Super Deluxe – தனிமனிதனும் சமூகமும் அல்லது முரண்களின் தொகுப்பு


மடிப்புக் கலையாத சேலையுடன், கருத்த இடுப்பின் இரு மடிப்புகள் மினுக்க காரிலிருந்து இறங்குகிறாள் மாணிக்கம். முகத்தில் அப்பியிருந்த சாந்தையும், உதட்டிலிருந்த சாயத்தையும் தாண்டி மாணிக்கத்தின் கருமை அடர்த்தியாய் இருந்தது. அவளின் மூக்கைத் துளைத்திருந்த வளையமும், தலையில் போர்த்தியிருந்த சுருள்கேசமும், கண்களில் தெரிந்த நாணமும், ஒட்டுமொத்த முகத்திலிருந்த பொலிவும், அளந்து எடுத்து வைக்கப்பட்ட தப்படிகளும் என்னிடமும் பெண்மையிருக்கிறது, இதுதான் என் இயல்பு என்பதை வாய் திறக்காமலேயே இவ்வுலகத்திற்கு உரக்கச் சொல்வதாய் இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தி இருப்பது விஜய் சேதுபதியின் அசாத்தியமான உடல்மொழி.

ஏற்கனவே சமந்தாவின் குற்றவுணர்ச்சியில் விளைந்த உடலுறவும், அதைத் தொடர்ந்த அவரது காதலன் மரணம்; தன்னுடைய அம்மாவை நீலப்படத்தில் அடையாளம் கண்டுகொண்டு அவளைக் கொல்லத்துடிக்கும் மகன்; கிறிஸ்துவைத் தெரியாமல், கிறிஸ்துவத்தில் மாட்டிக்கொண்ட அம்மகனின் தந்தை என காட்சிக்குக் காட்சி நம்மை அசரடித்த தியாகராஜன் குமாரராஜாவின் இப்படத்தில் நம்மை முழுமையாக கட்டிப்போடுவது விஜய்சேதுபதியின் நளினம் தான். தன்னுடைய எல்லைகளை மிக அநாசயமாக படத்திற்கு படம் விரித்து பரிணமித்துக் கொண்டே போகிறான் இப்புது உலகநாயகன்.


பாலியல் வறட்சி

விலங்குகளின் காமம், பசியுணர்வு போன்றவை ஒரு கட்டுக்குள் இருப்பதாகவே அறிவியல் சொல்கிறது. சிங்கம் பசியற்று இருக்கும் நேரத்தில் மான் அதன் நண்பனே என்பது போன்ற விலங்கின விதிகள் தேமே என்று நின்றிருக்கும் ஒரு ஆணின் முன் நயன்தாரா நிர்வாணமாய் வந்து நின்றால் செல்லுபடியாவதில்லை அல்லது தொழில்படுவதில்லை. பசியும் காமமும் மனிதனுள் செயற்கையாக தூண்டப்படவும் முடியும். இத்தூண்டலால் ஏற்படும்  கட்டற்ற காமம் அல்லது பாலுணர்வால் பெரிதும் பாதிக்கப்படும் மனித சமூகங்களை காப்பதற்காக சில ஒழுக்க நெறிகள் வகுக்கப்பட்டு, காலப்போக்கில் சாதி, குலப்பெருமை போன்றவற்றால் அவை மனித சமூகத்தை இறுக்க ஆரம்பிக்கின்றன. இதன் விளைவுதான் இன்று நம்மிடமிருக்கும் பாலியல் வறட்சிக்கான காரணம். பெரும்பாலும் இது போன்ற கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடுகள் எளியவர்களான பெண்கள் அல்லது வறியவர்களான நடுத்தர சமூகங்களின் மீதுதான் திணிக்கப்படுகின்றன.


இதனால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் வழியாக ஒரு தேர்ந்த நாவல்போல இப்படம் நம் கண்முன் விரிகிறது. ஆண்களின் பாலியல் வறட்சி மீறப்படும்போது கண்டு கொள்ளாத சமூகம் பெண்களின் பாலியல் வறட்சியை கற்பு என்ற கிரீடத்தைக் கொண்டு அடைகாக்க முயல்கிறது. சமந்தா இதை மீறும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது முன்னால் அல்லது அவரால் கைவிடப்பட்ட காதலன் இறந்து போகிறார். படத்தின் முதல் காட்சியே இதுதான். பாலியல் ஒழுக்க நெறிகள் தளர்த்தப்பட்ட மேற்கத்திய சமூகங்களில் இப்படத்தை இதற்குமேல் எடுத்துச் செல்ல முடியாது. அச்சமூகத்தின் சமந்தா உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்து நடந்ததை விளக்கியிருப்பார். விசாரணைக்குப் பிறகு அந்த காதலனின் மரணம் இயற்கையானது என்று நிரூபணமாயிருக்கும். தன் கணவர் ஃபாசிலுக்கு தன் கையறு நிலையை புரியவைத்து அவர் கூடவே இருந்திருப்பார் அல்லது விவாகரத்து பெற்றிருப்பார். சுபம் போட்டு வந்த வேகத்திலேயே நம்மை கிளம்பு…கிளம்பு என்றிருப்பார்கள்.

இந்தியச் சமூகம்

ஆனால், இவையிரண்டையும் சமந்தாவால் இங்கு பண்ண முடியவில்லை. காரணம், எல்லாவற்றையும்விட இன்னமும் நாம் உயர்வாக நினைப்பது சமூக நற்பெயரே. இது ஒரு உயர்வான இலட்சியம்தான். ஆனால் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இடையில் தொடர்ந்து நடக்கும் இந்த முரண்பாடுதான் நமது துன்பங்களுக்கான ஊற்றுக்கண் என்பதை மிகத்தெளிவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். காலத்திற்கேற்ப மாறும் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒழுக்க நெறிகள்தான் இந்த முரண்பாட்டை கலைய முடியும் என்பதைத்தான் இப்படம் தீர்வாக முன்வைக்கிறது. கணந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில் நிரந்தரமான உண்மையென்று எதுவுமில்லை என்பதே இப்படத்தின் தத்துவச்சாரமும் கூட.

ஃபாசிலிடம் மறைக்க நினைத்து குளிரூட்டப்பெட்டியில் கேள்விக்குறிபோல் மடக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த காதலனின் பிணத்தை ஃபாசில் கண்டுகொண்ட பிறகே “நான் இவங்கோட மேட்டர் பண்ணிட்டு இருந்தப்ப செத்துப் போயிட்டான்..” என்று ஃபாசிலை நிலைகுலைய வைக்கிறார் சமந்தா. பின்னர் இருவரும் சேர்ந்து அப்பிணத்தை மறைக்க முயன்று அடுத்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு மயிரிழையில் தப்பிக்கிறார் சமந்தா. எல்லாம் ஃபாசிலின் போலி சமூக மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்.

தனியுடைமையின் அவலங்கள்

இதிலுள்ள முரண் என்னவென்றால் இச்சமூகத்தின் மீது, குறிப்பாக அதன் கூட்டுச் செயல்பாட்டின் மீது ஒரு பயமும் வெறுப்பும் கொண்டவராக சித்தரிக்கப்படும் ஃபாசில் அச்சமூகத்தின் மரியாதையை வேண்டுபவராகவும் இருப்பதுதான். “மனுசன் தனித்தனியா இருந்து நிறைய கண்டு பிடிக்கிறான்..ஆனால் கூட்டமா சேர்ந்து பஸ்ச எரிக்கிற மாப் மெண்டாலிட்டிலதான் இருக்கிறான்..” என்ற வசனம் தனியுடைமைச் சமூகத்தில் திளைத்திருக்கும் ஆணவத்தில் எழுவது. அந்த ஒவ்வொரு தனி மனிதர்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் ஒரு குழுவின் உழைப்பும் உள்ளது என்பதை அறியவோ அங்கீகரிக்கவோ முடியாத சுயம் சார்ந்து மட்டுமே சிந்திக்கும் தனியுடைமை சமூகத்தினுடைய அவலநிலையைத்தான் ஃபாசில் பிரதிபலிக்கிறார். “நாடுன்னா பற்று…சாதின்னா வெறியா…” என்று அவர் பேசும் வசனங்களும், சுயம் சார்ந்து மட்டுமே சிந்திக்கும் ஒரு கீழ்மையான நிலையில்தான் ஃபாசில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் மகனின் மருத்துவச் செலவுக்கு வழியில்லாமல் அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் நோக்கி “ஆளுக்கு ஒரு 100 ரூபா கொடுக்க மாட்டீங்களா…நான்னா எங்கிட்ட இருக்கிற எல்லாத்தயும் கொடுப்பேன்..” என்று கதறி நம்மை கலங்கடிக்கும் நீலப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணனும் தனியுடைமைச் சமூகத்தின் ஆணவத்தால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்தான். இதையெல்லாம் தோளுயர்த்தி கைவிரித்து “Survival of the Fittest” மா என்று எளிதாகக் கடக்கத்தான் நமக்கு இந்த தனியுடைமை கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆண்டவரே ஆண்டவரே

“ உன்னை நம்ப மறுக்கும் என்னிலுள்ள சாத்தானை…மன்னியுமய்யா…மன்னியுமய்யா..” என அற்புதப்படுத்தியிருக்கிறார் அற்புதமாய் வரும் மிஷ்கின். கடவுள் மேல் குருட்டுத்தனமாய் நம்பிக்கை கொண்டு தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களின் பிரதிநிதி இவர். கஷ்டகாலங்களில் நமக்கு உதவுபவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று விரும்பும் நேர்மையான மனிதர்கள் மிக எளிதாக மதவாத சக்திகளால் மூளைசலவைச் செய்யப்பட்டு மடை மாற்றப்படுவதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.


தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் ஒரு நீலப்பட நடிகை என்பதை தெரிந்து கொண்ட இவர்களின் மகனுடைய கொலைவெறிக்கு அவனே பலியாவதை தடுக்க மிஷ்கின் செய்யும் பிரார்த்தனைகளும்; இந்த கிறுக்குத்தனத்தில் இருந்து தன் மகனை மீட்க போராடும் ரம்யா கிருஷ்ணனின் போராட்டங்களும் விளிம்பு நிலை மக்களை இச்சமூகம் எப்படி பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதற்கான உதாரணங்கள்.

ஒழுக்கநெறிகளின் தேவை

பம்பாய் சென்று தன்னை பெண்ணாய் மாற்றிக் கொண்ட விஜய் சேதுபதியாய் இருந்தாலும் சரி, சமந்தாவாக இருந்தாலும் சரி அவர்களிடமிருந்து அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்ப்பதென்னவோ ஒன்றே ஒன்றுதான். இந்த காமஇச்சை நெறிப்படுத்தப்படாத போதே கட்டற்ற பாலியல் உணர்ச்சிக்கு மனிதர்கள் பலியாக நேரிடுகிறது என்பதற்கு உதாரணம் தான் இந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம். ஒழுக்க நெறிகளின் தேவையை இந்த கதாபாத்திரம் உணர்த்துகிறது என்றால், இவையே கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இறுகினால் ஆகும் பாதிப்பை சமந்தாவின் கதாபாத்திரம் உணர்த்துகிறது. இப்படி முரணான கதாபாத்திரங்களை சிக்கலின்றி உலாவவிடுவதில் வல்லவர் K.பாலசந்தர். தியாகராஜன் குமாரராஜா நவீன பாலசந்தர்.

திரைக்கதை

இப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதியைக் கடைப்பிடித்து வாழும் பாக்கியம் அனைவருக்கும் அமைவதில்லை.  அந்த நியதிக்குள் சிக்கமுடியாத சிறுபான்மைக் கூட்டம் எப்போதும் உண்டு. அவர்களில் ஒரு மூன்று பெண்களைத் தேர்ந்தெடுத்து மிக கச்சிதமாக திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இவர்கள் மூவரின் கதையையும் இணைக்கும் திரைக்கதைதான் படத்தின் நாயகன். படம் முழுக்க இம்மூவர்களுடனும் இணைக்கப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் நினைவில் நிற்பது ஆச்சரியமூட்டுகிறது. வணங்கப்பட வேண்டிய அசாத்திய உழைப்பு.

விஜய் சேதுபதி, மிஷ்கின், தியாகராஜன் குமாரசாமி என தமிழ்த் திரையுலகம் புத்துயிர்ப்போடு இருக்குதய்யா ஆண்டவரே….

Advertisements

முழுநிலவி்ரவு

கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு.

பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான வாய்ப்பே இல்லை. கைவிடப்பட்ட பூங்காவாக இருக்கலாம். இல்லை அவசியமான இடுகாடாகவும் இருக்கலாம். இதுதான் இப்பகுதி என்று வரையறுக்க வேண்டிய தேவையேதுமற்ற கால் கை இழந்தவர்களும், முற்றிப்போன தோல் வியாதி உடையவர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் மற்றும் சில கைவிடப்பட்டவர்களுமாய் நிறைந்திருந்தது அந்த கைவிடப்பட்ட பகுதி. இவர்களையெல்லாம் மிக எளிதாக கடந்து செல்லும் தேவாவைப்போல், ப்ரியாவால் எளிதில் கடக்க முடியவில்லை. ஒரு விலக்கத்தோடே அவர்களை கடப்பவருக்கு சமூகசேவை என்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிய ஆரம்பித்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே ப்ரியா அங்கு வந்ததற்கான காரணம் தன்னை எப்போதுமே இலகுவாக உணரவைக்கும் தேவாவின் வெடிச்சிரிப்புகளுக்காகத்தான். அங்கிருந்தவர்களின் நிலைமையை ஒரு மெல்லிய சோகம் கலந்த சிரிப்போடு தேவா விவரிக்கும் விதம் நம்மையும் ப்ரியாவையும் அக்காட்சி தரும் மனச்சோர்விலிருந்து தப்ப வைக்கிறது.

வெண்ணிற முழுநிலவின் ஒளியை கடன் வாங்கி அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது தேவாவின் முழுக்கை பூட்டப்பட்டிருந்த சட்டை. அங்கிருந்த கரும்பசுமையின் பின்புலத்தில், ப்ரியாவின் முழங்காலைத் தொட முயற்சித்திருந்த இளம்பச்சைநிற மேலாடை பளிச்சென்றிருந்தது.  அங்கும்கூட இந்திரா காந்தியின் ஒரு சிலை. அதற்கடியிலிருந்த பீடத்தில் அமர்ந்தவாரே இந்திரா காந்திக்கு செய்யமுடியாத சிகையலங்காரங்களை ப்ரியாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார் சிகையலங்கார நிபுணரான தேவா. தலைமுடியை வருடும்போது எழும் ஒரு பாதுகாப்பு உணர்வுக்கு இணையே கிடையாது. வருடுபவர் கூறுவதற்கெல்லாம் தலையசைக்கச் சொல்லும் ஒரு மோன நிலையது. இதைப் பயன்படுத்தி சேவையின் மீதும் கடவுள் மீதும் தான் தீவிரப்பற்று கொண்டுள்ளதாக நினைத்திருக்கும் ப்ரியாவின் மனதை லௌகீகத்திற்கு மாற்றமுயன்று தோற்கிறார் தேவா. உண்மையிலேயே தோற்காததுபோல் நான் நடிக்கிறேன் என்பதை உள்ளூர உணர்ந்தவராகவே இருக்கிறார் ப்ரியா.

நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. திட்டப்படி அங்கிருந்த இருட்டு மனிதர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துவரும் தாமஸ் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. தாமஸ் எப்படியாவது, ப்ரியா மேல் தான் கொண்டிருக்கும் காதலை அவளுக்கு உணர்த்த தேவாவின் உதவியை நாடியிருந்தார். இங்கு நடக்கும் ஒட்டுமொத்த காட்சியும் நாடகம்போல் இதற்காகத்தான் மெல்ல கண்க்குபோட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சாட்சியான முழுநிலவின் கணக்கு வேறாயிருந்தது.

இந்திராவின் சிலையருகே இருந்த ப்ரியாவை விட்டு சற்று விலகியிருந்த தேவா, ஒரு சிறு மௌனமான நேரத்திற்குப்பிறகு முழுநிலவின் துணை கொண்டு மீண்டும் அவளை நெருங்கிச் செல்கிறார் ‘வெண்ணிலவே…’ என்று பாடிக்கொண்டே. பாட்டின் தாளத்தில் அங்கு ஒரு மெல்லிய நடனம் தேவாவின் நளினமான உடலசைவில் உருவாகி அங்கிருந்த இருட்டு மனிதர்களின் உடலசைவின் வழியாக கடலலைபோல் பிரியாவின் உடலையும் அசைய வைக்கிறது. இசை, நிலவொளி. நடனம் என மூன்றும் முயங்கியதில் தன்னிச்சையாக தேவாவின் தோள்மேலே தன் தலை சாய்க்கிறார் பிரியா. திடுக்கிட்ட தேவா,

//தலை சாயாதே விழி மூடாதே…

 சில மொட்டுக்கள் சற்றென்று பூவாகும்…//

என அவள் கிரங்குவதைத் தடுத்து இருவரும் சட்டென்று விலகி குழம்பித் தவித்துக் கொண்டே பாடலையும் நடனத்தையும் தொடர்கிறார்கள். இசை, நிலவொளி மற்றும் நடனத்தோடு குழப்பமும் சேர்ந்து  இருவரையும் பேருறு கொண்டு சீறிப்பாய்ந்து ஆட வைக்கிறது, குழப்பதிற்கான விடை தேடி.

