
சமூகம் என்பது கற்பனை அல்லது கும்பல் என்பதை உன்னதப்படுத்தும் ஒரு வார்த்தை என்பது சற்று திடுக்கிட வைக்கிறது. கீர்க்கேகார்ட் (Søren Kierkegaard, A Danish Philosopher 1813-55 ) மனிதர்களை கும்பல் என்றே உருவகிக்கிறார். இக்கும்பலால், அதன் பகுதியான தனிமனிதன் எந்த விதத்திலும் பாதிப்படைவதில்லை அல்லது தன்னை வரையறுத்துக் கொள்ள முடியாது என்கிறார். கிட்டத்தட்ட தனிமனித மனம் அல்லது ஆன்மா அல்லது அகம் மட்டுமே உள்ளது. இவ்வகத்திற்கும் புறத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை அல்லது அகம் புறத்தாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை மறுக்கிறார் கீர்க்கேகார்ட். இதனை இருத்தலியத் தத்துவத்தின் விதை என சுட்டிக் காண்பிக்கிறது S.V. ராஜதுரை (SVR) அவர்கள் எழுதிய இருத்தலியமும் மார்க்சியமும் என்ற புத்தகம்.
இருத்தலியமும் மாயாவாதமும்
புறத்தில் உள்ளவற்றால் நாம் கட்டமைக்கப்படுகிறோம் என நம்புவதை இவ்வாழ்க்கையின் அபத்தமாக காண்கிறது இருத்தலியம். கிட்டத்தட்ட இந்தியத் தத்துவம் பற்றிய பேராசிரியர் ஹிரியண்ணாவின் புத்தகத்திலுள்ள நிஸ்பிரபஞ்சக் கொள்கை (நிர்குண பிரம்மம்) அல்லது மாயாவாதம் நினைவுக்கு வருகிறது. பிரம்மத்தின் பரிமாண வளர்ச்சி தான் இவ்வுலகம் என்ற ஸபிரபஞ்சக் கொள்கைக்கு (சற்குண பிரம்மம்) எதிராக, பிரம்மம் பரிணாம வளர்ச்சியடைந்ததைப் போல் தோற்றமளிப்பது தான் இவ்வுலகம் என்கிறது நிஸ்பிரபஞ்சக் கொள்கை.
புறம் என்பது அகத்தின் மயக்கமின்றி வேறில்லை. இந்த அகத்தின் மயக்கத்திற்குக் காரணம், கடவுளை விட்டு நம் அகம் விலகியிருப்பது தான் என்கிறார் கீர்க்கேகார்ட். கிறிஸ்துவின் வருகையோடு இவ்வுலகம் தன் முழுமயை எட்டி விட்டது என்று நம்புபவர். அதற்குப் பின், இவ்வுலகம் உருவாக்கிக் கொண்ட, அரசு, ஜனநாயகம் என்ற கருத்துக்களும், அதன் ஸ்தூல வடிவங்களும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அறிவியல் வளர்ச்சி என அனைத்தையும் வெற்று மயக்கங்கள் என்பதற்கு ஆன்ம வலிமை வேண்டும். இல்லையெனில், மன்னராட்சி மற்றும் சமயங்களின் அரவணைப்பிலிருந்து (அல்லது கட்டுப்பாடுகளிலிருந்து) ஜனநாயகம், அறிவியல் என்ற சமூக மாற்றத்தினால் பெரும் பாதிப்படைந்தவராக இருக்க வேண்டும். கீர்க்கேகார்ட், இவ்விரண்டின் கலவையாகத் தான் எனக்குத் தோன்றுகிறார்.
