
சில புத்தகங்கள் உடனடியாக நம்மை ஏதாவது எழுத வைக்கும். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான தஸ்தயவேஸ்கியின் Karamsov Brothers என்ற நாவலின் முக்கியமான அத்தியாயம் மட்டும் அடங்கிய புத்தகமிது. ஷங்கர்ராமசுப்ரமணியன் இதனை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே கிறிஸ்துவும் சுதந்திரமும் ஒரு சேர உயிர்த்தெழ ஆரம்பித்தது. அதன் விழைவே இப்பதிவு.
கிறிஸ்துவும் சுதந்திரமும்…
எதற்கு நீங்கள் திரும்பவும் வந்திருக்கிறீர்கள் என்றார் அந்த விசாரணை அதிகாரி கிறிஸ்துவிடம். அந்த நீண்ட முகத்தின் ஒடுங்கிய தன்மையை அம்முகத்தில் படர்ந்திருந்த வெண்மையும் கருமையும் சரிவிகிதத்தில் கலந்திருந்த தாடியாலும் மறைக்க முடியவில்லை. ஆனால், அவருடைய கண்களின் தீர்க்கமும், அதிலிருந்த சுதந்திர உணர்வும் அவர் இன்னமும் பூவுலகை விட்டு நீங்கவில்லை என்றே உணர்த்தியது.
கிறிஸ்து சொற்களின்றி நிற்க, விசாரணை அதிகாரி தொடர்ந்தார். நாங்கள் மண்டியிட்டோமே உன்னிடம், இந்த ரோம ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள் என்று. உன் ஸ்பரிசத்தால் நோயாளிகளை குணமடையச் செய்தது, தன்னலமற்ற உன் மக்கள் தொண்டு என உன்னை அந்த அதிகாரத்தை நோக்கி நகர்த்தியது. நீயோ, மக்களின் சுதந்திரம் தான் முக்கியம் என்றாய். அற்புதங்களுக்காக ஒருவரிடம் சரணடைவது சுதந்திரம் அல்ல என்றாய். தான் செய்த பாவங்களை மன்னிப்பவரிடம் சரணடைவது சுதந்திரம் அல்ல என்றாய். என் அற்புதங்களின், தொண்டுகளின் பொருட்டு எனக்கு மக்களை அதிகாரம் செய்யும் வாய்ப்பை வழங்குவது அல்ல சுதந்திரம் என்றாய்.
கிறிஸ்து தன்னுடைய ஒவ்வொரு உயிர்த்தெழலின் போதும் கைது செய்யப்பட்டு இவ்விசாரணைக்கு ஆளாயிருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் அந்த விசாரணை அதிகாரியை பரிவுடன் உற்று நோக்கியிருந்தார்.
விசாரணை அதிகாரி தன்னுடைய விசாரணையைத் தொடர்ந்தார். கிறிஸ்து, சுதந்திரம் என்பது இம்மக்களுக்கு எவ்வளவு பெரிய சுமை என்பதை அறிந்தும், அதனை ஏன் இம்மக்கள் மேல் ஏற்றி வைக்க துணிந்தீர்கள்? இதனை பொறுப்புடன் சுமப்பதற்கான அறிவாற்றல் அனைவரிடமும் இல்லாத போதும் எப்படி அவர்களை உங்களால் முழுக்க நம்ப முடிந்தது? இங்குள்ள பெரும்பாலான மக்களுக்குத் தேவை பூவுலகின் ரொட்டிதானே தவிர, நீங்கள் அளிக்கும் பூலோக ரொட்டி அல்ல என்பதை எப்படி உணராமல் போனீர்கள்?
கிறிஸ்து தன்னை இவ்வதிகாரி மீண்டும் சிறையில் அடைக்கும் நேரம் நெருங்கியிருந்தை உணர்ந்து, அதே புன்னகையுடனும், பரிவுடனும் அவரை நோக்கினார்.
நேரம் நெருங்கி விட்டது கிறிஸ்து. எனக்குத் தெரியும் நீங்கள் இப்பூவுலகிற்கு மறுபடியும் திரும்பி வருவீர்கள் என்று. உங்களின் அற்புதங்களைக் காட்டி அதிகாரத்தையும், ராஜ்ஜியத்தையும் கைப்பற்றி இம்மக்களை வழி நடத்தும் எங்கள் நிறுவனம் தேவையற்று போய் விட்டதா? என்பதை காண. அதிகாரமும், அற்புதமும், பாவமன்னிப்பும் தேவையற்ற ஒரு சுதந்திரமான சமூகம் உருவாகி விட்டதா? என்பதை காண. அது ஒருபோதும் அமையப் போவதில்லை என்று தெரிந்தும், அந்த லட்சியத்தை உங்கள் பெருங்கனவாக கொண்டிருக்கும் உங்கள் மேல் வியப்பும், வெறுப்பும் ஒரு சேர எழுகிறது கிறிஸ்து. இம்மக்கள் நீங்கள் நினைப்பதுபோல் அத்தனை நல்லவர்களாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் நீங்கள் அவர்கள் மேல் வைக்கும் நம்பிக்கை என் போன்ற அதிகாரிகளுக்கு ஆச்சரியமளிக்கிறது. உங்களை இங்கு பிரவேசிக்க விட்டால், மீண்டும் புரட்சியும், குழப்பமும் இங்கு உண்டாகும். எனவே எப்போதும் போல் உயிர்தெழுந்த உங்களை மீண்டும் சிறையிலடைப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எங்களை மன்னியுங்கள் கிறிஸ்து.