ஆட..ஆட..இருவரின் அகத்தை சுற்றியிருந்த அனைத்துப் புறங்களையும் கரைத்து இல்லாமலாக்கி

// நான் உலகை ரசிக்க வேண்டும் தான்…

  உன் போன்ற பெண்ணோடு…//

என்று அந்த நடனம் இருவரையும் மீண்டும் இணைத்துக் கொண்டு அவர்களை குழப்பத்தில் இருந்து விடுவிக்கிறது.

கடவுளைத் தேடிய ப்ரியா தன் காதலைக் கண்டுகொள்கிறாள். பெண்களைப் புரிந்து வைத்திருந்த தேவா தன்னைப் புரிந்து கொள்கிறான்.

இருவரும் ஒருவரின் கை விரல்களை ஒருவர் கோர்த்துக் கொண்டு அலையடங்கி கரை சேர்வது போல மெதுவாக நடனத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். தாமஸ் புன்னகையோடு அங்கு வந்து அங்கிருந்த கைவிடப்பட்டவர்ளில் ஒருவராக நிற்கிறான் கைவிடப்பட்டு.

கடல்கன்னியுடன் ஒரு நாள்

கடற்கரையைச் சார்ந்து வாழும் நெய்தல் நிலத்தைச் சார்ந்த பரதவர்களின் (மீனவர்களின்) சிதிலமடைந்த கோயில் போலிருந்தது அந்த கற்கட்டிடமும் அதிலிருந்த சிற்பங்களும். நிறைய சதுர வடிவ அறைகளைக் கொண்டிருந்த அக்கற்கட்டிடத்தில் நீள்வட்ட வடிவில் ஒரு பெண்முகம். சாந்தமும் ஏளனமும் கலந்த கயல்விழியும், நீண்ட மூக்குமாய் நீண்டு செழுமையான மார்பகங்களோடு பாதியில் முடிவடைந்திருந்தது அச்சிற்பம். அக்காலப் பரதவர்களின் பெண் தெய்வமாக இருக்கலாம் என்று பார்வையைச் சற்று தாழ்த்தியபோது கடல்கன்னி நக்கலோடு புன்னகைத்துக் கொண்டு தனது வலது முழங்கையைத் தரையில் ஊண்டி அதன்மேல் தன் தலையைச் சாய்த்திருந்தாள். அக்கற்கட்டிடத்தின் ஒரு சதுர வடிவ அறையில் பார்த்த பெண் சிற்பத்தின் தொடர்ச்சி போலவே இருந்தாள் இக்கடல்கன்னி. கூடுதலாக கொடியிடையும், அதைத்தொடர்ந்து விரியும் மீனின் உடம்பும், குறுகிய வால்ப்பகுதியும் கடல்கன்னிதான் இவள் என நம்ப வைத்தது.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிப்படி முதல் உயிரினம் தண்ணீரிலிருந்துதான் தோன்றியது என்பார்கள். இப்பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகக் கூட இக்கடல் கன்னியின் சிற்பம் இருக்கலாம். மரபார்ந்த இதுபோன்ற கலைவெளிப்பாடுகள் ஏதோ ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடுதான். இச்சிற்பங்களுக்கு முன்னால் நாம் நிற்கும்போது நம் மனிதகுல மரபுகளுக்கு முன்னால் நிற்கிறோம் என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம். காலத்தின் கண்ணாடி போன்றவை இச்சிற்பங்கள். பகுத்தறிவென்றாலே மரபுகளுக்கு எதிரான ஒன்றாக நாம் எண்ணிக்கொள்ளும்போது இதுபோன்ற சிற்பங்கள் அளிக்கும் உளச்சித்திரத்தை நாம் இழந்து விடுகிறோம். பகுத்தறிவென்பது நாம் நம்புவதைப்போல மரபுகளை உதாசீனப்படுத்துவதல்ல, அதை ஆராய்ந்து புரிந்து கொண்டு, முன்னகர்வதுதான் என்று எண்ணிக்கொண்டே சற்று திரும்பியபோது, அருண்&Co சற்று தூரத்தில் அடர்ந்த மரங்கள் வெளியிட்ட ஆக்ஸிஜனை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள், சிகரெட் புகையின் வழியாக. இருந்தாலும் அம்மரங்கள் அப்புகையை உறிந்து அவ்விடத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தது.

அதுவரை கத்தி வறண்டு போயிருந்த மதன், விஜி மற்றும் சிவாவின் தொண்டைகளுக்கு சற்று ஓய்வு கொடுப்பதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில்தான், நிகழ்வு நடந்த உள்ளரங்கிலிருந்து சற்றுதொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் இ்ருந்த கடல் கன்னி மேல் மையல் கொள்ள நேர்ந்தது.

ராயல் கார்டன்

மூளையை உருகவைக்கும் வேலைப்பளு; உடலை உருக்கியெடுக்கும் வெயில்; புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் C&R; கூடவே Ourview survey வேறு. வேறு வழியில்லை ஜெரோமுக்கு. ஒட்டுமொத்த அணியும் (30 பேர் இருக்கலாம்) அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு கனவுச் சாலையான கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றில் காலையிலி்ருந்து மாலை வரை தஞ்சமடையலாம் என்று VGPல் கூடியிருந்தோம். வழக்கம்போல் பாலா&Coவின் இடத்தேர்வு அற்புதம்.

வருவாரா? வரமாட்டாரா? என்று கடைசி நிமிடம் வரை பரபரக்க வைத்த C&R தலை ரவி சொல்லிவைத்த நேரத்தில் தன்னுடைய வாகனத்தில் என்னை இழுத்துப்போட்டுக்கொண்டு வார நாட்களின் வாகனச்சிடுக்குகளை (traffic) அருமையாக கடந்து VGPன் மிக அகலமான நுழைவு வாயிலை அடைந்தபோது மணி பத்தைத்தொட 5 நிமிடங்கள் இருந்தது. எந்தவித ஆராவாரமுமற்று அமைதியாக இருந்த அந்த விடுதியின் பசுமையில் கண்களை நனைத்துக் கொண்டே எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘Royal Garden’ஐ அடைந்தபோது வெயில் சற்று குறைந்தது போலிருந்தது. குறைவான கட்டிடங்களும், நிறைந்த பசுமையும் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே சாந்தா&Co தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை செவ்வனே நிறைவேற்றியிருந்தார்கள். அவர்கள் கையிலிருந்த உயர்தர நொறுக்கும் சரக்கும் நிறைய கவிஞர்கள் மற்றும் பாடகர்களுக்கான எரிபொருள்.

வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த மேடான பகுதியிலுள்ள குடிலில் எங்கள் கூடுகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நெடுநெடுவென வளர்ந்த இரு இளையவர்கள்  கருத்து மெலிந்த தேகத்தோடு செய்வதறியாமல் முழித்து எங்களை வரவேற்றார்கள். எங்களுக்காக அமர்த்தப்பட்டிருந்த சிப்பந்திகள் அவ்விருவரும். இதுபோன்ற கடற்கரையோரமுள்ள பெரும் தங்கும் விடுதிகளில் தோன்றும் இவ்விளையவர்களின் முகத்திலிருக்கும் மிரட்சியும், சோகம் கலந்த புன்னகையும் மனதை எப்போதும் நெருடுபவை. அவர்களால் தரப்பட்ட எலுமிச்சைச்சாறு கலந்த சர்க்கரை நீரை பருகியபடி மீண்டும் அவ்வட்ட வடிவ குடிலைச் சுற்றியிருந்த பசுமையில் மூழ்கியிருந்தபோது ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். 9.45க்கெல்லாம் தொடங்கவேண்டிய நிகழ்வு 30 நிமிட தாமதமாகியும் தொடங்காதது கண்டு, இரு ஜீவன்கள் அந்த வெயிலைத் துணிந்து கடற்கரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களில், குடில் நிறைந்திருந்தது. கூம்பு வடிவ மேற்கூரை, பக்கவாட்டு மூங்கில் சுவரிலிருந்து மிக உயரத்திலேயே முடிந்திருந்தது. சுற்றியிருந்த பசும்புல்வெளி தண்ணீரால் அங்கிருந்த வேலையாட்களால் நனைக்கப்பட்டுக் கொண்டே இருந்ததில் குடிலின் வெம்மை சற்று தணிந்திருந்தது. வட்ட வடிவில் சுற்றி அமர்ந்திருந்த அனைவரின் கைகளிலும் எலுமிச்சைச்சாறு. நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெரோம். ‘’அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச..” என அவதார நாசர் அங்கிருந்த Bose ஒலிப்பெருக்கி வழியாக கசிந்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு தன் அரிதாரமற்ற உரையை ஆரம்பித்தார். நிறுவனத்தின் சமீபத்திய சாதனைகளை சுட்டிக்காட்டி விட்டு தன்னுடைய ‘Power Talk’ஐ சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதைவிட சிற்றுரையை விசுவும், ரவியும் முடித்தவுடன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களான மதன், விஜி மற்றும் சிவா பரபரப்பானார்கள். மூவரின் தொண்டைக்கும் விடப்பட்ட கடுஞ்சவால்தான் அடுத்து வந்த அனைத்து நிகழ்வுகளும். ஆனால் கூடியவிரைவில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கையிலெடுத்துக் கொள்ளும் கலையை கற்றுத்தேர்வார்கள் என்றே தோன்றுகிறது.

