
நிகழ்காலம், கடந்தவைகளுடன் கொள்ளும் ஓர் உறவின் விளைவுதான் நவீனமாக இருக்க முடியும். இவ்வுறவை ஒரு முரணியக்கம் என்றும் சொல்ல முடியும். புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ மேதையான ஹெகலின் இயங்கியலின் படி இந்த முரணியக்கத்தின் விளைவு மேம்பட்ட ஒன்றாகத் தான் இருக்க முடியும். மேலும் இந்த முரணியக்கம் தொடர்ச்சியான ஒன்றும் என்கிறார். இதன்படி நவீனம் எப்போதுமே மேம்பட்டது மற்றும் இன்றைய நவீனம் நாளை மரபாகி விடுகிறது எனலாம்.
நவீனத்திற்கும், மரபுக்கும் இடையே நடக்கும் இம்முரணியக்கம், மரபின் இடைவெளிகளை கண்டு நிரப்பவும் செய்கிறது. இதனை ஒத்திசைவு என்றும் உருவகிக்கலாம். சில சமயங்களில் மரபை முற்றிலும் நிராகரித்து நவீனம் தனித்தும் எழுகிறது. நாம் நவீனம் என்று கொண்டாடும் பெரும்பாலானவை இப்படி தனித்து நிற்பவை தான். இந்நாவலில் சித்தரிக்கப்படும் அலோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் போல.
இருவேறு சிந்தனை முறைகள்
அலோபதி மரணத்தை வென்று விட துடிக்கிறது. ஆயுர்வேதம் மரணத்தை அறுதி முடிவாக கருதாதது. முற்றிலும் இருவேறு சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட இவ்விரு சிகிச்சை
முறைகளுக்கும் இடையே ஒத்திசைவு நிகழ்வது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. மரணத்தை, கங்கைக் கரையில் சென்று உயிர் விடும் ஒரு கொண்டாட்டமாக ஆக்கிவைத்திருக்கும் இந்நிலப்பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத சிகிச்சையை முற்றிலும் புறக்கணிப்பதன் மூலமே அலோபதி இந்நிலத்தில் வளரமுடியும் என்பதை மிக நுட்பமாக சித்தரிக்கிறது இந்நாவல்.
இளமையும் நவீனமும் வெவ்வேறல்ல. முறுக்கேறிய இளமை நவீனத்தின் மேல் கொள்ளும் காதல் எப்போதும் மரபை மறுப்பதாகவோ அல்லது தந்தையை எதிர்ப்பதாகத்தான் உள்ளது. இந்நாவலின் மையக்கதாபாத்திரங்களில் ஒருவரான ஜீவன் மஷாயும் இதற்கு விதிவிலக்கல்ல. மிகவும் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருத்துவ பரம்பரையில் இருந்து வரும் ஜீவன் மஷாய், சமஸ்கிருதத்திற்கு பதிலாக அப்போது பிரபலமடையத் தொடங்கியிருந்த ஆங்கிலக் கல்வியை கற்க முனைப்புடன் இருப்பதும் இந்த நவீன மோகத்தால் தான். மேலும் ஆங்கிலம் கற்றால்தான் அவர் விரும்பும் அலோபதி மருத்துவத்தை கற்கும் வாய்ப்பு கிட்டும் என்பதால் சமஸ்கிருதத்தையும், ஆயுர்வேத மருத்துவத்தையும் விட்டு விலக முடிவெடுக்கிறார். ஆனால் விதி வலியது. அவர் கல்லுரியில் நடந்த ஒரு காதல் பிரச்சினையால் ஆங்கிலப் படிப்பை கைவிட நேருகிறது. வேறு வழியின்றி தன் தந்தையான அவ்வூரின் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருத்துவரான ஜகத் மஷாயிடம் சமஸ்கிருதத்தையும், ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படைகளையும் கற்றுத் தேர்கிறார் ஜீவன் மஷாய்.
