Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு

கண்ணணும். கௌரி சங்கரும் கையில் இரவுணவிற்கான அனுமதிச் சீட்டோடு வீட்டிற்கு வந்தது, ஒரு இனிய திகைப்பாய் இருந்தது. அவர்களிடமிருந்த ஒரு கனிவும், கூச்சமும் கூட இத்திகைப்பிற்கான காரணமாய் இருக்கலாம். புதிதாய் குடி புகுந்திருந்த இடத்தின் புதுவருடக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பவர்கள் இருவரும். தன்னார்வலர்களால் செய்யப்படும் காரியங்கள் எப்போதுமே ஒரு உன்னதத்தை தொட முயற்சிப்பவை. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்து இச்சீட்டை கொடுக்க வேண்டும் என்பது அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான். My entire family is completely floored by this move. “நாலு டிக்கெட் வாங்குனா, ஒண்ணு freeன்னு ராகேஷ் சொன்னாரேன்னு…” அவர்களை இலகுவாக்கினேன். Bonito, கொஞ்சம் கொஞ்சமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தன்னை உருமாற்றிக் கொள்ள ஆரம்பித்ததை ஒரு எதிர்பார்ப்புடன் ரசிக்க ஆரம்பித்தோம்.

டிசம்பர் மாதத்து குளிரில் நடுங்கி ஒளிந்திருந்த மழை மென்தூறலாய் எட்டிப்பார்த்தது. எப்படி இவர்களுக்கு இந்த குளிரின் நடுக்கமெல்லாம் பெரிதாக இருக்கவில்லை என்ற ஆச்சரியம் மழைக்கு இருந்திருக்கலாம்.  ஒட்டு மொத்த Bonitoவும் பம்பரமாய் இயங்கிக் கொண்டிருந்தது, 25க்கு விடை கொடுக்க.  35 ஏக்கரில், Brigade என்ற பிரசித்தி பெற்ற  குழுமத்தால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டி ஊர். Xanadu என்ற சீனப்பெயர் கொண்டது இத்திட்டம். போர்க்காலங்களின் தீவிரம் தந்த அயர்ச்சியை குறைப்பதற்காக சீன மன்னர்கள் தங்குமிடங்களை Xanadu என்கிறார்கள். கிட்டத்தட்ட ஒருவர் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் இடம் தான் இது. இதன் பசுமையும், திறந்த வெளியும் கண்களை நிறைப்பவை. கட்டப்பட்ட வீடுகள் வானில் மறைந்திருக்கும் குட்டி தேவதைகள் போல அப்பசுமைக்குள் ஒளிந்திருப்பவை. இங்கு குடி புகுவதற்கு முன் வந்த நாட்களில், இப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் “அட  எக்ஸ் நாடு தான, எனக்குத் தெரியும் வாங்க சார்” என்றார். “அப்ப அது ஸ நாடு  இல்லையா” என்ற என்னை, அப்படியும் சொல்லலாம் சார் என்று புன்னகைத்தார். இக்குடியிருப்பு இருக்கும் நொளம்பூர் வருங்காலங்களில் எகஸ் அல்லது ஸ என்ற ஒரு நாடாக மாறலாம். 

இவ்வூரின் மூன்று பகுதிகளில் ஒன்று தான் Bonito குடியிருப்பு. ஒரு நீண்ட செவ்வக வடிவிலான பசுமை வெளியை , அகலவாக்கில் ஊடறுத்துச் செல்லும் ஆறு தளக் கட்டடம் கொண்டது. செவ்வகத்தின் விளிம்புகளைச் சுற்றியும் அதே போன்ற ஆறு தளக் கட்டிடங்கள் பசுமைப் பகுதியைச் சுற்றி எழும்பியிருக்கும். சில நேரங்களில் அப்பசுமை வெளியின் இரு கிரீடங்கள் போலத் தோன்றுபவை இக்கட்டிடங்கள். சில சமயங்களில் கோவிலின் பிரகாரங்கள் போன்றும் தோன்றும். ஒரு முறை சுற்றினால் கிட்டத்தட்ட ஒரு கி.மீ வரும். Bonito என்ற Spanish வார்த்தையின் அர்த்தமான அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு எழிலான குடியிருப்பு. 600 வீடுகள் வரை கொண்டது. கிட்டத்தட்ட 800 பேர் வரை புதுவருட கொண்டாட்டத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் இக்குடியிருப்பின் பராமரிப்பை அதன் நலச்சங்கத்திடம் Brigade ஒப்படைக்கும். இத்தனை பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான அத்தனை தகுதிகளையும் ஆற்றலையும் கொண்ட சிறு தன்னார்வலக் குழு Bonito குடியிருப்பு வாசிகளிடமிருந்து உருவாகியிருப்பது அவர்களுடைய அதிர்ஷ்டம் என்றே எண்ண வைக்கிறது. பெரும் உழைப்பையும் காலத்தையும் கோரி நிற்பவை இப்பொறுப்புகள். இந்த புதுவருடக் கொண்டாட்டத்தை அவர்கள் ஏற்று நடத்திய விதமே இப்பதிவை எழுதத் தூண்டியது. It was a brilliant exhibit of the professionaliam of the whole team.