ஒன்று கலத்தல்

பாம்புபோன்ற வரிசையில் அங்கிருந்தவர்களை நிறுத்தினார்கள். பாம்பின் தலையும், பாதி உடம்பும் குடிலுக்கு வெளியே நீண்டிருந்தது. வால் பகுதியில் கடைசியாக நிற்பவரிடம் சைகயால் உணர்த்தப்படும் ஒன்றை சைகையின் வழியாக தலைப்பகுதியின் முன்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும். பின்னாலிருப்பவரால் தொடப்படும்போது மட்டுமே திரும்பி அவர் சைகையில் நமக்கு உணர்த்துவதை பார்க்கமுடியும். அதை முன்னாலிருப்பவரைத் தொட்டுத் திருப்பி, அவருக்கு கடத்தவேண்டும். ஒரே கூச்சலும் சிரிப்புமாக, வால்பகுதியில் இருசக்கர வாகனத்தைச் சுட்டிய சைகை தலைப்பகுதியை அடையும்போது துப்பாக்கியாக மாறியிருந்தது. இது அங்கிருந்த இறுக்கத்தை முற்றிலும் கலைத்து அனைவரையும் இலகுவாக்கியிருந்தது. அதே சமயத்தில் மொழியின் அவசியத்தையும் இந்நிகழ்வு உணர்த்தியது. Bike அல்லது இருசக்கர வாகனம் என அனைவருக்கும் பரிட்சயமான வார்த்தை வழி இதை நம்மால் எளிதில் கடத்தியிருக்க முடியும். ஆனால் சைகை மொழி அங்கிருந்தவர்களுக்கு அவ்வளவு பரிட்சயமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் புரிதலுக்கேற்ப சைகைகளைப் புரிந்து கொண்டார்கள். விளைவு இருசக்கர வாகனம் துப்பாக்கியாக மாறியது. தனக்குத் தெரிந்தவற்றை மற்றவருக்கு தெரிந்த ஒன்றின் வழியாக மட்டுமே கடத்தமுடியும் என்பதே தொடர்பு கொள்ளலின் முதன்மையான விதி. மொழி மனித இனம் தன் தனிமையை விரட்டிக்கொள்ள கண்டுபிடித்த மிக முக்கியமான கருவி.

வெயில் அங்கிருந்த பெண்களின் அரிதாரத்தை மெல்ல உரிக்க ஆரம்பித்திருந்தது. நல்லவேளையாக குளிரூட்டியுள்ள ஒரு உள்ளரங்கு அடுத்து வரும் நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் மூன்று அணியினராக பிரிக்கப்பட்டு குதிரையின் லாடவடிவில் அமர வைக்கப்பட்டோம். பலூன் ஊதல், பெரிய நிறுவனங்களின் சின்னங்களிலிருந்து (logo) அவற்றை அடையாளம் காண்பது, மாறி மாறி கொடுக்கப்படும் எண்களுக்கேற்ப குழுவாக மாறுவது என சுவாரஸ்யமூட்டும் நிகழ்வுகளில் அனைவரும் களைத்திருந்தோம். அடைக்கப்பட்டது போன்ற உணர்வு வெளிக்காற்றைத் தேடி எங்களை அவ்வரங்கை விட்டு வெளியே தள்ளியது. 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஆமை ஓட்டைப் போர்த்தியது போலிருந்த ஒரு சிறு கட்டிடத்தில் கூடுவதாக திட்டம்.

பொங்கி வழிதல்

கிடைத்த இடைவெளியில் கடல்கன்னியின் சிற்பங்களில் சிறிது ஆழ்ந்து விட்டு, அங்கிருந்த பசுமையையும், அதைக்காக்கும் அடர் மரங்களையும் கடந்து ஆமைக்கட்டிடம் இருக்கும் அந்த பரந்த புல்வெளியை அடைந்தோம்.  அப்பரந்த புல்வெளியின் ஓரத்தில் வட்டவடிவத்தில் அமைந்த கான்கிரீட் தளத்திலிருந்து 5 அல்லது 6 அடி உயரத்தில் எழும்பியிருந்த தூண்களின் மேல் ஆமையின் ஓட்டை கவிழ்த்தியது போலிருந்தது கூரை. அதன் கீழிருந்த ஒவ்வொருவர் பேசியது்ம் ஆற்றல் கூட்டப்பட்ட பிசிறில்லாத ஒலியாக காதில் விழுந்தது. என்ன விதமான ஒலி வடிவமைப்பு என்று புரியவில்லை, இந்த சுவர்களற்ற ஆமைஓடு கட்டிடத்திற்கு. அப்பரந்த புல்வெளியும், இக்கட்டிடமும் ஒன்றிணைந்து கிரிக்கெட் மைதானங்களின் பெவிலியனை நினைவுபடுத்தியது.

வட்டமாய் அமர்ந்து கும்மியடிப்பதற்கான அத்தனை வஸ்துகளும் அங்கு நிரம்பியிருந்தது. பொங்கியெழும் பியரிலிருந்து, அமைதியான வோட்காவரை: வருத்த முந்திரியிலிருந்து பொறித்த கோழிவரை என.இவ்வஸ்துகள் பல பாடகர்களையும் கவிஞர்களையும் வெளிக்கொண்டு வந்தன.

//அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே, நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே…// என்ற அருணின் பாடல்

//கற்களின்றி சிற்பம் ஒன்று கண்டபோது.
முட்களின்றி நேரம் ஓடும் கண்டுகொண்டேன்.
…// என்ற ஶ்ரீநாத்தின் கவிதை மற்றும் //பனிவிழும் மலர்வனம்…// என்ற பாடல்

“இல்லை உங்கள் பாடல்களிலும் கவிதையிலும் பிழை உள்ளது…” என வோட்காவின் துணை கொண்டு தருமியாய் உறுமிய சாந்தாவின் நாணல் பற்றிய கவிதை என அவ்விடம் களைகட்டியிருந்தது.


கையில் நுரைததும்ப நிரம்பியிருந்த கண்ணாடிக் கோப்பை காலியானதே தெரியாமல், மீண்டும் நிரப்பிக்கொண்டபோதுதான் புரிந்தது அத்தனை கவிதைகளும் பெண்களைப் பற்றியதாகவே இ்ருந்தது. கவிஞர்களுக்கான வஸ்து பெண்கள்தான் என்று நினைத்தபோது சற்றுமுன் தரிசித்த கடல்கன்னியின் சிற்பம் நினைவுக்கு வந்து சிற்பிகளையும் கவிஞர்களோடு ஒப்பிடவைத்தது. இவர்களிருவரும் பெண்களின் மேல்கொள்ளும் பற்று ஒரு தெய்வீக நிலைக்கு இவர்களை இட்டுச்செல்கிறது போலும். இதன் வெளிப்பாடுதான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் சிற்பங்கள் பிசிறற்றவையாக, ஒரு முழுமையான வடிவை அடைகின்ற எனலாம். ஆனால், ஆணால் வடிக்கப்படும் ஆண் தெய்வங்களின் சிற்பங்களில் இம்முழுமையை காணமுடிவதில்லை. ஒருவேலை பெண் சிற்பிகளால் இந்த ஆண்தெய்வங்களுக்கு அந்த முழுமையை கொடுத்திருக்க முடியும். தான் வடிக்கும் சிற்ப உடலின் மேல் இருக்கும் ஈர்ப்புதான் இதற்கெல்லாம் காரணமா? ஆனால், கிரேக்க சிற்பமான ஹெர்குலிஸின் கைகளில் உள்ள புடைத்த நரம்புகள் ஆண் சிற்பிகளாலும் முழுமையைக் கொண்டு வரமுடியுமென்று நிரூபிக்கின்றன. ஒருவேளை அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்று எண்ணினாலும், உடல்மேல் கொள்ளும் ஈர்ப்பையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் இக்கலைஞர்களை முழுமையான ஒன்றை நோக்கி இயக்குகிறதென்று எண்ணிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்ததும் சற்று கால் தடுமாறியது. போதும் நிறுத்து சரக்கை என்பதற்காக உடம்பு தரும் முதல் சமிஞ்கை. எப்போதும் அதை நான் தவறவிடுவதில்லை. ஆனால் அதை தவறவிட்டு சலம்புவதுதான் மஜாவே…

உண்டு மயங்குதல்

மீண்டும் காலையில் குழுமியிருந்த குடிலை நோக்கி கால்கள் பின்ன ஒரு நீண்ட நடை. வெயிலும் சரக்கும் எப்போதுமே பொருந்தாத ஜோடிகள். ஒன்று மயங்க வைக்கும் என்றால், இன்னொன்று தெளிய வைக்கும். மதியநேர வெயில், பசுமையிலும் பியரிலும் மயங்கிருந்தவர்களை தெளிய வைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் சளைத்தவர்களல்ல என சிலர் மயங்கிக்கொண்டே இருந்தார்கள்.

