சுதந்திரமும் அரசாங்கமும்

சில புத்தகங்கள், திடீரென இதுவரையிலான வாசிப்பை, அதன் வழி அடைந்த சில புரிதல்களை உடனடியாக தொகுத்து கொள்ள வேண்டிய அவசியத்தை அல்லது நிர்பந்தத்தை ஏற்படுத்தும். எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் பொருளியல் என்பது அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறைகள் போல நவீன யுகத்தின் கண்டுபிடிப்பு என்ற பொதுப்புரிதலை இல்லாமலாக்குகிறது. வரவு செலவுகளை துல்லியமாக கணக்கிட உதவும் Double entry book keeping system (வரவும் செலவும் should net to zero என்ற Accountingன் பாலபாடம்)  நவீன யுகத்திற்கு முன்பே (கி.பி.1494) கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒரு துறையைச் சேர்ந்தவர்களுக்கு, இதர துறைகளின் இது போன்ற அடிப்படையான விஷயங்களின் தொடக்கம் பற்றி தெரிய வரும் போது நவீனயுகத்தின் மேல் ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் தேவையற்ற சுமைகளை (போலி பிம்பங்களை)  இறக்கி வைத்து விட முடிகிறது.  நவீனமும், நாமும் சற்று இளைப்பாற முடிகிறது. அறிவியல், தத்துவம் என அனைத்தின் தொடக்கப் புள்ளிகளுமே நவீனயுகத்திற்கு முந்தைய முழுமையில் பொதிந்துள்ளன. இதன் அடிப்படையில், இப்புத்தகத்தின் சில பக்கங்களின் (ஆடம் ஸ்மித் மற்றும் அவருக்கு முந்திய பொருளாதார சமூகங்கள் பற்றியவை) துணைகொண்டு என்னுடையை சில புரிதல்களை இங்கு தொகுத்துக் கொள்கிறேன்.

வேலைப்பகிர்வு

ஒரு ஊசியை தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் (அதனை விற்பது அல்லது பண்டமாற்றுவது வரை) ஒருவரே அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவோ சமூகமோ மட்டுமே செய்யும் பொழுது உற்பத்தியில் பெருக்கம் இருப்பதில்லை. எதற்காக பெருக வேண்டும் என்றால், உற்பத்தியின் பெருக்கம் நாட்டின் செல்வப் பெருக்கோடு நேரடித் தொடர்புடையது என்கிறார் ஆடம் ஸ்மித். இந்தப் பெருக்கம் வேலைப் பகிர்வினால் மட்டுமே சாத்தியம் என்றார். முதலாளித்துவத்தின் அடிப்படையான வேலைப்பகிர்வு, பெரும்பாலும் வேலைப் பரவலாக்கத்திற்கு இட்டுச் சென்றது எனலாம். இது இயல்பாக அவ்வேலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே உரியது என்ற சமூக ஏற்பாட்டை மெல்ல மெல்ல காலாவதியாக்கியது. வணிகத்தின் அழகியல் இதனால் குலைந்து போனது என்று தாகூர் தன்னுடைய பயணக் குறிப்பொன்றில் கவலைப்பட்டிருக்கிறார். வணிகம், முதலாளிகளின் கைக்குச் சென்றதை லட்சுமி, அகோர காளியாக மாறிவிட்டதாக உருவகிக்கிறார்.

செல்வப்பகிர்வு

இந்த வேலைப் பகிர்வு என்பது பிளேட்டோ விலிருந்தே அல்லது அதற்கு முன்பிருந்தே வரும் ஒரு கருத்தாக்கம் தான். ஒரு சமூகம் வெற்றிகரமாக அல்லது குறைவான சிக்கல்களுடன் இயங்க வேலைப்பகிர்வு அவசியமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட இங்கிருந்த வர்ணாசிரமக் கொள்கையும் இதன் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான். ஆனால், ஏன் இந்த சமூகங்களால் தொடர்ந்து முரண்கள் ஏதுமின்றி ஒரு நிறைவான அல்லது மோன நிலையில் இருக்க முடிவதில்லை என்பதற்கு முக்கிய காரணமாக, வேலைப் பகிர்வின் மூலம் கிடைக்கும் மிகையான அல்லது குறைவான உற்பத்தியை (செல்வம்) பகிர்வதில் இருக்கும் குளறுபடிகளைச் சுட்டிக் காட்ட முடியும். வேலைப் பரவலாக்கத்தின் வழியாக இந்த குளறுபடிகள் சற்றேனும் குறைக்கப்பட்டன. இது முதலாளிகளின் சுய நலத்தால் விளையும் பொதுநலன்களின் ஒன்று எனத்தான் ஆடம் ஸ்மித் குறிப்பிடுகிறார். முதலாளித்துவம் பொதுநலத்தை தன்னுடய குறிக்கோளாக கொள்வதில்லை அல்லது அதற்கான அவசியம் அதற்கில்லை என்பது ஆடம் ஸ்மித்தின் நிலைப்பாடு. முதலாளித்துவம், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்படாத போதே சுபிட்சத்தை உருவாக்கும் என்கிறார். ஏனென்றால், எதற்காக அதனை கட்டுப்படுத்துகிறோம் என்ற தெளிவு அரசாங்கங்களுக்கு இருப்பதில்லை என்கிறார். இது முதலாளித்துவத்தின் ஆரம்பகட்ட காலங்களில் இருந்த அரசாங்கங்களுக்குப் பொருந்தக் கூடும்.

