ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

காலை நடையில் திடீரென நம்முன் முளைத்தெழுந்திருக்கும் செடி நம்மை திகைக்க வைப்பதில்லை. ஆனால், திடீரென அங்கு அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு ஒரு பதட்டத்தை உருவாக்கத்தான் செய்கிறது. இது எங்கிருந்து வந்தது என்ற ஒரு திகைப்பு ஒரு புறம் என்றால், அது வந்த பாதையை அறிய முயல்வதற்கான இயலாமை இன்னொரு புறம். காலை நடையின் போது வெகு தொலைவில் இக்குரங்கு வந்து கொண்டிருப்பதை கவனிக்கும் வாய்ப்பு நமக்கிருந்திருந்தால் இந்த திகைப்பு இருப்பதில்லை. கிட்டத்தட்ட நவீனம் என்று நமக்கு முன் வைக்கப்படும் அனைத்தும் இக்குரங்கு போலத்தான். இந்நவீனத்தின் ஊற்றுக்கண் மரபில் இருப்பதை அறியும் வாய்ப்பை இத்திகைப்பு தடுத்து விடுகிறது. இது நவீனத்தின் மேல் ஏற்றி வைக்கப்டும் ஒரு சுமையும் கூட. இந்த ஊற்றுக்கண்ணை அறியும் வாய்ப்பு கிடைக்கும் போது, நவீனமும், நாமும் சற்று இலகுவாக முடிகிறது. எஸ்.நீலகண்டன் அவர்களின் இப்புத்தகம் (ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரியல் பொருளாதாரம், காலச்சுவடு பதிப்பகம்) இதைத்தான் செய்கிறது. 

பொருளியல் என நவீனம் நம்முன் வைக்கும் அனைத்தையும் ஆடம் ஸ்மித்திற்கு முந்தைய கால கட்டத்திலிருந்து கார்ல் மார்க்ஸ் வரை வகைப்படுத்தி தொகுத்திருக்கிறது இப்புத்தகம். மேலும், பொருளியல் என்பது அளிப்பு-நுகர்வு (Demand and Supply) என்ற இரண்டு காரணிகளால் மட்டுமே ஆனது என்று எளிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இப்புத்தகம் ஒரு Roller Coaster ride தான். இந்த எளிமைப்படுத்துதல்களுக்கான காரணத்தையும் இப்புத்தகத்தில் வரும் மார்க்ஸ் பற்றிய அத்தியாயத்தில் உணர்ந்து கொள்ள முடியும். பெரும்பாலான மனிதர்களை படைப்பூக்கமற்ற மந்தையாக வாழ மட்டுமே தற்போதைய பொருளாதார வடிவமான முதலாளித்துவம் நிர்பந்திக்கிறது என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். தான் செய்யும் பணியையே முழுமையாக (End to End) தெரிந்திருக்கும் தேவையும் வாய்ப்பும் இல்லாமலிருக்கும் இந்நிலையை முதலாளித்துவம் வேலைப்பகிர்வு (division of labour?) என்று ஆராதிக்கிறது என்றால், மார்க்சியம் இதனை அந்நியமாதல் (alienation) என்று நிந்திக்கிறது.

வரவு செலவுகளை துல்லியமாக மதிப்பிடும் double entry book keeping system (Debit and Credit should net to zero என்ற வங்கி கணக்கியலின் பாலபாடம்) கிபி 1426 லேயே நடைமுறையில் இருந்தது என்பதை தெரிந்து கொள்ளும்போதும்; இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அது உருவாக்கியிருக்கும் அமைப்புகளையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பொருளியல் அடிப்படைகளின் (சமூகத்தின் தேவைகள், அதன் ஸ்தூல வடிவமான உற்பத்தி, உற்பத்தியின் காரணிகள், உற்பத்தியின் மதிப்பு, அதன் வழி கிடைக்கும் செல்வம், அச்செல்வத்தை பகிரும் வழிமுறைகள்…) வழியாகவும் தொகுத்துக் கொள்ள முடியும் என்று உணரும் பொழுதும் நாம் சுமந்து கொண்டிருக்கும் நவீனத்தின் சில சுமைகளை இறக்கி வைக்க முடிகிறது. 