800 பேருக்கு உணவளிப்பதில் இருந்து, மாலை நேர நிகழ்வுகளுக்காக பங்கேற்பாளர்களை தயார் செய்வது, செலவுகளை சமாளிக்க தேவையான விளம்பர தாரர்களைப் பெறுவது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் கடைகளை அமைப்பது, LED மேடை, தரம் வாய்ந்த ஒலி அமைப்பு என நீண்டு கொண்டே செல்லும் பொறுப்புகளிவை. கிட்டத்தட்ட, இந்நிகழ்வுகள் அரங்கேறிய போது இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் ஒரு பார்வையாளனாக என்னுடைய பயணத்தை மிகவும் இலகுவாக வைத்திருந்தது. It was like listening to a Symphony indeed.

எனக்கு எப்போதுமே இந்த கூட்டங்களின் மேல் நம்பிக்கை இருப்பதில்லை. இது சமீபகால கூட்ட நெரிசல்களினால் வந்த அவநம்பிக்கையல்ல. என்னுடைய ஐந்து வருட டோக்கியோ வாசத்தில் நான் உணர்ந்து கொண்டவை.  ஒரு 100 பேர் கொண்ட ஒரு கூடுகையை நடத்த ஜப்பானியர்கள் செலவு செய்யும் நேரத்தை விட பல மடங்கு நேரத்தையும் உழைப்பையும் இங்குள்ள ஒருங்கிணைப்பாளர்கள் செலவிட வேண்டும். கூட்ட ஒழுக்கத்தைப் பொறுத்த வரையில் இன்னமும் நாம் குழந்தைகள் தான் அல்லது இன்னமும் பிறக்கவில்லை அல்லது அது நமக்கு ஒரு பெரிய குறையாக தென்படுவதில்லை. இதற்கு நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் இடங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். Bonito போன்ற குடியிருப்பு பெரிய செல்வந்தர்களுக்கு மட்டுமே ஜப்பானில் சாத்தியம். அவர்களும் இதனை பொறுப்பற்ற ஆடம்பரம் என்று ஒதுக்கி விடுவார்கள். இத்தனை பெரிய இடங்களில் வசிப்பதில்லை. நம்மிடமிருக்கும் அபரிதமான இடங்களும் உழைப்பு சக்திகளுமே நம்முடைய ஒழுங்கீனத்தை போற்றிப் பாதுகாக்கின்றன.

இந்த தேவையற்ற குற்றவுணர்வை அம்மாலை நேர குளிர்காற்று இல்லாமலாக்கியது. ஒட்டு மொத்த Bonitoவும் 25க்கு விடை கொடுக்கவும், சில மணிநேரங்கள் தள்ளியிருக்கும் 26ஐ ஆரத் தழுவிக் கொள்ளவும் தயாராய் இருந்தது. ஒரு பசுமைப்பகுதி உணவிற்கும், இன்னொரு பசுமைப்பகுதி பல்வேறு விதமான கடைகளுக்கும் ஒதுக்கப்பட்டு, நிகழ்வுகளுக்கான மேடைகள் செவ்வகத்தின் வெளிச்சுற்றிலுள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்தது. குளிர்காற்றை விட இந்த இடப்பகிர்வு பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

