சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave

IMG_20180322_1455404

 

எழுத்தாளர் ஜெயமோகனின் மகாபாரதம் பற்றிய வெண்முரசு நாவல்கள் வரிசையில் தருமனுக்கென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட நாவல் ‘சொல்வளர் காடு’. கௌரவர்களுடனான சூதில் அனைத்தையும் இழந்த தருமன், திரௌபதியுடனும் தன் சகோதர்களுடன் காடேகிச் (வனவாசம் ) செல்கிறான். அவர்களினூடாக நம்மையும் பயணிக்க வைக்கிறது இந்நாவல்.

 

 சொல்வளர் காட்டை தருமனின் ஊதியமில்லா நீண்ட நாள் விடுப்பு ( sabbatical leave) என்று தான் நான் உருவகித்துக் கொள்கிறேன். பெரு நிறுவனங்களின்  தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் குழப்பங்களும் அது தரும் மன அழுத்தமும் இயல்பாகவே இவ்விடுப்பை நோக்கித் தள்ளும். வலிந்து ஒரு super man முகமூடியை அணிந்து கொண்டு நான் எப்போதுமே தளராதவன் என்று காட்டிக் கொள்ள வேண்டிய கையறு நிலை. ஒரு சில காலங்களுக்கு மேல் இம்முகமூடி எடை மிகுந்து உடலையும் மனத்தையும் சோர்வடையச் செய்வதுண்டு. இதைக் கருத்தில் கொண்டுதான், பெருநிறுவனங்கள்  தங்கள் தலைமையை சீரிய இடைவெளியில் மாற்றிக் கொள்கின்றன.

 

தருமனுக்கும் இப்படி ஒரு மனச்சோர்வு ஏற்படும்போது தான் சொல்வளர் காடு(கள்) அவரை உள்வாங்கிக் கொள்கின்றது தண்டனை என்ற பெயரில். காடு என்றதுமே ஆள் அரவமற்றிருக்கும் நிலப்பரப்பே நம் கண் முன் விரிகிறது. ஆனால் பாண்டவர்கள் அவமதிக்கப்பட்ட திரௌபதியுடன் காடேகிச் செல்லும் காடுகள் குறைந்த ஆள் அரவமுடனும்,  நிறைய மரங்களுடனும் செறிவான சொற்களடங்கிய வேதங்களை வளர்த்து பேணுபவையாக உள்ளன.

 

பாண்டவர்களில் மற்ற அனைவரையும் விட தருமனுக்கே இவ்வனவாசம் ஒரு பெரிய திறப்பாக அமைகிறது. வெள்ளிக்கிழமை இரவுகளில் பெருநகரங்களின் இளைஞர் கூட்டம் ஒவ்வொரு மது விடுதியாக தவ்விச் செல்வதைப் (pub hopping) போல அறக்குழப்பங்களுடன் ஒவ்வொரு காடாக தருமன் பயணிக்கிறார்.

 

ஒவ்வொரு காட்டிலும் ஒரு வேதம் முளைத்து கிளைத்து விழுது பரப்பி  உறைந்த மரமாகி ஒரு வேதநிலையாக, குரு மரபாக ஆகியிருந்தது. அவ்வேதங்களைப்   பயில வரும் இளையவர்களில் நிறைய பேர் அந்த உறைந்த மரங்களைக் கட்டிக்கொண்டு தாங்களும் உறைந்து விடுகிறார்கள். சிலர் அம்மரங்களின் பட்டைகளையோ, கிளைகளையோ அல்லது இலைகளையோ எடுத்துக் கொண்டு சென்று வேறு காடுகளிலுள்ள வேதங்களோடு உரையாடி தங்கள் அறிதலிலுள்ள இடைவெளிகளை நிரவிக் கொள்கிறார்கள். மிகச் சிலரே அந்த உறைந்த மரத்தில் மலர்ந்திருக்கும் மலரின் மகரந்தத்தை எடுத்துக் கொண்டு புது வேதக்காடுகளை உருவாக்கும் ஆற்றலுள்ளவர்களாக மிளிர்கிறார்கள். வேதமறுப்பும் வேதமே என்று ஒளிபாய்ச்சுகிறார்கள். இங்குள்ள அனைத்தும் ஒன்றின் வெவ்வேறு வடிவங்களே. அந்த ஒன்று மட்டுமே உள்ளது. அதே பிரம்மம். “தத் சத்” என்று அந்த பிரம்மமும் நானே (“அகம் பிரம்மாஸ்மி”) என அதில் கரைகிறார்கள்.

