
சிலவற்றை அல்லது இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான். இந்த கலைமனத்தின் நிறைவின்மையின் ஊற்றுக்கண் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை நோக்கித்தான் தர்க்கபுத்தி இயங்கும். சுப்புவின் துயர் மிகுந்த பால்யமும், அங்கிருந்து அவனுக்கு கிடைக்கும் சமூகம் மற்றும் பாலியல் பற்றிய புரிதல்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் அலாதியானது. வாசகர்களை இயல்பாக உள்ளிழுத்துக் கொள்கிறது இந்த கவித்துவமான சித்தரிப்புக்கள். இப்புரிதல்கள் அல்லது அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து சுப்புவை ஒரு தனித்தீவாக மாற்றி விடுகிறது. சில சமயங்களில் சுப்புவிடமிருப்பது கலை மனத்தின் நிறைவின்மைதானா? அல்லது சமூகம் அல்லது குறிப்பாக பெண்களின் பாலியல் வேட்கை பற்றிய பிழையான புரிதல்களில் விளைந்த போதாமை தந்த நிலையின்மையா? என்ற கேள்வியும் எழுந்த வண்ணமே தான் இருக்கிறது.
சுப்புவின் மனைவியான பத்மாவின் பால்யமும் துயரம் மிகுந்ததாக இருந்தாலும், அவளிடம் இருக்கும் வாழ்க்கை பற்றிய புரிதல்கள் தர்க்க மனத்திற்கு வெகு இணக்கமானவை. சுப்புவின் காதலை ஏற்றுக் கொள்வதிலிருந்து, அவனை முழுதும் தன்னவனாக மாற்றிக் கொள்ள முயல்வது வரை வரும் பத்மா பற்றிய சித்தரிப்புக்கள், அவள் உணர்வுகளாலோ அல்லது மிதமிஞ்சிய மேதாவித்தனத்தாலோ ஈர்க்கப்படுபவள் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. நவீனம் தரும் சுதந்திரம் பற்றியோ, மரபு என்ற போர்வையில் வரும் அரைகுறையான வழிகாட்டுதல் பற்றியோ பெரிய பிரக்ஞை ஏதுமற்றவளாகவே இருக்கிறாள் பத்மா. சுப்புவை ஈர்க்கும் இந்த பத்மாவின் குணம், திருமணத்திற்குப் பின் அயர்ச்சி தரும் ஒன்றாக அவனுக்கு மாறிப் போகிறது. குறிப்பாக, இந்த விலக்கம் அவர்களுடைய தேனிலவிலேயே ஆரம்பிப்பது சற்று அதிர்ச்சி தரும் ஒன்றாக தோன்றினாலும், அதன் பின் விரியும் சுப்புவின் பால்யம் நம்மை அந்த அதிர்ச்சியிலிருந்து விலக்கினாலும், ஒரு பெரும் துயருக்கு இட்டுச் செல்கிறது, வாழ்ந்து கெட்ட குடும்பம், தொடர் மரணங்கள் என. இது மட்டுமின்றி, அவனுக்கு இளமையில் கிடைக்கும் பாலியல் அனுபவங்களும், புரிதல்களும் தான் பத்மாவிடமிருந்து வெகு விரைவாக அவனை விலகச் செய்கின்றன. ஒவ்வொரு புணர்தலுக்குப் பின்பும், பத்மா இன்னொருவனை தேடிச் செல்லக் கூடும் என்ற அவநம்பிக்கை அவனை கொஞ்சம் கொஞ்மாக சிதைக்கிறது. இந்த சிதைவு இந்நாவலில் சித்தரிக்கப்படும் விதம் a very bold attempt indeed!!!
சமகாலத்தில் இந்த நாவலிற்கான தேவை என்ன என்பதையும் நம்மால் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது. காமசூத்ராவின் நிலமிது. தன்பாலின ஈர்ப்பு/ஓரின புணர்ச்சி; மற்றும் திருநங்கைகள் பற்றி விரிவாக பேசிய மரபிலக்கியங்கள் நமக்குண்டு. இத்தனை இருந்தும் சுப்பு போன்ற நவீனக் கல்வி பயின்றவர்களுக்கு கிடைக்கும் சாமியப்பா போன்றவர்களின் பாலியல் வழிகாட்டுதல்கள் துரதிர்ஷ்டவசமானவை. இன்றைய நவீனம் நம்முடைய மரபுகளின் தொடர்ச்சியோ, பரிணாம வளர்ச்சியோ கிடையாது. இன்றைய உலகளாவிய நவீனத்தின் ஊற்றுக்கண் ஐரோப்பிய சிந்தனை மரபுகளிலேயே பொதிந்துள்ளது. வெறும் பிழைப்புக்காக மட்டுமே நாம் நவீனத்தை பற்றியிருக்கிறோம். பிற அனைத்துக்கும், நவீனத்தின் பெயரால் கைவிடப்பட்ட நம் மரபுகளையே தெரிந்தோ தெரியாமல் சார்ந்திருக்கிறோம். அவை பேணப்படாததாலேயே சாமியப்பா போன்றவர்களின் பிழையான வழிகாட்டுதல்களை மரபான ஒன்று என சுப்பு நம்புகிறான். காமசூத்ரா தந்த மரபிற்கு, நம்மை குற்றவுணர்வில் தள்ளும் நீலப்படங்களின் அவசியமென்ன என்ற கேள்வி இந்நாவலைப் படிக்கும் போது எழத்தான் செய்கிறது. சமகாலத்தில் ஜோசியம் என்ற பெயரில் நடக்கும் பிழையான வழிகாட்டுதல்களும் இங்கு நினைவுக்கு வருகிறது. நம் மரபு வெறும் உதிரிகளால், பொறுப்பற்றவர்களால் கையாளப்படுவது, அவை மீண்டும் ஒரு வலுவான அமைப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டியதின் தேவையை உணர்த்துகிறது. ஐரோப்பா தன்னுடைய நவீனத்தை எப்போதும் தன் மரபுக்கெதிரான ஒன்றாக கட்டமைப்பதில்லை என்பது என்னுடைய புரிதல். நவீனத்தின் அலகான தனிமனித சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்த சார்த்தரை கொண்டாடுபவர்கள், கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு இவ்வுலகம் புனிதமடைந்து விட்டது; அதற்குப் பின் நடந்த அனைத்து சமூக மாற்றங்களும் போலியானவை என்று கூறிய கீர்கேகார்ட்டை குப்பையில் எறிந்து விடவில்லை.
