மணிபல்லவம்

ஜெயவர்த்தனே (னா?) அவர்களுடைய காலத்தில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, முள்ளிவாய்க்கால் தினங்களில் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி நினைக்கும் பொதுச் சமூகத்தில் ஒருவன் நான்.  ஈழத்தோடு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒருவனின் இயல்பு அதுவாகத்தான் இருக்க முடியும். ,  ஒரு ரயிலில் பயணிக்கும் போது கூடவே வந்து மறைந்து போகும் காட்சிகளாகத்தான் ஈழம் எனக்கு பரிட்சயம். தமிழகத்தில் இருப்பதால் தான் இந்தப் பரிட்சயமும் கூட.

ஆனால், இந்தப் படுகொலைகளின் அல்லது துயர அனுபவங்களின்  நேர் அல்லது மறைமுக சாட்சியாக இருந்த ஒரு ஈழத்தமிழரின்  மனநிலையைப் புரிந்து கொள்ள தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதராக இருந்தாலே போதும். அவர்களுடைய இலக்கியங்கள் நம்மைத்  தொந்திரவு செய்பவைதான், கண நேரத்திற்காவது. அதிலும், அந்த மோசமான அனுபவங்களை விட்டு விலகி நிற்க முடியாமல் இருப்பவர்களின் இலக்கியப் பிரதிகளுக்குள் நம்மால்  உட்புகுந்து கடக்க முடிவதில்லை. வாசு முருகவேல் அவர்களின் இப்படைப்பு இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ரயில் பயணியைப் போல விலகி நின்று தன்னுடைய அனுபவங்களை அவதானிக்க முயன்றிருக்கிறார். பயணத்தின் முடிவில், அவருடன் பயணித்த நாம் அவருடைய அனுபவங்களுடன் நம்மையும் அறியாமல் பிணைக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது.

இலங்கையின் நிலப்பரப்புகளையும், அரசியலையும் பற்றிய குறைந்த பரிட்சயம் அல்லது பரிட்சயம் கொள்ள தேவையோ வாய்ப்போ இல்லாத ஒருவரை ஓரிரு வரிகள் வழியாக முழுதுணர வைப்பது ஒரு தேர்ந்த நாவலாசிரியரால் மட்டுமே முடிகிறது.

நயினாதீவு கடற்கரை முகாமின் பாதுகாப்பு என்பது காரைநகர் கடற்படை முகாமின் பாதுகாப்பு. காரைநகர் கடற்படை முகாமின் பாதுகாப்பு என்பது வடக்கு பகுதியில் நிறைந்து   நிற்கும் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு என்பது இலங்கையின் பாதுகாப்பு!. இலங்கையின் பாதுகாப்புக்காக வெறும் ஐநூறு குடும்பங்கள் குடியிருக்கும் குட்டித்தீவான நயினாதீவின் குடிகளை கவனத்தில் எடுக்கவேண்டியதில்லை என்று நினைப்பதில் ஒரு நியாயம் இருக்கலாம். உலகத்துக்கு இலங்கையும் ஒரு குட்டித்தீவுதான் என்பது குறித்து சிந்திக்கும் யாரும் இன்னும் இலங்கையை ஆண்டதாகத் தெரியவில்லை.

அதிகாரத்திற்கு தன் தோளில் ஏறி நிற்பவர்களை விட, தான் ஏறி நிற்கும் தோள்களை வதைப்பதில் உள்ள குரூரம் விசித்திரமானது தான்.

நயினாதீவை விட்டு விலகாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபாவின் வழியாக நகரும் இந்நாவல், மணிமேகலை காப்பியத்தில், மணிமேகலையின்  இடப்பெயர்வு பற்றிச் சொல்லும் ஒரு பாடலுடன் தொடங்குகிறது. மணிமேகலையை, பூம்புகாரிலிருந்து மணிபல்லவத்தீவில் இட்டுச் செல்லுகிறது மணிமேகலா தெய்வம். இந்நாவலை படித்து முடித்தவுடன் நிலவிய நிலையற்ற தருணங்களில் நயினாதீவை விட்டு இடம் பெயர மறுத்த ஷோபாவை ஏன் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை தூக்கிச் சென்று காப்பாற்றியது போல் காப்பாற்றவில்லை; இல்லை, ஷோபாவின் ஊழ்வினையை அறியத்தான், ஷோபாவை பூம்புகாரிலிருந்து மணிபல்லவத் தீவிற்கு அத்தெய்வம் இடப்பெயரச் செய்ததா என்றெல்லாம் ஒரு விசரைப் போல எண்ண வைத்தது.