வீட்டிலிருந்து இறங்கி அங்கிருந்த கடைகளை நெருங்கியவுடன் மெல்ல மெல்ல ஒரு திருவிழா மனநிலைக்குள் மனம் செல்ல ஆரம்பித்தது. கூட்டங்களை நோக்கி நம்மை எறிந்து கொள்வதற்கு இது போன்ற திருவிழாக்கள் தேவைப்படுகின்றன. கிட்டத்தட்ட இதுவும் ஒரு தியானம் தான். மனைவிக்கு கடைகளில் அலைவது தான் தியானம். இந்த பொருள் மயக்கமின்றி இச்சமூகம் இயங்க முடிவதில்லை. உறைந்து போகும்.  மகளுக்கு அங்கு ஆரம்பித்திருந்த நிகழ்வுகளுக்கு செல்வதில் தான் ஆர்வம். எனக்கும் தான். 

இருந்தாலும் எங்களிருவரையும் ஈர்த்தது அங்கிருந்த டீ- சர்ட கடை. வித விதமான கலர்களில் ஜடமாய் இருந்த டீ-சர்ட்களை நிமிடத்தில் விஜய்,  Avengers என உயிருள்ளவைகளாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். மகளுக்கு Iron man கிடைத்தது. நான் பக்கத்திலிருந்த கடையில் இருந்த ஓவியங்களை நோட்டமிட்டேன். அங்கிருந்த வான்காவின் ஓவியம் சற்றே திகைப்பூட்டியது. அதனருகில் மாதவனும், கமலும் அந்த ரயில் நிலையப் பூங்காவில் அமர்ந்திருக்கும் ஓவியம் புன்னகைக்க வைத்தது. இந்திய/தமிழ் சினிமாக்களின் ஒரு செவ்வியல்(Classic) படைப்பு இத்திரைப்படம். அப்பூங்காவில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் நினைவுக்கு வந்து போனது. இரு பெரும் தன்னகங்காரம் கொண்டவர்கள்; அத்தன்னகங்காரத்தை தான் நம்பும் கம்யூனிச மற்றும் முதலாளித்துவ சித்தாத்தங்களில் இருந்து பெற்றுக் கொண்டவர்கள். சித்தாந்தங்களின் மேல்பூச்சு கரைந்து போகும்போது, அத்தன்னகங்காரமும் மறைந்து போகிறது. அன்பே சிவம் என்பதை உணரவைக்க முயன்ற திரைப்படமிது. “மின்சாரக் கனவு அல்லது மணிரத்னம் படத்தோட posters எதுவும் இருக்கா?” என்ற கேள்விக்கு என்னைப் புரிந்து கொண்டவராய் “மௌனராகம் மட்டும் ஒன்னு இருந்துச்சு, அதுவும் வித்துருச்சு சார்” என்றார். Yet another Classic movie என்று எண்ணிக்கொண்டே அன்பே சிவத்தையும், வான்காவையும் வாங்கிக் கொண்டு மீண்டும் டீ சர்ட் கடைக்குத் திரும்பினேன்.

அன்பே சிவம் ஓவியத்தைக் கொடுத்து இத பிரிண்ட் பண்ண முடியுமா என்ற என்னை அங்கிருந்த விஜய் படங்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன், “அங்கிள், கொஞ்சம் அந்தப் பக்கம் ஓரமாப் போறீங்களா…” என்பதைப் போல ஏற இறங்கப் பார்த்தான். கடைக்காரர் ஒரு புன்னகையுடன் எங்களிருவரையும் நோக்கினார்.

பல்வேறு விதமான கடைகள் அனைத்தும் சேர்ந்து, ஒரு வண்ணக்கலவை போல் அங்கிருந்த பசுமையை சீண்டிக் கொண்டிருந்தது. கிளி சோசியம், pottery, Vethaa, Naturals என. வழக்கம்போல் ஒரு சிறு புத்தகக் கடை கூட கிடையாது. ஒரு சமூகமாக நாம் ஏன் வாசிப்பை புறக்கணிக்கிறோம் அல்லது கூசுகிறோம் என்பது ஒரு முக்கியமான அல்லது அவசியமான ஆய்வுக்குரிய பொருள். குடியிருப்புக்கென ஒரு சிறு நூலகமும் உள்ளது. அதைப் பொருட்படுத்துபவர்களை கண்டுபிடித்து அதனை மேம்படுத்த வேண்டும்.