வழக்கம்போல் பிரியாணியும் சிலபல அடர் சிவப்பு நிற பொரித்தவைகளும் ஒன்றுக்கு பக்கத்தில் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்து அக்குடிலில் . பிரமாண்டமான அறுசுவை உணவு இல்லையென்றாலும், பசிக்கு இதமாக இருந்தது. சிறுதட்டில் அங்கிருந்தவைகளை அடுக்கியெடுத்து உண்ண ஆரம்பித்தவுடனேயே தட்டு காலியாயிருந்தது. சரக்கும் பசியும் எப்போதுமே ஒன்றையொன்று தழுவிக் கொள்பவை. மணி மதியம் 3ஐத் தொட்டிருந்தது. இன்னமும் பந்தி முடிந்த பாடில்லை. ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலர் உண்ட மயக்கத்தில் கண்களை மூடிக் கொண்டு அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிப்பந்திகளை சாப்பிட அனுப்பிவிட்டு குடிலில் அமர்ந்திருந்த அனைவரின் தியானத்தையும் மீண்டும் கலைத்தார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.

மறுபடியும் பாட்டும் கவிதையுமாய் சென்று கொண்டிருந்த நிகழ்வை வேட்டையாடு விளையாடு ராகவன் குரலில் சுவாரஸ்யமாக்கினார் கதிர். தெனாலி கமலின் குரலும் மிக இயல்பாக வந்தது அவருக்கு. பயம் பயமென்று பலவகைப் பயங்களோடு நீண்ட அந்த மிமிக்ரியில் ‘இராணுவம் செல்லடித்து(வெடிகுண்டு போடுதல்) விடுமோ என்ற பயம்…செல்லுக்கு பயந்து பதுங்குழியில் பதுங்க பயம்…’ என்ற வரி தெனாலி படத்தில் கமல் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை நினைவுபடுத்தியது. வானத்தில் வேகமாக சீறிச் செல்லும் விமானத்திலிருந்து கீழே எறியப்படும் குட்டி விமானம் போன்ற வெடிகுண்டு, அதை அண்ணாந்து பார்க்கும் ஒரு சிறுவனுக்கு பெரிய மீனின் வயிற்றிலிருந்து விழும் குட்டி மீன்போல பரவசமூட்டியிருக்கும். ஆனால் அது விழுந்த இடத்திலிருந்த கட்டிடங்களும் அதில் வசிக்கும் அவனது உறவுகளும் வெடித்துச் சிதறி உருகி இல்லாமல் போனவுடன் கணநொடியில் வாழ்க்கை மேல் கொண்டிருந்த அத்தனை பரவசமும் பயமாய் உருமாறி விடுகிறது. போர் குழந்தைகளிடம் உருவாக்கும் உளவியல் சிதைவு அவர்கள் மீண்டுமொருமுறை உண்மையாகவே இறந்து போகும்வரை தொடரக்கூடியது. இதை உணர்ந்தவர்கள் “போர்…போர்….” என்ற வெட்டி முழக்கத்தை தேசபக்தியாக எடுத்துக் கொள்வதில்லை. அதைத் தொடர்ந்து வழக்கம்போல் அருண் குழுவின் புது நபர்(ரி)களை தன் பேச்சுத்திறமையால் கவர முயன்று கொண்டிருந்தார்.

என் முதுகைத் தொட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த ரவி 4.15க்கு கிளம்பினால்தான் ECRன் வாகனச்சிடுக்கை தவிர்க்க முடியுமென்றார். கிட்டத்தட்ட அனைவருமே கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அலுப்புகளை களைந்து உற்சாகமூட்டிய நாள். இதைச் சாத்தியப்படுத்தியவர்களின் உழைப்பும் மெனக்கெடலும் போற்றுதலுக்குரியது. சில இரட்சகர்கள் முற்றிலும் நிலை தடுமாறியிருந்தவர்களை காத்து வீட்டிலிறக்கியதாக சேதி. ரவியின் வாகனம் என்னை உதிர்த்து விட்டு போனபோது முழு மாலையாயிருந்தது. ஒரு பாலில்லா தேநீரே அப்போதைய தேவையாக இ்ருந்தது. கடல்கன்னியெல்லாம் எங்கோ ஆழத்திற்கு போயிருந்தாள்.

ஒரு செவ்வியல் உரை

ஒரு செவ்வியல் (Classic) நாவல் போல உரையையும் அமைத்துக்கொள்ள முடியுமென்று நிரூபித்துக் காட்டுவதற்காகவே ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் தன்னுடைய பேருரையை ஆற்றியிருக்கிறார் சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன் (ஜெமோ).

அறிவுச்செயல்பாடுகளிலிருந்து நீண்டகாலமாக விலகியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் தொய்வேயில்லாமல் இலக்கியத்தை மட்டுமே தன்னுடைய அறிதலாகக் கொண்ட ஒருவரால் இத்தலைப்பில் ஒரு உரையை ஆற்றமுடியுமா? அதை தலைக்கு 300 ரூபாய் கட்டி ஒரு 300 பேர் ஆழ்ந்தமர்ந்து கேட்டுணரமுடியுமா? என்ற அவநம்பிக்கை  கேள்விகளுக்குச் சரியான பதிலை தந்திருக்கிறது ஜெமோ ஆற்றிய இந்த பேருரை. மூடிக்கட்டி கனத்திருந்த அட்டைப் பெட்டியை அவிழ்த்துக் கொட்டுவதுபோல் அங்கிருந்தவர்களுடைய மனக்கட்டுமானங்களின் முடிச்சுகளை தன் அறிவாற்றலான இலக்கியம் வழி அவிழ்த்து விட்டிருக்கிறார். இனம், மொழி, மதம், சாதி சார்ந்து தஙகள் சுயநலத்திற்காக சமூகத்தை ஒற்றைப்படையாக தொகுத்து ‘தான் – பிறர் ‘ என கட்டமைக்க விரும்பும்  ஃபாசிஸ்டுகள் ஜெமோவை ஒரு ‘முடிச்சவிக்கி’ என்று வசைபாடலாம்.

இப்பதிவு ஜெமோ ஆற்றிய உரையைப் பற்றியது மட்டுமில்லாமல், அதன் வழியாக நான் கண்டடைந்த புரிதல்களையும் உள்ளடக்கியுள்ளது.

அரங்கு

வழக்கம்போல் ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு நிகழ்வு நடக்கும் சென்னை அடையாறிலுள்ள இராஜரத்தினம் அரங்கத்தை கண்டுகொண்டபோது மணி 5ஐத் தொடவிருந்தது. அதுவரை தான் பூண்டிருந்த சினிமா படப்பிடிப்பிற்கான வேஷத்தைக் கலைந்து 6 மணிக்குத் தொடங்கவிருக்கும் கட்டண உரைக்காக தயாராகிக் கொண்டிருந்தது அரங்கம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அகர முதல்வன் எந்திரன்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வாசகர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த நுழைவுச் சீட்டை யோகேஸ்வரனிடம் பெற்றுக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தபோது வெள்ளைச்சட்டை அணிந்திருந்த நீல இருக்கைகள் ஆங்காங்கே நிரம்பியிருந்தது. உள்ளரங்கத்திற்குள்ளான அனைத்து அமைப்புகளோடும் கட்டப்பட்டிருக்கும் அரங்கு. நீல இருக்கையின் வெள்ளைச்சட்டை மட்டும் சற்றே அழுக்காயிருந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல வெள்ளை தன் நிறத்தாலேயே கெடும் எனலாம்.

மணி 6ஐத் தொட பத்துநிமிடங்களிருந்து. மேடையிலிருந்து ஆறாவது நிரையிலிருந்த என்னிருக்கையில் அமர்ந்தவாரே சற்றுத்திரும்பியதில் அரங்கம் நிறைந்திருந்ததில் உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் சற்று பிரமிப்பும் ஒரு சேரத்தோன்றியது. கிட்டத்தட்ட 300க்கும் சற்று அதிகமான இருக்கைகள் கொண்ட அரங்கம். மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த பேசுபவருக்கான பேசு மேடையைத் தவிர வேறெதுவும் இல்லாதது இந்நிகழ்வின் தனித்தன்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் சற்றே பரபரப்போடு ஜெமோ தன் மனைவியோடும் மகனோடும் அனைவரின் புன்னகையையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் வசந்தபாலன் அருகில் சென்றமர்ந்தார். அதைத் தொடர்ந்த சில நிமிடங்களில் நவீன தொழில்நுட்பயுகத் தமிழ்சினிமாவை கட்டமைத்த ஆளுமைகளில் மிக முக்கியவரான இயக்குனர் மணிரத்தினத்தின் வருகை அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திழாழ்த்தியது. அங்கிருந்த 300 பேரில் தானும் ஒருவராக அமர்ந்து கொண்டார், ஜெமோவின் உரையை கேட்பதற்காக.

