குமரகுரபன்-விஷ்ணுபுரம் விருது விழா

IMG-20180610-WA0029

என்னால் மறக்க முடியாத நிகழ்வின் ஒராண்டு நிறைவிது. போன வருட ‘குமரகுருபன் – விஷ்ணுபுரம்’ விழாவில்தான் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனை( ஜெமோ) முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இடைப்பட்ட இந்த ஓராண்டில் அவரைச் சந்திக்க கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும், அந்த முதல் சந்திப்பு பற்றிய நினைவுகளை வருடிச் செல்ல தவறுவதில்லை. போனமுறை சபரிநாதனுக்கு; இம்முறை கண்டராதித்தனுக்கு என, சிறந்த கவிஞருக்கான விருது வழங்கும் இவ்விழா தன் இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. கடும் உழைப்பைக்கோரும் இவ்விரு விழாக்களையும் சாத்தியப்படுத்தியது சென்னை விஷ்ணுபுர வாசகர் வட்டம். மறைந்த இளம் கவிஞரான குமரகுருபனுக்கு இதைவிட சிறந்த முறையில் அஞ்சலி செலுத்தமுடியுமாவென்று தெரியவில்லை. இலக்கியச் செயல்பாடுகளை இவ்வளவு தீவிரமாக முன்னெடுப்பதில் ஜெமோவின் ‘விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்’ தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரும் கொடை.

IMG-20180605-WA0021

இந்த வருட நிகழ்வின் நாயகனான கண்டராதித்தன், தன் புகைப்படத்தில் கவிஞர்களுக்கே உரிய புனைவான கம்பீரத்தோடு தோற்றமளித்தார். அவரை நேரில் சந்தித்தபோது, ஜெமோ தன் உரையில் கூறியதைப் போல அவர் கவிதை வெளிப்படுத்திய ஆளுமைக்கும் அவருக்கும் எந்த ஒருவித சம்பந்தமும் இல்லாமல் ஒரு கிராமத்து இளைஞனுக்கே உரிய வெகுளித்தனமும் மருண்ட பார்வையுமாக இருந்தார். புகழ்பெற்ற இலக்கிய விமர்சகரான டி.எஸ். எலியட்டின் “கவிஞர்கள் தங்கள் கவிதைகள் மூலம் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதில்லை; தங்கள் ஆளுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்” என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

விருது விழா நடக்கும் ஞாயிறன்று மதியமே “நாவல் கோட்பாடு” பற்றிய ஒரு விவாதமும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஜெமோவுடனான இயல்பான சந்திப்புக்கு வாய்ப்பிருக்காதென்றே எண்ணியிருந்தேன். சனி இரவு, வழக்கம் போல் காளிபிரசாத் அந்த சந்திப்பு காலை 10 மணி அளவில் சாத்தியம் என்று வாட்ஸப்பியிருந்தார். விழாவில் தான் பேசப்போகும் கன்னிப்பேச்சு பற்றிய படபடப்பு அச்செய்தியிலிருந்து போல் எனக்கு தோன்றியது. ஆனால் அது என்னுடைய வெறும் உளமயக்கம் மட்டுமே என்பதை அப்போது நான் உணரவில்லை.

யோகா சென்டர் – வடபழனி

காலை 9 மணிக்கெல்லாம், ‘ஜெமோ @யோகா சென்டர்’ என அவரும் மற்றும் சிலரும் உள்ள புகைப்படம் சென்னை வட்ட வாட்ஸ்அப் குழுமத்தில் பதிவிடப்பட்டது கண்டு, அப்போது தான் முறுவலித்துக் கொண்டிருந்த நான் சுறுசுறுப்பானேன். அன்று முகூர்த்த நாளென்பதால் Olaக்களின் கட்டணம் சற்று எகிறியிருந்தது. வழக்கமாக கிடைக்கும் ஆட்டோ சாரதி அவருடைய சொந்த வேலைகளில் மூழ்கியிருந்ததால், Olaவைப் பற்றிக்கொண்டு சின்ன மலையிலிருந்து கிளம்பியபோது மணி பத்தரையை தாண்டியிருந்தது. வழக்கம் போல அங்கிருக்கும் கவர்னர் மாளிகையின் நுழைவுவாயில் சிறைக்கதவுகளையே ஞாபகப்படுத்தியது. ஒரு காலத்தில் எப்போதாவது குவிக்கப்படும் காவலர்கள், இப்போதெல்லாம் அங்கே நிதமும் குவிக்கப்படுகிறார்கள். வழக்கம்போல் ஒரு சின்ன படபடப்பு மெல்ல தொற்றிக்கொண்டது; இது அங்கிருந்த காவலர் கூட்டத்தை பார்த்ததால் அல்ல.ஜெமோவை மறுபடியும் நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதால். இடைப்பட்ட இந்த ஓராண்டில் சிலமுறை சந்தித்திருந்த போதும், ஒவ்வொரு முறையும் இந்த படபடப்பு மற்றும் சிறிதளவேனும் இல்லாமல் இருப்பதில்லை.