முழுமையிலிருந்து முழுமைக்கு
ஹெகல் ( Georg Wilhelm Friedrich Hegel, German philosopher, 1770-1831) பற்றிய அத்தியாயத்தில், மிக விரிவாக அவரது தத்துவத்தையும், தத்துவ அமைப்பின் தேவையையும் பற்றி எழுதியிருக்கிறார் SVR. ஆத்மா எங்கிருந்து வந்ததோ அங்கே திரும்பிச் செல்வதுதான் ஹெகலின் தத்துவமும் இயங்கியலும் என அவரது தத்துவத்தை ஒரிரு வார்த்தைகளாக அறிந்து வைத்திருக்கும் என் போன்றவர்களுக்கு இப்புத்தகம் விரிவான ஒன்றுதான். அதிலும், முழுமை அல்லது உலக ஆன்மா அல்லது கருத்து முழுமைக்குத் திரும்புவதுதான் இவ்வுலகம் என்பதை (தேவிபிரசாத் சட்டடோபாத்யாயா, பேக்கன் முதல் மார்க்ஸ் வரை), மோன நிலையில் இருந்து போரடித்துப் போன உலக- ஆன்மா, சாசகம் வேண்டி மனித ஆன்மாவாக உருமாறி மீண்டும் மோனநிலைக்கே திரும்பி விடுகிறது என்ற பகடியாக பார்ப்பவர்களுக்கும் இது விரிவான புத்தகம் தான்.
முழுமுதல் கருத்து தன்னுடைய முழுமையை உணர்ந்து கொள்வதற்கான பயணம் தான் இவ்வுலகம் என்கிறார் ஹெகல். கிட்டத்தட்ட, இது ஸபிரபஞ்சக் கொள்கையை ஒத்திருக்கிறது. பிரம்மம் என்பதற்கு பதிலாக ஹெகல் ‘கருத்தை’ முன்வைக்கிறார். ஹெகலின் தத்துவம் கருத்துமுதல்வாத்தைச் சேர்ந்தது. இக்கருத்தின் விரிவடைதலே இயற்கை அல்லது வெளி (space); இதன் பரிணாம வளர்ச்சியே வரலாறு அல்லது காலம்(time) என்கிறார் ஹெகல். இதனை மேலும் தெளிவாக்கியது ஞானம் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் பின்வரும் வரிகள்:
எதனாலோ, எப்படியோ இந்தப் பூமியில் மானுடப்பிரக்ஞை என்னும் மாபெரும் கூட்டியக்கம் உருவாகிவிட்டது. அது தன்னை எல்லா திசைகளிலும் விரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் மையத்தில் தன்னை தொகுத்துக் கொண்டும் இருக்கிறது. அந்த விரிதலே அறிவியக்கம். அந்த மையச்செறிவே ஞானம். அவ்விரு செயல்பாடுகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
(https://www.jeyamohan.in/197445/)
சமகாலத்தில் நின்று கொண்டு, அது வரை நடந்திருந்த கருத்தின் (அல்லது அறிவின்) விரிவையும், வளர்ச்சியையும் தொகுத்துக் கொள்வது தான் வரலாறு என்ற புரிதலுக்கு இட்டுச் செல்வதுடன், ஞானம் என்பது இயற்கையை தொகுத்துக் கொள்ளும் ஒரு முயற்சிதானா என்ற ஒரு கேள்வியையும் எழுப்பிக் கொள்ள வைக்கிறது இவ்வரிகள்.
அரசு – தெய்வீகத்தின் சாரம்
கீர்க்கேகார்ட் எப்படி கிறிஸ்துவின் வருகைக்குப்பின் இவ்வுலகம் தன் முழுமையை எட்டிவிட்டது என்ற முடிவுக்கு வந்தாரோ, ஹெகலும் அதுபோன்ற ஒரு முடிவுக்கு வருகிறார். கருத்து அல்லது உலக ஆன்மா, தன்னுடைய பரிணாம வளர்ச்சியில் தன் மெய்யுருவை கண்டு கொண்டது ‘அரசு’ என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்ட பின்பு தான் என்கிறார். State is the Divine Idea as it Exists in Earth என்கிறார். அதே சமயத்தில், கருத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு மைல்கல்லான மதத்தை ஹெகல் நிராகரிக்கவும் இல்லை.