 

இந்து மெய்ஞான தரிசனங்களான சாங்கியம், யோகம், வைஷேசிகம்,நியாயம்,பூர்வமீமாம்சை மற்றும் உத்தரமீமாம்சை ஆகியன மெய்ஞானம் என்பது எதுவென்று தங்களுக்குள் முரண்பட்டு முட்டிமோதி விவாதித்து முன்னகர்ந்தன. முதல் நான்கு தரிசனங்கள் பொருள்முதல் வாதம் (இவ்வுலகை யாரும் படைக்கவில்லை) என் றால், வேதாந்தம் என்றழைக்கப்படும் கடைசி இரு தரிசனங்களும் கருத்துமுதல் வாதம் (இவ்வுலகை படைத்தது பிரம்மம்). வேதாந்தத்திலும், பூர்வமீமாம்சை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் முதன்மைப்படுத்திய கர்மகாண்டம் என்றால் உத்தரமீமாம்சை தூயஞானத்தை முதன்மைப்படுத்திய ஞானகாண்டம் எனலாம். வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இவ்விரு தரிசனங்களின் பயணத்தையே பெரும்பாலும்  சொல்வளர்காட்டில் நாமும் தருமனும் தரிசிக்கிறோம். பொருள்முதல்வாத தரிசனங்களையும் நம்மால் அவ்வப்போது தரிசிக்க முடிகிறது.

 

அனைத்து காடுகளிலும் தன்னை ஒரு மாணவனாகவே அங்குள்ள வேதநிலையின் குருக்களிடம் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்கிறார் தருமன்.குறைந்து பேசி ஆழ்ந்து கவனிப்பவராகவே உள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு குரு மரபின் வேதங்களை மறுக்கும் அதை கற்க வந்த இளையவர்களின் கூரிய வாதங்களை கூர்ந்து நோக்குகிறார்.

 

ஒவ்வொரு காட்டிலும் நாம் ஆங்காங்கே கேள்விப்பட்ட மெய்ஞானிகளான பிரகஸ்பதி, தன்வந்திரி, ஞாக்யவல்கி என அவரவர்களுக்குரிய சிறு கதையோடு எழுந்து வருகிறார்கள். அவர்களின் வழிவந்த இப்போதிருக்கும் குருக்களிடமோ அல்லது அவர்கள் உருவாக்கிய மரபை கற்கும் இளையவர்களிடமிருந்தோ இக்கதைகளை தருமன் கேட்டுக் கொள்வதாக நாவல் பயணிக்கிறது. ஒவ்வொரு கதையும் மத்தில் கடைந்தெடுத்த வெண்ணையென, அக்காட்டின் அவ்வேத மரபின் சாரத்தை ஏந்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்டின் இறுதியிலும் தருமனுக்கு கிடைக்கும் உள திறப்புகள் நமக்கும் கிடைப்பவையாக பரவசமூட்டுகின்றன.

 

இவ்வளவு உளதிறப்புகளை அடைந்தாலும், தருமனின் அறக் குழப்பங்கள் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன ஒவ்வொரு காடாக. குறிப்பாக திரௌபதியை நினைக்கும் தோறும் எழும் குழப்பங்கள், அவரை முதிரா இளையவராகவே காட்டுகின்றன. இதை நினைத்து தருமனும் கூட ஆச்சரியப்படுகிறார். பெண்களைப் பொறுத்தவரை ஆண்கள் எப்போதும் முதிராதவர்களே. தருமனின் இந்த அறக்குழப்பங்கள் திரௌபதியை தெய்வமாக கொண்டாடும் அஸ்தினபுரி குடிகளுக்கு தெரிய வந்திருக்குமென்றால் தருமனை சலித்தெடுத்திருப்பார்கள். களி கொண்டு அறையும் முரசென பிய்த்தெறிந்திருப்பார்கள். அதோடு மகாபாரதமே முடிவுக்கு வந்திருக்கலாம்.

 

திரௌபதியின் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பின் வெம்மையை அறிந்தவராகவே இருந்தும்,தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாள் என்ற நப்பாசையில் தினந்தோறும் அவளை நெருங்க முயற்சிக்கிறார் தருமன்.இரவு நேரங்களில் காட்டில் அவள் தங்கியிருக்கும் குடிலை சற்றுத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டே இருக்கிறார் உறக்கத்தை களைந்து. ம்ஹீம்….மந்தனைத் (பீமரை) தவிர வேறு எவரையும் அவள் சிறிது கூட பொருட்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக அவளின் கோரிக்கையான கௌரவர்களுக்கெதிரான உடனடி போரெடுப்பை அல்லது பழிவாங்குதலை பாண்டவர்கள் அனைவரும் நிராகரித்த பிறகு, ஆழ்ந்த மௌனத்திற்குச் சென்று விடுகிறாள். அதன்பின் ஏதாவது ஒரு வார்த்தையாவது பேசமாட்டாளா?  என இளங்காதலன் போல தன் மனதில் திரௌபதி முன் மண்டியிட்டு நிற்கிறார் தருமன்.

 

தருமனைத் தவிர மற்ற அனைவர்களுமே திரௌபதியின் கோரிக்கையை ஏற்பதற்கு மனதளவில் விரும்பினாலும், மூத்தவரின் முடிவே எங்கள் முடிவு என்று பவ்யம் காட்டி உடனடி பழிவாங்கல் வேண்டாமென்கிறார்கள். அவர்களனைவரையும் நன்கறிந்த திரௌபதி இவர்கள் தருமனை மதிப்பதாக கூறுவது போலிப்பாவனையே என்று எண்ணுகிறாள். அதற்காக அவள் சுட்டிக்காட்டும் காரணங்கள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன. அதிலொன்றாக, இளையவர்கள் அவளை மஞ்சத்தில் தழுவிக் கொள்ளும் போது தருமனை வெற்றிக் கொள்வதாகவே அவர்கள் உணர்ந்ததை தன் நுண்ணுணர்வால் கண்டு கொண்டதாக சொல்லி அனைவரையும் புறக்கணித்து தன் முதுகு காட்டி தோள் நிமிர்த்தி தன் குடில் (நம்மை )நோக்கி விரைகிறாள். ஜெமோவின் திரௌபதிக்கும், ஷண்முகவேலுவின் திரௌபதிக்கும் வித்தியாசம் எதுவுமில்லை.