இத்தெய்வம், யாரிடமிருந்து ஷோபாவை காப்பாற்றியிருக்க முடியும்? அல்லது காப்பாற்றியிருக்க வேண்டும் என்ற சிக்கலான கேள்விக்கும் இந்நாவல் இடம் தருகிறது. வேறு வழியின்றி சிங்கள ராணுவத்தில் ஆட்டு மந்தையில் இணைவது போல் இணைந்த அஜித் பண்டாரவிடமிருந்தா? நயினார் தீவில் கட்டப்பட்ட கணகாணிப்பு கோபுரத்திலேயே தன் ஒட்டுமொத்த வாழ்வையும், உடலையும் இழந்த கொத்தலாவாவிடமிருந்தா? எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு எளிய வாழ்வுதான். அதிகாரமோ, பதவியோ அல்ல என்ற ஷோபா போன்ற சாமானியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க மறுத்த சித்தாந்தன் போன்ற அவர்களுடைய புலிக் கணவர்களிடமிருந்தா? பௌத்தத்தின் எல்லைகளை சுருக்கி, அதிலிருந்து மும்மூர்த்திகளை விலக்கி வைத்த சிங்கள பௌத்தர்களின் மத வெறியிலிருந்தா? புலிகள் எல்லாம் புலிகளுக்கு பிறந்தவர்களல்ல: சிங்களவர்கள் சிங்கத்திற்குப் பிறந்தவர்கள் என்று சாமானிய சிங்களவர்களின் இனவெறியை தக்க வைத்திருக்கும் சிங்கள அதிகாரத்திடமிருந்தா? கேள்விகள் முடிவில்லாமல் மேலெழும்பிக் கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம் இந்நாவலாசிரியரின் முதிர்ச்சியும், நிதானமுமே. சற்று பிசகினாலும் இந்நாவல் ஒரு ஆவணப்பதிவாக மாறிவிடும் சாத்தியமுண்டு. இதனைத் தடுத்திருக்கும் நாவலாசிரியரின் உத்தியும் அவருடைய முதிர்ச்சியின்  விளைவென்றே எண்ணுகிறேன்.

நயினாதீவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குமுதினிப் படகிலிருந்த தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப் பட்டிருக்கும் இந்நாவல் ஆவணமாக வாசிக்கப்படும் அத்தியாயம் நம்மை நிலைகுலையச் செய்கிறது. இந்த நிலைகுலைவிலிருந்து தன்னை எப்படியாவது மீட்டுக் கொள்ள வேண்டும் என்கிற இந்நாவலாசிரியன் ஊசலாட்டம் நமக்கு நிறைய திறப்புக்களை அளிக்கிறது.

அதிகாரத்தின் இயங்கியலில் சிக்கிக் கொண்ட மக்களை, அந்த அதிகாரத்தின் பிரதிநிதிகளாக்கி அவர்களை எதிரிகளாகவோ, நண்பர்களாகவோ கட்டமைக்கும் போக்கிலிருந்து விலகி நிற்கிறது இந்நாவல். இது தான் ஷோபா மட்டுமே இந்நாவலை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுக்கிறது. இந்நாவலுக்குள் ஒரு இலக்கிய வாசகன் நுழைந்து கொள்வதள்கான முதன்மை வாசலாகவும் இந்த உத்தி அமைகிறது. நயினாதீவு மக்களின் இயல்பான கொண்டாட்டங்கள் வழியாக ஷோபாவின் இளமைக்காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. இலங்கை ராணுவக் கண்காணிப்புக்குள் வந்தபின்பும் கூட இந்நிலத்தை விட்டு உடலளவிலும் பிரிய முடியாதவளாக ஷோபாவை சிறைபடுத்தியது இந்நினைவுகள் மட்டுமே. தேத்தண்ணி, கடுதாசிப்பூக்கள், சித்தாந்தன் முதன் முதலாக பொதிபோல் கட்டி எடுத்து வந்திருந்த சைக்கிள், டீச்சர் கொண்டை, முருங்கையான இரட்டைச்சடை என ஷோபாவும் அவள் நினைவுகளும் கடல் காற்றில் படபடத்துக் கொண்டே இருக்கின்றன. இத்தனை படபடப்பையும் ஏதோ ஒரு வகையில், அவள் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருக்கும் இலங்கை ராணுவ கண்காணிப்புக் கோபுரமும் உணர்ந்து கொண்டிருக்கிறது, பண்டார மற்றும் கொத்தலாவா வழியாக.

மணிபல்லவத்தில் இடப்பட்ட ஷோபா போன்றவர்கள் காப்பாற்றப் பட்டிருக்க வேண்டாமா? என்ற பெரும் பரிதவிப்புடன் விஜயகுமாரதுங்கா, தமிழ் பௌத்தம் என நாவல் அங்குமிங்கும் சிதறிப் பரவிக் கொண்டே இருக்கிறது. ஆனால், நாகர்களுக்கிடையே நடக்கவிருந்த போரை நிறுத்திய புத்தரின் பிரசன்னம் கடைசிவரைக்கும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் கிடைக்கவில்லை. அந்த புத்தர், புத்தபிக்குகளின் மடங்களில் போர் வீரனாக அல்லது கொலைக் கருவியாக அல்லது சிஙகளவர்களின் எல்லைச்சாமியாக அல்லது இன வெறியனாக அந்த மடங்களால் மாற்றப்பட்டு செய்வதறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். ஷோபா போன்றவர்களின் கைகளில் இருந்த மீனின் வெடுக்கு  அவரின் உடலில் முடைநாற்றமாய் மாறி நம்மை குமட்ட வைக்கிறது. அதிகாரமும், மதமும் கைகோர்த்ததின் ஓலத்தை இத்தனை மௌனமாக வெளிப்படுத்தியிருக்கும் இந்நாவல், தமிழின் மிகச் சிறந்த நாவல்களின் வரிசையில் இடம் பெறவும் கூடும்.

Leave a comment