மதத்திற்குப் பின் நடந்த இப்பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் டெகார்த்தேவின் ( René Descartes, French philosopher and scientist, 1596-1650) அறிவுக் கொள்கை. சமயம் அல்லது மதம் உருவாக்கித் தந்திருந்த கிறிஸ்துவ பேரண்டத்திலிருந்து மனிதனை விடுவித்து கடுங்குளிரில் தனியே நிறுத்தி விட்டது அறிவுக் கொள்கை என்கிறது இப்புத்தகம். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தளைகளில் இருந்து விடுபட்டு முதலாளித்துவ சமூகத்திற்கு மாறுவதற்கு உறுதுணையாக இருந்தது இந்த அறிவுக் கொள்கைதான். அறிவின் அடிப்படையில் இயங்கும் சமூகங்களில், கடவுள் மக்களை நல்வழிப்படுத்துவதில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
முதலாளித்துவ சமூகத்தின் இயங்கு முறையில் நசிவடைந்தவர்களை ஆற்றுப்படுத்தும் இடமாக மதங்களும் அதன் கடவுள்களும் பதவியிறக்கப்பட்டனர் அல்லது அறிவின் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டனர் என தொடர்ந்து வாதாடிச் செல்லும் இப்புத்தகம், மத அமைப்புகள் முதலாளித்துவத்தின் தீங்கைச் சுட்டிக்காட்டும் தார்மீகப் பொறுப்பை தட்டிக் கழித்தது என்கிறது. அறம், திறமையாகவும்; நல்லது, கெட்டது அறிவுக்கு உகந்தது, ஒவ்வாததாகவும் மாறி நிற்கிறது அறிவுச் சமூகத்தில்.
அறிவின் போதாமைகள்
அறிவின் விரிவு, கடவுளுக்கும் தனி மனிதனுக்குமிடையே உள்ள இடைவெளியை கடக்க முடியாத பாதையாக மாற்றி விட்டது என்கிறார் கீர்க்கேகார்ட். இவ்விடைவெளியை கடப்பதற்கு அறிவை கைவிட்டு நம்பிக்கைக்கு, கடவுள் நம்பிக்கைக்கு திரும்புவது மட்டுமே ஒரே வழி என்றார். கிட்டத்தட்ட பாஸ்கலும் (Blaise Pascal, French mathematician and physicist, 1623 – 62) இதைத்தான் சுட்டிக் காட்டுகிறார். கடவுள் என்ற சாத்தியப்பாடு நிறைவேறாத ஒன்றாக இருப்பதற்கு அறிவுக் கொள்கை காரணமாக இருக்கலாம் என்பதால் இதனை அவலக் கொள்கை (Tragic Vision) என்கிறார். அறிவு தேவைதான். ஆனால் அது மட்டுமே போதாது என்று கீர்க்கேகார்ட் போல ஒட்டுமொத்தமாக அறிவை நிராகரிக்காததால், பாஸ்கலை இருத்தலியத் தொந்தரவுகளின் சாயல் மட்டுமே கொண்டவர் என்கிறார் SVR.