 

இச்சிறுமை தாங்கமுடியாமல் சகதேவன் “உங்களைக்  கண்டு அஞ்சுகிறீர்களா?” என்கிறான். திரௌபதி இக்கேள்வியால் முதுகு சில்லிட்டு  திரும்ப யத்தனித்து முடியாமல் போலி இறுமாப்புடன் தன் அழகிய பின்புறம் காட்டியே நிற்கிறாள். காடுகளிடையே ஆன இப்பயணத்தில் தன் மனம்  கனிய ஆரம்பிப்பதை திரௌபதி உணர்ந்திருக்கிறாள். என்னதான் அரசியாக இருந்தாலும் வஞ்சத்தை மனதில் நெடுங்காலம் சுமக்கமுடியாத அன்னையாக, ஒரு குலப்பெண்ணாகவே தன்னை உணர்கிறாள். இதன்பொருட்டே துரியோதனனை உடனடியாக பழிவாங்குமாறு தங்களிடம் இறைஞ்சுகிறீர்கள் என சகதேவன் கண்டுகொண்டதை அறிந்து விக்கித்து மறுசொல் எதுவும் சொல்லாமல் உறைந்து நிற்கிறாள். துரியோதணன் குருதி தொட்டு என் குழல் முடிவேன் என ஒரு குலப் பெண்ணாக  நீ சூளுரைக்கவில்லை.அரசியாகத்தான் சூளுரைத்தாய். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை துணிந்து எதிர் கொள்ளவே வேண்டும் என்கிறார் அவளைக் காட்டில் சந்தித்த கிருஷ்ணனும்.

பெண் என்று சலுகை கேட்டு நிற்பது அரசிக்கு இழுக்கென்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணியமென்றால் என்னவென்று எனக்கு புலப்படத் தோன்றியது.

 

*சாந்தீபனக் காடு*

 

பத்து காடுகள் வழியாக தருமன் பயணித்தாலும் அவர் மெய்ஞான உச்சத்தை எட்டுவது கிருஷ்ணரின் குருமரபான சாந்தீபனக் காட்டில்தான். இங்கே கன்றோட்டும் குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் வேதம் மட்டும் பயின்றிருக்கவில்லை. அவ்வேத்தை அனைத்து குலத்திற்குமானதாக ஆக்கி சமூகடுக்கின் கடைநிலையில் வைக்கப்பட்டிருந்த சூத்திரர் வரை அதை கொண்டு சேர்த்திருந்தார். இங்கே அம்பேத்கர் நினைவில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

 

வானிலிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து நாம் பொறாமையோ வியப்போ கொள்வதில்லை. அவற்றிற்கான இடம் அதுவென்று ரசிக்கத்தொடங்கி விடுகிறோம். சாந்தீபனக் காட்டின் குரு தொடங்கி அங்குள்ள வேதம் கற்கும் இளையவர் வரை இளைய யாதவர் (கிருஷ்ணன்) தனக்கான இடத்தில் ஏறி அமர்ந்து கொள்வதைக் கண்டு ரசிக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அனைவராலும் சாந்தீபனக் குருமரபின் குருவாக மானசீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

 

கிருஷ்ணர் அக்காட்டின் வேதங்களோடு உறைந்து விட்ட மனிதரல்ல. தன்னை அதிலிருந்து  விரித்தெடுத்துக் கொண்ட அரச முனிவர். “கன்றோட்டும்போது ஞானி;வேதமேடையில் கன்றோட்டி” என்று அங்குள்ள மாணவர்களால் சிலாகிக்கப் படுகிறார். நாம் கன்றோட்டச் சென்று மடியூறி குழவிகளுக்கு உணவு புகட்ட அந்தியில் தொழுதிரும்புகிறோம் என்ற கிருஷ்ணனின் சொல்லாடலில், கன்றில் கன்றோட்டியும் ; கன்றோட்டியில் கன்றும் கரைந்து ஒன்றாகிறார்கள். பின்வரும் வாக்கியங்கள்தான் நினைவுக்கு வந்தன.

 

  1. ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் (இங்குள்ள அனைத்தும் ஒன்றே)

 

  1. தத்துவமஸி ( நீயும் அந்த ஒன்றே)

 

  1. அகம் பிரம்மாஸ்மி ( முதல் இரண்டையும் நீ உணரும் தருணம்)

 

நானே பிரம்மம் என்றும் தன்னை ஆள்வது தன்னுள் உறைந்த பிரம்மமான விராடபுருஷனே என்றும் உள்ளார்ந்து உணர்ந்திருந்தார் கிருஷ்ணர்.

