தெய்யமும் மாடன் மோட்சமும்

இது என்ன நடனம் அல்லது கூத்து என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அறிவை அதட்டி உஷ்…என்றது பெண்ணின் அழுத்தத்தையும், ஆணின் பலகீனத்தையும் கலந்தொலித்த அந்த ஆணின் குரல். முகத்திலிருந்த வெண்தாடியின் பிரகாசத்தை விஞ்சும் ஒடுங்கிய முகமாய்த் தொலைவில் தெரிந்தார் அக்குரலின் சொந்தக்காரர். நடனம் முடியும் வரை, அறிவின் தவிப்பை அறியாமல் பார்த்துக்கொண்ட அக்குரல் நிகழ்வு முடிந்து சில நாட்களுக்குப் பிறகும் எங்கோ தொலைவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்நடன நிகழ்வு முழுக்க, நின்றுகொண்டே பாடினார். அவருக்கருகில் ஒருவர் அல்லது இருவர் செண்டை மற்றும் பறை போன்ற மேளம் வாசித்தார்கள். எதிரே வெண்ணிறப் பூக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த குத்துவிளக்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு பள்ளியின் மைதானத்தின் வடகிழக்கு மூலையில் அரங்கேறிய இந்நிகழ்வில் கருத்த தடித்த கால்கள் அந்த குரலுக்கும் தாளத்திற்கும் ஒத்திசைய நிலத்தையும் காற்றையும், அங்கிருந்த பார்வையாளர்களையும் தன்வசப்படுத்தத் தொடங்கியது.

இடுப்பிலிருந்து, முழங்கால் வரைக்கும் துண்டாய்  கட்டப்பட்டிருந்த வேட்டி., மேலுடம்பை  சூடியிருந்த ஆபரணங்கள், முகத்தில் அச்சமூட்டும் நாட்டார் தெய்வத்தின் முகங்களில் ஒன்றை அணிந்திருந்து, ஒண்றிணைந்த இரு வட்டங்கள் அல்லது எட்டு வடிவில் கால்கள் முன்னும் பின்னும் அசைந்தாடிக் கொண்டே சென்றது. கையில் இருந்த அரிவாளும், தலையிலிருந்து முதுகின் இறுதிவரை நீண்டிருந்த தென்னங்குருத்துகளால் ஆன கிரீடமும் அசைந்த விதம் அறியாமலிருந்த அறிவின் தவிப்பை இல்லாதது போல் ஆக்கியது.

நடனம் இறுதியை எட்டப் போகிறது என்பதை கூட்டத்தில் எழுந்த சலசலப்பு கூட உணர்த்தவில்லை. ஆடிய அந்த கருத்து தடித்திருந்த கால்கள், சற்று நிலைகுலைவது போலிருந்தது. ஆனால், தன் உடம்பு மேல் புனைந்திருந்த  நாட்டார் தெய்வமாகவே தன்னைக் கருத வைத்த அந்த இசையும், நடனமும் அவரின் நிலைகுலைவை தெய்வத்தின் ஆட்டமாக மாற்றியது. சரேலென அந்நாட்டியக் குழுவை
சேர்ந்த ஓரிருவர் உள்ளே புகுந்து அத்தெய்வத்தை தங்கள் கையை பல்லக்காக்கி ஏந்திக் கொண்டனர். அதிலொருவர் கையில் இருந்த அரிவாளை வெடுக்கென பிடுங்கிக் கொண்ட பிறகுதான் அச்சம் உரைத்தது. “என்ன ஏதுன்னே தெரியாமத்தான் இவ்வளவு தைரியமா இங்க நின்னோமா நாம…” என்ற என்னிடம் புன்னகைத்தார் அனங்கன். தத்துவம், கலை பற்றிய தீவிரமான கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் குருகு என்ற இணைய இதழின் ஆசிரியர்.

