அனுபவமும் கலையும்

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கதைகளைப் பற்றிய நற்றுணை கலந்துரையாடலில் பேசிய காணொளியும் அதன் உரை வடிவமும்.

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த வாய்ப்பினை எனக்களித்த நற்றுணை அமைப்பினருக்கு நன்றி. சிறு வயதில் எனக்குப் பரிட்சயமாயிருந்த ஆறுமுகக் காவடிகளையும், முனி விரட்டிகளையும்  என்னுடைய நினைவடுக்களில் இருந்து மேலெலும்பி வரச்செய்த ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி. 

தமிழ் விக்கி

இவ்வுரைக்கான தயாரிப்பின் போது, Google என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்ற இடம் தமிழ் விக்கி தளத்திற்கு. ஒரு ஐந்து நிமிட வாசிப்பில் ஸ்ரீராம் பற்றிய ஒரு வரைசித்திரம் மேலெழுந்து வரும்படியாக செறிவாக எழுதப்பட்டுள்ளது. எந்த மெனக்கெடலுமில்லாமல், ஒரு இலக்கிய வாசகன் ஸ்ரீராமின் இலக்கியவுலகை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. கலைக்களஞ்சியங்கள் பெரும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கோரி நிற்பவை என்ற பொது அறிவு எனக்கிருந்தாலும், அதற்கு சாட்சியாக இருக்கும் வாய்ப்பு தமிழ் விக்கி குழுவினரின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்க்கும்போது தான் கிட்டியது. எந்த எதிர்பார்ப்புமற்று செயலால் மட்டுமே ஈர்க்கப்பட்டவர்களின் ஒன்றிணைவை பார்ப்பது ஒரு வரம் என்று தான் எண்ணுகிறேன். கீதை சொல்வது போல இது ஒரு செயலில் துறவு (action in renounciation) நிலை. தமிழ் விக்கி மென்மேலும் வளரவேண்டும் என்ற விருப்பத்துடன் இவ்வுரையை ஆரம்பிக்க விழைகிறேன்.

இலக்கியமும் நுகர்வும்

தனக்குத் தெரிந்த அல்லது தான் கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு தெளிவாக புரியும்படி கடத்துவது ஒரு வகை; அதனை பூடகமாக உணர்த்த முயல்பவது இன்னொரு வகை என இருவித சிந்தனைப் பள்ளிகள் பொதுவில் உள்ளன. அறிவியல் படி சொன்னால், முன்னது Richard Feynman வகை; பின்னது Albert Einstein வகை. என்னளவில், இவ்விரு வகைகளும் உற்பத்தியாளர், நுகர்வோர் என்ற ஒரு இருமை கட்டமைப்பின் நீட்சி என்றே எண்ணுகிறேன். நுகர்பொருளுக்கான எந்த வரையறைக்குள்ளும் பொருந்தாத  இலக்கியத்தை இவ்விருவேறு சிந்தனைப் பள்ளிகளுக்குள் அடைக்க முயல்வது பொறுத்தமற்ற செயலாகத் தான் தோன்றுகிறது.

படைப்பாளியின் அனுபவங்களும், கற்பனைகளும் ஒரு போதும் வாசகனை இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.  இதுதான் படைப்பூக்கத்தின் இயல்பும் கூட. தன்னுடைய அனுபவங்கள் தன்னை எப்படி பாதிக்கின்றன என்பதை தொகுத்து அறிந்து கொள்ள முயலும் ஒருவரால், அந்த அனுபவங்களையும் பாதிக்க இயலும் போது அந்த தொகுப்பு ஒரு படைப்பாக மாறுகிறது. இதுதான் கலைத்தன்மை கொண்ட படைப்புச் செயல்பாடாக இருக்க முடியும் என்கிறார் சு.ரா.  ஒரு கலைஞன், அவனுடைய காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல என்கிறார்.ஸ்ரீராம் அவர்களின் சிறுகதைகளும் பிரதிபலிப்பிற்கும், கலைத்தன்மைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பதை  என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

நெட்டுக்கட்டு வீடு

இக்கதை செல்லீய கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்வின் பல்வேறு காலகட்டங்கள், புதுவீடு கட்டுவதில் தொடங்கி, அது சிதைந்தழிவது வரையிலான ஒரு நீண்ட பயணமாக சித்தரிக்கப்படுகின்றன.