 

சீர்திருத்தவாதிகளுக்கு,  வழக்கம்போல் கிடைக்கும் எதிர்ப்பு கிருஷ்ணருக்கும் அம்மரபில் ஊறி உறைந்துபோன மூத்தவர்களிடமிருந்து வருகிறது. “வேதத்தை மறுக்கும் நீ எப்படி வேதஞானியாக இருக்க முடியும் “ என்கிறார் அக்குருமரபில் பயின்ற உயர்குல மூத்தவரான பத்ரர் எனும் அடுமனையாளர். அதற்கு கிருஷ்ணர் அளிக்கும் அந்த கவித்துவமான பதில் அவர் மேல் அங்குள்ள இளையவர்களை மட்டுமல்ல நம்மையும் காதல் கொள்ள வைக்கிறது. “மரத்தின் பூக்களிலுள்ள மகரந்தத்திலிருந்து விளையும் மரம் எப்படி மரமில்லாகும். நீங்கள் மரத்தின் கிளைகளில் தங்கிவிட்டீர்கள். நான் அவற்றின் கனவுகளை சுமந்து செல்லும் வண்டாகினேன். நீங்கள் வேதங்களை உறையச் செய்தீர்கள். நான் அவற்றை நெகிழ்த்தி வளர்த்தெடுத்தேன். இதெப்படி வேதமறுப்பாகும்?” என்கிறார் கிருஷ்ணர். “மலமுருட்டி வண்டு பூவின் வாசத்தை எப்படி உணரமுடியும்?” என தொடர்ந்து தன் உயர்சாதி ஆணவத்தை வெறுப்பாய் உமிழ்கிறார் பத்ரர். ஆனால் கிருஷ்ணர் அவற்றையெல்லாம் மிக எளிதாக கடந்து செல்கிறார். தன்னையறிந்தவர்கள் கடக்கிறார்கள். அறியாதவர்கள் சுமந்து துவண்டு போகிறார்கள்.

 

ஆனால் கிருஷ்ணர் மனதளவில் தளர்ந்திருப்பதை தருமன் உணராமலில்லை. “துவாரகையில் என்னதான் நடக்கிறது?” என்ற தருமனின் கேள்விக்கு அருவி மாதிரி கிருஷ்ணர் கொட்டிய பதில்கள் நம்மை துவாரகைக்கே இட்டுச் செல்கின்றன. குலச்சண்டைகள், சமரச முயற்சி, அதைத்தொடர்ந்த போர், அதிலடைந்த இழப்புகள் மற்றும் வெற்றிகளென வரப்போகும் மகாபாரதப் போரின் Teaser காட்சிகள் போல் நம் கண்முன் பிரமாண்டமாக விரிகிறது துவாரகை. என்னதான் கிருஷ்ணர் அப்போரில் வென்றிருந்தாலும், அப்போருக்குப்பின் அவர் பெரிதும் மதிக்கும் மூத்தயாதவரின் அணுக்கத்தை இழந்ததால் தான் தன்னுடைய சாந்தீபனக் காட்டிற்கு விஜயனுடன்   சிறிது காலம் இருப்பதற்காக விஜயம் செய்திருக்கிறார் என்பதை தர்மர் உணர்ந்து கொள்கிறார்.

“உங்களுள் உறைந்திருக்கும் விராடபுருஷனுக்கு இவ்விழப்பு ஒரு பொருட்டா?” என்ற தருமனிடம் “அவனுக்கு நானே ஒரு பொருட்டல்ல”  என்று நம்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறார், ஷண்முகவேலுவின் கைவண்ணத்தில் தளர்ந்த நடையுடன் திரும்பிச் செல்லும் கிருஷ்ணர்.

 

*மைத்ராயினக்காடு*

 

தன்னுள் உறைந்திருப்பவன் யார் என்ற இன்னும் விடைதெரியாத கேள்வியுடன் தருமன்  தன் மெய்மை தேடும் பயணத்தைத் தொடர்கிறார் மைத்ராயினக்காடு நோக்கி. காட்டின் மணத்தை விட உலையில் கொதித்தெழும்பும் சோற்றின் மணமும்; வெட்டப்பட்ட பச்சைக்காய்கறிகளின் கறை மணமுமே அக்காடெங்கும் நிறைந்துள்ளது. அங்குள்ள குருகுலங்களின் முழுநேரப்பணி சமையல் மட்டுமே. வேதங்களெல்லாம் அங்கே கற்பிக்கப்படவில்லை. கிருஷ்ணன் இக்காட்டை தருமனுக்கு பரிந்துரைக்கும் போதே ஏதோ ஒரு சூட்சுமம் இக்காட்டில் உள்ளதை உணர முடிந்தது.