நிகழ்வு நடக்கும் சாலையில் இருந்து ராம் மற்றும் ஹர்ஷிதா வின் குரல்கள் Bonito முழுவதும் மென்மையாக ஒலித்துக் கொண்டே இருந்தது. பிசிறற்ற அவ்விருவரின் குரல்களை அங்கிருந்த அற்புதமான ஒலி அமைப்பு மெருகூட்டியிருந்தது. நிகழ்வைத் தொகுத்த இவ்விருவருமே Bonito குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்கு கிடைத்த இன்னொரு ஆச்சரியம். இந்த ஒட்டுமொத்த மேடை நிகழ்வையும் அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட விதம், அவர்களுடைய நிபுணத்துவத்திற்கு ஒரு சான்று. இத்தனை ஆற்றலும் வேகமும் கொண்ட பெண்களையும், குழந்தைகளையும் கையாள்வதற்கு ஒரு திறமை வேண்டும். இப்பதிவிற்கு ‘Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு’ என்று தலைப்பிட முடிவு செய்தேன்.

எப்படியும் ஒரு முப்பது அல்லது நாற்பதுக்கு நாற்பது அடி மேடை. பிரமாண்டமான LED திரை, வான்காவின் ஓவியங்களைப் போல சிதைந்து, வளர்ந்து மேடைக்கு உயிர் தந்து கொண்டிருந்தது. மேடையிலிருந்து ஒரு 100 மீட்டர் தூரம் வரை சீரான இடைவெளியில் போடப்பட்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த இருக்கைகள். கடைசி இருக்கையில் இருந்தாலும் மேடை நிகழ்வை பிரதிபலித்துக் காட்டியது அந்த LED திரை. சாலையிலும் சில முக்கியமான கடைகள். வீடுகளின் உள்வடிவமைப்பு, ஒளி அமைப்பு மற்றும் கலைப் பொருட்கள் சார்ந்து. Bonitoவின் ஒரு அங்கமாகி விட்ட பாப் கார்ன் Truck மற்றும் Ikikai ice cream shop. எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறது.

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிகழ்வுகளில் கரைய ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட இருபது நாட்களாக இக்குடியிருப்பின் பெண்களும், குழந்தைகளும் அளித்த உழைப்பின் ஸ்தூல வடிவமாய் அத்தனை நடனங்களும் ஒரு துள்ளலுடனும் எழிலோடும் அரங்கேறின. It was a complete professional display of the Bonito’s capability  என்ற வாக்கியத்திற்குள் இதனை அடைக்க முற்பட்டாலும், இக்குடியிருப்பின் பெண்களின் முகத்தில் ஒரு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பிரகாசம் பிரதிபலிப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. Gated Communityகளின் பலன்களில் ஒன்றிது. இந்த சுதந்திரம் அந்த Gateஐத் தாண்டியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே காந்தி போன்ற பெருந் தலைவர்களின் கனவு. இது சாத்தியம் என்பதை அவர் பின்பற்றிய வைணவ தத்துவங்களின் ‘வசுதைவ குடும்பம்’  (The world is a village) என்ற கருத்தாக்கம் வழியாக உணர்ந்தவர். கனவு சாத்தியப்பட வேண்டும்.

“Food is ready for early dinner goers…” என்று ராகேஷ் whatsappல் பகிர்ந்திருந்தார். Bonitoவின் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பவர். Bonito பற்றிய பெருமிதங்களையும், குறைகளையும் சுமந்தலைபவர். ஒரு தன்முனைப்பு கொண்ட தலைவர் என்றே இவரைச் சொல்லலாம். பின்மாலை நேர நடைபயணத்தில் ஓரிருமுறை இவரை சந்தித்ததுண்டு. இது எப்படி சாத்தியம் என்பதை, ராஜு பாண்டியன், முரளி, கணேஷ் என நீண்டு கொண்டே சென்ற இவர்களுடைய குழுவின் நட்பு வளர்ந்த விதத்தைப் பற்றிச் சொல்லி விளக்கினார். இக்குழுவினர் அனைவருமே இக்குடியிருப்பு கட்டப்பட்ட காலத்தில் இருந்தே ஒன்றிணைந்திருக்கிறார்கள். கோவிட் காலத்திற்கு பின் ஏற்பட்ட  கட்டுமான தாமதங்களை Brigade நிறுவனத்திடம் ஒன்றாய் பேசி துரிதப்படுத்தியிருக்கிறார்கள். This team has grown organically over a period of time என்று புரிந்தது. Bonito இவர்கள் கையில் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. “நீங்க இவ்வளவு  ஈடுபாட்டோட barஐ  raise பண்ணுறது, அதை வேற யாரும் எட்டிப் புடிச்சுடக் கூடாதுண்ணா?” என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், வெட்கி ஒரு பிரகாசமான புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டார்.

