வனவாசி

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்டின் பசுமையைத் தவிர வேறெதுவுமில்லாத சமவெளிக் காட்டில் இருந்தது அந்த ஜமீன் பங்களா. அங்குள்ள பசுமையால் அறுபடாத பௌர்ணமி நிலவின் முழுத்தோற்றத்தை அந்த பங்களாவின் ஜன்னலின் வழியாக தழுவலாம் என்று தோன்றும். மேலும் ஆள் அரவமற்ற அந்த சமவெளியில் அந்த பௌர்ணமி இரவில் குதிரையின் மேலமர்ந்து பயணிக்கும் ஒரு நகரவாசியின் மனநிலை…வனவாசி என்ற பிரசித்தி பெற்ற வங்காள நாவலில் (விபூதிபூஷணின் ஆரண்யக, தமிழில் த.நா.சேனாபதி) வரும் இக் காட்சிகள் ஒரு நகரவாசிக்கு அளிக்கும் கண நேர ஆசுவாசம் அளப்பரியது. சென்னையின் அண்ணா சாலையில் நள்ளிரவில் ஒரு குதிரையின் மேலேறி அன்னநடையில் பயணித்தால் வனவாசி நாவலின் நாயகன் அடையும் மோனநிலையில் துளியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்றுமிருக்கிறது. இருளில் அத்தனை விசாலமான சாலை, பகலில் முற்றிலும் காணாமல் போய்விடுவது நகரங்களின் மாயஜால எதார்த்தம்.

நகரமும் காடும்

பகலிலும், இரவுச் சாலையின் அந்த விசாலத்தன்மை தக்க வைக்கப்பட்டால், ஒரு நகரவாசிக்கு மோனத்தை விட அது வெறுமையைத் தான் தரமுடியும். நகரங்களில் பகலும், இரவும் ஒளியால் மட்டுமே பகலாகவும் இரவாகவும் இருப்பதில்லை. காட்டிற்கும் இது பொருந்தும் தான். ஆனால், ஒரு காட்டின் இரவும் பகலும் ஒளியால் மட்டுமே வேறுபட்டிருப்பதாகத் தான் நகர வாழ்க்கையில் திளைப்பவர்களுக்குத் தோன்றும். நகரவாசிகளின் இந்தப் போதாமையை, இந்நாவலின் கதைசொல்லி களையும் விதம் மிக சுவாரஸ்யமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

இரவில் நீளும் மோனத்தையும், பகலில் நீளும் வெறுமையையும் அன்றாடங்களில் தொலைவதையே தன் வாழ்க்கையாக கொண்ட ஒருவரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது? பகலிலிருந்து இரவுவரை தான் கண்ட மனிதர்களைனைவரையுமே விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய காட்டின் மனித அடர்த்தியற்ற தன்மையை நகர நெரிசலை தன் அகமாக்கிக் கொண்ட ஒருவரால் அத்தனை நாள் (கதைசொல்லியின் வனவாசம் கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகள் நீடிக்கிறது) எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது? இப்படி எழும் கேள்விகளுக்கு Vaccations can/should not long last என்ற பிரபலமான சொற்றொடர் தான் பதிலாக நினைவுக்கு வருகிறது.

இந்நாவலின் கதைசொல்லி பொழுதுகளை கழிப்பதற்காக காட்டிற்குள் செல்லவில்லை. தன் வாழ்வாதாரத்திற்காக காட்டுக்குள் வாழும் நிலை அவருடையது. அதற்காக, வேறு வழியின்றி இக்காட்டினையும் அதிலிருக்கும் சொற்ப மக்களையும் ரசிப்பவனாகவும் அவரில்லை. தன் நுண்ணுணர்வுகளால் அவற்றை அவதானிக்க முற்படுகிறார். புறத்தின் அடர்த்தியை உணர்த்திய நகரவாழ்க்கையில் உணரமுடியாத தன் அகத்தின் அடர்த்தியை இக்காட்டு வாழ்வின் வழியாக உணர்ந்து கொள்கிறார். வனவாசி என்ற இந்நாவலை இந்த அடர்த்தியான அவதானிப்புக்களின் தொகை என்று வரையறுத்து விட முடியும். இந்நாவலில் வரும் நாயமாத்மா பலஹீனனே லப்ய (துணிந்தவர்களுக்கே தன் ஆன்மாவை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது) என்ற கீதையின் வரிகள்தான் இந்த நகரவாசியை வனவாசியாக்குகிறது எனலாம்.

மனிதனின் அறிவுஜீவித்தனம்

இன்று நம் உணவு விடுதியில் சரசுவதி பூஜையையொட்டி நல்ல விருந்து சாப்பாடு ஏற்பாடாயிருக்கிறது. உங்களிடமிருந்து இரண்டு மாதத்துப் பாக்கி வர வேண்டியிருக்கிறதே அதில் ஒரு பத்து ரூபாயாவது எங்கள் ஆளின் கையில் கொடுத்தனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நாளையிலிருந்து வேறு இடத்தில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியதுதான்…” என கல்கத்தாவில் தினந்தோறும் உணவளித்து வந்த உணவகத்தின் உரிமையாளர், மிக நாகரீகமாக தனக்கு எழுதிக் கொடுத்த சீட்டில் இருந்த இவ்வரிகள் தான், கதைசொல்லியை வேறு வழியின்றி தனது நண்பனுக்கு சொந்தமான ஜமீன் காட்டிற்கு காரியஸ்தனாகச் செல்ல வைக்கிறது. அக்காட்டையழித்து விளைநிலமாக்கும் பணிக்காக.

பெரும்பாலான நிறுவனங்களில் CSR (Corporate Social Responsibility) செயல்பாடுகளுக்காக, தனது பணியாளர்களை ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், பள்ளிகள் போன்றவற்றிற்கு அனுப்புவதுண்டு. அந்நாள் பிரத்யேக விடுப்பு நாளாக அளிக்கப்படும். இது போன்ற இடங்களுக்குச் சென்று வந்த பிறகு பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும் மனநிறைவிற்கான காரணம் உனக்கும் கீழே உள்ளவர் கோடி…நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…என்ற கண்ணதாசனின் வரிகளைத்தான் ஞாபகப்படுத்தும். ஆனால், இங்கு கதைசொல்லிக்கு நிகழ்வதோ முற்றிலும் வேறான அனுபவமாக அமைகிறது. காட்டில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், எப்போதாவது கிடைக்கும் அரிசிச் சோற்றுக்காக பல மைல்கள் நடந்து தான் மேலாளராக இருக்கும் ஜமீன் அலுவலகத்துக்கு வருவது பரிதாபத்தை விட ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. அவர்களுடைய முகத்திலிருக்கும் உற்சாகமும், உறுதியான உடலும் தான் கதைசொல்லியின் ஆச்சரியத்திற்கு காரணமாயிருக்கிறது. தங்களுடைய கீழ்நிலை குறித்த எந்தவித கவலையும், வெட்கமின்மையும் தான் அவர்களுடைய உற்சாகத்திற்கு காரணமாக இருக்க முடியும்.

பெரும்பாலான CSR செயல்பாடுகள், அதன் பயனீட்டாளர்களை ஏதோ ஒரு வகையில் நீங்கள் ஆதரவற்றவற்றவர்கள், வசதியில்லாதவர்கள் என சுட்டிக் காண்பித்து அவர்கள் அதனை மறந்திருந்தாலும் ஞாபகமூட்டுகிறது. பழங்குடிகளுக்கு அப்படி யாரும் நினைவூட்டுவதில்லை என்றே தோன்றுகிறது. அல்லது, கீழான நிலையில் இருக்கிறோம் என்ற பிரக்ஞையற்றவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள் என்பதே சமகால அறிவுஜீவிகளின் வாதமாக இருக்க முடியும். சமூக மாற்றத்தின் பரிணாம வளர்ச்சிக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள விரும்பாத அல்லது முடியாத அல்லது வாய்ப்பளிக்க படாதவர்களே தேங்கிய நிலையில் இருக்கும் பழங்குடிகள் எனலாம்.

இந்த அறிவுஜீவி மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அக்காட்டையும், அங்குள்ள மனிதர்களையும் ஊடுருவ முயல்கிறார் கதைசொல்லி.

இயற்கையை மொழிபெயர்த்தல்

சுந்தர் சருக்கை என்ற புகழ்பெற்ற இயற்பியலாளரின் அறிவியல் என்றால் என்ன? ஒரு தத்துவார்த்தமான வாசிப்பபு என்ற புத்தகத்தை (தமிழில் சீனிவாச ராமானுஜம்) வனவாசியோடு சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அறிவியலை மதம் போன்ற இறுகிய ஒன்றாக ஆக்க முயலும் அறிவியலாளர்கள் மேல் தொடர்ந்து ஒரு மென்விமரிசனத்தை முன் வைப்பவர். இயற்கையை மொழிபெயர்த்தல் என்ற சுவாரஸ்யமான சொல்லாடலை இப்புத்தகத்திலிருந்து தான் எடுத்துக் கொண்டேன்.

இந்நாவலின் கதைசொல்லி, தான் கண்ட இயற்கை அல்லது காட்டின் மௌனத்தை, பேரிரைச்சலை, சன்னமான ஒலிகளை, பேரதிசயத்தை தன் மொழிக்குள் அடக்கிவிட துடிப்பதை இந்நாவல் முழுதும் காணமுடிகிறது. கிட்டத்தட்ட தண்ணீரைத் தவிர வேறேதுமறியாத மீன் தரைக்கு கால் முளைத்து வந்தது போன்ற பிரமையைத் தருகிறது இவருடைய இயற்கை பற்றிய அவதானிப்புக்கள். இருந்தும் மொழியால் இயற்கையை படைக்கத்தான் முடியுமேயொழிய, அப்படியே மொழிபெயர்த்து விட முடியாது அல்லது தன்னுடைய அந்த முதல் வியப்பை அல்லது தன்னனுபவத்தை வாசகர்களுக்கு கடத்துவது முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்த ஒரு ஞானியாகவும் இருக்கிறார் இக்கதைசொல்லி.

இருந்தும் அந்த இயற்கை நோக்கிய தன் பிரார்த்தனைகளை நாவல் முழுதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு மழை மாலைப்பொழுதில், அங்குள்ள குடியானவர்களால் சீர்படுத்தப்பட்ட காட்டில் விளைந்து அடிவானம் வரை பரவியிருப்பது போல் தோற்றமளித்த வயல்வெளியின் பெரும் பசும்பரப்பை மரகதக் கல்லாக உருவகிக்கிறார். காற்றால் அப்பசும்பரப்பின் மேல் அலைக்கழிக்கப்படும் மழைத்துளிகளை, மரகதக் கல்லின் மேல் பட்டுத் தெறிக்கும் கடல் அலைகளென காண்கிறார். அந்த மழையால் செழித்து வளரும் காட்டையும், அங்குள்ள உயிரினங்களையும் வனதேவதையினுடைய கற்பனையின் வித்து என நெகிழ்கிறார். இதுபோல் பிரார்த்தனையின் உச்சம் தொடும் தருணங்கள் நிறைய உண்டு இந்நாவலில்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி

காட்டில் கிடைப்பவற்றை உண்டு வாழும் அல்லது உணவு உற்பத்தி பற்றிய அறிவில்லாத அல்லது உணவை உற்பத்தி செய்ய விரும்பாத பழங்குடிகள், அக்காட்டையொட்டி வாழும் விவசாயம் செய்யத் தெரிந்த குடியானவர்கள், இக்குடியானவர்களை வைத்து காட்டை, விளைநிலமாக்கும் ஜமீன்தாரிகள் என சமூக்தின் பரிணாம வளர்ச்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்துத் தரப்பினருமே சமகாலத்தவர்களாக இந்நாவலில் வருகிறார்கள். சமூகத்தின் பரிணாம வளர்ச்சியென்பது ஒரே சீரான நேர்கோடான வேட்டைச் சமூகம் -> நிலப்பிரபுத்துவ சமூகம் -> முதலாளித்துவ சமூகம் என சமூக இயங்கியலின் படி வரையறுக்கப் பட்டாலும், எதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை. இச்சமுகங்களின் விகிதாச்சாரம் ஒவ்வொரு நிலப்பரப்பிற்கேற்ப வேறுபடலாமேயொழிய, சமகாலத்தில், இவையனுத்தும் கலந்த சமூகங்களாகத்தான் இந்திய நிலப்பரப்பு அமைந்திருக்கிறது. இந்நாவலில் வரும் நிலப்பரப்பும் இதற்கு விதிவிலக்கல்ல.

அத்தனைத் தரப்பு மனிதர்களாலும் நிரம்பி வழிகிறது இக்காடு, வேதபாடசாலை நடத்துபவர் முதற்கொண்டு. அறுவடை காலங்களில், நகரத்தில் இருந்து வணிகர்ளும் அக்காட்டில் குவிந்து விடுகின்றனர். விளைதானியங்களுக்குப் பதிலாக வீட்டு உபயோகப் பொருட்கள் என்ற பண்ட மாற்று வியாபாரத்திற்காக. தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் பின்தொடர்ந்து, அவர்களுடைய தொழில், குடும்ப பழக்க வழக்கங்கள், உணவு முறை என ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார் கதைசொல்லி. அவையனுத்துமே, கதைசொல்லிக்கு மட்டுமல்ல, இந்நாவலின் வாசகர்களுக்கும் ஆச்சர்யமாகவும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ளது.

குறிப்பாக சாந்தால் என்ற பழங்குடிகளின் மன்னனான தோப்ரூ. பல்வேறு தலைமுறைகளாக தோப்ரூவின் மூதாதையர் இப்பழங்குடிகளின் மன்னர்களாக இருந்து வருகிறார்கள். தற்போது தோப்ரூவின் முறை. இவர் இறந்ததும், அவருடைய வாரிசை மன்னனாக்க வேண்டிய சடங்கிற்கான பொருளுதவிற்காக கையைந்தி நிற்கிறார்கள். சமூக மாற்றம் தோப்ரூ குடும்பத்தினரின் இருப்பை கேள்விக்குரியதாக ஆக்கியிருந்தாலும், அவர்கள் இன்னமும் மன்னர் பரம்பரையாகத் தான் மனதளவில் வாழ்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் விருந்தோம்பல், தங்களை பேணிக்கொள்ளும் விதம் என அனைத்தாலும் அவர்கள் ஒருபடி உயர்ந்தவர்களாகவே கதைசொல்லிக்குத் தெரிகிறார்கள். குறிப்பாக தோப்ரூவின் குடும்பத்திலுள்ள பானுமதி என்ற இளம்பெண்ணை மணந்து நிரந்தர வனவாசியாகவே மாறி விடலாம் என்றும் எண்ணுகிறார். கலப்படமேதுமற்ற தூய நீராகத் தோன்றுகிறது தோப்ரூ குடும்பத்தார் அவர் மேல் காட்டும் அன்பும் மரியாதையும்.

மேலும், அங்குள்ள பழங்குடிகள் குளிரை வெறும் பசுந்தளைகளைப் போர்வையாக போர்த்தி எதிர்கொள்ளும் விதம், விளைச்சலை ஒட்டுமொத்தமாக தனதாக்கிக் கொள்ள விரும்பும் தரகர் கூட்டம், விவசாயத்தைக் கற்றுக்கொண்டு குடியானவர்கள் ஆன பின் அங்குள்ள கல்வி கற்கும் பாடசாலையில் மாணவர்களின் வருகை அதிகரிப்பது, லப்டுலியா என்ற வளமான பிரதேசத்தைக் கண்டுபிடித்து அதனை பேணிக்காத்த இயற்கையார்வலர் எப்பொழுதும் போல புறக்கணிக்கப் படுவது என நாவல் நெடுக கணத்திற்குக் கணம் மாறிக் கொண்டேயிருக்கும் நிகழ்வுகளும், அதைப் பற்றிய சித்தரிப்புகளும் நம்மையும் அக்காட்டின் ஒரு அங்கமாக்கி விடுகிறது.

இயற்கையும் மனிதனும்

ஜமீனுக்கு சொந்தமான அனைத்து காட்டு நிலங்களும் விவசாயம் தெரிந்த குடியானவர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. அவர்கள், அதனை பண்படுத்தப்பட்ட விவசாய நிலங்களாக மாற்றுகிறார்கள்.
தான் ஒன்றிப் போயிருந்த காடும், அதன் இயற்கையும் விரைந்து கிராமமாக மாறிக் கொண்டிருப்பதை வேதனையுடன் காண்கிறார் கதைசொல்லி. இந்த மாற்றத்திற்கான முக்கியமான கருவியாக தன்னை செயலபட வைத்த ஊழின் மேல் வருத்தம் கொள்கிறார். இது இயல்பாகவே குடியானவர்கள் மேல் ஒரு விலக்கத்தையும், காட்டோடு இயைந்திருக்கும் பழங்குடிகள் மேல் ஒரு நெருக்கத்தையும் கதைசொல்லிக்கு ஏற்படுத்துகிறது.

விவசாய நிலங்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றி அமைந்த குடியானவர்களின் குடியிருப்பும் அக்காட்டின் எழிலை குலைத்துப் போட்டு விடுகின்றது. குடியானவர்களின் உழைப்பு அக்காட்டை மாற்றியிருந்தாலும், அவர்களின் அசிரத்தையற்ற குடியிருப்புகள் அவர்களின் நாடோடி வாழ்க்கையிலிருந்து விளைந்தவையாக காண்கிறார் கதைசொல்லி. இன்று இந்நிலம், விளைச்சல் குன்றினால் நாளை வேறு நிலம் என்ற மனநிலை அவர்களது. நிலத்தை சுமந்தலைபவர்களல்ல இக்குடியானவர்கள். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அப்போது இருந்திருந்தால், குடியானவர்களின் அழகுணர்ச்சி மேம்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம்.

மனிதனால் உருவாக்கப்படும் அனைத்துமே இயற்கைக்கு சற்று ஒருபடி குறைவானதாகவே அவதானிக்கப்படுகிறது. தானாய் அல்லது இயற்கையாய் வளரும் காட்டைவிட, மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட விளைச்சல் நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களின் வளர்ச்சி அத்தனை எழிலானதல்ல. ஆனால் மனிதனையும் இயற்கையின் ஒரு அங்கமாக வைத்துப் பார்க்கும் போது, இந்த செயற்கை மற்றும் இயற்கை என்ற இருமை இல்லாமலும் போய்விடுகிறது. சொல்லப்போனால், அனைத்தும் இயற்கையாகிவிடுகிறது. காடு மட்டும் இயற்கையல்ல. அதன் பரிணாம வளர்ச்சியான கிராமம், நகரம், மாநகரம், நாடு, வளரும் நாடு, வளர்ந்த நாடு என அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இயற்கை மாறி விடக் கூடும்.

நாவலின் இறுதியில், அந்த ஜமீன் காட்டில் இருந்து விடைபெறும் பொழுது வனதேவதைகளின் கற்பனையின் ஸ்தூல வடிவமான இக்காட்டை அழித்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கோரி நிற்கிறார், நகரதேவதைகளின் கற்பனைகளுக்கு ஸ்தூல வடிவம் கொடுத்த இக்கதைசொல்லி.

Leave a comment