 

ஒவ்வொரு வேதநிலைகளாகச் சென்று வேதங்களைக் கற்று மெய்மையை உணரமுடியாத ஒரு மாணவன் இக்காட்டின் வேதங்களற்ற வேதநிலையான அடுமனையில் ஞானம் பெற்றதாக தருமன் கேள்விப்படுகிறார். தருமனோடு சேர்ந்து நாமும் நப்பாசை கொள்கிறோம், இங்காவது மெய்மை கிட்டுமென்று. மேலும் அன்னையர் தங்கள் குழவிகளுக்கு முலையூட்டி பசியாற்றுவதுபோல நாள் முழுதும் இங்கு உணவு சமைத்து வருமனைவருக்கும் பரிமாறக் காரணமாக இருந்த தாயுமானவனின் கதை நம்மை (குறிப்பாக ஆண்களை) நம்முடைய ஆழங்களுக்கு இழுத்துச் செல்கிறது. ஆண்கள் மட்டும் தங்கள் முலைக்கண்ணில் பாலூறுவதை உணரமுடிந்தால் இவ்வுலகில் வன்மமும் பசியும் அழிந்தொழியுமென்றே தோன்றுகிறது. “என்னை உண்க” என்று தன் மைந்தனிடம் அத்தாயுமானவன் கூறிய இவ்விரு சொற்களே இக்காட்டின் வேதச் சொற்களாயின.

 

இங்கே சாவகாசமாக அமர்ந்து வேதம் கேட்பதெற்கெல்லாம் வாய்ப்பில்லை தருமனுக்கு. ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் அடுமனையே இங்கு வேதமேடை. அங்கிருந்தெழும் ஒலிகளே வேதச்சொற்கள். அந்த அடுமனையில் எழும் வேள்வித் தீ தேவர்களுக்கு அவி கொடுப்பதற்காக அல்ல;அனைத்து தரப்பு மக்களின் வயிற்றிலெரியும்  பசித் தீக்கான அவியிது.

 

இருக்கும் ஒவ்வொரு கணமும் முழு அர்ப்பணிப்பையும் கோரும் அடுமனைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் பாண்டவர்கள். அடுமனைகள் பீமனின் ஆடுகளம். மிக இயல்பாக தன்னைஅங்கு பொருத்திக் கொள்கிறான். அர்ஜுனன் காய்கறிகளை வெட்டும் பணியில்;நகுலனும் சகதேவனும் அடுமனைப் பொருட்களை மேலாண்மை செய்யும் பணியில் என அமர்ந்து கொள்ள, என்ன செய்வதறிவதென்று அறியாமல் திகைத்திருந்த தருமனுக்கு கிடைத்த பணியோ அடுமனைக்கும் உணவருந்தும் பந்திக்குமிடையே உணவு சுமக்கும் வேலை. தொடர்ந்து அடுமனையிலிருக்கும் பணியாளர்களாலும், பந்தியில் பரிமாறுபவர்களாலும் ஏவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். நூற்றுக்கணக்கானவர்களை பசியாற்றிய களைப்பில் தனக்கான உணவை உண்ணும் போது, அவ்வுணவை தன்னுடலே இழுத்து ஒருங்கிணைத்துக் கொள்வதையுணர்ந்து பிரமிக்கிறார். உடலுழைப்பின் அருமையை அவர் தெரிந்திருந்தாலும், அதை உணர்வுப்பூர்வமாக தருமன் உணர்ந்த தருணமது. பசியெது, உணவெது, உடலெது என்று உணரமுடியாத அத்வைத நிலையிது.

அரண்மணையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்கப் போவதேயில்லை. உண்ட களைப்பில் வந்திறங்கும் உறக்கம், மெய்யுசாவுவதற்கெல்லாம் இடமளிக்கவில்லை. உழைப்பும் களைப்பும் உறக்கமுமே மெய்யென தோன்றியது தருமனுக்கு.

 

நாட்கள் செல்லச் செல்ல வேலைகள் இலகுவாகின்றன. நன்றாகச் சமைப்பதற்கு முதலில் நன்கு பரிமாறத் தெரியவேண்டும்; நன்றாக பரிமாறுவதற்கு கலன்களை நன்கு கழுவத் தெரியவேண்டும். இப்படி படிப்படியாக முன்னேறி கலன்களை சுத்தம் செய்வதற்கும், பந்தியில் பரிமாறுவதற்கும் தருமன் கற்றுக்கொள்கிறார். ஆனால் பெரும்பாலும் சமைப்பவர்கள், அவ்வளவாக உண்ணாமலிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்கிறார். ஆனால் அவர்கள் பசியுடன் உறங்குவதில்லை. பசி ஒரு விழைவு மட்டுமே. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறைகள் தான் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. அடுமனையிலிருந்தெழும் உணவின் மணமே அங்கு சமைப்பவர்களின் பசியைப் பாதி போக்கிவிடுகிறது. உணவின் மணமே அவர்களின் அறம். அதன் ருசியே நமக்கான அறம். நம் விழைவுகள் தான் அதை அடைவதற்கான வழிகளை அறமாக தொகுத்துள்ளன. மாறாத அறம் என ஏதுமில்லை என்று தருமன் உணர ஆரம்பிக்கிறார்.