இசை ஆரம்பிக்கும் போதே, அவ்வொலியில் உள்ள ஸ்வரங்களின் கோர்வையான துடிப்பைக் (ஸ்தாயி) கொண்டு இது இந்த ராகமாகத்தான் இருக்கும் என்கிற இசை ஞானிகளைப் போல, நோயாளிகளுடைய நாடியின் துடிப்பைக் கொண்டு வந்திருக்கும் நோயின் தன்மையையும், வீரியத்தையும் துல்லியமாக கணக்கிடும் நிபுணத்துவத்தை தன் தந்தையின் பயிற்சி வழியாகவும், தன் உள்ளுணர்வின் வழியாகவும் பெறுகிறார் ஜுவன் மஷாய். இதுவே, நிறைய நோயாளிகளின் குடும்பத்தாரை அவருக்கெதிராகவும் ஆக்குகிறது. அவருடைய மனைவி ஆத்தர் பௌ உட்பட. தன் சொந்த மகனான வனவிஹாரியின் முடிவையே முன்கூட்டி அறிவித்தவர் ஜீவன்மஷாய். அவருடைய பாரம்பரியமாக அறியப்படும் ‘கவிராஜ்’ மரபின் வழி கிட்டிய அறிவு அல்லது சொத்து இது. இம்மரபுச் சங்கிலியின் தொடர்ச்சியாக வரும் ஒவ்வொருவரும் தேவர்களின் மருத்துவர் என்று உருவகிக்கப்படும் தன்வந்திரிகளாகவே கருதப்படுகிறார்கள். இந்திய மருத்துவத்தின் முதல் நூலான ‘சரக சம்ஹிருதை’ தன்வந்திரியின மருத்துவ முறைகளில் இருந்துதான் உருவாக்கப்பட்டது என்ற தொன்மத்தையும் இந்நாவல் சுட்டிக் காண்பிக்கிறது.
ஏன் மரணம்?
மரணத்தை அறுதியான ஒன்றாக கருதாத சிந்தனைப் பள்ளியில் இருந்து ஆயுர்வேதம் கிளைத்திருந்தாலும், மரணம் சங்கடமற்ற ஒன்று என்ற ரகசிய ஞானமெல்லாம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு கிட்டுவதில்லை. இந்த ரகசியஞானம் என்பது கிட்ட முடியாத ஒன்று என்பதை உணர்ந்தவராக அல்லது கிட்டியது போல் பாவனை செய்யாத நேர்மையான ஒருவராகவே ஜீவன் மஷாய் இந்நாவலில் சித்தரிக்கப்படுகிறார்.
ஏன் மரணம் என்பதற்குப் பதிலாக சொல்லப்பட்ட தொன்மக் கதைகளை (மித்ருயு என்ற மரண தேவதை, பூமியின் சமநிலையை காப்பதற்காக உருவாக்கப்பட்டாள்; அவள் தான் மனிதர்களை பிணிகளிடம் இருந்து மரணம் வழியாக விடுவிக்கிறாள்) தன் உள்ளுணர்வாக்கிக் கொண்டாலும், இளவயது மரணங்கள் இந்த மரண தேவதை எப்படி இருப்பாள், அவளுடைய நோக்கமென்ன, ஏன் அவளிடமிருந்து நாம் விடுபடுவதில்லை, நம் நாடித்துடிப்பிற்கும் அவளின் நிழல் நம்மை நெருங்குவதற்கும் உள்ள தொடர்பென்ன என்ற கேள்விகள் அவருள் எழும்பி தொடர்ந்து சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, தன் மகன் வனவிஹாரியின் மறைவிற்குப் பிறகு இந்த சஞ்சலங்கள் அதிகமாகி மருத்துவம் பார்ப்பதையே கைவிடும் நிலைக்குச் செல்கிறார்.
அலோபதியா? ஆயுர்வேதமா?
ஜீவன் மஷாய் வாழும் இடத்தில் அலோபதியும் தளைக்க ஆரம்பிக்கிறது. பிரத்யோத் பாபு, அந்நிலத்தின் அலோபதியின் முகமாக எழுந்து வருகிறார்.
நான்தான் இன்னும் சில நாட்களில் இறந்து விடப்போகிறேனே, எதற்கிந்த அலோபதி மருந்துகள் என்று எந்தவித பதற்றமும் இல்லாமல் மரணத்தை ஏற்றுக் கொள்பவர்களை எப்படி தன் நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்ற ஆற்றாமையில், அவர்களின் மரணத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஜீவன் மஷாயின் நாடி ஞானத்தின் மேல் பெரும் வெறுப்பு கொள்கிறார் பிரத்யோத். மரணத்தை கணிக்க இவர்கள் யார் என்று அறிவியல் பூர்வமான கேள்விகளை முன் வைத்து ஜீவன் மஷாய் கைவிட்ட சில நோயாளிகளை குணமாக்கவும் செய்கிறார்.ஜீவன் மஷாயின் அதே ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவராக இருக்கிறார் பிரத்யோத். இது, நம்மை மட்டுமல்ல, ஜீவன் மஷாயையும் அவருக்கு நெருக்கமாக்குகிறது.