கத்திப்பாரா சுழல் மேம்பாலச் சாலையில் வாகனங்கள் மெல்ல தேங்க ஆரம்பித்திருந்தது படபடப்பை அதிகப்படுத்தியது. மிக அகலமான அந்தச் சாலையில் கிட்டத்தட்ட ஒரு 100 மீட்டருக்கு முன்னும் பின்னும் நீண்டிருந்தது வாகனங்களின் தேக்கம். சென்னையர்கள் எது நடந்தாலும் தங்கள் வாகனத்தை விட்டு இறங்குவதில்லை என்ற நிலைமையெல்லாம் மாறிவிட்டது. அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த ஒரு ஸ்கார்பியோ வாகனத்தின் பின்புறத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மிக பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழே வீழ்ந்திருந்த இரு சக்கர வாகன ஓட்டியை ஆசுவாசப்படுத்தி அதே ஸ்கார்பியோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். தேக்கம் கலைந்து வாகனங்கள் மீண்டும் பயமுறுத்தும் வேகத்தில் பறக்கத் தொடங்கின. தரமான சாலைகளால் மட்டுமே நம் பயணங்கள் தரமாக அமைவதில்லை. வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கப்படும் முறையும்; கற்றுக்கொள்ளும் முறையும் தரமாக மாறாதவரை தரமான சாலைகளின் பயனை நாம் முழுவதும் பெறப்போவதில்லை என்றெண்ணிக் கொண்டே குருஜி(சௌந்தர்) அவர்களின் யோகா சென்டரை அடைந்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.

மாதமொருமுறை நடக்கும் விஷ்ணுபுரம் சென்னை வட்டத்தின் இலக்கிய நிகழ்வுகள் நடக்கும் இவ்விடம் விடுதியாகவும் மாறியிருந்தது. அந்த நீண்ட செவ்வக அறையின் ஒரு பக்கம் முழுவதும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இந்நிகழ்வுக்காக பயணித்திருந்தவர்களின் தோள்பைகள் சீரான வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எதிர்புறம் நடுநாயகமாக மூத்த கவிஞரும் சிறந்த கவிஞருக்கான விருதை வழங்கப் போகிறவர்களில் ஒருவருமான கலாப்பிரியா அவர்கள் வீற்றிருந்தார். சுற்றி ஒரு 30 பேர். அவர்களின் சராசரி வயதும் ஒரு 30 இருக்கும். ஜெமோ அப்போதுதான் ஒரு வேலையாய் வெளியே சென்றிருந்ததாக கூறினார்கள். ஜாஜா, அருணாச்சலம் என்று தெரிந்த முகங்களுக்கு நடுவில் ஜெமோ தளத்தில் மூலம் மிகப்பரிட்சயமாயிருந்த கிருஷ்ணனும் ஏ.வி. மணிகண்டனும் அங்கிருந்தனர். விஷால் ராஜாவும், எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனும் விருது விழாவிற்கு முன் நடக்கவிருக்கும் நாவல் வடிவங்கள் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்காக தயாராகிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.