அனுபவங்களின் சாட்சியாக நிற்கும் கதைசொல்லியால், வாசகர்களுக்கு ஒரு ஒளியைக் கொடுக்க முடியும். ஆனால் நெட்டுக்கட்டு வீடு கதையில் கதைசொல்லி அவருடைய அனுபவங்களுள் சிக்கி உழன்று கொண்டிருப்பவராகத் தான் தெரிகிறார். கதாபாத்திரங்களின் உரையாடல் மட்டும் கொங்கு வட்டார வழக்கிலில்லை. அவர்களுடைய மன ஓட்டங்களும், கதைசொல்லியின் வர்ணனைகளும் கூட வட்டார வழக்கில்தான் வருகின்றன. என்னுடைய கொங்கு வட்டாரத்து நண்பர்களின் அரிசிம் பருப்பு பெருமிதம் தான் இவருடைய கதைகளைப் படிக்கும் போது நினைவுக்கு வந்து போனது. கொங்கு மக்கள் நினைத்தாலும் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ள முடியாதவர்கள் தான்.

ஆனால், இக்கதையின் மிக முக்கியமான தருணங்களில் தன்னுடைய அனுபவப் பூச்சை தன் முதிர்ச்சியால் கரைத்து விடுகிறார் ஸ்ரீராம். செல்லீய கவுண்டர் மகளின் காலம் கடந்த பூப்பெய்தல், அதனால் நெருங்கிய உறவுகளுடனான மணவுறவு தடைபடுதல், வெளியிலிருந்து வந்த அவளை மண முடித்தவனும் மாண்டுபோதல், அதனாலேயே தான் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட வீட்டிலேயே தான் பார்த்து பார்த்து வளர்த்த மகளும் அடங்கி விடுவது போன்ற தருணங்களை ஓரிரு சொற்களில் கடந்து சென்று நம்மை திகைக்க வைக்கிறது இக்கதை. அதுவரை மாந்திரீகம், அதைத் தொடர்ந்து வரும் சித்து வேலைகள் என தன் அனுபவங் கிடங்கிலிருந்து வாரியிரைத்துக் கொண்டிருந்த ஸ்ரீராம்,அக்கிடங்கின் அலறல்களை  அமைதியாக்கி விடும்  கலைத் தருணங்களிவை.இதைத்தான் முருகேசப் பாண்டியன் அவர்களும் ஸ்ரீராமின் ஆழ்ந்த மௌனங்கள் வெளிப்படும் தருணம் என்கிறார் என்று எண்ணுகிறேன். இம்மௌனம் தான் ஸ்ரீராம் தன் வாசகர்களுக்கு வழங்கும் ஒளி என்றும் எண்ணுகிறேன்.

இறுதியில் தான் பார்த்து பார்த்து கட்டிய வீடும் சிதைந்து அரவணைப்போர் எவருமின்றி நிற்கும் செல்லீய கவுண்டருக்கு இவ்வீட்டைக் கட்டியவர்களில் ஒருவரான ஆசாரி ராமசாமி நினைவுக்கு வருவதாக கதை முடிகிறது. கதையின் ஆரம்பத்தில், இவ்வீட்டிற்கான புதுமனை புகுவிழாவிற்கு முன்பு இந்த ஆசாரியை அவர் அவமானப்படுத்துவதால் மாண்டு போனதாக ஒரு சித்திரம் வரும். இந்த ஒட்டுமொத்த கதையுமே செல்லீய கவுண்டரை கதைசொல்லி பழிவாங்குவதற்கே எழுதப்பட்டது போன்ற ஒரு பிம்பத்தை கொடுத்து விடுகிறது இக்கதையின் முடிவு.

இக்கதை மட்டுமல்ல, ஸ்ரீராமின் பெரும்பாலான கதைகளின் முடிவுகளில் இந்த செயற்கை பிம்பத்தை பார்க்க முடிகிறது. 

