிறைப்படுத்த முயலும் தாகூரின் பிரயத்தனத்தை, நமக்கு கடத்த முயலும் த.நா. குமாரசாமியின் அபாரமான மொழிபெயர்ப்பு தாகூரின் அழகியலையும், நுட்பமான ரசனையையும், உபநிசத்துக்கள் மேல் அவருக்குள்ள பற்றையும் நம்மை உணர வைக்கிறது.

சீனர்களின் உடலுழைப்பு

வன்மையும் வனப்பும் கொண்டதாக சீனர்களின் வெற்றுடலை வர்ணிக்கிறார் தாகூர். ஜப்பானை நோக்கிய கடல் பயணத்தின் நடுவே ஹாங்காங் துறைமுகத்தில் கண்ட சீனர்களின் உழைப்பில் மயங்கிப் போகிறார். அங்குள்ள பொருட்களை அவர்கள் கையாண்ட விதம், அவர்களின் உடம்பை வீணையாகவும், தசை நார்களின் அசைவை, அவ்வீணையில் இருந்தெழும் தாள இசையாகவும் தாகூரை பார்க்கவும், கேட்கவும் வைக்கிறது. இயல்பான ஊக்கத்துடன், முழுத்திறனுடனும் செய்யப்படும் எச்செயலும் பொலிவு கொள்கிறது என்கிறார். அப்பொலிவை இசைத்தன்மை கொண்ட காவிய நாடகமாக தாகூரால் வர்ணிக்க முடிகிறது. 


தொழில் புனையும் ஒரு விசித்திர காவியமும், மனித உடல் மீட்டும் ஓர் இனிய நாதமும் என்னைப் பிரமிக்கச் செய்தன


என்ற வரிகள் தாகூரின் கண்கள் ஒரு புகைப்படக் கருவியல்ல என்பதையும், படைப்பூக்கம் கொண்ட இம்மொழிபெயர்ப்பு உணர்த்துகிறது.

தொல்லையும் பந்தமும்

பயணத்தின் நடுவில் இயற்கைப் பேரிடர் ஒன்றையும் எதிர் கொள்கிறார். கேபினில் பாதுகாப்பாக இருப்பதை தவிர்த்து கப்பலின் டெக் பகுதிக்கு வந்து புயலையும், இடியையும், மின்னலையும் எதிர் கொள்கிறார். முடியாமல் மீண்டும் தன்னுடைய பாதுகாப்பான கேபினுக்கே திரும்புகிறார். அங்கும் பாதுகாப்பின்மையத் தான் உணர்கிறது கவிமனம். டெக்கில் இருப்பது பருக்கைக் (pebble) கற்களின் மீது வெறும் பாதங்களால் நடப்பதென்றால், கேபினில் இருப்பது பாதரட்சைக்குள் பருக்கைக் கற்களை கொண்டு நடப்பது என்கிறார். முந்தையதில் தொல்லை மட்டுமே உண்டு. பிந்தையதில் தொல்லையோடு பந்தமும் உண்டு என்ற தாகூரின் அவதானிப்பு நம்மை அந்த பேரிடலிருந்து விலக்கி இலகுவாக்கி புன்னகைக்க வைக்கிறது.

பேரிடர் முடிந்த அடுத்த நாள் காலையில், கடல் மட்டுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முந்திய நாளிரவு அக்கடலை ஆட்டிப்படைத்த காற்றும், மழையும், மின்னலும்  இப்போதில்லை என்றாலும், அந்த கொந்தளிப்பிற்கான காரணம், என்னை எப்படி எல்லாம் துன்புறுத்தி விட்டாய் என்ற சாகரின் (கடலின்) ஆக்ரோசம் என்கிறார். துன்பம் நடக்கும் போது நாம் அதிலிருந்து வெளி வருவதற்கான ஆற்றலை ஒரு நிரந்தரப் பொருளிலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நமது கவலை எல்லாம் அந்த துன்பத்தைக் கடந்த பின்புதான்.

புயல் கவிந்த ஆகாயத்திற்கு மேல் அமைதி திகழ்கிறது. குழம்பிடும் கடலுக்கு அடியில் சாந்தி நிலவுகிறது. ஆகாயமும் கடலும் இந்த அரிய பண்பினால் உயர்வடைவதுபோல் மனித ஆழத்தின் உள்ளத்திலும் அவன் உணர்வின் உச்சத்திலும் அகாண்டாகாரமான சாந்த புருடன் ஒருவன் வாசம் செய்கிறான். துன்பமோ இடுக்கனோ நம்மை தாக்கும்போது இவன் நமக்கு அமோக பலத்தைத் தருகிறான்.துன்பம் மாயமாய் மறைகிறது.



