ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்


கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும் கண நேர ஆசுவாசம் அளப்பரியது. சென்னையின் அண்ணா சாலையில் நள்ளிரவில் ஒரு குதிரையின் மேலேறி அன்னநடையில் பயணித்தால் வனவாசி நாவலின் நாயகன் அடையும் மோனநிலையில் துளியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்றுமிருக்கிறது.
அத்தனை விசாலாமானது அச்சாலை. பகலில்தான் குறுகிப் போய்விடும்.


இப்படியெல்லாம் லயித்திருப்பது மனித இயல்பல்ல என்பதாலோ என்னவோ, வனவாசியை சற்று நிறுத்தி விட்டு ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டை கையில் எடுத்தேன். பொறாமை, துரோகம், துன்பம் என்பதே வாழ்க்கை என்ற துன்பியல் நாடகமிது. மதிப்பீடுகளின் சரிவு அல்லது மதிப்பீடுகள் எல்லோருக்குமானதாக இல்லாமலிருப்பது அல்லது மதிப்பீடுகள் காலத்திற்கேற்ப மாறாமலிருப்பது என ஒரு சமூகம் தன்னை நல்வழிப்படுத்திக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட இந்த மதிப்பீடுகளே இவ்வாழ்வை ஒரு துன்பியல் நாடகமாக மாற்றி விட்டதோ என்று எண்ண வைக்கிறது இந்நாடகம். மதிப்பீடுகளே தேவையற்ற சமூகத்தில் துன்பங்கள் இல்லாமல் போய்விடுமா, என்ன?

இத்துன்பியல் நாடகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத வாசகர்கள் மிகவும் குறைவுதான். இதனைத் தாண்டி நம்மை இந்நாடகத்தோடு பிணைத்திருப்பது ஷேக்ஸ்பியரின் அபாரமான மொழிநடை. கிட்டத்தட்ட ஆரம்பகாலகட்ட இலக்கிய மதிப்பீடுகள் சொல்வது போல அன்றாட அல்லது பேச்சு வழக்கிலுள்ள மொழி மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தான் இலக்கியம் என்பதை ஷேக்ஸ்பியரின் மொழிநடை உறுதி செய்கிறது. சிடுக்குகளும், நுண்பகடிகளுமாய் நிறைந்திருக்கும் தத்துவ விசாரணைக்கு புழக்கத்தில் இருக்கும் மொழிநடையும் சொற்களும் சிறகுகளாய் அமைவதில்லை. அவை ஒரு படைப்பாளியை சிறையிடுபவை. அதனை மீறித்தான் இலக்கியம் படைக்க வேண்டியிருக்கிறது. அது வாசகர்களின் உழைப்பையும் கோரி நிற்கிறது. அவ்வுழைப்பை தரமுடியாதவர்களை தயவு தாட்சண்யமின்றி ஒதுக்கி விடுகின்றன இச்செவ்வியல் படைப்புகள்.



அழகியை மானமுள்ளவளாக மாற்ற நற்குணத்திற்கு இருக்கும் திறனைவிட நன்மடந்தையை வேசையாக பேரழகால் எளிதில் மாற்ற இயலும்

கடுந்துயரும் பேருவகையும் நம்மைச் செயலூக்கத்திற்கு தள்ளுமென்றாலும் அந்த மிகையுணர்ச்சிகள் நீங்கிய பிறகு செயலூக்கம் வடிந்து விடும். ஒரு கண் சிமிட்டலில் உவகை துயராகும். துயர் உவப்பாகும். இவை இரண்டுமே தொடர்ந்து நீளும் வடிவில் இவ்வுலகிற்கு அருளப்படவில்லை




ஆனால் இது போன்ற அசாதாரணத்தன்மை ஏதுமற்ற மொழிகளின் வழியாகக் கூட இதே உழைப்பை தன் வாசகர்களிடம் கோரி நிற்பவை கி.ரா, அசோகமித்ரன் போன்றவர்களின் படைப்புகள். மனித வாழ்க்கையை கூர்ந்தவதானிப்பதில் ஷேக்ஸ்பியரை விஞ்சியவர்களிவர்கள். காலத்திற்கேற்ப இலக்கிய மதிப்பீடுகள் மாறியிருந்தாலும், செவ்வியல் படைப்புகளின் மாறாத்தன்மையாக இருப்பது வாசகனின் இந்த பங்கேற்பை கோருவது தான் என்று எண்ண வைக்கிறது.

ஷேக்ஸ்பியரை இதுவரை படிக்காத எனக்கு, அவரைப் பற்றி இத்தனை பெரிய புரிதலை கொடுத்திருக்கிறது கோ.கமலக்கண்ணனின் மொழிபெயர்ப்பு. அபாரமான மொழிநடை, மிக நுட்பமான தனித் தமிழ் வார்த்தைகள். கொட்பு, அலர், கவல், பொற்பு, பொக்கணப் புதையல் என்ற வார்த்தைகளை இணையத்தில் தேடினால் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் என நம்மை உட்புக வைக்கிறது. வலிந்து பொருத்தப்பட்ட வார்த்தைகளாக இல்லாமல், அந்தந்த காட்சிகளின் சட்டகங்களுக்கு அருமையாக பொருந்திப் போகுபவையாக உள்ளன. நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முன் இவர் மொழிபெயர்த்த சோர்பா என்ற கிரேக்கன் என்ற பிரசித்தி பெற்ற நாவலை படித்திருக்கிறேன். அவருடைய இவ்வுழைப்பு எந்த படைப்பாளிக்கும், வாசகனுக்கும் ஊக்கமளிப்பது.