 

கடலைப்பருப்பைக் கொண்டு துவரம்பருப்பு ( இரண்டிற்கும் வித்தியாசம்  தெரியாமல்) சாம்பார் செய்த திருமணத்திற்கு முந்தைய நாட்களுக்குப் பிறகு கைவிட்டிருந்த சமையலறையில் பிரவேசிக்க மனம் எண்ணியது. அது என்னுடைய மனைவியின் சமையலறை இப்போது. ஒவ்வொரு வீட்டிலிருக்கும் இன்னொரு வீடு அது.

 

பிறக்கும் போதிருந்த தூய்மையான ‘நான்’ என்பதைச் சுற்றிக் களிம்பாய் படரும் ஆணவத்திலும் அறியாமையிலிருந்துமே நம்முடைய விழைவுகள் பிறக்கின்றன. இவ்விரண்டையும் எரிதழல் கொண்டு உருக்காதவரை உன்னுடைய ‘நான்’ உனக்குப் புலப்படப்போவதில்லை என்ற அருகப்படிவரின் சொற்கள் கேட்டு அடுத்த காட்டிற்கான விஜயத்திற்கு ஆயத்தமாகிறார் தருமன். ஒவ்வொரு காட்டிலிருந்து கிளம்பும் போதும் அடுத்த காட்டிற்கான வழியை யாராவது ஒருவர் காட்டுவார்கள். இங்கு வானத்திலிருந்து தன் சிறகை தருமன் மேலுதிர்த்த நாரைப் பறவை பறந்து சென்ற திசையை நோக்கி பயணிக்கிறார்.

 

*யட்சவனம்*

 

அடுமனைப் பணியாளனாக்கி தன்னை களிம்பு போல் சுற்றியிருந்த ஆணவத்தை எரித்தொழித்த மைத்ராயன காடு தாண்டி யட்சவனத்தில் புகுகிறார் தருமன். மிஞ்சியிருக்கும் தன் அறியாமையையும் இங்கு எரித்தொழித்து விடலாமென்று.

 

மனிதர்கள் அரவமற்ற நாம் நினைக்கும் காடாக இருப்பது இந்தக் காடு மட்டும்தான்.அங்குள்ள ரிஷி ஒருவர்  தன்னையே அவிகொடுக்க நடத்தும் வேள்வியொன்றில் பாண்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். தன் குருவை இழக்க விரும்பாத ரிஷியின் மாணவனொருவன், வேள்விக்கென இருந்த விஷேச அரணிக் கட்டைகளை தூக்கியெறிந்து விடுகிறான். அக்கட்டைகளை தேடிக் கொணரும் பொறுப்பை பாண்டவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

இந்த தேடுதல் பணியில் தான் அக்காட்டின் அபாயகரத்தன்மையை உணருகிறார்கள். மரங்கள் குறைந்து வெண்பாறைகள் மிகுந்த கந்தக நிலத்தில் பிரவேசிக்கிறார்கள். அங்குள்ள கந்தகப்புகையும் நீரற்ற தன்மையும் உளமயக்கையும் விடாயையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. உணவு கிடைக்கப் போவதில்லை என்றுணர்ந்தவுடன் அதிகரிக்கும் பசியைப்போல, நீரைக் காணாத கண்கள் விடாயையும் அதிகரிக்கச் செய்கின்றன.கந்தக நிலத்தின் வெம்மை தருமனின் ஆற்றலனைத்தையும் உறிஞ்சிக் கொள்ள சோர்ந்து அமர்ந்து விடுகிறார். நீர் கொண்டு வரச்சென்ற பீமனைக் காணாது தேடிச்சென்ற அர்ஜுனனும் திரும்பாது கண்டு கவலைகொள்கிறார். அவர்களிருவரையும் தேடிச்சென்ற நகுலனும் சகதேவனும் திரும்பாது கண்டு ஏதோ விபரீதம் என்றுணர்ந்து அவர்களைனைவரும் சென்ற திசை நோக்கிச் செல்கிறார். மெல்ல மெல்ல ஜெமோவும் விஸ்வரூபமெடுக்க ஆரம்பிக்கிறார். தருமனின் தளர்ந்த அந்த நடையை நினைவுகளும் நிஜங்களுமாக, ஜெமோ தன் மொழியாளுமையால் நமக்கு கடத்தி நம்மை கலைத்துப் போட்டுவிடுகிறார். இவ்வத்தியாயத்தைப் படிக்கும்போது ஒரு சொம்புத் தண்ணீராவது பக்கத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

 