ஆசுவாசத்தைத் தரும் மாயச்சொற்களிவை.

அழகியலும் வளர்ச்சியும்

இந்தியா விவசாயத்திலிருந்து தொழிற்புரட்சிக்கு மாறிக்கொண்டிருந்த காலத்தில் தான் தாகூர் இப்பயணத்தை மேற்கொள்கிறார். வணிகத்தின் பெயரில் புது நகரங்கள் உருவாவதையும், அதன் பொருட்டான இயற்கைச் சீரழிவையும் ஒவ்வாமையுடனே கடந்து செல்கிறார். அவருடைய அழகியல் சட்டத்தில் ரங்கூனின் பர்மிய நகரம் ரங்கூனுடையதல்ல. எங்கிருந்தோ புடுங்கியெடுத்து நட்ட மரம் போல் உள்ளது என்கிறார். அங்கே பர்மியர்களும் இருக்கிறார்கள், அதனால் பர்மா என்றழைக்கப் படுகிறது என்கிறார்.  இது போன்ற பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் திகழ்வதால் வரும் குறைகளை ஆரோக்கிய நிகேதன் நாவலில் வரும் ஆயுர் வேத மருத்துவரான ஜீவன் மஷாய் வழியாகவும் நம்மால் உணரமுடியும். ஆயுர்வேதம் பெரும்பாலும் அனுமானங்களை நம்பியிருக்கும் மருத்துவத் துறை. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் தான் ஈடுபட்டிருப்பார்கள் எனபதால் அந்நிலப்பரப்பிலிருந்து வருபவர்களுடைய நோய்களுக்கான காரணங்களை ஆயுர்வேதத்தால் எளிதில் அனுமானிக்க முடிந்தது. வளர்ச்சியின் பொருட்டு அந்நகரத்தின் இயல்பும், மக்களும், அவர்கள் தொழிலும் மாறும்போது ஆயுர்வேதத்தின் அனுமானங்கள் திணறுகின்றன. தாகூரின் கவலையோ, வளர்ச்சியினால் ஏற்படும் அழகியலின்மையிலும், இயற்கைச் சீரழிவிலும் நிலை கொள்கிறது.  ஆரஞ்சு கூடையில் ஆப்பிள் இருப்பதை விபத்தாகத் தான் பார்க்கிறார்.

வணிகமும் அழகியலும் ஒத்திருந்ததால் தான் லட்சுமி
செல்வத்தின் தெய்வமாக இருந்தாள். வணிகம் அந்தந்த தரப்பினரிடம் அல்லது குலங்களிடம் இருந்த வரை லட்சுமி அன்னபூரணியாகத்தான் இருந்தாள் என்கிறார். வளர்ச்சியின் பேரில் அந்த அன்னபூரணியை அகோர காளியாக்கி விட்டோம் என்கிறார்.  இது தாகூரை ஒரு தூய்மைவாதியாக நம்முள் நிலை நிறுத்தலாம். ஆனால், வளர்ச்சியின் பயன்களை அவர் நிராகரிக்கவில்லை. அது அழகியலைத் தொலைத்துத் தான் பெறப்படவேண்டுமா என்கிறார். Aesthetics is a very subjective thing என்று தாகூரை நவீன மனம் நிராகரிக்கக் கூடும். ஆனால் தாகூர் விடுவதாயில்லை…



கவி கீட்சு சொல்கிறார்…’உண்மைப் பொருளே அழகிய பொருள்’ என்று. பந்தத்தை மீறிய உண்மையின் நிறைவான வடிவமே முருகு. உபநிடத வாக்கிலும் இந்த உண்மை வெளியாகிறது. ‘அனந்த ருபம் அம்ருதம் யத்விபாதி’ . எங்கும் நிறைபொருள் உருக்கொள்ளும் போது அதனுடன்  அழியா அமுதத் சுவையும் இன்பப் பொலிவும் தோன்றுகின்றன. மனிதன், அச்சத்தாலும், ஆற்றாமையினாலும், பொறாமையினாலும், அறிவின்மையினாலும், குறுகிய நோக்கத்தாலும் இந்திறைவின் மலர்ச்சியை நசுக்கி விடுகிறான்; அழகை நாசம் செய்யும் தன்கைத் திறமையைப் பெரிதாக மெச்சிப் பெருமிதம் கொள்கிறான்.

தொடர்ந்து ஜப்பானியர்களின் இல்லங்களில் உள்ள நிறைந்த அழகைச் சூடிக்கொண்ட சிறு பொருட்கள் பற்றியும், அவர்களின் ஓவியங்கள் பற்றியும், கவிதைகள் பற்றியும் மிக விரிவாகப் பேசியிருக்கிறது இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள்.

Leave a comment