செல்வப் பகிர்வு என்ற செயல்பாடு இன்னமும் (இந்த நவீன காலத்திலும்) அத்தனை எளிதான அல்லது சுமூகமான ஒன்றாக இல்லை. இந்தக் குளறுபடிகளை சரிகட்ட அல்லது இதில் குளறுபடிகள் ஏதுமில்லை என்பதை நிறுவத்தான் வேலைப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த சமூகங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்புகள் தோன்றின என்ற புரிதலுக்கு வந்து சேர முடிகிறது.

மதம்

முந்தைய பத்திகளுக்கான அவசியம், பொருளியல் என்பது முதலாளித்துவ யுகத்தின் கண்டுபிடிப்பு இல்லை என்பதை உணர்ந்து கொள்வதற்காகவும் தான். பண்டைய சமூகங்களின் அல்லது முதலாளித்துவத்திற்கு முந்திய சமூகங்களின் நிர்வாக அமைப்புக்களை மதங்கள் வழி நடத்தின என்றவுடன் நமக்குக் கிடைக்கும் சித்திரம் அது பொருளியல், அறிவியல், தத்துவம் என்ற அறிவுகள் ஏதுமற்று இருந்தது என்பது தான். இது மதங்களின் இன்றைய உள்ளீடற்ற சித்திரம். மக்களை நல்வழிப்படுத்திய அன்றைய மதம், நவீனத்தில் ஒரு ஆற்றுப்படுத்தும் நிறுவனமாக சுருங்கி விட்டது. ஆனால், எந்தவொரு சமூகத்தையுமே முழுவதுமாக நம்பிக்கை அல்லது rational ஐ மட்டுமே வைத்துக் கொண்டு நிர்வகித்து விடமுடியாது. Empiricism must be there in some degree. பண்டைய சமூகங்கள் பற்றிய சித்திரம், அவை பொருளியல், அறிவியல், தத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான ஒன்றால் இயக்கப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகிறது. இவையனைத்தும் மதத்தின் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன. அதனால் கட்டுப்படுத்தவும் பட்டன.

முழுமையும் சுதந்திரமும்

ஆனால், செல்வப் பகிர்வின் குழறுபடிகள் அல்லது போதாமைகள் பொருளியலை மதத்தின் நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து தனித்துறையாக்கியது எனலாம். அறிவியல் மற்றும் பிற துறைகளுக்கும் இதுவே நடந்திருக்க முடியும். இது தனிமனிதனை அடிப்படை அலகாகக் கொண்ட சமூகங்களின் தொடக்கம் அல்லது நவீன யுகத்தின் தொடக்கம் என வரையறுக்கப்படுகிறது. முழுமை என்பது அத்தனை சுதந்திரமான ஒன்றாக அல்லது productive ஆக இல்லை என்பதைத்தான் இந்த மாற்றம் உணர்த்துகிறது. நவீனயுகம் அனைவரையும் சுதந்திரமானவர்களாக அல்லது productive ஆக மாற்றி விட்டதா என்பதும் கேள்விக்குறி தான்.

உடம்பின் ஒவ்வொரு பாகங்களும் சுதந்திரமாக இயங்கக்கூடியவையாக இருந்தாலும், அவை உடம்பெனும் முழுமையால் கட்டுப்படுத்தப் படுகின்றன அல்லது பாதுகாக்கப் படுகின்றன. சுதந்திரம் என்பது நம் எல்லைகளை அறிந்து கொள்வதும்,  தன்னை முழுமையின் ஒரு அங்கமாக உணர்வதும் தான் என்று எண்ணுகிறேன். அறிவை பொருளியல், அறிவியல், தத்துவம் என பகுத்துக் கொள்வது அந்த எல்லைகளை அறிந்து கொள்ள உதவும் பகுத்தறிவு என்றால், இவைகளுக்கிடையேயுள்ள தொடர்பை உணர்ந்து தொகுத்துக் கொள்வதை ஒரு முழுமையறிவு என்று உருவகிக்கலாம். எந்த சமூக அமைப்பிலும், அதன் அரசாங்கங்களை வழிநடத்துவது இந்த தொகுப்பு அல்லது முழுமையறிவாகவே இருந்துள்ளது. அரசாங்கமே இந்த தொகுப்பின் ஒரு விழைவு தான் என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த முழுமை எப்போதும் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அதுவே, எதனையும் வழிநடத்தி செல்லும் தகுதியுடையது. முதலாளித்துவத்தை முழு சுதந்திரமாக இயங்க விடுங்கள்; அறிவியலை முழு சுதந்திரமாக இயங்க விடுங்கள்; அவை சமூகத்தை சுதந்திரமான ஒன்றாக்கும் என்பது, முதலாளித்துவத்தின் மேலும், அறிவியலின் மேலும் அது போன்ற பிற அறிவமைப்புகளின் மேலும் சுமத்தப்படும் சுமையே.

இது தனிமனிதர்களுக்கும் பொருந்தும். தனிமனிதர்கள் தங்களின் எல்லைகளை அல்லது சாத்தியப்பாடுகளை அடைவதற்கான தடையாக அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன (சில சமயங்களில்) என்பது எவ்வளவு நிதர்சனமோ, அவ்வளவு நிசர்சனம் தனிமனித சுதந்திரம் மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தையும் சுதந்திரமான ஒன்றாக மாற்றிவிடாது என்பதும்.

Leave a comment