ஏற்கனவே அங்கே உரையாடல் களைகட்டியிருந்தது. ஒரு மெல்லிய புன்னகையோடும் ஆச்சரியத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் கலாப்பிரியா. படிமங்கள் இலக்கியத்தில் முதலில் எங்கு தொடங்கியிருக்க முடியும்? என்று கலாப்பிரியாவை திணறடித்துக் கொண்டிருந்தார்கள் ஏ.வி யும் அருணாச்சலமும். ஜெமோவின் தளத்தில் வெளிவரும் இவர்களுடைய கட்டுரைகள் செறிவான மொழி நடையும் உரிய இலக்கிய கலைச்சொற்களையும் உடையவை.

மணி பண்ணிரெண்டை தொட்டிருந்நது. கலாப்பிரியா ஓய்வெடுப்பதற்காக விடைபெற்றுக் கொண்டார். ஆனால் கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் துள்ளிக் கொண்டு உள்ளே வந்தார் ஜெமோ. “மணிவண்ணன் சார், நான் உங்களோட பெரிய ஃபேன். எனக்காக நீங்க நடிச்ச ஒரு காமெடிய பண்ணிக்காட்டுங்களேன் என்று இரயிலில் பயணிக்கும் போது கேட்ட ஆட்டோ ஓட்டும் ரசிகரிடம், எங்க இப்ப நீங்க ஆட்டோ ஓட்டி காண்பிங்க” என்ற நகைச்சுவையுடன் இறுக்கமான கலந்துரையாடலை இலகுவான அரட்டை கச்சேரியாக மாற்றினார் ஜெமோ. செய்தி துறத்தல், சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் அதன் அபத்தம், தன் அராஜக பால்யம், தூத்துக்குடி கலவரம் என பசியை மறக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக சென்றது. ஜெமோவின் ஒவ்வொரு பேச்சுக்கும் ஏதாவது ஒரு எதிர்வினையை ஆற்றிக்கொண்டேயிருந்தார் கிருஷ்ணன்.

இப்போதிருக்கும் சமூகவலைதளச் சமூகம், எல்லாவற்றையும் வெறும் இருவரிச் செய்திகளாக எதிர்பார்க்கிறது. திருவள்ளுவருக்கு அவர் காலத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களை விட பெரிய சவால்களை இந்த எதிர்பார்ப்புகள், சமகாலத்தில் கருத்து சொல்பவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனாலேயே ஆழ்ந்த வாசிப்பற்ற எந்தவிதமான புரிதலுமற்ற அபத்தங்களே பெரும்பாலும் சமூகவலைதளங்களில் சிலாகிக்கப்படுகின்றன. எங்கோ படித்த இந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன.

Junk Food and Social Networking Sites
இவையிரண்டையும் அதிகம் மேய்பவர்கள் தங்கள் நுண்ணுனர்வை இழக்கிறார்கள்.

ஒன்றில் ஆழ்ந்து போகத்தெரியாதவர்கள், கடலின் மேற்பரப்புக்கு வரமுடியாமல் முழுகிப் போகும் சாத்தியங்களே அதிகம் என்பதை உணர்த்தியது ஜெமோவுடனான அந்த அரட்டை. மணி மதியம் ஒன்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. வழக்கம் போல் சௌந்தர் குருஜி சாப்பாட்டு மணி அடித்தார். சிக்கனமான அளவுச்சாப்பாடை சென்டரிலிருந்து ஒரு 100 மீட்டர் தொலைவிலிருந்த உணவு விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார். இது சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல. அளவில்லாச் சாப்பாட்டை வாங்கிக் கொடுத்து எங்கே அனைவரும் மட்டையாகி மதியம் நடைபெறும் நாவல் கோட்பாடு விவாதத்தில் கலந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற ஜாக்கிரதையுணர்வும்கூட. Guruji is thoughtful.

கிட்டத்தட்ட ஒரு ஊர்வலம் போல உணவு விடுதிக்குச் செல்லும் சாலையை அந்த எரிக்கும் வெயிலில் கடந்தபோது, ஒரு நடுத்தர வயது பெண்மணி எங்களை வழிமறித்து “அவர் யார்? ஏன் அவர் பின்னால் எல்லோரும் செல்கிறீர்கள்? “ என்று ஜெமோவைக் சுட்டிக்காட்டி கேட்டார். அவர் தான் writer ஜெயமோகன் என்று பலமுறை சொல்லியும், திரும்பத் திரும்ப “அவர் directorஆ” என்றே கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு எழுத்தாளர் பின் இவ்வளவு பேர் செல்வதெல்லாம் இன்னும் பொதுப்புத்திக்கு அந்நியமானதே.

