The Last Supper – யூதாஸின் பார்வையில்

ஏனோ நினைவுக்கு வந்தது
யூதாஸ் காரியத் இயேசுவைத் தழுவி முத்தமிட்டு காட்டிக் கொடுத்தது

அப்போது கேட்டது
அந்த கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ-
ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-
சிரித்த குரல்:
பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்
பரஸ்பர ஆறுதலை வளங்கும் கருணாமூர்த்தி,
தான் ஆளுதற்கு வேண்டி
ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள்.

– கவிஞர் தேவதேவன்

கருணாமூர்த்தி என்ற சிறகை இயேசுவிற்கு அவருடைய சீடர்களும், மக்களும் வழங்குவதற்கு முன்பு, உடைமை வெறி கொண்ட சாத்தான் என யூதாஸ் முடமாக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த அந்த இறுதி இரவு விருந்தை நோக்கி விரைகிறது ஔவிய நெஞ்சம் என்ற இந்த புனைவு அல்லது அபுனைவு!!!

புதிரா புனிதமா

பஸ்கா திருவிழாவில் (யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டதைக் கொண்டாடும் நிகழ்வு) தொடங்கும் இப்புதினம் யூத அல்லது கிறிஸ்துவ இறையியல் அல்லது வரலாறு சார்ந்த நிறைய விஷயங்களை சொல்லிச் செல்கிறது. யூத மதத்தின் உட்பிரிவுகளான பரிசேயர்கள் (மறுபிறப்பு, ஆன்மா போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள்), சதுசேயர்கள் (சடங்கு, பலியிடுதல் போன்ற வேண்டுதல்களில் நம்பிக்கை உள்ளவர்கள்); இவர்களின் மதநம்பிக்கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அதன் மேல் நின்றிருக்கும் ரோமப் பேரரசு; இப்பேரரசுக்கு எதிராக கிளரும் புரட்சிகள்; அதனை முன்னின்று நடத்தும் குழுக்களோடு கைகோர்த்திருக்கும் பல்வேறு ஞானியர்கள் என்று சமூக மாற்றத்தை நோக்கிய முரணியக்க கொந்தளிப்பில் இருக்கிறது இயேசு தங்கியிருந்த மேக்தலீனின் வீடிருக்கும் எருசலேம் நகரம்.

இயேசு, தன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட சீடர்களால் எப்போதும் சூழப்பட்டிருந்தார். பேதுரு, அந்திரேயா, பிலிப், சீமோன் என நீள்கிறது அச்சீடர்களின் பட்டியல். இப்படி இயேசுவை உள்ளறையில் வைத்துப் பூட்டிய கதவுகளாக நின்றிருக்கும் முதன்மைச் சீடர்களைத் தாண்டி அவரை அணுகி அறியமுடியாத் தவிப்பில் இருக்கும் சீடராக யூதாஸ் இருக்கிறான். தன் நிதி மேலாண்மையால் அங்கு நடக்கப் போகும் விருந்துதான் இறுதி விருந்து என்ற அறிதலற்ற யூதாஸின் தன்முனைப்பும், இயேசுவின் போதனைகளை கிரகித்துக் கொள்ளும் ஞானமும், முதன்மைச் சீடர்களை விட நான் எவ்விதத்திலும் குறைந்தவனல்ல என்ற கர்வமும் மிகத் துல்லியமாக துலங்கி வருகிறது இப்புதினத்தில்.

யூதாஸிடமிருக்கும் ஒரு விமர்சனத் தன்மை இயேசுவை ஒரு புதிராகவும், புனிதமாகவும் பார்க்க வைக்கிறது. தன்னுடைய முன்னால் குருவான யோவானின் சொற்களின் வழியாக இயேசுவின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும், ரோமப் பேரரசால் கொலை செய்யப்பட்ட யோவானின் கொலை பற்றி பெரிய எதிர்ப்பை காட்டாத இயேசுவின் மேல் சிறு சந்தேகமும் கொள்கிறான். ஆனால், யூத மடாதிபதிகளை நிலைகுலையச் செய்யும் அவருடைய பேச்சும், எளியோர் மற்றும் நோயுற்றவர்களை அரவணைத்துக் காக்கும் அவருடைய பண்பும் யூதாஸை அவருள் இழுத்துக் கொள்கிறது.

