சத்தியமும் வன்முறையும்

காந்தியினுடைய Holy Trinity என அவருடைய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை என்ற மூன்று புத்தகங்களையும் குறிப்பிடுவார்கள். காந்திய ஆர்வலரும், காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், தன்னுடைய நாளைய காந்தி என்ற புத்தகத்தில் இம்மூன்று புத்தகங்களைப் பற்றிய ஒரு கச்சிதமான குறிப்பைத் தந்திருப்பார். இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறார். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு போர்ப்படைத் தளபதியினுடையது. சத்யசோதனை ஒரு ஆன்ம சாதகன் தன்னுடைய பயணத்தை ஆசானாக நின்று தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது. அபாரமான உருவகமிது.

அதே புத்தகத்தின் முன்னுரையில், காந்தியை நான் ஒரு பண்டமாக மாற்றி வருகிறேனோ? என்று தன் மேல் எரிச்சல் கொள்ளும் ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார். மேலும் சுயராஜ்யம் மற்றும் சத்தியாகிரகம் போல் சத்தியசோதனை சுவராஸ்யமான ஒன்று அல்ல என்பதால், தன்னுடைய அலமாரியில் நேரம் கிடைக்கும்போது மட்டும் வாசிக்கப்படும் புத்தகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்தான், சத்தியசோதனுடைய ஆய்வுப்பதிப்பை (1000 பக்கங்கள் கொண்டது) தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பது அவருடைய எரிச்சலுணர்வுக்கும், சோம்பலுக்குமான வடிகால் தானோ என்று ஒரு புன்முறுவலுடன் எண்ணிக் கொள்ளமுடிகிறது.

காந்தி, சத்தியத்தை நோக்கிய தன்னுடைய பாதையில் இருந்த சிரமங்களை தொகுத்து எழுதிப் பார்ப்பதன் வழியாக, தனக்குள்ளிருக்கும் தடைகளை தனக்கே துலக்கிக் காட்டியிருக்கிறார். காந்தியால், குஜராத்தியில் எழுதப்பட்ட இவ்வனுபவங்களை ஒரு ஆய்வுப் பதிப்பாக திரிதீப் சுஹ்ருத் கொண்டு வந்திருக்கிறார். அதனை ஆங்கிலத்தில், மகாதேவ் தேசாய் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கு சுனில் மொழிபெயர்த்திருக்கிறார். இம்மூவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது.

சத்தியமும் வன்முறையும்

இப்புத்தக ஆசிரியர் திரிதீப் சுஹ்ருத் அவர்களின் அறிமுகக் குறிப்பு காந்தியை அவர் அணுகிய விதத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. காந்தியின் அஹிம்சைவாதத்தை பற்றிய குறிப்பு, காந்தியை மென்மையானவர் என மேலோட்டமாக அறிந்திருப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.

நாம் அறிவதனைத்தும் (சித்) சத்தியத்தின் (சத்) பிரதிபலிப்பையே. அந்த முழுமையான சத்தியத்தை அழியக் கூடிய இந்த உடலில் இருந்து கொண்டு ஒரு போதும் நம்மால் அறிந்து விட முடியாது என்ற காந்தியின் நம்பிக்கையே அவரை அஹிம்சையை நோக்கித் தள்ளியது என்கிறார்.

வன்முறை, நம் சுயத்தையும் அதனுடன் பிணைந்திருக்கும் சத்தியத்தையும் உணர்வதில் இருந்து நம்மை வெகுவாக விலக்கி வைத்துவிடும் என்கிறார். மனித உடலின் மேல் ஏற்படும் ஒரு பரிதாப உணர்வு அல்லது கரிசனம் என்றும் இதை நம்மால் உணர முடிகிறது. தன் சுயத்தையும், சத்தியத்தையும் உணர்வதிலிருந்து விலகியிருக்கும் சமூகத்தில் சத்யாகிரகமும், அதனால் விளையும் சுயராஜ்யமும் சாத்தியமில்லை என்ற ஆழமான நம்பிக்கையே, சாமானியர்களால் கோழைகளின் ஆயுதம் எனக் பரிகசிக்கப்படும் அஹிம்சையை காந்தியின் ஆயுதமாக்கியது.

வாழ்நாள் முழுவதும் கூடவே வரப்போகும் ஒரு புத்தகமிது. தமிழில் இதனை மொழிபெயர்த்திற்கும் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

Leave a comment