நடனம் முடிந்த பிறகே  அது வடகேரளத்தின் தெய்யம் என்ற நாட்டார் நடனம் என்று தெரிந்து கொண்டேன். தெய்வத்தை தன் இசையின் வழியாகவும், நடனத்தின் வழியாகவும் உச்சமடைந்து உணரும் ஒரு நாட்டார்கலை. தெய்யம் என்ற பழங்குடிகளின் சொல்தான் தெய்வம் என்று பண்பட்டிருக்கிறது. தெய்யத்தை அழைத்து தன்னுள் ஏற்றிக் கொள்ளும் சாமியாடிகளின் கலை.

நடனம் முடிந்தவுடனே, அங்கிருந்த பெருந்திரள், அம்மைதானத்தின் வடமேற்கில் நடக்கவிருக்கும் மாடன் மோட்சம் நாடகம் நடக்கவிருக்கும் மேடையை நோக்கி தங்கள் இருக்கைகளை திருப்பிக் கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகனின் முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த தமிழ் சிறுகதையிது. மாடன் போன்ற சிறு அல்லது நாட்டார் தெய்வங்கள் நிறுவன மயப்பட்டிருக்கும் கிறிஸ்துவ மதத்தாலும், உயர்நிலைப்படுத்தப்பட்ட அல்லது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்து மதத்தாலும் அலைக்கழிக்கப் படுவதையொட்டி  எழுதப்பட்ட கதை.  மலையாளத்தில் கச்சிதமான நாடக வடிவம் பெற்றிருக்கிறது. இந்நாடகம் மட்டுமே அங்கு நடக்க இருப்பதாக நினைத்து சென்ற எனக்கு தெய்யம் நடனம் ஒரு இனிய அதிர்ச்சி. மாடன் மோட்சத்திலுள்ள மாடன் என்ற சிறு தெய்வத்தை நெருங்கிக் கொள்ளவும் உதவியது.

நாடகம் நடக்கும் ஆசான் மெமோரியல் பள்ளி, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஆண்டர்சன் சாலையில் உள்ளது.. இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் வழியாகவே சென்னையின் நிறைய பகுதிகளை அறிந்திருக்கிறேன். 20 வருட சென்னை வாசத்திற்குப் பிறகும் சென்னை புதிதுதான். இப்பள்ளி மலையாள கவிஞர் குமாரன் ஆசான் நினைவாக 1966ல் தொடங்கப்பட்டது என்றது ஜெமினி. சென்னையின் முதல் CBSE பள்ளியும் கூட என்றது.

தெய்யம் தவிர்த்து எனக்குக் கிடைத்த இன்னொரு ஆச்சரியம் இந்நாடகம் ஒரு திறந்த மைதானத்தில் நிகழ்வது. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ஔரங்கசீப் நாடகம் தான் நான் பார்த்த இலக்கியம் சார்ந்த முதல் நாடகம். Shraddha மற்றும் Nisha Theatre குழுவினரால் Alliance Française of Madrasல் உள்ள ஒரு உள்ளரங்கத்தில் நடந்தது. அரங்கத்தை மூழ்கடிக்கும் இருட்டு இருந்தால் மட்டுமே வெவ்வேறு நிறங்கள் கொண்ட ஒளியின் துணையுடன் நடக்கும் இதுபோன்ற நாடகங்கள் சாத்தியம்.  அந்த மைதானத்திலும், அதைச் சுற்றியிருந்த வெவ்வேறு கடைகளின் விளக்குகளும் அணைக்கப்பட்ட பின்பு தேவையான இருள் சாத்தியமாயிருந்தது. நிலவின் ஒளி மட்டும் மைதானத்தில் இருந்தது, ஒரு மோன நிலைக்கு இட்டுச் சென்றது.