இயேசுவும் யூத மதமும்

இயேசுவின் காலகட்டத்தில் அவரைப் போன்ற ஞானிகளும், தங்களின் உள்ளொளியால் மக்களின் நோய் தீர்க்கும் மந்திரக் கைகள் கொண்டவர்களும் நிறைந்திருந்தாலும், இயேசுவின் தனித்தன்மையாக யூதாஸ் காண்பது யூத மடாதிபதிகளுக்கு எதிரான அவருடைய துணிச்சலான உரைகளைத்தான். நான் தேவனின் மைந்தன் என்பதைத் தாண்டி, நானே தேவன் என்று அறைகூவுகிறார். ஆப்ரகாமிய அல்லது எபிரேய சமய ஞானமான தேவன் ஒருவனே; அவனுடைய குழந்தைகளாகிய மக்கள், அவனுடைய போதனைகளப் பின்பற்றி வாழவேண்டியதை உறுதி செய்வது மதம் மற்றும் அதன் மடாதிபதிகளின் கடமை என்ற யூத மத அடிப்படையை அசைத்துப் பார்க்கிறது இயேசுவின் இந்த அறைகூவல். ரோமப் பேரரசின் அதிகாரத்தை விட, அதன் அடித்தளமான இறுகிய யூத மத அமைப்பையே மாற்றியமைக்க அல்லது நெகிழ்வாக்க முயல்கிறார்.
கிட்டத்தட்ட மார்க்ஸ் கனவு கண்ட அடித்தளம் மாற்றப்பட்டால் அதன் மேல்கட்டுமானமும் மாறும் என்ற பொன்னுலகக் கனவு போலத்தான் இதுவும். தொழிலாளர்கள் அனைவரும் புரோலட்டேரியன்களாக (அறிவு ஜூவிகளாக) மாறிவிட்டால் முதலாளிகள் அல்லது அரசுகள் தேவையற்றுப் போகும் என்ற லட்சியவாதக் கனவிது. சமூகத்தை ஒரு உயிரற்ற எந்திரமாக அல்லது கட்டிடமாக பாவிக்கும் ஒரு optimistic அல்லது அதீத நேர்மறை மனநிலையிது எனலாம்.

இதற்கான சாத்தியத்தை யூத மதத்தின் உட்பிரிவான பரிசேயத்திலிருந்து அவர் பெற்றிருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. சடங்குகளால் இறுகிப் போயிருக்கும் சதுசேயர்களை விட, ஆன்மா, ஞானம், கருணை, உயிர்த்தெழல் போன்றவற்றை வலியுறுத்தும் பரிசேயச் சாயலே இயேசுவின் போதனைகளில் ஓங்கியிருக்கிறது. உயிர்பலிக்கு இடம் தரும் யூத தேவாலயங்களை இடித்து விட்டு, மூன்றே நாட்களில் என்னால் புனித தேவாலயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.