அங்காடி வழி பொருளாதாரம்

ஆடம் ஸ்மித் (Adam Smith, Scottish philosopher and economist, 1723-1790) தன்னுடைய Wealth of Nations என்ற புத்தகத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (அல்லது செல்வம்), அதனுடைய உற்பத்தி திறனைப் பொறுத்தே அமைகிறது என்கிறார். ஒரு நாட்டின் செல்வம் என்பது அதனுடைய தங்கம் மற்றும் வெள்ளி இருப்பாக மட்டுமே கருதப்பட்ட முடியாட்சிகளின் இறுதி காலத்தில் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார். விவசாயம் மட்டுமே அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழில் என வாதிட்ட Physiocrats என்பவர்களும் இதே காலகட்டத்தில் இருந்தவர்கள். ஒரு விதை நெல்லிருந்து ஓராயிரம் நெல் மணிகள் உற்பத்தி ஆக முடியும் என்றால், விவசாயத்தை விட எந்த தொழிலால் இந்த உற்பத்தி திறன் சாத்தியம் என்பது Physiocrats களின் வாதம். உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் மோகம் அல்லது இயற்கையுடன் போட்டியிடும் மோகம் இங்கிருந்து தான் தொடங்கியதோ என்றும் எண்ண வைக்கிறது. Monsonto என்ற நிறுவனம் Physiocratsகளால் உருவாக்கப்பட்டது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இன்று வரை இம்மோகம் தொடர்கிறது (AI, Automation, 70hours/week என). இன்னமும் தொடரும். 

இந்த விவசாய உற்பத்தியின் காரணிகளாக அல்லது பங்கேற்பாளர்களாக நிலவுடைமையாளர்கள், நிலத்தில் உழைப்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என மூவகையினரை சுட்டுகிறார் ஆடம் ஸ்மித். உழைப்பவர்களுக்கு கூலி; நிலவுடைமையாளர்களுக்கு வாரம் ( வாடகை); முதலீட்டாளர்களுக்கு லாபம் என உற்பத்தி இம்மூன்று வர்க்கத்தினர்களிடையை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 

இந்த உற்பத்தியையும் அதன் காரணிகளையும், உற்பத்தின் பகிர்வையும் மரபு வழியாகவும், கட்டளைகள் வழியாகவும் (இன்னார் இந்த உற்பத்தியில் மட்டும் தான் ஈடுபடவேண்டும்; உற்பத்தியின் பகிர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை உருவாக்கிய வழிகள்) நிர்வகித்த  சமூகம் தன் விதிகளை காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டதின் விழைவு தான் அங்காடி வழி பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது.

எங்கிருந்து இந்த முதலீட்டாளர்கள் என்ற வர்க்கம் வந்தது என்ற குழப்பம் வராமலில்லை. வேட்டைச் சமுகத்திலிருந்து நிலவுடைமை அல்லது விவசாய சமூகமாக பரிணமித்த பிறகு நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களுடைய நிலத்தில் உழைக்கும் விவசாயக் கூலிகள் மற்றும் அவர்களுடைய பிற தேவைகளை (உடை, உறவிடம் போன்றவற்றை) பூர்த்தி செய்யும் கைவினைஞர்கள் போன்றவர்களே அச்சமூகத்தின் பொதுவான உட்கூறுகள். இதில் நிலப்பிரப்புக்கள் தான் முதலாளிகள் மற்ற அனைவருமே உழைக்கும் வர்க்கம் தான். ஆனால், ஆடம் ஸ்மித் நிலப்பிரபுக்களை வெறும் நில வாடகை பெறுபவர்களாக சுருக்கி விட்டு, முதலீட்டாளர்கள் என்ற உற்பத்தி காரணியை வரையறுத்ததின் பின்னணியை இப்புத்தகத்தின் வழியாக நம்மால் உணரமுடிகிறது. முதலீட்டாளர் என்ற வகைமை ஆடம் ஸ்மித்தால் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே அவர் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்த அஙகாடி வழி (Market driven)பொருளாதாரத்தை கூர்ந்தவதானிப்பதின் வழியாக இந்த மூன்றாம் வர்க்கத்தை வரையறுக்கிறார்.