தன்னுடைய சில அனுமானங்கள் தவறாக இருப்பதை பிரத்யோத் பாபுவின் சிகிச்சை முறைகள் மூலம் அறிந்து கொள்ளும் ஜீவன் மஷாயின் நாடி ஞானம், முன்னை விட மேம்படுகிறது. மரண தேவதையான பிங்கலகேசியின் (மித்ருயு) காலடிகளை, நோயாளிகளின் நாடித்துடிப்பில் முன்னைவிட துல்லியமாக உணரும் யோகத்தன்மையை மஷாய்க்கு அளித்ததில் அலோபதியும் ஒரு காரணமாக அமையும் தருணங்கள் ஹெகலின் இயங்கியலை நினைவு படுத்தின. இதற்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைவது, அவருடைய மற்றொரு குருவான ரங்கலால் வழியாக ஜுவன் மஷாய்க்கு கிட்டிய அலோபதி பற்றிய அறிதல்கள். டாக்டர் ரங்கலால், ஜீவன் மஷாயின் தந்தையான ஜகத் மஷாய் போன்ற புகழ் பெற்ற ஆயுர்வேத மருத்துவராக இருந்தாலும், அலோபதி மருந்துகள் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதற்குப் பின்னால் உள்ள மனித ஆற்றலையும், அறிவையும் புறந்தள்ள முடியாத நேர்மையாளராகவும், இம்முருந்துகளை கண்டுபிடிப்பவர்கள் தான் நம் வேதத்தின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். ஆயுர்வேதம், மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ள தவறிவிட்டது என்ற உணர்வே, ரங்கலாலை அலோபதியை நெருங்கி அறியத் தூண்டுகிறது.
இதே மாற்றம் பிரத்யோத் பாபுவிடமும் நிகழ்கிறது. ஜீவன் மஷாயின் நாடிஞானத்தால் தன் மனைவிக்கு வந்திருப்பது சந்நிபாதஜீரமாகத்தான் ( டைபாய்ட்) இருக்கும் என்பதை, மருத்துவ பரிசோதனைகளுக்கு வெகு முன்னரே உறுதி செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறார். ஜீவன் மஷாயும் உடனே அதை உறுதி செய்வதால், தன் மனைவிக்கான சிகிச்சையை விரைந்து ஆரம்பிக்க முடிகிறது. ஆரம்பித்திலிருந்தே, இருவரும் எதிரெதிர் துருவங்களாகத் தோன்றினாலும் உள்ளூர தங்கள் சிந்தனை முறையின் எல்லைகளை அல்லது போதாமைகளை உணர்ந்தவர்களாகவே உள்ளனர். இக்குறைபாடுகளை, மற்றதின் துணை கொண்டு களைய முடியும் என்று இருவரும் உணர்வதை முரணியக்கம் என்பதைவிட ஒத்திசைவு என்றே வரையறுக்கத் தோன்றுகிறது. இந்த நாவலின் ஆசிரியரான தாராசங்கரின் கனவு அல்லது தரிசனமாக இது அமைகிறது. இத்தரிசனத்தை விட, அதை இந்நாவலின் பலவகையான கதைமாந்தர்களின் வழியாக வெகு இயல்பாக அவர் அடையும் விதம் தான் இந்நாவலை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது.
சில புரிதல்கள்
மனிதர்களின் அறிதல் முறையை, இந்தியச் சிந்தனை மரபு மூன்றாக பகுத்து தொகுத்துக் கொள்கிறது.
- பிரத்யட்சம் எனும் புலனறிவு
- சுருதி எனும் அனுபவ அல்லது முன்னறிவு
- அனுமானம் அல்லது ஊகம்
ஜீவன் மஷாய், இது இன்ன நோய் என்று அறிந்து கொள்வது தன் புலன்களால் உணரும் நாடித்துடிப்பு வழியாகவும், அந்த நோயாளி பற்றிய முன்னறிவு வழியாகவும் தான். இவையிரண்டையும் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத பட்சத்தில் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்ட ஊகம் துணை புரிகிறது. ஊகங்கள் பெரும்பாலும் சரியாக இருப்பது, அவை அத்துறையின் மேதைகளால் மேற்கொள்ளப்படும் போது மட்டுமே. ஆயுர் வேதம், மனித சமூகத்தின் அடிப்படை அலகாக, ஒரு குறிப்பிட்ட மனித கூட்டத்தை அல்லது குலத்தை கொண்ட காலகட்டத்தில் கிளைத்த மருத்துவ முறை. இதனால் தான், தன்னிடம் வரும் ஒவ்வொரு நோயாளின் இருப்பிடத்தைக் கொண்டே அவர்களுக்கு வரும் நோயின் தன்மையை தீர்க்கமாக அவரால் கணிக்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட தெருவில் வாழ்பவர்கள் இன்ன தொழில் செய்பவர்களாக மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலும் ஜீவன் மஷாய் வாழும் நவாக்கிராமத்தின் மக்கள் ஓரிடத்தில் நிலை கொள்ளும் வாழ்க்கை முறையை உடையவர்கள். அவர்களுடைய, உணவு, வணிகத் தொடர்புகள், பொழுது போக்குகள், பலங்கள் மற்றும் பலவீனங்கள் அனைத்தையும் அறிந்த குடும்ப மருத்துவராகத் தான் ஜுவன் மஷாய் இருக்கிறார். இதனால், ஜீவன் மஷாய்க்கு மட்டுமல்ல; அங்குள்ள எந்த ஆயுர்வேத மருத்துவருக்குமே ஊகிக்க வேண்டிய தேவை குறைவுதான்.