அளவுச்சாப்பாட்டிற்கே கொஞ்சம் மயக்கம் வந்தது. மீண்டும் யோகா சென்டருக்கே திரும்பி, கொஞ்ச நேர அரை மயக்கத்தில் மணி 3ஐத் தொட்டிருந்தது. திடீரென ஜெமோ துள்ளி பரபரப்பானார். விழா நடக்கும் அரங்கு நோக்கி கிளம்பினார், நாவல் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்காக. அரங்கமும் அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவுதான். விழா நடக்கும் அரங்கில் கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிவடையும் நிலையில் இருந்தது. ராகவ், சிறில், முத்து மற்றும் சௌந்தரும் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அரங்கத்துக்குச் செல்லும் வழியில் ஜாஜாவிடம் அச்சிலிருக்கும் என் முதல் புத்தகத்தின் முகப்பு பக்கத்தைக் காண்பித்து ஜெமோவிடம் எப்படி அதை காண்பிப்பது என ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ஜாஜாவிற்கு மிக்க மகிழ்ச்சி. அன்றே கையில் கிடைத்திருக்க வேண்டிய புத்தகம், அச்சகத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சாத்தியப்படவில்லை. அடுத்த நாள்தான் கொடுக்க முடியுமென்று விட்டார்கள்.

நாவல் கோட்பாடு வடிவம் – விவாதம்

இது விஷால் ராஜாவிற்கு வளங்கப்பட்ட அருமையான வாய்ப்பு. வளர்ந்து வரும் இளம் படைப்பாளி. நாவல்களில் நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளின் தாக்கம் பற்றிய தன் வாதத்தை மிக அருமையாக முன்வைக்க, அதற்கான எதிர்வாதத்தை பிரபல எழுத்தாளரும் ஆயுர்வேத மருத்துவருமான சுனீல் கிருஷ்ணன் முன் வைத்தார். ‘சிந்திப்பதால் நான் மனிதன்’ எனும் டெக்கார்த்தேவின் நவீனத்துவத்திலிருந்து ‘சிந்திப்பதால் நான் செயல்பட முடிவதில்லை’ எனும் தஸ்தயேவ்ஸ்கியின் பின்நவீனத்துவம் என விவாவதம் அங்கிருந்த இளையவர்களுக்கு (கிட்டத்தட்ட 100 பேராவது இருக்கலாம்) நிறைய திறப்பை உருவாக்கி இருக்கலாம்.

‘போமோ’ (போஸ்ட் Modernism) என்று செல்லமாக அழைக்கப்படும் பின்நவீனத்துவம், மரபுகளை கலைத்து (அல்லது அதன் வழியாக) நவீனத்துவம் கொண்டிருந்த ஒற்றைப்படைத்தன்மையை தனிமனிதன் என்ற உருவகத்தை கேள்விக்குள்ளாக்கியது எனலாம். விவாதத்திற்கு பின் எழுப்பப்பட்ட வறுத்தெடுக்கும் கேள்விகளை மிக இலாவகமாகவே கையாண்டார்கள் சுனீலும் விஷாலும். அதிலும் ஜெமோ கேட்ட ஒரு கேள்வியான, தமிழ் பண்பாட்டை மீள் உருவாக்கம் செய்யும் பின்நவீனத்துவ நாவல்கள் எதுவும் ஏன் தமிழில் இல்லை என்ற அந்த கேள்வி ஏனோ தெரியவில்லை மார்க்ஸிய இலக்கிய விமர்சகரான கோவை ஞானி அவர்களை ஞாபகப்படுத்தியது. அதிகாரங்களை, அதன் தற்போதைய வடிவங்களை கேள்விக்குட்படுத்தும் பின்நவீனத்துவ காலகட்டம் தனக்கான ஆற்றலை தன் மரபிலக்கியங்களை பயில்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார். உணவை விளைவிக்கும் சமூகமாக மாறிய பண்டைய கால மருதநிலம் தன் வேளாண்மையில் கிடைத்த உபரி மூலம் உணவை சேகரிக்கும் சமூகங்களடங்கிய ஏனைய நிலங்களான குறிஞ்சி, முல்லை, நெய்தலை வென்றெடுத்து ஒரு மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறார்கள். இதன் பொருட்டே கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறார் என்று ஞானி கூறும்போது அது முற்றிலும் ஒரு புதிய கோணத்தை நமக்குத் திறப்பதுபோல் எந்த ஒ்ரு ஆக்கமும் தமிழில் உருவாக்கப்படவோ இல்லை விமர்சிக்கப்படவோ இல்லை என்றே தோன்றுகிறது.