தூரத்தில் ஓடும் ஒரு பொய்கையை சுட்டிக்காட்டி பறக்கிறது ஒரு நாரப்பறவை. எப்படியோ தன் ஆற்றலனைத்தையும் திரட்டி அப்பொய்கையை அடைந்து நீர் நோக்கி குனிகிறார் தருமன். அழகிய அந்த பொய்கையில் அவர் மூதாதையத் தந்தையரின் முகம் கண்டு திகைக்கிறார். இது நச்சுப் பொய்கை, இந்நீரை அருந்தாதே என்கிறது அந்த முகம். அழைத்து வந்த நாரையோ விடாய் தீர்க்க வேறுவழியில்லை என்கிறது. இரண்டுமே அக்காட்டைக் காக்கும் யட்சர்கள் செய்யும் உளமயக்கு வேலையென்றுணர்ந்து தருமன் மட்டுமல்ல நாமும் விதிர்த்துப் போகிறோம். உச்சக்கட்ட புனைவிது. தருமன் மட்டும் இப்போது இருந்திருந்தால் ஜெமோவின் சட்டையைப் பிடித்திருப்பார் தன்னை இப்படி பாடாய்ப் படுத்துவதிற்கு. திரைக்காட்சிகளாக எடுப்பதற்கே தயங்க வேண்டிய இக்காட்சிகளை தன் புனைவின் மேலும் மொழியாளுமையின் மேலும் கொண்ட நம்பிக்கையாலே சாத்தியமாக்கியிருக்கிறார் ஜெமோ. அவருடைய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ மற்றும் ‘ விஷ்ணுபுரம்’ நாவலிலும் இதேபோன்று நம் முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் புனைவுகளுண்டு.ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

 

அப்பொய்கை நீரையருந்தி நால்வரும் மாண்டதையறிந்து உடைந்து போகிறார் தருமன். தருமனை மட்டும் காத்த மூதாதையர் மற்றவர்களை ஏன் கைவிட வேண்டும். அதுதான் தர்மத்தின் பலம் போலும். ‘தர்மம் தலைகாக்கும்’. தருமன் ஏன் தருமத்தின் தலைவனாகப் போற்றப்படுகிறான் என்பதை தன்னிலுள்ள அனைத்தையும் திரட்டி நிறுவியிருக்கிறார் ஜெமோ. அங்கு யட்சனுக்கும் தருமனுக்கும் நடக்கும் அந்த உரையாடல் நிகழ் காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் மாறி மாறி காலத்தைக் கரைத்து காலமின்மையை நமக்கு உணர்த்துகின்றது. அறத்தைப் பற்றி இங்குள்ள சொல்லாடல் அனைத்தும் வீண். அறம் அந்த சொற்களில் மறைக்கப்பட்டுள்ளது. மாறாத சொல்லென்று எதுவுமில்லை. மறுக்கப்படாத ஞானிகளென்று இங்கு யாருமில்லை. ஒவ்வொருவருக்கான அறத்தை அவர்களே தேடிக் கண்டடையவேண்டும். அதுவே தன்னறம் என்கிறார் தருமன் அந்த யட்சனிடம். மற்ற நால்வரையும் உளம்புகுந்து கொன்ற நான் தருமனிடம் மட்டும் ஏன் தோற்றோம் என்றுணர்ந்தவனாய் தன் குல மூதாதையரிடம் தருமனை அழைத்துச் செல்கிறான். இந்த நால்வரில் ஒருவரை மட்டுமே என்னால் உயிர்ப்பிக்க முடியும் என்றவரிடம் நகுலனைத் திரும்பக் கேட்டு ஆச்சரியப்படுத்துகிறார் தருமன். அதற்கான காரணத்தை அறிந்து நெகிழ்ந்த யட்சர்களின் மூதாதையர், தருமனை அறத்தின் மறு உருவாகவே காண்கிறார். காட்டைக் கடக்க உதவும் பீமனைவிட, போரில் வெல்ல உதவும் அர்ஜுனனைவிட, தன் தந்தையின் காலம் சென்ற இன்னொரு மனைவியின் மைந்தனான நகுலன் உயிர்ப்பிக்கப்படுவதே அறம். குந்தியின் மைந்தனாக நான் எஞ்சியிருக்கிறேன். ஆனால் மாத்ரியிக்கு யார்? என்ற அறம் சார்ந்த கேள்வியே தருமனை அம்முடிவிற்கு நகர்த்தியது. இப்படியொரு அறக்காவலனை கண்டபின்பே நான் உயிர் விடுவேன் என்பது என் ஊழ் என்று கூறி தன்னுயிர் ஈந்து அந்நால்வரையும் உயி்ர்ப்பிக்கிறார் அந்த மூதாதையர்.

 

அந்த யட்சர்களிடமே தாங்கள் தேடிவந்த அரணிக் கட்டைகளைப் பெற்றுக்கொண்டு அந்த ரிஷியின் தன்னையே அவியிடும் வேள்வி நடக்கும் இடம் நோக்கி விரைகிறார்கள். பாண்டவர்களின் வனவாசம் முடிவுக்கு வந்து விட்டதாகவே நாம் எண்ணும் வேளையில், தருமன் இன்னும் நிலையில்லாதவராகவே காணப்படுகிறார். நிலைகொள்ளாத எதுவும் உச்சக்கட்ட இயக்கத்திலிருக்கும் நிலை கொள்வதற்காக என்பதைப்போல, தருமன் தான் மட்டும் கந்தமாதனம் என்ற எரிமலைகள் நிரம்பிய காட்டை நோக்கி செல்ல விரும்புகிறார். பீமன் எவ்வளவோ வலிந்து தன்னையும் அழைத்துச் செல்ல கூறியும் மறுத்து விடுகிறார் தருமன். அர்ஜுனனும் இது அவருடைய பயணம். மீண்டு வருவார் தடுக்காதே என்கிறான் பீமனிடம். நீங்களனைவரும் சென்று அவ்வேள்வியை முடித்து வையுங்கள், நான் அந்த எரிகாட்டிலிருந்து மீண்டால் உங்களிடம் திரும்பி வருவேன் என்று கூறி அக்காட்டை நோக்கி பயணிக்கிறார் தருமன். எந்ந மிஞ்சியிருக்குமொன்றை அழித்தொழிக்க தன்னையே அவிகொடுக்க கிளம்பியிருக்கிறார் தருமன் என்று, பீமனைப் போலவே நாமும் பதைபதைத்துப் போகிறோம்.

