
இசையும், சிகரெட்டும் இந்த நாவல் முழுதும் கிரங்கிக் கிடக்கிறது. ஒன்று காற்றுடன் இயைந்து ஒலியாகிறது; மற்றொன்று காற்றுடன் புகைவிட்டு விளையாடுகிறது. புகைப்பதற்கும், இசைப்பதற்கும் ஏதோ ஒரு ஒற்றுமை அல்லது ஒவ்வாமை இருப்பதை உள்ளூர உணரமுடிகிறது. இன்னதுதான் என்று வரையறுக்க முடியவில்லை. ஜோத்ஸ்னாவையும், கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இவ்விரண்டும் தான். இவர்களிருவருக்குமிடையை நடக்கும் உரையாடலாக விரியும் இந்த நாவல் இருவருக்கும் இந்துஸ்தானி இசையின் மேல் இருக்கும் பற்றையும், ரசனையையும், மேதமையையும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறது. ஆனால், கிருஷ்ணனிடம் இருக்கும் இலக்கிய ரசனையும், மொழியும் இந்த முயற்சியை ஒரு நாவலாக்கியிருக்கிறது. ஜோத்ஸ்னாவின் தொகுப்புத் தன்மையும், அதனை கற்பனைவளத்தோடு கிருஷ்ணனிடம் விவரிக்கும் தன்மையும் கூட இதற்கு ஒரு காரணம்.
கிருஷ்ணன், இந்நாவல் ஆசிரியரான யுவன் சந்திரசேகரின் ஒரு alter ego அல்லது அவரேதான் என்பது யுவனின் படைப்புகளுடன் சிறு பரிட்சயம் இருப்பவர்களுக்கும் தெரியும். ஜோத்ஸ்னா தான் சந்தித்த இசைக் கலைஞர்களைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம், such a great communicator, she is என்று நமக்குள் எழும் உணர்வுகளை எப்படியோ யுவன் கண்டுகொள்கிறார். பக்கங்களின் அடிக் குறிப்புகள் வழியாக அந்த விவரிப்புகள் ஜோஸ்த்னாவுடைய கற்பனையாகவோ அல்லது ஏன் என்னுடைய கற்பனையாகவோக் கூட இருக்கலாம் என்ற தன்னிலை விளக்கம் ஒரு இடையூறாக இருந்தாலும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. அடிக்குறிப்புகளின் வழியாக, வாசகனுடன் உரையாட முயலும் ஆசிரியரின் உத்தி எனக்கு புதுமையாகத் தோன்றியது. இந்நாவல் விவரிக்கும் இசைக்கலைஞர்கள் எவருமே புனைவுப் பாத்திரங்கள் அல்ல. மேலும் அனைவருமே பெண்கள். எனவே, இந்த அடிக்குறிப்புக்களில் இருக்கும் எச்சரிக்கையுணர்வையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆவணமாக மட்டுமோ அல்லது புனைவாக மட்டுமோ படிக்க முயல்பவர்களை, அவ்வப்போது இந்த அடிக்குறிப்புகள் மடை மாற்றி விடுகின்றன.
இந்துஸ்தானி அல்லது ஏதோ ஒரு இசையில் நல்ல பரிட்சயமும், ரசனையும் கொண்டவர்களுக்கு இந்நாவல் will be a treat indeed. மற்றவர்களுக்கு, பெண் இசைக் கலைஞர்களின் வாழ்வு பற்றிய ஒரு சித்திரம் தரும் ஆச்சரியமும், அயர்ச்சியும் ஒரு சேர கிடைக்கலாம். இசையும், கணவனும் (குடும்பம்) இரு காதல்களாகவே இப்பெண்களால் பாவிக்கப்படுகின்றன. ஆனால், சமூகம் ஏதாவது ஒன்றை மட்டும் தான் அவர்களுக்கு நிர்பந்திக்கிறது. இது இயல்பாகவே, இக்கலைஞர்களை இசையோடு ஒதுங்க வைத்து விடுகிறது. அவர்களுடைய இசை, இழந்த குடும்ப வாழ்வின் வெற்றிடத்தையும் நிரப்பிக் கொள்கிறது.
யுவனால், இந்நாவலின் முன்னுரையையும், பின்னுரையையும் நாவலின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ளமுடிகிறது. குறிப்பாக ஜோத்ஸ்னா பற்றிய அந்த பின்னுரையில், அதுவரை பக்கங்களின் அடிக்குறிப்பின் வழியாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட யுவனால் இந்த பின்னுரையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சற்றே சுதந்திரமாக இயங்க முடிகிறது. எதற்கு இத்தனை நீண்ட பின்னுரை என்பதற்கு அடிக்குறிப்பின் வழியாக இந்நாவலின் ஆலாபனை இது என்று புன்னகைக்கிறார். ஒரு ராகத்தின் ஆரம்பத்தை விளம்பிதம் அல்லது ஆலாபனை என்பார்கள் என்ற அறிதல் இப்புத்தகத்தின் வழியாகத் தான் கிடைத்தது. அதுமட்டுமின்றி, இந்நாவலில் உள்ள இசைக் கலைச்சொற்களை தேடியதில் இசையின் சில அடிப்படைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. ஸ்வரத்தில் தொடங்கி, அதன் ஸ்தானங்கள், கமகங்கள் அல்லது அலங்காரங்கள் (embellishment) , அது உருவாக்கும் ராகங்கள் என நீண்டு சென்றது என்னுடைய கற்றல். Googleன் வழியாக இப்புத்தகத்தையும்

voxguru என்ற you tube தளத்தையும் கண்டடைய முடிந்தது. https://youtu.be/HvNWo4V49_0?si=xFkI_YWKI3PDVnMo
இப்பின்னுரையைப் படிப்பதற்கு முன்பு எழுத ஆரம்பித்த இப்பதிவின் ஆரம்பத்தில், ஜோத்ஸ்னாவையும் கிருஷ்ணனையும் பிணைத்திருப்பது இசையும், புகையும் என்றிருந்தேன். ஆனால் இந்த பின்னுரை அவர்களிருவருடைய நட்பின் வேறு சில பரிணாமங்களைச் சுட்டிக் காண்பிக்கிறது. அதுமட்டுமல்ல, இவர்களிருவரும் இசை ரசிகர்கள் மட்டுமல்ல; மானசீகமாக அதனை நிகழ்த்திக் கொள்ளும் கலைஞர்களும் கூட. இசைக் கலைஞனும், ரசிகனும் சந்திக்கும் தளத்தில் இருப்பவர்கள் இவர்களிருவரும். இசையைத் துய்ப்பவர்கள் நாங்களிருவரும் என்கிறார் யுவன்.
யுவன் சொல்வது போல் இப்பின்னுரை இந்நாவலின் நீண்ட ஆலாபனை அல்லது வலுவான அடித்தளம் தான். இந்நாவலின் மத்யமும், துரிதமும் எங்கிருந்து முளைத்தெழுந்தன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.