விருது விழா

கிட்டத்தட்ட 2 மணி நேரம் சென்றதே தெரியவில்லை. மணி ஐந்தரையைத் தொட்டிருந்தது. விருது விழாவுக்கு வருகிறவர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தார்கள். வித்தியாசமான அரங்க அமைப்பு. நுழைவாயிலின் பக்கத்திலேயே மேடை. வரும் அனைவரும் பெருந்திரளை எதிர்கொண்டு நாணியே உள்ளே வந்தார்கள். அதுவே ஒரு கவிதையைப் போல்தான் இருந்தது. குமரகுரபனின் மனைவியும் அப்போதுதான் வந்திருந்தார். விவாதமும் முடிவுக்கு வர அதே மேடை விருது விழாவுக்கான மேடையாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றப்பட்டது.

விழாவின் நாயகன் கண்டராதித்தன் தன் நண்பர்களுடன் தன் கவிதைப் புத்தகங்கள் அடங்கிய பெட்டியோடும் அரங்கத்தில் நுழைந்தார், ஆளுமை எதுவுமற்ற ஆளுமையாக. அவரைத் தொடர்ந்து அவ்விருதை வழங்கப் போகிறவர்களான மலையாள இலக்கிய உலகைச் சேர்ந்த டி.பி.ராஜிவனும், நம் பக்கத்து வீட்டுக்காரர் போன்றவருமான மூத்த கவிஞர் கலாப்பிரியாவும் வந்தார்கள். அதைத் தொடர்ந்து கண்டராதித்தனின் நண்பரும் எழுத்தாளரும் நடிகருமான அஜயன் பாலாவும் வர விஷ்ணுபுரம் வட்டம் கண்ணசைக்க ஸ்ருதி டிவியினர் தன் கட்டைவிரலை உயர்த்திக்காட்ட விருது விழா இனிதே துவங்கியது, சிறிலின் வசீகரமான வரவேற்புரையுடன்.

IMG-20180610-WA0025

தொகுப்பாளர்களுக்கே உள்ள presence of mind உடன் ஜாஜா விழாவை தொகுத்தளிக்க ஆரம்பித்தார். இவையனைத்தையும் பார்த்துக் கொண்டு தன் கன்னி உரைக்கான நேரத்திற்காக, படபடப்பை வெளியே காட்டாமல் காளிபிரசாத் நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியபடி இருந்தார்.

IMG-20180610-WA0030

அனைவரின் கரகோசங்களுக்கு நடுவே டி.பி.ராஜிவனிடம் கைகுலுக்கி விருதைப் பெற்றுக்கொண்ட கண்டராதித்தன் கலாப்பிரியாவிடம் மட்டும் உரிமையாக கட்டியணைத்து முத்தம் கொடுத்துப் பெற்றுக்கொண்டார். அந்த அணைப்பின் கதகதப்பில் அஜயன்பாலா கூறிய கண்டராதித்தனுக்கு நேர்ந்த அனைத்துப் புறக்கணிப்புகளும் அவமானங்களும் உருகிப்போயிருக்கலாம். இதைத்தான் இந்த விழா சாத்தியப்படுத்தியது.உரியவர்களுக்கான அங்கீகாரம் பொதுவெளியில் கிட்டியே ஆகவேண்டும் என்பதே ஜெமோவின் அறைகூவல்.அதை சத்தமேயில்லாமல் நிகழ்த்தியும் காட்டிக் கொண்டிருக்கிறார்.