 

*கந்தமாதனம்*

 

இக்காட்டில் நுழையும்போதே தருமன் எதிர்கொள்வது தன்னைப்போல் தன்னுள் இடைவிடாது வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் எரிமலைகளைத்தான். வெளியிலிருப்பதுதான் உள்ளிருக்கிறதா?  இல்லை உள்ளிருப்பதுதான் வெளியிலிருக்கிறதா? என்றெண்ணியவாரே அம்மலையை நோக்கி ஏற ஆரம்பித்தார். ஏறும் வழியில் கிடைப்பனவற்றை உண்டு, அம்மலையடிவாரத்திலுள்ள எரிசாம்பல் குவைகளில் படுத்துறங்கி அம்மலை உச்சியைநோக்கிப் பயணித்துக் கொண்டேயிருந்தார். நெருங்க நெருங்க அந்த எரிமலையின் வாயிலிருந்து உருவாகிய கரும்புகையில் விளைந்த வெண்புகைக் குடையின் வெம்மை தருமனின் உடை, தாடி என ஒவ்வொன்றாக பொசுக்கிக் கொண்டே வந்தது. தன்னை முழுதும் அதற்கு ஒப்புக்கொடுத்தவர் போல உச்சி நோக்கி தன்னிலுள்ள அனைத்தும் பொசுக்கப்படும் வரை விரைந்து கொண்டே இருந்தார்.

 

ஜப்பானில் வாழ்ந்த காலங்களில் Mount Fuji-Sanஐ வெகுதொலைவில் மிக பாதுகாப்பான அறைகளில் இருந்து கொண்டு தரிசித்த நினைவுகள் மேலெழுந்து வந்தன. அம்மலையின் உச்சிகளை நெருங்குபவர்களுக்கு என்ன  கொடுரம் நேரலாம் என்பதை மிகத் தத்ரூபமாக நம் கண்கள் முன் கொண்டு வந்திருக்கிறார் ஜெமோ.

 

தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தன்னை புறத்திலும் அகத்திலும் எரித்தொழித்து விட்டு உருக்குலைந்து நினைவுகளற்று ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்பட்டு தன் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேருகிறார். பதறிய அவர்கள் அர்ஜுனனின் வழிகாட்டலில் தேன் மற்றும் இதர உணவுகள் வழியாக தருமனின் உடலையும் நினைவுகளையும் மீட்டெடுக்கிறார்கள். மீண்டெழுவது வரை அங்குள்ள அனைத்தும் அவருக்கு ஒன்றாய்தான் இருந்தன. அந்த நிலையிலும் திரௌபதி பாராமுகம்தான் காட்டுகிறாள். ஆனால் முன்பு எப்போதுமில்லாத புன்னகையோடு அதை கடக்கிறார். ஒருவேளை அத்தீயில் அவரழித்தொழித்தது இந்த குற்றஉணர்வைத்தானா என்று எண்ணவைக்கிறது. மீண்டெழுந்தபின் அவரின் மிகப் பிரகாசமான முகத்தையும் உடலையும் கண்டு புத்துணர்வும் ஆற்றலும் பெறுகிறார்கள் இளையவர்கள், சூரியனிடமிருந்து பிற உயிர்கள் ஆற்றலைப் பெறுவதைப்போல.

 

நாம் வந்து வெகுநாட்களாகி விட்டது; இங்கிருந்து கிளம்பலாம் என்கிறார் தருமன். “மூத்தவரே, நீங்கள் கந்தமாதன மலையுச்சியில் பெற்றது தான் என்ன?” என்று நமக்கிருந்த அதே ஆவலை வெளிப்படுத்துகிறான் பீமன். இங்குள்ள அனலுக்கெல்லாம் காரணமான அந்ந அனலனை, பசிவடிவனை, ஜடரனைக் கண்டேன். என்னையே அவனுக்கு அவியாக்கிக் கொள்ளுமாறு வேண்டினேன். அப்பசிவடிவன் என் கைகளை பசுவின் மடியாக்கி என்னிலுள்ள அனைத்தையும் பெருக்கி இக்காடெங்கும் பரவ வைத்தான்.”இன்று நான் ஒரு அன்னம்குறையாத கலம்” என்று அமுதசுரபியாகி ‘சொல்வளர் காட்டை’ முடித்து வைக்கிறார். “என்னை உண்க” என்ற தாயுமானவனின் குரல் நம்முள்ளும் ஒலிக்கிறது.

6 thoughts on “சொல்வளர் காடு – Dharman’s Sabbatical leave”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s