முனிவிரட்டும் ஆறுமுகக் காவடியும்

முனிவிரட்டு கதையில் வரும் சாமியாடி கடைசியில் அவருடைய மகனாலேயே பயந்து ஒதுக்கப்படுவது, ஆறுமுகக் காவடிக் கதையில் வரும் பெரிய பூசாரியிடம் திடீரென வெளிப்படும் சாதிய மேட்டிமைத்தனம் போன்ற முடிவுகளில் உள்ள செயற்கைத் தன்மை சற்று நெருடலைத் தருகிறது. மதங்களில் உறைந்திருக்கும் இந்தச் சாதியப் படிநிலைகள் கதை நெடுகிலும் ஆங்காங்கே வெகு நுட்பமாக சித்தரிக்கப் பட்டிருந்தாலும், முனி விரட்டியின் மகன் அவரைக் கண்டு முனி என்று இறுதியில் அலறுவதும், ஆறுமுகக்காவடியில் வரும் பெரிய பூசாரி இக்காவடி தோட்டியாரின் தலையில் சுழன்ற காரணத்தாலேயே இனிமேல் இதைநான் தொடமாட்டேன் என்று அலறுவதும் இவ்விரு கதைகளிலும் அதுவரையிருந்த ஒரு கலையமைதியை கலைத்துப் போட்டு விடுகின்றன. இத்தனை நுட்பமாக ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பக்தியின் முக்கியத்துவத்தையும், அதன் சுரண்டல்களையும் சித்தரிக்கும் இக்கதைகளின் முடிவில் எழும் இவ்வொலிகள், ஆசிரியரின் அனுபவங் கிடங்கில்  கிடந்து நொதித்து கொண்டிருக்கும் அலறல்கள். இவற்றிற்கு முன் அவரது கலைமனம் வலுவிழந்து தான் போய்விடுகிறது.  இலக்கியத்தையும் ஒரு நுகர்வுப் பொருளாக கருதும் மனநிலையில் இருந்து எழும் வாசக அவநம்பிக்கையிது எனலாம்.

உருவாரம்

ஒரு சிறந்த எழுத்தாளன் எப்போதுமே தன் கலைத்தன்மையை தன் அனுபவங்களுக்கு காவு கொடுப்பவனாக இருப்பதில்லை என்பதை திரும்ப திரும்ப நான் வாசிக்கும் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக என்னால் அவதானிக்க முடிகிறது. ஸ்ரீராமின் படைப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கதையின் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்ற ஒரு அழுத்தத்திலிருந்த ஸ்ரீராம், அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தருணமாக உருவாரம் என்ற கதை அமைந்துள்ளது. கதையின் முடிவில் பெரிய திருப்பமெல்லாம் தர வேண்டும் என்ற தேவைகள் ஏதுமற்ற கதைக்களத்தை அமைத்துக் கொள்வது ஒரு எழுத்தாளரின் முதிர்ச்சி என்றே எண்ணுகிறேன். முனி விரட்டு மற்றும் ஆறுமுகக் காவடியில் கிடைக்காத சுதந்திரக் காற்றை ஆசிரியரோடு சேர்ந்து உருவாரக் கதையில் அவருடைய வாசகர்களும் சுவாசிக்க முடிகிறது. இக்கதையில் வரும் அப்பாருவும், அப்புச்சியும் என்னுடன் நீண்ட காலம் பயணிக்கப் போகிறவர்கள். நிகழ்காலத்தில் நடக்கும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் மாந்திரீகங்களில் எதிரிகளை கொல்லப் பயன்படும் உருவாரப் பூஜையின் நீட்சி என்பதையும் இக்கதையின் வழியாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

வெற்றிடங்களை ஆற்றலின் இருப்பாக ஊகித்து, அதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மாந்திரீகர்கள் போல,  ஸ்ரீராமும் தன்னுடைய  தன்முனைப்புக் கொண்ட கதைசொல்லும் திறனால் வாசகர்களின் இருப்பையும், ஆற்றலையும் தன்னை நோக்கி குவித்துக் கொள்பவராக இருக்கிறார். ஸ்ரீராமிற்கு மீண்டும் என்னுடைய நன்றிகளும், வாழ்த்துக்களும்.

உரையின் காணொளி வடிவம்

என். ஸ்ரீராமின் தமிழ் விக்கி

https://tamil.wiki/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

Leave a comment