
சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் எப்போதும் இடைவெளி உண்டு என்பதை தத்துவங்களின் உளறல் என்று அன்றாடம் அல்லது உலகியல் விலக்கி வைத்து விடக்கூடும். ஒரு சொல் அதன் பொருளை எட்டுவதற்கு, ஒருவருடைய சமூக அமைப்பு, அனுபவம், அறிவு என்றவற்றால் ஆன ஒரு conduit வழியாக பயணிக்க வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் இந்த இடைவெளி ஒரு புத்தகத்தாளின் இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள உணரமுடியாத இடைவெளி; பல நேரங்களில், இது புத்தகத்தின் முதல் தாளுக்கும் கடைசித் தாளுக்கும் இடையே நீள்வது. மரம் என்ற சொல் முதல் வகையைச் சேர்ந்தது. படிமம் என்ற சொல் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இந்த இரண்டாம் வகைச் சொற்களை கலைச்சொற்கள் அல்லது அன்றாடத் தன்மையற்றவை அல்லது ஒரு துறை சார்ந்தவை என்கிற போதே அவை பொதுவிலிருந்து விலகி நிற்கின்றன. அதை பொதுமைப்படுத்தும் முயற்சியை அல்லது அதை தரிசனமாக்கும் முயற்சியை மற்றும் இதனை சாத்தியப்படுத்தும் அமைப்புகளைத்தான் தான் அமைப்பியல் (Structuralism), பின்அமைப்பியல்(Post Structuralism) மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த பின்நவீனத்துவம் (Post Modernism) போன்றவை தன்னுடைய பேசு பொருளாகக் கொண்டுள்ளன என ந.முத்து மோகன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு, இதனை விரிவாகப் பேசியுள்ளது.
சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள இந்த இடைவெளியை, அமைப்பியல் மொழி சார்ந்து சுட்டுவது, எங்கோ எப்படியோ அறிவிற்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியாக பரிணமிக்கிறது. பின்அமைப்பியல், சற்று தீவிரமாக உண்மை என்ற ஒன்றே இல்லை என்கிறது. அறிவு உண்மையைச் சுட்ட முயலும் ஒரு பாவனையே என்கிறது. இதனைப் பற்றிக் கொண்டு பின்நவீனத்துவம், அனைவருக்கும் பொதுவான உண்மை என்று எதுவுமில்லை என்கிறது. தெரிதா(Jacques Derrida 1930 -2004, French Philosopher) இதிலிருந்து அனுபூதவியல் (meta physical) சார்ந்த கருத்துமுதல்வாதம் உருவாக்கிய ஆன்மா அல்லது கடவுள் அல்லது வெவ்வேறு உண்மைகள் ஒரு பேருண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே என்பதை நிராகரிக்கிறார் என ந.முத்துமோகன் குறிப்பிடுகிறார்.
தெரிதாவின் கட்டுடைத்தலை (Deconstruction) வெறும் மொழியின் விளையாட்டு என சுருக்கி வைத்திருப்பவர்களுக்கு, அவருடைய முக்கியத்துவத்தை துலக்கி காண்பிக்கிறது இக்கட்டுரை. ஒரு அமைப்பை கட்டுடைத்தலுக்கும், சிதைப்பதற்கும் (Destruction) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. உன்னுடைய அறிவு உண்மையல்ல என்பதற்கும், என்னுடைய அறிவும் உண்மை என்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் இது. பின்நவீனத்துவத்தின் ஜனநாயக மாண்புகளில் ஒன்றாகவும் இதை கருதமுடிகிறது.
ஒவ்வொரு அறிவுத்தரப்பும் உண்மைதான் என்ற போதும், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது நிசர்சனமல்ல. ஒவ்வொரு அறிவுத் தரப்பும் தன்னுடைய உண்மையை எட்டுவது அல்லது நிறுவுவது அதனுடைய அமைப்புகளின் வழியாகத்தான். கடவுளின் இருப்பு மதம் என்ற அமைப்பின் வழியாகத் தான் நிறுவப்பட்டது. நான் கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லும் எந்த ஆராய்ச்சியாளரையும் இவ்வுலகம் பொருட்படுத்துவதில்லை. அது ஒரு அறிவியல் அமைப்பின் வழியாக மட்டுமே நிறுவப்பட முடியும். அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் Conduit என்றும் அமைப்பை உருவகிக்கலாம்.
ஒரு அறிவுத் தரப்பு தன்னை நிறுவிக்கொள்ள உருவாக்கும் அமைப்பு, சமூகத்தை சுரண்டுவதற்கும் அல்லது பிற அறிவுத் தரப்புக்களை ஒடுக்குவதற்குப் பயன்படும் பொழுது அவ்வமைப்பு அதிகாரம் என்று உருமாறுகிறது. அதிகாரம் அறிவால் உருவாக்கப்படுவது என்று மார்க்சியம் இதனை எளிமைப்படுத்தியிருக்கிறது.
ஆனால், அதிகாரம் தான் அனைத்தின் ஊற்றுக்கண்; அல்லது அதிகாரம் சுயாதீனமான இருப்பு கொண்டது; இதிலிருந்தே மதம், அறிவு என அனைத்தும் உருவாகிறது என்கிறார் மிஷெல் ஃபூக்கோ( Michel Foucault , 1926-84, French Philosopher). கிட்டத்தட்ட ஹெகல்(Georg Wilhelm Friedrich Hege, 1770 – 1831, German Philosopher) தன்னுடைய உலக ஆன்மா என்ற கருத்தாக்கத்திற்கு வழங்கிய இடத்தை அதிகாரத்திற்கு வழங்கியிருக்கிறார் ஃபூக்கோ. மார்க்சியத்தை தலைகீழாக்கும், பின்நவீனத்துவத்தின் இந்த சிந்தனைக் கூற்றை மட்டும் ந.முத்துமோகன் பதற்றத்துடன் நிராகரிக்கிறார்.
மிக சுவாரஸ்யமாக, பின்நவீனத்துவம் விமர்சிக்கும் நவீனம், நவீனத்துவம் போன்றவற்றில் இருந்து மார்க்சியம் விலகியே இருந்தது என்கிறார். நவீனத்துவம் உன்னத சுயத்தை வலியுறுத்துகிறது என்றால், பின்நவீனத்துவம் அந்த சுயம் கட்டமைக்கபட்டது அல்லது தற்சார்பு கொண்ட சுயம் என்கிறது. மார்க்சியம் எப்போதும் சுயத்தை அடிப்படையாகக் கொண்டதில்லை என்கிறார்.
பின்நவீனத்துவத்தின் சாராம்சங்களை விளக்கியிருக்கும் அடர்த்தியான இக்கட்டுரைகளின் இறுதியில், அதன் வேர்கள் மார்க்சியத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதையும் சுட்டியிருக்கிறார். SVR அவர்களும் தன்னுடைய இருத்தலியமும் மார்க்சியமும் என்ற புத்தகத்தின் இறுதியிலும், இருத்தலிய சிந்தனையின் வேர்கள் மார்க்சியத்தில் இருந்து பெறபட்டவை என்பதை வலியுறுத்தியிருப்பார். மார்க்சின் காதலர்கள்…