நிலப்பிரபுக்களின் சுயநலத்தில் (தானியத்தை வெவ்வேறு பொருள்களுக்காக பரிவர்த்தனை செய்யும் நுகர்வு வேட்கை) ஆரம்பிக்கிறது இந்த அங்காடி வழி பொருளாதார அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும். இது பொருட்களின் தேவையை அதிகரிக்கிறது. இயல்பாகவே இது கைவினைக் கலைஞர்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த சுழற்சியால், நிலப்பிரபுக்கள் அங்காடியில் பரிவர்த்தனை செய்யும் தானியத்தின் அளவும் அதிகரிக்கிறது. அது நாள் வரை அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே உழைத்த விவசாயக் கூலிகள், அதிக தானிய உற்பத்திக்காக உழைக்கத் தூண்டப்பட்டார்கள், உயர்த்தப்பட்ட கூலி வழியாக.  இயல்பாகவே, இது கைவினைஞர்களின் சேமிப்பு அல்லது உபரி உயர வழி வகுத்தது. அந்த சேமிப்பு முதலீடானது. நிலத்துடன் பிணைப்பற்ற இவர்கள் முதலீட்டாளர்கள் ஆனார்கள். புது உற்பத்திக் காரணி தோன்றியது. உற்பத்தியில் இவர்களின் பகிர்வு லாபம் என்றானது. ஆடம் ஸ்மித் வரையறுக்க முயன்ற இந்த அங்காடி வழி பொருளாதாரம், பின்னர் முதலாளியம் (Capitalism) என்ற கலைச் சொல்லாக மாறியது என்கிறார் எஸ்.நீலகண்டன். Capitalism is an economic system primarily driven by Markets என்ற புரிதலுக்கு வரமுடிகிறது. மார்க்சியம், இதனை நிலப்பிரபுக்களுக்கும், கைவினைஞர்களுக்கும் நடந்த முரணியக்கம் என்கிறது. ஆடம்ஸ்மித், இது அவ்விரு தரப்புக்களும் நடந்த ஒத்திசைவு என்கிறார். ஒத்திசைவோ, முரணியக்கமோ, முதலாளியத்தின் விதை சுயநலம். அதுதான் இயல்பானது என்பதே நிதர்சனம். பொதுநலன்கள், அச்சுயநலத்தின் உபவிளைவுகள் மட்டுமே என்கிறார் ஆடம் ஸ்மித். 

முதலாளியத்திற்கு, ஆடம் ஸ்மித்தின் முக்கிய கொடையாக குறிப்பிடப்படுவது, உற்பத்தி திறனை அதிகரிக்கும் உத்தியாக வேலைப் பகிர்வை அவர் முன்வைத்தது. தொழிற்புரட்சியின் விதை என இதைக் குறிப்பிட முடியும். இதன் பிறகு பட்டறைகள் தொழிற்சாலைகளாக மாறி அங்காடி வழி பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தன. நாட்டின் செல்வம் பெருக ஆரம்பித்தது. குலத்தொழில் என்ற ஏற்பாடு படிப்படியாக இல்லாமல் ஆனது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த மாற்றத்தை தாகூர் போன்ற கவிஞர்கள் தொழிலும் வணிகமும், லட்சுமியின் ஆதிக்கத்திலிருந்து அகோர காளியின் கைகளுக்கு சென்று விட்டது என்று அவதானித்தது நினைவுக்கு வருகிறது. தொழில் புரட்சி லாப வெறியால் உருவானது என்பதே இதன் பொருளாகக் கொள்ள முடியும்.

உற்பத்தி மதிப்பு

உறபத்தி காரணிகளான கூலியும், வாரமும், லாபமும் உற்பத்திப் பொருளின் மதிப்பை நிர்ணயித்தன என்கிறார் ஆடம் ஸ்மித். அதாவது, உழைப்பு மட்டுமே ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்கிறார். முதலீட்டை உழைப்பாக அவர் கருதவில்லை. ஒரு நிலத்திலிருந்து ஆறு மூட்டை நெல் ஒரு விவசாயி உழைப்பதால் விளைகிறதென்றால், அந்த விவசாயிக்கு கூலி 1 மூட்டை; நில உரிமையாளருக்கு வாரம் அல்லது வாடகை 2 மூட்டை நெல்; மீதி 3 மூட்டை நெல் முதலீட்டாளரின் லாபம் என உற்பத்தி பகிரப்படுகிறது. இப்பகிர்வை நிர்ணயிப்பது அங்காடியின் தேவையாக மட்டுமே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் தலையீடுகள் இப்பகிர்வில் குறைவாகவே இருக்க வேண்டும் என்கிறார். இதனையே அரசியல் செவ்வியல் பொருளாதாரம் என்று சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம். சுதந்திர சந்தை அல்லது அங்காடி (free market) என்பது ஆடம் ஸ்மித்தின் கனவு. இன்று முதலாளியத்தின் குளறுபடிகளுக்கான காரணம், welfare states என்ற பெயரில் நடக்கும் அரசாங்கத்தின் அத்துமீறல்கள் (the bail out culture) தான் என்ற கூக்குரல்களும் உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்திருப்பதை இதனுடன் பொருத்தி புரிந்து கொள்ள முடிகிறது.

