தேவதேவனின் தையல்

நேற்றையும், நாளையையும் இன்றிலிருந்து பிரித்தெடுத்தது போல் இருந்தது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த கோலம். இன்றால் மட்டுமேயான அம்முகம், கிட்டத்தட்ட காலத்திலிருந்து விடுதலை கிட்டியது போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஆனால், காலம் வலியது. இன்றில் மட்டுமே இருப்பது நிர்வாணத்திற்குச் சமம் என்று அப்புனிதனின் நேற்றும் நாளையுமாகிய கைகளை சிலுவையில் இருந்து பிரித்தெடுத்து அவரின் நிர்வாணத்தை, விடுதலையை காவு வாங்கிக் கொண்டது. கிறிஸ்துவும் வேறு வழியின்றி உயிர்த்தெழுந்தார், மீண்டும் காலத்தில் சிறைபட்டிருக்க; மீண்டும் இப்பாவிகளை நல்வழிப்படுத்த.

ஏனோ தெரியவில்லை, ஈஸ்டர் திருநாளில் தேவதேவனின் பின்வரும் கவிதையைப் படித்ததும் கிறிஸ்து உயிர்த்தெழுந்தது நினைவுக்கு வந்தது.

நேற்று இன்று நாளை எனக்

கிழிந்து போயிற்று என்

சட்டைத் துணி

இன்று என்பது

நேற்றும் நாளையும்

தையல்கோர்த்துச் சூழ்ந்த ஒரு தீவு

இடைவெளி சூன்யம்

ஜீவன் ஆடிக் களிக்கும் மேடை

நேற்றையும் நாளையையும்

துறக்கமுடியாத என் ஜீவிதத்தில்

நானோ ஆடைகொண்டு

அம்மணம் மூடி

ஆடும் அற்பன்

இங்கே கவனி என்று அழைத்துச் சொன்னது

அம்மாவின் கைத்தையல் – அது முதல்

நான் என் ஊசித் துவாரத்தில்

நூல் மாட்டிக்கொண்டேன்

நேற்றையும் நாளையையும் இணைக்கும் நான்

நூல் நுழைந்த ஒரு

தையலூசி

– மின்னற்பொழுதே தூரம் தொகுப்பிலிருந்து.

Happy Easter!!!

Leave a comment