மாடன் என்ற சிறுதெய்வம் தன்னுடைய பூசாரியின் கனவில் வந்து தனக்கு கொடையளித்து நாளாகி விட்டது என்று தொடங்கும் இந்நாடகம், மாடனுக்கும், பூசாரிக்குமான உரையாடலாக, நிறைய அங்கதங்களுடன் விரிவடையும். வாசிக்கும் பொழுது மாடன் கனவில் வந்து உரையாடும் தெய்வமாக உருவகிப்பதில் உள்ள சௌகரியத்தை ஸ்தூல வடிவில் நம் முன்  நிற்கும் மாடனிடம் இழந்து விடுகிறோம். அவ்வப்போது பொதுமக்கள் மட்டுமே இருக்கும் காட்சிகளில் அங்கு உறைந்த கல்லாக மாடனை வீற்றிருக்கச் செய்யும் உத்தி மாடனையும் புன்னகைக்க வைக்கிறது. பூசாரியின் அபாரமான உடல்மொழி மட்டுமே மட்டுமே மாடன் மனிதனல்ல என்பதை உணர வைக்கிறது, குறிப்பாக நம்முடைய மக்கள் எல்லாம் கிறிஸ்துவத்திற்கு மாறி விட்டார்கள் என்பதை குறிக்க தன் உடம்பையே சிலுவையாகவும், பைபிளாகவும் வெளிப்படுத்துவது; படு லாவகமாக, தன் வெற்றுடம்பிலிருந்து அவிழ்ந்து கொண்டே இருக்கும் வேட்டியை தொடர்ந்து சரி செய்து கட்டிக் கொண்டே இருப்பது  என எளிதாக நம்மோடு ஒன்றி விடுகிறார்.

திறந்த வெளியில் இருந்த மாடனை, கிறிஸ்துவ சபைகளிடமிருந்து மீட்டெடுத்து தன் தலைமேல் கோபுரம் கொண்ட கோயிலுக்குள் குடிவைக்கிறார்கள், அங்கிருக்கும் உயர் சாதி இந்துக்கள். அப்போது நடக்கும் கலவரங்களில் மனிதர்களை குரங்குகள் போல் சப்தமெழுப்பி அங்கிங்கும் தாவியது,  மனிதன் மாறி விட்டான்…மரத்தில் ஏறி விட்டான்…என்ற பாடலை ஞாபகப்படுத்தியது.

மெல்ல மெல்ல மாடன் மோட்சமடைகிறான். தனக்கு கோழியும், சாராயமும் மீண்டும் கிடைக்கும் என்று நம்பிய மாடனுக்கு பொங்கல் மட்டுமே கிடைக்கிறது. அவனுடைய பூசாரிக்கு அவனை நெருங்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பூசாரியிடம் மட்டுமே தன்னை மனிதனாக வெளிப்படுத்திக் கொண்டிருந்த மாடன், தன்னுடைய பீடத்தில் நிரந்தரமாக உறைந்து கல்லாகிறான்.  சிவன் என்ற தெய்வமாகிறான்.

புதிதாய் குடிபுகுந்திருந்த வீடு, ஆண்டர்சன் சாலையிலிருந்து 14 கி.மீ என்றது Google. சென்று சேர இன்னும் ஒரு மணிநேரம் ஆகலாம். இரவுணவிற்காக அங்கிருந்த சேட்டன் கடையில் புரோட்டாவை வாங்கிக் கொண்டு மாடன் நினைவாக கோழிக் குழம்பையும் வாங்கிக் கொண்டேன். செல்லும் வழியில் ஜெயமோகன் தளத்தில் தெய்யம் பற்றிய பதிவுகளை தேடியதில் யட்சகானத்தைப் பற்றிய பதிவொன்றும் கிடைத்தது.  தெய்யத்திற்கும், செவ்வியல் கலையான கதகளிக்கும் இடையில் நிற்பவை யட்சகான இசை நாடகங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். கன்னட மொழியில் சிவானந்த ஹெக்டே குழுவினரால் நடத்தப்படுபவை இந்நாடங்கள். இரண்டு நாட்கள் கழித்து Music Academyல் அவர்களுடைய நிகழ்வு இருப்பது தெரிந்தது. மறுபடியும் சென்னையின் Cultural Center நோக்கி ஒரு பயணம். மாடன் மீண்டும் அந்த நாடகத்தில் உயிர் பெற்று சிவனாய் நடனமாடிக் கொண்டிருந்தார். தனியனாய் இருந்த மாடனுக்கு, மாடத்தியாய் தாட்சாயிணியும் கிடைத்திருந்தாள்.

Leave a comment