சமூகத்தின் அடிப்படை அலகு, குலத்திலிருந்து தனி மனிதனாக மாறும் பொழுது பெரும்பாலும் நோய் பற்றிய முன்னறிவுகள் பொய்த்துப் போகின்றன. இந்த தடுமாற்றத்தை ஜுவன் மஷாயும் அவருடைய அலோபதி குருவான ரங்கலாலும் உணர்ந்து கொள்கிறார்கள். இந்த போதாமையால் இவர்கள் தங்களுடைய உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்ட ஊகங்களையே பெரிதும் நம்ப வேண்டி வருகிறது. ஊகங்கள் அனைவருக்கும் கைவரக்கூடிய ஒன்று அல்ல. இதுவே, ஆயுர்வேத சிகிச்சையை மேதைகளால் மட்டுமே கையாளப்பட வேண்டிய ஒன்றாக குறுக்கி விடுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
கணந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் முன்னறிவையும், ஊகத்தையும் விட புலனறிவான பிரத்யட்சத்தையே (Empiricism) பெரிதும் நம்ப வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த போதாமையிலிருந்து தான் அறிவியலும் அதனை அடிப்படையாகக் கொண்ட நவீன மருத்துவமும் கிளைத்தெழுகின்றன. அறிவியல் புரட்சிக்கு வித்திட்டவராகக் கருதப்படும் தத்துவ மேதையான ஃபிரான்சிஸ் பேகனும் மனிதர்களின் புலனறிவுக்கு தேவையான தகவல்களைத் தரும் மேம்பட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த அறிவியல் புரட்சியே ஒவ்வொரு துறைகளிலும் மேதைகளின் தேவையைக் குறைத்தது எனலாம். ஒரு ரத்தப் பரிசோதனையின் வழியாக எந்த ஒரு சராசரி மருத்துவராலும், தன் நோயாளிகளுக்கிருக்கும் நோய் பற்றி இலகுவாக அறிந்து கொள்ள முடிகிறது. கிரிக்கெட் என்பது டான் பிராட்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற மேதைகளால் மட்டுமே ஆனதல்ல. சராசரி வீரர்களாலும் ஆனது தான். இந்த சராசரிகள் தாக்குப் பிடிக்க முடியாத துறை மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகும் என்பதே நிசர்சனம். ஆயுர்வேதத்திற்கு நிகழ்ந்தது இதுதான் என்பதை ரங்கலால் டாக்டர் வழியாக நம்மால் உணரமுடிகிறது. ஒரு துறையின் மேதைகளின் கடமை மேதையாக இருப்பதோடு மட்டுமே முடிந்து விடுவதில்லை. அவர்களுக்குரிய முக்கியமான பொறுப்புகளில் ஒன்று தன் மேதைமைத்தனத்தை பரவலாக்குவது. இது மட்டுமே எந்த துறையையும் எக்காலத்திற்கும் உகந்த ஒன்றாக புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியும். இந்த பரவலாக்கலை குலக்கல்வியால் ஒருபோதும் செய்ய முடியாது என்பதையும் இந்நாவல் உணர்த்துகிறது. நவீன பொதுக்கல்வியால் அனைவரையும் மேதைகளாக ஆக்க முடியா விட்டாலும், அவர்களை மேதைகளாக்குவதற்கான பாதையைச் சுட்டிக் காட்ட முடியும். அதன் வழி தன் முன்னறிவையும், ஊகத்திறனையும் வளர்த்துக் கொள்வது எப்போதும் போல அவரவர் நுண்ணுணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும்.
இந்த வங்கமொழி நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் த.நா. குமாரசாமி அவர்களை இந்நாவலின் ஆசிரியரான தாராசங்கர் பந்த்யோபாத்யாயவிற்கு நிகரான ஒருவராகவே உருவகிக்கிறேன். தமிழுக்கு கிடைத்த இந்த மிகப்பெரும் கொடையை, ஜெயமோகன் அவர்களின் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற இந்தியச் செவ்வியல் படைப்புக்களை அறிமுகம் செய்யும் புத்தகத்தைப் படித்திருக்காவிட்டால் அறிந்திருக்க முடியாது. நம்மை கைப்பிடித்து மரணத்திடம் அழைத்துச் செல்லும் மரணதூதனான மறலி ( யமன்) வெளியிலில்லை. நம்முள்தான் உறைந்திருக்கிறான் என்று பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாக உணர்த்துகிறது இந்நாவல்.
[…] ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பு […]
LikeLike