குறுதிச்சுற்றமும் பண்பாடும்

ஒருசில நிமிட அகரமுதல்வனின் முன்னுரை இந்நிகழ்வு ஆகுதிப் பதிப்பகத்தால் நடக்கவிருக்கும் தொடர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வு என்று புரிந்து கொள்ள வைத்தது. ஆனால் இது ஜெமோவின் இர‌ண்டாவது கட்டணஉரை. நம்மிலுள்ள நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக்காட்டவிருக்கும் உரையின் முதல் பகுதியை எப்போதிருக்கும் ஆரம்பகட்ட பதற்றத்தோடு ஆரம்பித்தார் ஜெமோ.

ஒரு செவ்வியல் நாவலின் ஆரம்பம்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து ஆழ் அமைதியை, படிமங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது யாருடைய மரபு? என்ற கேள்வியை பகடி செய்துகொண்டே.

மரபின் படிமங்களாக அல்லது உருவங்களாக நம் பெற்றோர்களையே முன்னிறுத்தி ஆரம்பித்த உரை, மரபென்பதே தொல்காலத்தைச் சேர்ந்த ஒன்று என்றெண்ணியவர்களுக்கு ஆச்சரியமான ஒன்று. நமது பல்வேறு தரப்பட்ட மரபுகளின் கட்டமைப்புதான் நாம் தினமும் எதிர்கொள்ளும் நம்முடைய பெற்றோர். சமூகத்திலும் இதே போன்றுதான் தந்தைகளையும் அன்னையரையும் உருவகித்திருக்கிறோம். காந்தியிலிருந்து இந்திரா வரை; பெரியாரிலிருந்து கலைஞர் வரை என. இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் மரபின் படிமங்களே என்று சொல்லிவிட்டு அதற்கான ஆழ்படிமம் அல்லது முதன்மையான காரணமாக மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும்  தனிமையைச் சுட்டிக்காட்டியது, ஆர்ப்பரித்து கரையைத்தொட்டு உள்வாங்கிக் கொள்ளும் கடலலையைப்போல; சில ஆரம்பப் பக்கங்களைக் கடந்தவுடன் மெதுவாக நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் செவ்வியல் நாவல்போல; தன்னுடைய காந்தவிசையால் சுற்றியுள்ள அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் எந்திரன் சிட்டி போல அரங்கின் பார்வையாளர்களுக்கும் மேடைக்குமிருந்த தூரத்தை குறைத்துக் கொண்டே சென்றது. இவ்வுரை மெதுவாக அங்கிருந்தவர்களின்; மனிதகுலத்தின் மாபெரும் தனிமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க ஆரம்பித்தது.

தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எவ்வளவு முடிந்தாலும் கடத்தி விட முடிவதில்லை. மற்றவர்கள் என்ன உணர்ந்து கொண்டார்கள் என்பது அவரவர் கொண்டிருக்கும் புரிதல்களால் மட்டுப்படுத்தப்பட்டது. நாம் கேட்கப்படவேயில்லை; நமது மகிழ்ச்சியும் துக்கமும் முழுமையாக மற்றவர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதே மானுட குலத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும் தனிமை என்று இவ்வுரையில் சுட்டிக்காட்டினார் ஜெமோ. இத்தனிமையிலிருந்து தப்பிக்கொள்ள நடந்த பொதுமைப்படுத்துதல்களின் ஆரம்பமே மரபின் ஆரம்பம் என்று புரிந்து கொண்டேன்.

பெரும்பாலும் இப்பொதுமைப்படுத்துதல் குருதி சார்ந்த உறவாகவே ஆரம்பித்து குலம், இனம் என செல்கிறது. தன்னுடைய ‘கொற்றவை’ எனும் நாவலில் இதனைக் குறுதிச்சுற்றம் என்ற சொல்லால் ஜெமோ குறிப்பிட்டுள்ளார். இப்பொதுமைப்படுத்துதல் பெரும்பாலும் ‘தான் – பிறர்’ என்ற கட்டமைப்பைத்தான் உருவாக்கியது என்று ஜெமோ கூறினாலும் தன் குறுதிச்சுற்றத்திற்குள், தன் குலத்திற்குள், தன் இனத்திற்குள் மற்றவரையும் தானாக உணரும் ஒரு பொதுவுடைமைத்தன்மையை கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. இதனா‌ல்தான் மார்க்சியர்களும் இனக்குழு சமூகங்களை பொதுவுடைமைச் சமூகங்களாக கண்டுகொள்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் குழுவுக்கு வேண்டியது இருக்கும்வரை மற்ற குழுக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காத சமூகமாகவும் இருக்கும் இந்த குருதி மரபு எப்போதும் அப்படியே இருப்பதில்லை. உதாரணத்திற்கு முசிறியைச் சேர்ந்த ஒரு இனக்குழு தங்கள் தேவைக்காக தஞ்சையைச் சேர்ந்த இனக்குழுவை அழித்தொழிக்க தயங்குவதில்லை. புறநானூறில் சித்தரிக்கப்படும் அனைத்து போர்ச்சித்திரங்களும் இருவேறுபட்ட குருதி மரபுகள் இடையே நடந்த இதுபோன்ற குல இனச் சண்டைகள் பற்றியதுதான்.

தன் தனிமையைப் போக்கிகொள்ள மனிதகுலம் கண்டுபிடித்த முதல்கருவியான குருதி மரபு காலாவதியாக ஆரம்பித்து அழிவுநோக்கிச் செல்ல ஆரம்பித்ததுதான் நம்மை விழுமியங்களுக்கு (values) இட்டுச்சென்றது என்று கூறிய ஜெமோ, அதை பண்பாட்டு மரபு என்று உ்ருவகிக்கிறார். இதற்கான அறைகூவல் புறநானூற்று போர்ச்சித்திரங்களுக்கிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கோழி பறக்க எத்தனிப்பதுபோல எழுகிறது என்கிறார் ஜெமோ. இந்த அறைகூவல்களை விழுமியங்களாகக் கொண்டு பல இனக்குழுக்களை ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதே பண்பாட்டு மரபு என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இந்த போருக்கான குரலும் சமாதனத்திற்கான குரலும் ஒரே நேரத்தில் எழும் இந்த முரணியக்கத்தில் மார்க்சியர்களின் பார்வை ஜெமோவின் பார்வையிலிருந்து முரண்படுகிறது. முரண்பட்டால்தானே மார்க்சியர்கள். பெரும்பாலும் வேட்டைச் சமூகமாக, அதாவது உணவை சேகரிக்கும் சமூகமாக இருந்த இனக்குழுக்களுக்கிடையே உருவான ஏற்றத்தாழ்வுதான் அவர்களிடையே சண்டையிட வைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள்  உணவு சேகரிக்கும் சமூகம் உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிய முரணியக்கத்தின் விளைவு என்கிறது மார்க்ஸியம். கிட்டத்தட்ட இம்முரணியக்கத்தை தனியுடைமைச் சமூகங்களின் தோற்றுவாய் என்றும் பொதுவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்றவற்றை தனியுடைமைச் சமூகங்கள் தங்கள் நெருக்கடிக்குத் தீர்வாக கடன் வாங்கிக் கொண்டன என்றும் உருவகிக்கிறார்கள் மார்க்சியர்கள்.

ஆனால் குருதி சார்ந்த இனக்குழு மரபிலிருந்து பண்படாத சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்து கொண்டேயிருக்கின்றன என்று ஆப்பிரிக்க நாடுகளின் இனக்குழுச் சண்டைகளை சுட்டிக் காண்பித்தார் ஜெமோ. இந்திய தேசியம் என்ற ஒன்று உருவாகி வந்ததே இந்த விழுமியங்களைப் போற்றும் பண்பாட்டு மரபின் உருவாக்கத்தால்தான் என்று தன்னுடைய உரையின் முதல்பகுதியை முடித்தார். மணி சரியாக 7.30ஐத் தொட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பேச்சில் மேலும் கீழும் மூச்சு வாங்கியதில், கீழிறங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

பண்பாட்டு மரபின் உருமாற்றம்

30 நிமிட இடைவெளியில் பொங்கல், ரோல் மட்டும் வடை அடங்கிய மினி டிஃபன் சூடான தேநீரோடு வழங்கப்பட்டது. சரியாக  8 மணியளவில் மீண்டும் தொடங்கிய உரை, முதல் பகுதியை விட படுசுவாரஷ்யமாகவும் வேகமாகவும் இருந்தது. தேர் காராக மாறிய உருமாற்றத்தை பண்பாட்டு மரபின் தொடர்ச்சியான உருமாற்றங்களோடு உருவகித்திருந்தார்.