சமீபகாலமாக, இரவுணவை ஒன்பதுக்குள் முடித்து விடுவதால், நிகழ்வுச் சாலையிலிருந்து உணவிற்காக ஒதுக்கப்பட்ட மற்றொரு எழிலான பசுமைப் பகுதிக்குச் சென்றோம். வழிநெடுக ஆங்காங்கே தன்னார்வலர்கள் நின்றிருந்தார்கள் அல்லது அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். தங்கள் அடையாள அட்டையை பெருமிதத்துடன் மார்பில் பொறுத்தியிருந்தார்கள். அவர்களிடம் இருந்த பரபரப்பு கலந்த நிதானமும், பொறுமையும் மீண்டும் மீண்டும் அவர்களைப் பற்றி மிகைப்படுத்தி எழுத வைக்கிறது. புத்தர் தனக்கு ஞானம் கிட்டிய பிறகு ஒரு பெரும் கூட்டத்திற்குள் உச்சகட்ட பரவசத்தோடு நுழைந்ததாகச் சொல்வார்கள். தான் யார் என்று உணர்ந்து கொண்டதில் எழுந்த பரவசமது. அவர்கள் இருட்டிலும் ஒளிர்பவர்கள் என்பார்கள். தன்னலமற்ற எந்தப் பணியும் தன்னை உணர்வதற்கான வாசலை திறந்து வைக்கிறது. அந்த தன்னுணர்வே அவர்களை ஒரு உன்னதத்தை நோக்கித் தள்ளுகிறது. தன்னலமற்ற பணிக்காக கடவுள் அவர்களுக்கு அளிக்கும் கொடையிது. இவ்வுலகம்,  இது போன்ற சில ஆத்மாக்களால் தான் முன்னகர்கிறது.

முழவதுமாய் இருள் போர்த்தியிருந்தாலும், அங்கு நன்கு வடிவமைக்கப்பட்டிருந்த ஒளி அமைப்பால் தன் பசுமையை சன்னமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது உணவருந்தும் பகுதி. 35 ஏக்கர் பசுமையை நிர்வகிப்பது அத்தனை எளிதல்ல. Brigade Estate Management பணியாளர்கள் ஆங்காங்கே அமர்ந்து சுத்தம் செய்து கொண்டேயிருந்தார்கள். பசுமையான புல்வெளிகளில் எந்த உணவுக் குப்பையும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அதீத சிரத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். எட்டரை மணி என்பதால் நீண்ட நேரம் வரிசையில் நிற்கவில்லை. நிறைய உணவு வகைகள். மட்டன் பிரியாணியையும், இடியாப்பத்தையும் மட்டும் வாங்கிக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மேலே ஊற்றப்பட்டிருந்த கோழிக் குழம்பினால் இடியாப்பம் மிருதுவாயிருந்தது. பிரியாணியின் குலைவும் இதனுடன் சேர்ந்து கொள்ள உணவின் சுவையில், அருகில் அமர்ந்திருந்தவர்களின் உரையாடல்கள் வெகு தொலைவிற்கு சென்று விட்டது. சுற்றியிருந்த சில  வீடுகளில் கிறிஸ்து இன்னமும் நட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருந்தார். 2026ஐ பத்திரமாக நம்மிடம் ஒப்படைப்பதற்காக வானத்திலும் சில நட்சத்திரங்கள் அந்த மென்தூறலுக்கு நடுவே மின்னிக் கொண்டிருந்தது. 

Leave a comment