கிட்டத்தட்ட ஹெகலும், பாஸ்கலிடம் ஒத்துப் போகின்றார். மனித அறிவை பகுதி அறிவு அல்லது குறைபாடுடையது என்று தான் குறிப்பிடுகிறார். அது முழுமையானதல்ல, ஆனால் முழுமையை நோக்கிய பயணத்தில் எப்போதும் உள்ளது என்கிறார். பாஸ்கலோ அறிவு முட்டுச் சந்தோடு நின்று விட்டது என்கிறார். முட்டி மோதி, அது விரிவடைந்து கொண்டே இருக்கும் போது கடவுள் என்பது நிறைவேறிய சாத்தியப்பாடாக இருக்கலாம். அதனால் தான் சமூக இயக்கம் அரசு என்ற கருத்துருவாக்கத்தோடு நின்று விடவில்லை. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வழியாக அடுத்த கட்டமான, சோஷலிச அரசு, கம்யூனிச அரசு என்ற இலக்கை நோக்கி அறிவின் துணை கொண்டு விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இந்த அவதானிப்புக்கள் அனைத்தும், டெகார்த்தே, பாஸ்கல், ஹெகல் மற்றும் கீர்க்கேகார்ட் ஆகியோருடைய அத்தியாயங்களிலிருந்து உருவானவை மட்டுமே. இதற்குப் பிறகுதான் நீட்சே. ஹைடெக்கர்,, சார்த்தர் என மிக முக்கியமான இருத்தலியல்வாதிகளைப் பற்றிப் பேசுகிறது இப்புத்தகம். இருத்தலியத் தொந்தரவிற்கான காரணங்களை மார்க்சியத்தின் அந்நியமாதல் என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டு களைய முயல்கிறது இப்புத்தகம். தமிழில் வெளிவந்த மிக முக்கியமான தத்துவப் புத்தகமாகவும் கருதப்படுகிறது.
அறிஞர்களின் போதாமை
ஏனோ தெரியவில்லை, மனம் கீர்க்கேகார்ட்டை சுற்றியே வருகிறது. மரணத்தை வைத்து அவர் பயமுறுத்துவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். மனித வாழ்க்கையை அழகியல், அறவியல் மற்றும் கையறுநிலை என மூன்றாக பிரித்துக் கொள்கிறார். இளமை, நடுவயது மற்றும் முதுமை தான் அவை. ஆனால், முதுமையின் கையறு நிலைதான் நிசர்சனமானது, அதைத்தான் இளமை முதல் நாம் சுமக்கிறோம் என்கிறார். இவ்வாழ்க்கை பாவத்தால் விளைந்தது என்ற First Sin syndrome இது என இப்புத்தகம் சரியாக சுட்டிக் காண்பிக்கிறது. எல்லைக்குட்பட்ட மனிதன் எல்லையில்லா ஒன்றில் கலப்பதே மரணம் என்று ஹெகல் சற்று ஆசுவாசப்படுத்துகிறார். ஆனால் பின்வரும் கவிதை தரும் ஆசுவாசமும் பலமும் அளப்பரியது.
காலத்தலைவன்
இருட்டில்
ஓர் எலி தன் குஞ்சுக்கு
பூனையைச் சுட்டிக்காட்டி கற்பித்தது
அபாரமான பார்வைத்திறன்
எந்த இருளிலும் பார்ப்பார்
மிகக்கூரிய செவி
ஒரு முடி நிலத்தில் விழும் ஓசைக் கேட்டால்
எவருடைய முடியென அறிவார்.
அமைதியே உருவானவர்
புரட்டியிடுவதுகூட
மென்மயிர்க்கையால்தான்
பொறுமையின் வடிவம்
முடிப்பதற்கு நாலைந்து மணிநேரம் எடுத்துக்கொள்வார்
கருணைமயமானவர்
தம் உயிரை பலதடவை திருப்பித்தருவார்
சுவையறிந்தவர்
வாலின் நுனியைக்கூட ரசித்து உண்பார்
ஒரு பரபரப்பும் இல்லை
காலத்தின் பெருந்தலைவன்!
(தொடுதிரை. கல்பற்றா நாராயணனின் மலையாளக் கவிதை. தமிழில் ஜெயமோகன்)
அறிஞர்களின் சுமையான தர்க்கமெனும் கால்கள் கவிஞர்களிடம் இல்லை. கவிஞர்களிடம் இருப்பதெல்லாம் படிமங்களைக் கொண்டு இவ்வுலகை அவதானிக்கும் கற்பனைச் சிறகுகள் மட்டுமே. காலம் புரட்டிப் போடும் எலிகள் தான் நாம் என்ற புரிதலுடன், அதிமானுடக் கனவு கொண்ட நீட்சே பற்றிய அத்தியாயத்திற்குள் நுழைவது ஒரு நகைமுரண்.