IMG-20180610-WA0028

அதற்குப்பின் உரைநிகழ்த்திய டி.பி.ராஜிவனின் ஆங்கிலஉரை தமிழ் மலையாள இலக்கிய உறவையும். கவிதையின் உன்னதத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. மலையாள உச்சரிப்பு இல்லாத ஆங்கிலஉரை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து பேசவந்த கலாப்பிரியா 70 ஆண்டுகால தமிழ் நவீன மரபுக்கவிதைகளின் உருவாக்கத்தையும், அதில் கண்டராதித்தனின் இடம் என்னவென்பதையும் சுட்டிக்காட்டினார். மணி ஏழரையைத் தொட்டிருந்தது. பெரிய சூறாவளி ஒன்று தாக்கிச் செல்வதுபோல இருந்தது அதற்குப்பின் வந்த அஜயன்பாலாவின் உரை. தன் நண்பனின் அவமானங்கள், ஏமாற்றங்கள் என கண்டராதித்தன் கடந்து வந்திருக்கும் பாதையை மிக உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்லி அங்கிருந்த அனைவரையும் ‘நண்பேன்டா’ போடவைத்தார். அங்கிருந்த இளம் கவிஞர்களுக்கும் கண்டராதித்தனின் நண்பர்களுக்கும் அவ்வுரை கண்ணீரை வரவழைத்திருக்கும்.

IMG-20180610-WA0037

விஷ்ணுபுரம் சென்னை வட்ட வாசகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட காளியின் பேச்சு அங்கு அஜயன்பாலா ஏற்படுத்திச் சென்றிருந்த இறுக்கத்தை கொஞ்சம் நெகிழ்த்தியது. ஒரு மேடைப்பேச்சு போல அல்லாமல் கண்டராதித்தனுடைய கவிதைகளின் ரசிகனாக அக்கவிதைகளின் அழகியல் தருணங்களை தன் சொந்த அனுபவத்திலிருந்தே விளக்கினார். மணி எட்டைத் தாண்டியிருந்தது. அதற்குப்பின் உரையாற்ற வந்த ஜெமோ தமிழ் கவிதை மரபிலுள்ள குறையான மாற்றுத் தரப்பு கவிதைகள் என்ற ஒன்று இல்லாமையை சுட்டிக்காட்டினார். இங்குள்ள கவிதைகளணைத்தும் ஒழுக்கத்தின் தேவையின்மையையும், மரபுகளுக்கு எதிரானதாகவும் உள்ளன. இதற்கான எதிர்தரப்பு ஒன்று எழுந்து வரவேண்டும் என்ற அறைகூவல் ஒன்றையும் விடுத்து அதற்கான சில சாத்தியக்கூறுகளையும் கண்டராதித்தன் கவிதைகள் வழியாக சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வுக்குக் காரணமான மறைந்த குமரகுருபனையும் நினைவு கூர்ந்தார். இதுவரை ஜெமோ ஆற்றிய உரைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது இவ்வுரை.

IMG-20180610-WA0038

IMG-20180610-WA0027

அதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது.

IMG-20180610-WA0044

வழக்கம்போல் ஜெமோவை மொய்க்க ஆரம்பித்திருந்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என அரங்கத்தை விட்டு சாலை வரை என அவரைச் சுற்றி வந்து கொண்டேயிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பத்து மணிநேரம் தொடர்ச்சியாக இவ்வளவு ஆற்றலோடு நான் இருந்ததில்லை. ஒன்றின் மேல் கொண்டுள்ள ஈடுபாடு நமக்குத் தேவையான ஆற்றலை நாமே பெற்றுக் கொள்ள உதவுகிறது என்று எண்ணிக்கொண்டு அச்சிலிருக்கும் என் முதல் புத்தகத்தின் முதல் காப்பியை நாளை ஜெமோவிடம் கொடுத்து ஆசிபெறலாம் என Olaவைச் சுழலவைத்தேன்.

IMG_20180610_2054023

(குறிப்பு : அடுத்த நாள் மதியம் மீண்டுமொரு முறை ஜெமோவைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. என் புத்தகத்தையும் கொடுத்து வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்றுக் கொண்டேன். மீண்டும் அங்கு நடந்த உரையாடல்கள் மிக சுவாரஸ்யமானவை. இதைப்பற்றி ஒரு தனி பதிவுதான் எழுதவேண்டும். இக்குறிப்புக்குள் அடக்க முடியாது)

Advertisements