ஹேம்லட்டின் சிக்கல்
தன் தாய் தன் சிற்றப்பனை மணந்ததை விட, சிற்றப்பன் தன் தந்தைக்கு எவ்விதத்திலும் நிகரானவன் அல்ல என்ற மதிப்பீட்டு சிறையில் சிக்கிக் கொள்கிறான் இளவரசன் ஹேம்லட். அரசனுக்குரிய உடல் லட்சணங்கள் ஏதுமற்ற தன் சிற்றப்பனின் சூழ்ச்சியும் துரோகமும் ஹேம்லட்டை வெகுவாக கிளாடியஸிடம் இருந்து விலகச் செய்து விடுகிறது. தன் தந்தையை கொன்ற கிளாடியஸை பழி வாங்குவதற்காக ஹேம்லட் செய்யும் சூழ்ச்சிகள் கிளாடியஸின் தந்திரங்களை விஞ்சுபவை. தன் மதிப்பீட்டு சிறைகளின் கம்பிகளை தானே தகர்த்துக் கொள்ள வைக்கின்றன ஹேம்லட்டின் கடுந்துயர். இத்துயரிலிருந்து விடுபட இந்த எதிர்மறையான செயலூக்கமே அவனுக்கு உதவுகிறது.

ஹேம்லட்டின் நாடகம்


கிளாடியஸ் தான் தன் தந்தையை கொன்றான் என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஹேம்லட், தன் தாய் மற்றும் அவருடைய புது கணவனான கிளாடியஸ் முன் நடத்தும் அந்த நுட்பமான நாடகக் காட்சிகள் (நாடகத்திற்குள் ஒரு நாடகம்) ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ஏன் இப்போதும் சிலாகிக்கப் படுகின்றன என்பதை உணர வைக்கிறது. எந்த சிடுக்குமில்லாமல் இயல்பாக இரு நாடகங்களுக்குள்ளும் வாசகர்களால் ஊடுருவிக் கொள்ள முடியும். நாடகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தன் மதிப்பீட்டை ஹேம்லட் வழியாக ஷேக்ஸ்பியர் வெளிப்டுத்திக் கொள்வது போல் உணர வைத்தது. அத்தனை மிகைகளுக்கும் எதிரான ஒரு இயல்பான வெளிப்பாட்டைத் தான் நல்ல நாடகமென்பது கற்பனாவாதத்தில் திளைத்திருக்கும் ஷேக்ஸ்பியரின் முரணாகத் தான் தோற்றமளிக்கிறது.

மிகையான உடல்மொழி வழியாக மட்டுமே நாடகங்கள் கூட்டத்தின் கடைசி வரிசை வரை இருப்பவரை தன்னுள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற எளிய விதியை, நாடக நடிகர்கள், மனிதர்கள் போல் நடக்கத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடுகிறான் ஹேம்லட். புது மதிப்பீடுகளுக்கான வாசலைத் திறக்க முயல்கிறான். மதிப்பீடுகள், சமூக உற்பத்தியின் உபரியில் வாழ்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்ற மார்க்சிய பாலபாடம் நினைவுக்கு வந்தது. ஆனால், மதிப்பீடுகள் அனைத்துமே உள்நோக்கத்தோடு உருவாக்கப்படும் ஒரு சதி செயல்பாடாக திரிப்பது பால மார்க்சியர்களின் பாடம் மட்டுமே.

ஹேம்லட்டின் மரணம்

கடுந்துயர், ஹேம்லட்டை இந்த துன்பமெனும் பிறவிக் கடலின் கரையான மரணத்தை நோக்கியும் செலுத்துகிறது. ஆனால், மரணம் தான் நினைக்கும் விடுதலையைத் தருமா என்ற உள்ளுணர்வு அதிலிருந்து அவனை விலக்கி வைக்கிறது. உறக்கத்தில் ஒரு நிம்மதி இருப்பதை, ஒரு கனவிருப்பதை உணர முடிந்த நம்மால் நீண்ட அல்லது நிரந்தர உறக்கமான மரணத்தில் உணரமுடியுமா? மரணத்தின் இந்த புரியாத புதிர்தான், ஹேம்லட்டை துன்பமெனும் பிறவிக்கடலின் நிரந்தரமற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. வாழ்வென்பது எதிர்நோக்கி இருப்பது மட்டுமே என்ற மகத்தான புரிதலை நோக்கி நகர்த்துகிறது.

இத்தனை துன்பத்தையும் கடக்க உதவுவது ஷேக்ஸ்பியர் தரும் வாசிப்பின்பம் மட்டுமே. இவ்வின்பத்தை தமிழ் வாசகர்களுக்கும் கிடைக்கச் செய்த கோ.கமலக்கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.



2 thoughts on “ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்”

  1. கோ.கமலக்கண்ணன் மொழிபெயர்த்த ஹேம்லட் குறித்த தங்களின் திறனாய்வைப் படித்த பின், அந்நூலை வாசித்துவிட வேண்டும் எனும் ஆவல் என்னை உந்தித் தள்ளி வருகிறது. தயதுசெய்து, இந்த நூல் எங்கு கிடைக்கும் என்ற தகவலை எனக்குத் தர வேண்டுகிறேன். அன்புடன், மு.இரவிச்சந்திரன்-96772 66848

    Like

Leave a comment