இயேசுவின் உள்ளுணர்வு

தன் சகோதரனான லாஸரசை குணப்படுத்தியதில் நெகிழ்ந்து போயிருந்த மேக்தலீன், இயேசுவின் மேல் கொண்ட அன்பால் தன் ஒரு வருட உழைப்பிற்கு சமமான பரிமளத் தைலத்தை அவருடைய கேசத்தில் தடவுவதைக் கண்டு யூதாஸ் எரிச்சல் கொள்கிறான். முதன்மைச் சீடர்கள் தொடங்கி இயேசுவை நெருங்கும் எவரிடமும் யூதாஸ் எரிச்சல் கொள்பவனாகத்தான் இருக்கிறான். இயேசுவின் அருகில் இருப்பதற்கு முற்றிலும் தகுதியானவன் நான் தான் என்று உறுதியாக நம்புகிறான். இந்த தைலத்திற்குப் பதிலாக ஏதிலிகளுக்கு (எளியவர்கள் அல்லது அகதிகள்) ஏதாவது செய்திருக்கலாம் என்ற யூதாஸிடம், நாளை நான் இங்கு இருக்கப் போவதில்லை; ஏதிலிகள் என்றும் இங்கே இருப்பார்கள் என்று கடிந்து கொள்கிறார் இயேசு. மேலும் இத்தைலம் சடலங்களின் மேல் பூசப்படுபவை; ஆனால் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப் படுபவர்களின் சடலங்களுக்கு இந்த தைலப்பூச்சு மறுக்கப்படும் என்கிறார். நம்மை சற்று திகைக்க வைக்கிறது இவ்வுரையாடல்.

இயேசுவின் உள்ளுணர்விற்கு தான் மரிக்கப் போவது தெரிந்திருக்கிறது. தன்மேல் வன்மம் கொண்டிருக்கும் யூத மத மடாதிபதிகள் தன்னை நெருங்க முடியாமல் தடுப்பது மக்களின் செல்வாக்கு தான் என்றும், எனவே தன்னை துரோகத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை உணர்ந்திருந்தாரா இந்த தீர்க்கதரிசி என்றும் எண்ண வைக்கிறது. இறுதி விருந்தின் போது தன்னுடைய அனைத்து சீடர்களின் பாதங்களையும் சுத்தம் செய்து விட்டு என்னை ரோமப் பேரரசிடம் காட்டிக் கொடுக்கப் போவது யூதாஸ்தான் என பகிரங்கமாக அறிவிக்கிறார். அதுவரை அப்படி ஒரு எண்ணமே இல்லாத யூதாஸ் நிலைகுலைந்து போகிறான்.

ஆற்றாமை, எப்போதுமே தன்னுடைய போட்டியாளர்களாகக் கருதிய மற்றைய சீடர்களுக்கு முன்னால் ஏற்பட்ட அவமானம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் எண்ணியிராத, இயேசு சுட்டிக் காட்டிய அந்த துரோகத்தை யூதாஸை செய்ய வைக்கிறது. ஆனால், சடுதியில், இது தன்னைச் சுற்றி யூத மடாதிபதிகளால் பின்னப்பட்ட சதிவலை என்று உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டிருந்தது. இயேசு தான் பெரிதும் நம்பிய உயிர்த்தெழுதலுக்கான பயணத்தை துவங்கியிருந்தார். தாள முடியாத குற்றவுணர்ச்சியில் யூதாஸ் தன்னை மாய்த்துக் கொள்கிறான்.

மந்தையிலிருந்து தனித்திருக்கும் ஆட்டிற்குத்தான் மேய்ப்பரின் கவனம் தேவை என்று ஏன் இந்த கருணாமூர்த்திக்கு தெரியவில்லை? நடக்கவிருக்கும் சதியை உள்ளுணர்வால் அறிந்திருந்தும் ஏன் தன்னுடைய சீடனுக்கு கிடைக்கவிருக்கும் உடைமை வெறியின் சாத்தான் என்ற அவப் பெயரை தவிர்க்க முயலவில்லை என நிறைய கேள்விகளை எழுப்புகிறது யூதாஸின் பார்வையில் விரியும் இறுதி விருந்து பற்றிய அமலன் ஸ்டேன்லியின் ஒளவிய நெஞ்சம். இதற்கெல்லாம் பதில் இப்பதிவின் ஆரம்பத்திலிருக்கும் தேவதேவனின் கவிதை சுட்டிக் காட்டுவது போல் கடவுளின் லீலை தானா?

https://tamil.wiki/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

Leave a comment