பத்மா போன்றவர்களுக்கு இது போன்ற பிழையான வழிகாட்டுதல்கள் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சுப்பு நுண்ணுணர்வுகளால் ஆட்கொள்ளப்படுபவன். அது சிலசமயம் நுண்பெருக்கியாகவும் வேலை செய்கிறது. பத்மாவின் தொடர் சீண்டல்களால் மனதளவில், அவளிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்ட சுப்பு, ஒரு நாள் முற்றிலும் அவர்களிடமிருந்து (இரு பெண் குழந்தைகளும் பிறந்து விடுகின்றன) விலகிச் சென்றுவிடுகிறான். வாழ்வில் நிறைவின்மை கொண்டவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய துறவறத்தை அல்லது ஞானமார்க்கத்தை போதாமையும், நிலையின்மையும் கொண்ட சுப்பு மேற்கொள்கிறான்.
இப்பயணத்திற்காகவே காத்திருந்தது போல் இந்நாவல் விஸ்வரூபமெடுக்கிறது. ஒட்டுமொத்த நாவலுமே வேறு ஒரு தளத்திற்கு சென்று விடுகிறது. A deep travel into oneself. பத்மாவுடன் சிறு சிறு வீட்டுப் பொருட்களை வாங்கச் சென்ற கடையிலுள்ள பொருட்களின் கலையமைதியின்மையால் அயர்ச்சியுற்ற சுப்பு, காசியில் இருக்கும் ஒழுங்கின்மையில் கலையமைதி கொள்வது நமக்கும் சுப்புவுக்கும் ஒரு சேர ஆச்சரியமளிக்கிறது.
நாவல் என்ற வடிவம் தரும் சுதந்திரக் காற்றை எந்த வித தடையுமின்றி சுவாசித்திருக்கிறார் KJA. அவருடைய நீண்ட விவரணைகளும், சிடுக்கும், கவித்துவமும் நிறைந்த மொழியும் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது. மிக குறிப்பாக அகத்திற்கும், புறத்திற்கும் உள்ள தொடர்பற்ற தன்மையை அல்லது தொடர்பறுந்து போகும் நிலைகளை மிக அற்புதமாக KJAவின் மொழி கையாண்டிருக்கிறது. நினைவுகளில் இருந்து எழும் மொழி, நிஜத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பதும், நிஜம் அல்லது எதார்த்தம் வேறொன்றாக இருப்பதை உணர்ந்து திடுக்கிடுவதும் வெளிப்படுத்தப் பட்ட விதம் சுப்புவின் இப்பயணத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.
சுப்புவின் பால்யம் மற்றும் இல்லறத்தின் போது சந்தித்த சாமியப்பா மற்றும் ரேஷ்மி என்ற திருநங்கையும் சுப்புவின் இந்தப் பயணத்தில் மீண்டும் வருவது KJAவை ஒரு சுவாரஸ்யமான கதைசொல்லியாகவும் எண்ண வைக்கிறது. சுப்புவின் வாழ்க்கையில் இவர்களிருவரும் திரும்ப வரும் தருணங்கள் சற்று செயற்கையாக தோன்றினாலும், சுப்புவை இந்த மீள் சந்திப்புகளின் மூலம் நம்மால் நெருங்கி புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களின் மூலம், தன்னுடையது நிறைவின்மையின் பயணமல்ல, நிலையின்மையின் பயணம் என்று சுப்புவால் புரிந்து கொள்ள முடிகிறது. பத்மாவிடமும், மகள்களிடமும் திரும்பி விட வேண்டும் என்று நினைத்து வருகிறான். ஆனால், காலம் கடந்து விட்டிருக்கிறது. முதுமை, நோய் என பத்மா உருக்குலைந்து போயிருக்கிறாள். மகள்களால் சுப்புவை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுப்புவின் பயணமும், இந்தாவலும் முடிந்து கொண்டிருக்கும் தருவாயில், துரதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைப்பது பெரும் சோர்வும், துக்கமும், மகா சலிப்பும் தான். ஆனால் ஒட்டு மொத்தமாக சுப்புவின் பார்வையில் இருந்து இந்நாவலை தொகுத்துப் பார்க்கும் பொழுது, இந்த உடல் அல்லது யாக்கை என்பது வெறும் நினைவுகளின் தொகுப்புதானா? இதை வைத்துதான் இந்த சமூகத்தையும், பிரபஞ்சத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமா? இந்த நினைவுகளால் அல்லது அனுபவங்களால் பாதிக்கப்படாத எனக்கே எனக்கான சுயம் என்ற ஒன்று இல்லையா? என்ற கேள்விகளையும் நம்முள் இந்நாவல் எழுப்பத் தவறவில்லை. சுப்பு தன்னுடைய அந்த சுயத்தைத் தேடிச் செல்லும் பயணமாகவே இந்நாவலை உருவகிக்கிறேன்.
இந்நாவல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய அறிமுக உரை: