பெரியாரும் பெரியவரும்

images (22)

சமீபத்தில் நடந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா கௌசல்யா சங்கரை மேடையேற்றியிருந்தது. பெண்களின் காதல் தோழனான கேசத்தை கழுத்து வரை ஒட்ட வெட்டியிருந்தார். உயிர்க் காதலனின், கைப்பிடித்த கணவனின் இழப்பிற்கு பின் இது எதற்கு என்பதுபோல.

அணிந்திருந்த உடையும், அதற்கேற்ற பாவனையும் இயல்பாகவே வந்திருந்தது கௌசல்யாவிற்கு. சன்னமான, அதே சமயத்தில் தீர்க்கமான அந்த பேச்சின் குரலில் சங்கரின் குருதி கண்ட நாளின் நினைவுகளை கடந்து சங்கரை மட்டும் இன்னும் சுமந்து கொண்டிருப்பது தொனித்தது.

 

ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு நம்பிக்கை மனுஷியாய் எழுந்துள்ளார். இதைச் சாத்தியப்படுத்தியது பெரியாரிசம் என்று நன்றி கூறி மேடையிறங்கினார்.

 

உண்மையிலேயே பெரியார் ஒரு மகத்தான சிந்தனையாளர் தானா? என்ற கேள்வியை விட, நிலையாமையின் உச்சத்திலிருந்த ஒரு அபலைப் பெண்ணை நிலைகுலைவிலிருந்து  தடுத்து அவளை அடுத்த கட்டத்திற்கு செலுத்தியது ஒரு மனிதனின் வழி வந்த கொள்கைகள் தான் என்றால் அம்மனிதர் தெய்வம் தான்.

images (21)

தன் மனம் நலம் குன்றிய 13 வயது மகளின் பரிதாபநிலையை சகிக்க முடியாமல் அவளை கருணைக் கொலை செய்ய முயன்று காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரின் அணுக்கத்தால் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்ட பெற்றோரை நானறிவேன். இங்குள்ள அனைத்து உயிர்களும் ஒன்றே. ஒவ்வொன்றின் இருப்பிற்கும் ஏதாவது ஒரு காரணமும், அது ஆற்ற வேண்டிய காரியமும் உண்டு, என்றணைத்து அப்பெற்றோரை சில குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் வழியாக மீட்டெடுத்தார். மனம் நலம் குன்றிய அச் சிறுமி அவ்வீட்டின் தெய்வமாக கொண்டாடப்படுகிறாள் இப்போது.

 

இது மதத்தின் மூடப்பழக்க வழக்கம் இல்லையா  என்பதல்ல கேள்வி? உள்ளம் வெதும்பி செய்வதறியாமல் திகைத்து, செய்யக்கூடாததை செய்ய முயன்றவர்களை திசை திருப்பி, அவர்களுக்கு வாழ்க்கையின் மற்றொரு பரிணாமத்தை காட்டியிருக்கிறார் அப்பெரியவர்.

 

கௌசல்யாவும், இப்பெற்றோரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறாயினும், அவர்களுடைய இலக்கு ஒன்று தான். நிலையாமையைக் கடந்து செல்ல உதவும் எவரும் தெய்வங்களே.

Advertisements