நம்முடைய பண்பாட்டு மரபுகளின் விழுமியங்களை நமக்குத் தொகுத்து தந்தவர்களில் மிக முக்கியமானவர்களாக Indologist என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் அறிஞர்களை நினைவு கூர்ந்தார். நமது பண்பாட்டின் கீழ்மைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதே சமயத்தில் நிறைய அறிஞர்கள் அவற்றை திரித்துமிருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பஞ்சங்களின் நூற்றாண்டாகிய 18ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் துடைத்தழித்து விட்ட காலகட்டத்தில்தான் Indologistகள் தங்கள் பண்பாட்டாய்வை தொடங்கியிருக்கிறார்கள். அழிந்துபோன நம் மரபை மீட்டெடுத்ததில் அவர்களின் பங்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜெமோ, நமது இன்றைய மரபின் கிளைகளை 18ம் நூற்றாண்டை ஒரு ஆரம்பப்புள்ளி (Reference point) யாகக் கொண்டு விவரித்தார்.

முதல் பகுதியில் நமக்குள்ளிருக்கும் நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய இவ்வுரை, இப்போது வாள்கொண்டு அவற்றை கூறிட்டுக் காண்பித்தது. இப்பகுதியின் முடிவில் மிகத்தெளிவாக வலதுசாரி மரபு, இடதுசாரி மரபு, இரண்டுக்கும் நடுநிலைப்பட்ட மிதவாத மரபு என நமது சிந்தனை மரபுகளை பகுத்து தொகுத்துக் கொள்ள முடிகிறது. பண்பாட்டு மரபின் அடித்தளமான விழுமியங்கள் பெரும்பாலும் மதங்களில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மதம் கிட்டத்தட்ட இவ்விழுமியங்களை சடங்கு, தத்துவங்கள் வழியாக மக்களுக்குக் கடத்தும் ஒரு ஊடகம் என்றே உருவகித்திருக்கிறேன். இம்மரபு கீழ்வருமாரு கிளைத்துள்ளது என்ற சித்திரத்தை தன்னுரையில் வரைந்தார் ஜெமோ.

  • மதம் சார்ந்த பண்பாட்டு மரபை கடவுளின் ஆப்த வாக்கியமாக ஏற்றுக்கொள்வது. அதை மாற்றுவதற்கு நம்மால் முடியாது என்று நம்பும் வகை. சங்கர மடங்கள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கங்கள் இதற்கு உதாரணம். இது ஒ்ருவகையான தீவிர வலதுசாரி சிந்தனை மரபென்கலாம்.
  • மதங்களை விமரிசித்து எற்றுக்கொள்ளும் ஒருவகை. விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்களின் வகை. இதை மிதவாத வலதுசாரி மரபென்கலாம்.
  • மரபுகளிலிருந்து தங்களுக்கு தேவையானதை மட்டும் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட பண்பாட்டு வளர்ச்சியை நோக்கி நகரும் சமூக சீர்திருத்த வகை. ராஜா ராம் மோகன்ராய் போன்றோர்களின் வகை. இதை மிதவாத இடதுசாரி மரபென்கலாம்.
  • இங்கிருக்கும் அனைத்து மரபுகளும் ஆதிக்க சக்திகளால் திரிக்கப்பட்டவை. மதம்சார்ந்த கருத்துமுதல்வாதக் கொள்கை என்பதே இந்திய சிந்தனை மரபுக்கு அந்நியமானது என்றும்;பொருள்முதல்வாதமே இங்கிருந்தது என்றும் நம்பும் மார்க்சிய வகை. ரமா பாய், எம்.என்.ராய், தேவிபிரசாத் சட்டோபாத்யா போன்றோர்களின் வகை. இதை தீவிர இடதுசாரி சிந்தனை மரபென்கலாம்.

ஆனால் கலைச்செயல்பாடுகளைப் பொறுத்தவரை, பண்பாட்டு வளர்ச்சியான காரைவிட மரபான தேர் மிக முக்கியமானது. அது ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும். கோயிலில் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது நமக்குக் கிடைக்கும் உணர்வு நாம் நம் மரபுகளின் கட்டமைப்புதான் என்பதை உணர்த்தும் என்றுகூறி தன் உரையை ஜெமோ முடித்திருந்தபோது மணி 9.30ஐத் தொடவிருந்தது. என்னையுமறியாமல் கைகளிரண்டும் தலைக்கு மேலெழும்பி தட்டிக் கொண்டே இருந்தன ஜெமோ பெருமிதத்தோடு மேடையை விட்டு இறங்கும் வரை. கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது. மனம்மட்டும் வெட்டிய சிந்தனைக்கூறுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு ஒரு ஒழுங்கமைவை நோக்கிப் பயணித்தது.

விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 2


முன்பகுதி

ராஜ்கௌதமன் – மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர்

லீனா மணிமேகலையின் அமர்வுக்குப்பின் அரங்கிலெழுந்த சலசலப்பின் அடர்த்தியைக் குறைத்து இல்லாமலாக்கியது, கொடுக்கப்பட்ட 15 நிமிட இடைவெளி. மீணடுமொருமுறை அங்கிருந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளின் தரிசனத்திற்குப் பிறகு அரங்குக்கு திரும்பியபோது, மேடையில் ஜெமோ வீற்றிருந்தார். இவ்வருட விழாவின் விருது நாயகனான வரலாற்றாய்வாளர், மார்க்சியர், எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட ராஜ்கௌதமன் அவர்களை தன்னுடன் வந்தமருமாறு அழைத்தார் ஜெமோ. ஏன் இந்த அமர்வை ஜெமோ ஒருங்கிணைத்தார் என்பது, அவர் ராஜ்கௌதமனை அறிமுகப்படுத்தும்போதே அங்கிருந்தோருக்கு புரிந்துவிட்டது. ஒரு இருமுறையாவது அந்த ஓரிரு நிமிட தன்னைப்பற்றிய அறிமுக உரையில் குறுக்கிட்டிருப்பார் ராஜ்கௌதமன் . ஒரு சட்டகத்திற்குள் சிக்கும் மனிதரல்ல இவர். அவருடைய உடல்மொழியிலிருந்த கட்டற்ற துள்ளலும் அல்லது இறுக்கமின்மையும், பேச்சுமொழியிலிருந்த எள்ளலும், வாசகர்களுக்கு முன்பிருந்த அந்த மேடை அவர்கள் மத்தியில் நகர்ந்து வந்ததைப்போல ஒரு உளமயக்கை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கேள்விக்கும் எங்கெங்கோ நீண்டு சென்ற அவரின் பதில்களை மடைமாற்றி ஒழுங்குபடுத்துவத்தில் திணறித்தான் போனார் ஜெமோ.

உங்களுடைய ஆய்வுகள் சில முன்முடிவுகளை மனதில் கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றன என்ற பரவலான குற்றச்சாட்டுக்குப் பதிலாக, “ஆமா..அப்படித்தான் சொல்லிட்டுத் திரியுறானோவுங்க…அவுங்க இஷ்டமது. ஏன்..நீங்க கூட தான் அப்படிச் சொன்னீங்கன்னு நினைக்கிறேன்..” என்று பக்கத்திலிருந்த ஜெமோவைப் பார்க்க, “இல்ல..அந்த குற்றச்சாட்டுக்கு நான் பதில்தான் எழுதினேன்…” என்று ஜெமோ தெளிவுபடுத்தினார். “இருந்தாலும், உங்ககிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும். அப்படியே படிப்படியா மேல கொண்டு போய்… திடீர்னு கீழபோட்ருவீங்க…” என்று ஜெமோவைக் கலாய்த்தார். இதே வெளிப்படைத்தன்மையை அவரது ஆராய்ச்சி கட்டுரைகளிலும் பார்க்கலாம். கூறுமுறை மட்டுமே வேறு.

சமீபகாலங்களில் தங்களிடமிருந்து தலித்துகள் மேம்பாடு பற்றிய காத்திரமான படைப்புகளோ, ஆராய்ச்சி கட்டுரைகளோ வரவில்லையே என்ற கேள்விக்கு, எனக்கு அதற்கான தேவை ஏற்படவில்லை என்றார். தேவைப்பட்டால் எழுதுவேன் என்றவரிடம் விடாது “அப்ப…இப்போது அதற்கான தேவையில்லையா?” என்ற தொடர் கேள்விக்கு…சற்று காட்டமாக “அவனவனுக்கு பிரச்சினை இருந்தா மட்டும் வா…தீர்வைத் தேடலாம்…மத்தவனுக்குன்னு என்னிடம் வராதீங்க…” என்று உரத்த கூறி…”திடீர்னு சீரியஸ் ஆயிடுச்சுல…” என்று புன்னகைத்தார்.


