MJ — ஒரு பரவசம்

Who is it…என மிக சன்னமாக ஒலிக்கும் அந்த மென்குரலுக்கும், அதிரும் இசைக்கும், துடித்தெழும் உடலசைவுகளுக்கும் எந்த வித ஒத்திசைவும் இல்லாதது போல் தான் தோன்றியது. Dangerous என்ற மைக்கேல் ஜாக்சனுடைய ( MJ) ஆல்பத்தில் வரும் பாடல்களில் ஒன்றான who is it…ஐ கேட்டபோது எனக்கு இப்படித்தான் தோன்றியது.

90களின் ஆரம்பத்தில் ஒலித்த இந்தக் குரலை கல்லூரி நண்பன் ஒருவன் தான் அறிமுகம் செய்து வைத்தான். காதலின் தீபம் ஒன்று… என்று இளையராஜாவில் மயங்கிருந்த எங்களை காதல் ரோஜாவே… என A.R கிரங்கடிக்க ஆரம்பித்திருந்த கால கட்டமது. Dangerous ஆல்பத்திற்குப் பிறகு, MJ வினுடைய Bad, Thriller ஆல்பங்களை தேடிக் கேட்டிருந்தாலும்,

Who is it?,

Dangerous… the girl is so dangerous,”

Remember the time

and the ever green

Heal the world

என Dangerous ஆல்பம் மட்டுமே MJ என என்னுள் நீடித்தது. அதுதான், முதன் முதலாக நான் முழுமையாகக் கேட்ட English Album.  இரண்டாவது மட்டும் கடைசியான ஆல்பம் Phill Collinsன் But Seriously. அதற்குப் பின்பு ஆங்கிலப் பாடல்களில் பெரிதாக என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. MJக்கு என்ன ஆயிற்று என்பதெல்லாம் கூட பெரிதாக தெரியவில்லை. எங்கோ தொலைதூரத்தில் உள்ள ஒரு புள்ளியாக என் நினைவுகளில் இருந்து விலகி விட்டார்.  எப்போதாவது அரிதான தருணங்களில் மட்டுமே மனதில்,

Heal the world…Make it a better place

For you and for me and the entire human race

There are people dying…if you care enough for their living…

Make a better place…Make a little space

Heal the world…


ஒடும்.

90களில் சமூக ஊடகங்கள் பெருகியிருந்தால், என்னை புரிந்து கொண்டேன் என்று தன்னுடைய feedகள் வழியாக என்னை MJ வின் Biopicஐ எழுதும் தகுதியுள்ளவனாக அவை மாற்றியிருக்கும்…😀. அத்தனை எளிதாக MJவிடமிருந்தோ, Phil Colinsடம் இருந்தோ விலகியிருக்க முடியாது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு MJன் Biopicஐ பார்த்து விட்டு வீடு திரும்பும்போது Dangerous ஆல்பத்தின் கேசட்டை என் கையில் தந்த அந்த நண்பனை நினைவு கூர்ந்தேன்.

MJவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே அறியாத எனக்கு, இந்த Biopic சுவாரஸ்யமூட்டுவதாக இருந்தது. எந்த ஒரு கலைஞனுக்கும் உரிய பைத்தியக்காரத்தனங்கள் நிறைந்த வாழ்க்கை என்றே சராசரி மனங்கள் அவசர கதியில் இதனைக் கடந்து செல்லும்.  கலைஞர்கள் எப்போதும் சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட முடியாதவர்கள். அதற்கு சில மெனக்கெடல்கள் தேவை. அதை எல்லோராலும் ஈடுபாட்டுடன் செய்ய முடிவதில்லை. அதற்கு சில வலுவான காரணங்கள் வேண்டும்.