வாரம்’ (வாடகை) எனும் சுவாரஸ்யம்

ஒரு விவசாய நிலத்திற்கு வழங்கப்படும் வாடகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற தகவல் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஒரு சேர அளிக்கிறது. இயற்கையின் கொடையான வளமான நிலத்திற்கான வாடகை இயற்கையின் கஞ்சத்தனத்தால் உருவான வளமற்ற நிலங்கள் சாகுபடிக்கு வருவதால் நிகழ்கிறது என்ற தகவல் புன்னகையை வரவழைக்கிறது. வளமான நிலம் 100 மூடை நெல் உற்பத்தி தருமென்றால், வளமற்ற நிலத்தில் இடப்படும் அதேமுதலீடும், மனித உழைப்பும் 80 மூட்டை நெல்லையே தரும். 20 மூடை வித்தியாசம், வளமான நிலத்தின் உரிமையாளரால் வாரமாக கோரப்படுகிறது. உற்பத்தியின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, வளமற்ற நிலங்கள் அதிகளவில் சாகுபடிக்கு வருகின்றன. இது எந்த விதமான உழைப்புமின்றி நிலவுடைமையாளர்களின் வருமானத்தை உயரச் செய்கிறது. எனவேதான், ஆடம் ஸ்மித் உழைப்பு மட்டுமே மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்கிறார். இன்று நாம் காணும் நில உச்சவரம்பு சட்டங்களுக்கான தேவைகளை ஒரு வகையாக புரிந்து கொள்ள முடிகிறது.

உழைப்பும் மதிப்பும்

உழைப்பு மட்டுமே ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை என்ற ஆடம் ஸ்மித்தின் பார்வையை அவருக்குப்பின் வந்த புகழ் பெற்ற பொருளியல் அறிஞரான ரிக்கார்டோ ( David Ricardo, A British political economist, 1772-1823) சற்று மாற்றியமைக்கிறார். மார்க்சிய இயங்கியலின் அடித்தளம் ஹெகலிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என்றால், அதன் பொருளியல் பார்வைகளை வடிவமைத்தது ரிக்கார்டோவின் கொள்கைகள் எனலாம்.

ஒரு பொருளின் மதிப்பு, அதன் உற்பத்திக்குத் தரப்படும் உழைப்பால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார். கூலி மட்டுமல்ல; முதலீடும் முந்தைய உழைப்பின் சேமிப்பு தான் என்று உழைப்பின் எல்லையை விரிவாக்குகிறார். வாரம் என்பதை ஏதோ ஒரு வகையில் கூலியுடனும், லாபத்துடன் தொடர்புபடுத்தி(இது முழுவதுமாக எனக்கு புரியவில்லை) கூலி-லாபம் என்ற சமன்பாட்டிற்குள் உற்பத்தியைக் கொண்டு வருகிறார். கூலியும் லாபமும் எதிரெதிர் திசையில் இயங்குபவை என்ற புரிதலுக்கு வந்து சேர்கிறார். கூலி அதிகரித்தால் லாபம் குறையும் என்ற முதலாளியத்தின் பாலபாடமிது. 

ரிக்கார்டோவின் இன்னொரு மிக முக்கிய பங்களிப்பாக பன்னாட்டு வாணிபக் கொள்கையை குறிப்பிடுகிறார் எஸ்.நீலகண்டன். அனைவருமே அனைத்தையும் உற்பத்தி செய்வதை விட ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஒவ்வொரு நாடும் செல்வ வளம் பெறமுடியும் என்கிறார். ஆடம் ஸ்மித் கொண்டிருந்த பயன் மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு பற்றிய குழப்பங்களையெல்லாம்  ரிக்கார்டோ சரி செய்ததையும் இப்புத்தகம் விளக்கியிருக்கிறது.

இன்னும் நிறைய முக்கியமான பொருளாதார அறிஞர்களையும் பற்றியும், அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. அனைத்தையும் உட்செரித்து கொள்வது அத்தனை எளிதல்ல என்றாலும், ஆடம் ஸ்மித்தில் தொடங்கி கார்ல் மார்க்ஸை நோக்கி பயணிக்கும் இச்சுழல் பயணம் நிறைய சுவாரஸ்யங்களை அளிக்கிறது. பொருளியலின் பல கலைச் சொற்கள் முன் திகைத்து நிற்பதை தடுத்து விடுகிறது. 

Leave a comment