MJ தன்னுடைய காலகட்டத்தின் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டத்தையும் சுய நினைவிழக்கச் செய்திருக்கிறார். அவருடைய வரிகளும், இசையும், நடனமும் அவ்விளைஞர்களை தன்னிலிருந்து எங்கோ தொலைதூரத்திற்கு இழுத்துச் செல்கின்றன. MJவை ஒட்டு மொத்த உலகமும் புரிந்து கொள்ள முயன்றது இதனால் தான் என்று எண்ணுகிறேன். கிட்டத்தட்ட விஜய்க்கும் இங்கு இதுதான் நடக்கிறது. ஆனால் நமது கலைஞர்களை அவர்களது அரசியல் tour வழியாகதான் நம் மக்கள் நெருங்கவும் சந்திக்கவும் முடிகிறது. இது நமது மண்ணின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.

ராஜா, ஒரு நேர்காணலில் என்னுடைய இசை உங்களுடையது. அதனால் தான், தர்க்க புத்திக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உங்கள் ஆளுள்ளத்தை அதனால் தொட முடிகிறது என்றது நினைவுக்கு வருகிறது. MJ விடம் கூடவே நடனமும் இருக்கிறது. தன்னுடைய உடம்பை ஒரு இசைக்கருவி போலவே பாவித்து வாசிக்கிறார் அல்லது நடனமாடுகிறார்.

அந்த moon walk எத்தனையோ கலைஞர்களால் அபாரமாக நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அது உருவானதை இத்திரைப்படம் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் என் கால்களை அநிச்சையாக அந்த அசைவுகளை செய்து பார்க்க வைத்தது. கடலடியில் ஒரே திசை நோக்கி நகரும் மீன்களைப் போல கைகளை சொடுக்கிக் கொண்டே நகரும் ஒரு குழு நடனத்தில் இருக்கும்போது,  MJவிடமிருந்து இயல்பாக இந்த moon walk தோன்றுகிறது. அக்குழுவில் இருந்த அனைவரும் மீன் போல நீந்திக் கொண்டிருக்கும் போது, MJ  மட்டும் அக்கடல் ஆழத்தில் நடக்க ஆரம்பிக்கிறார். The creative peak it is.

தன்னுடைய படைப்பூக்கத்தை கிரகித்துக் கொள்ள முடியாத குழுவை MJ வால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இதுவே தன்னுடைய குடும்பத்திலிருந்து அவரை விலகி நிற்க வைக்கிறது. MJ is a demanding CEO too. கருப்பினம் என்பதாலேயே அவரைக் கூடுதலாக உழைக்கத் தூண்டுகிறார் அவருடைய தந்தை. அவருக்காகவும், தன்னுடைய சகோதரர்களுக்காவும் சேர்ந்தே உழைக்கிறார். MJவின் பலமும் பலவீனமுமாக அவருடைய குடும்பம் அமைகிறது. அவருடைய உள்ளமும். உலகமும் வேறொன்றாக அமைகிறது. தான் ஒரு குறிப்பிட்ட இனத்தின் கலைஞன் என்று அங்கீரிக்கப்படுவதை விட, உலகத்துக்கான கலைஞன் என்ற அங்கீகாரத்தையே விரும்புகிறார்.

தன்னுடைய படைப்பூக்கத்தின் வழியாகவே தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் முற்றுணர்ந்தவரான இக்கலைஞன், தன் உள்ளமும் உடலும் பிறரிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதை நோக்கியே நகர்கிறார், அவருடைய மனிதாபிமானச் செயல்களின் வழியாக.

பாதியிலேயே படம் முடிந்து விட்டது போல் முடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த பகுதிகள் வெளிவரும் என்றே தோன்றுகிறது. படம் முடித்து வரும் போது சிறுவயது MJவின் Recording theatre காட்சிகள் நினைவில் வந்து கொண்டேயிருந்தது. அவருடைய தனித்துவமான மென்குரலுக்காக மட்டுமே கவனிக்கப்பட்ட MJவால் பாடும் போது ஆடுவதை நிறுத்த முடியாமல் தவிக்கிறார். குரலும், வரிகளும் மட்டும் ஒத்திசையவில்லை. அவருடைய உடலசைவுகளும் அதிலிருந்து பிரிக்கமுடியாத ஒரு முழுமையில் உள்ளது. A complete Artist he is…

Leave a comment