கடந்த ஆறுமாதங்களாக தொடர்ந்து அவருடைய படைப்புகளை வாசித்ததில், அவரைப்பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்ததால் ராஜ் கௌதமனின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இளமையில் வறுமையைவிட தீண்டாமையே மிகக்கொடியது என்பதை மிகத் தெளிவாக அவரது படைப்பான ‘சிலுவைராஜ் சரித்திரம்’ வழியாக உணர்ந்து கொள்ள முடியும். வறுமையும், தீண்டாமையும் சேர்ந்திருந்த தன் பால்யத்தை நினைவுகூர விரும்பாத; குறிப்பாக தன் பால்யம் சார்ந்த நிலப்பரப்பை வெறுத்தொதுக்கும் மனநிலைதான் இன்றும் அவரிடம் மேலோங்கியுள்ளது. தனக்கு இழைக்கப்பட்ட தீண்டாமையை கல்வி வழியாகவே இல்லாமலாக்கிக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் வழியாக இந்த தீண்டாமைக்கான அவசியம், நம் பண்பாடு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மறுவரையறை செய்து தொகுக்கப்பட்டது என பல விஷயங்களை தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழியாக தெளிவும் படுத்தியுள்ளார். தலித்தியம் என்றால் என்ன? அது யாருக்கானது? அதன் செயல்பாடுகளை எப்படி தொகுத்துக்கொள்வது என்ற அக்கட்டுரைகள் தற்போது திராவிடம்; இந்துத்துவம்; கம்யூனிசம்; தலித்தியம் என குழம்பிப்போயிருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெளிவையும் பெரும்திறப்பையும் அளிக்கக் கூடியவை.

மார்க்ஸிய தத்துவத்தைப் பொறுத்தவரை எதிர்காலம் எப்போதுமே பிரகாசமானது. அதிலும் அத்தத்துவத்திலிருந்து முளைத்த கம்யூனிசத்திற்கு பொன்னுலகம் எதிர்காலத்தில் மட்டுமே உள்ளது.  மார்க்ஸியத்திற்குப் பின்வந்த பின்நவீனத்துவ (Post Modern) சிந்தனையோ எதிர்காலத்தின் மேல் ஒருவகையான அவநம்பிக்கை கொண்டிருப்பது. ஆனால் இந்த இரண்டுவகைச் சிந்தனை கோட்பாடுகளையும் தன் ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ள ராஜ்கௌதமனிடம் உங்களுக்கு எதிர்காலத்தின் மேலிருப்பது நம்பிக்கையா இல்லை அவநம்பிக்கையா என்ற கேள்விக்கு காலையில் இருக்கும் நம்பிக்கை மாலையானதும் குறைந்து விடுகிறது என்று மலுப்பலாக பதிலளித்தார். “அப்ப காலைல மார்க்ஸியவாதி…மாலைல பின்நவீனத்துவவாதி…” என்று நக்கலடித்தார் ஜெமோ.


தனக்கு நேர்ந்த அனைத்து கீழ்மைகளையும் பரந்த வாசிப்பின் வழியாகவே கடந்திருக்கும் ராஜ்கௌதமன், விழாவின் சிறப்பு விருந்தினரான வங்கத்தைச் சேர்ந்த அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் கேள்விக்கான பதிலில் அவர்களின் மாநிலத்தைச் சேர்ந்த மார்க்ஸியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவை நினைவு கூர்ந்தார். “எனக்கு மட்டும் மகன் பிறந்திருந்தால் அவர் பெயரைத்தான் வைத்திருப்பேன்..” என்று அவர் எழுதிய ‘லோகாயவாதம்’ எனும் புத்தகத்தை உச்சிமுகர்ந்து மெச்சினார். அவருடைய இன்னொரு புத்தகமான ‘இந்திய தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்’ மகாயான பௌத்தத்தின் தோற்றத்தையும் அது வேதத்திலிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை ஆதிசங்கரர் நிறுவிய விதத்தையும் சுட்டிக்காட்டியது நினைவுக்கு  வந்து போனது. இப்புரிதலோடு ராஜ்கௌதமனின் அயோத்திதாச பண்டிதர் குறித்த ஆய்வுக்கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கும்போது பௌத்தமதத்தின் உருமாற்றங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை நம்மால் வரைந்து கொள்ளமுடியும்.


வாசகர்களிடமிருந்து எழுந்த கேள்விகளின் வழியாக இவ்வரங்கின் தனித்தன்மையை உணர்ந்து கொண்ட ராஜ்கௌதமன், மாலையில் நடந்த விருது வழங்கும் விழாவிலும் அதை பிரதிபலித்தார். “ நான் கண்ட மேடைகளில் ஒரு அறிவுஜீவி மட்டும்தான் இருப்பார். அவரைச் சார்ந்து சிலர் சேர்ந்திருப்பார்கள். ஆனால், இந்த விழா மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கு இணையான இலக்கிய அறிவுஜீவிகள்தான் கீழேயும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு இது வித்தியாசமான மேடை..” என்றது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினரின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

ராஜ்கௌதமனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேள்வியான “தலித் சமூகத்தைச் சேர்ந்த நீங்கள், உங்கள் சமூகத்தையொடுக்கிய சமூகங்களைச் சேர்ந்த புதுமைபித்தனையும், பாரதியையும் கொண்டாடுவது ஏன்?” என்ற கேள்வி எழும்பியதும் மிகவும் பரவசமானார். “என்னைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்டவர்களுக்காக தங்கள் சொந்த சாதியினரை எதிர்த்து நிற்பவர்களும் தலித்துகள்தான். அவர்களைப் போற்றுவதில், வழிகாட்டியாகக் கொள்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை” என்றார். “தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது இதுபோன்று தங்கள் சாதியினரின் குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்களா?” என்ற காட்டமான கேள்வியையும் எழுப்பினார். மாலை நடந்த விருது விழாவில் “காடு போன்றொரு நாவலை ஒரு தலித் மட்டுமே எழுதமுடியும். ஜெயமோகன் ஒரு தலித்்..” என்று கூறியது, ஜெமோவை அவர் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் புதுமைப்பித்தன் இடத்தில் வைத்தது போலிருந்தது.

அமர்வு முடிந்து அவரைச் சந்தித்தபோதும் புதுமைப்பித்தனைப்பற்றியே சிலாகித்துக் கொண்டிருந்தார். அவருடைய இரு படைப்புகளைப் பற்றிய என்னுடைய அவதானிப்பை அவரிடம் காண்பித்து அவருக்கும் சேர்த்து நான் புளங்காகிதம் அடைந்து கொண்டேன்.


விருது விழா

ராஜ்கௌதமன் அவர்களின் அமர்விற்குப்பிறகு, அனிதா அக்னிஹோத்ரியின் அமர்வு, மதியஉணவு, மற்றும் மலையாள இயக்குனரும் எழுத்தாளருமான மதுபாலின் அமர்வு என அனைத்து அமர்வுகளும் முடிந்தபோது மணி 3.30ஐத் தொட்டிருந்நது. இன்னும் இரண்டு மணி நேரமிருந்தது விழா தொடங்குவதற்கு. அமர்வுகளின் போதிருந்த ஆற்றல் திடீரென்று குறைந்து இல்லாமலானது போல் தெரிந்தது. சென்னையின் தி.நகர் தெருக்களின் அனைத்து கடைகளையும் உள்ளடக்கி, ஆனால் நெரிசலில்லாமலிருந்த ஆர்.எஸ்.புரம் வீதிகளைச் சுற்றி இழந்த ஆற்றலை மீட்டுக் கொள்ளமுடிந்தது. சுடசுடத் தயாராகிக் கொண்டிருந்த A1 நேந்திரம்பழ சிப்ஸை வீட்டிற்கும் சேர்த்து வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பியபோது விழா ஆரம்பிக்க இன்னமும் ஒரு மணிநேரமிருந்தது. அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சிறில் மற்றும் காளி பிரசாத்தின் உறக்கம் எனக்கும் தொற்றிக்கொள்ள, தூங்கியெழுந்திருந்தபோது விழா ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்களே இருந்தது. மதுபால் தன் அமர்வு முழுதும் மலையாளத்திலேயே பேசியது கனவில் வந்து தொந்தரவு செய்தது. கூடவே இரண்டு நாட்களும் தமிழ் தெரியாமல் அனைத்து அமர்வுகளிலும் கலந்துகொண்ட அனிதா அக்னிஹோத்ரி நினைவில் வந்து போனார்.


திட்டமிட்டபடி சரியாக 5.30க்கு ராஜ்கௌதமன் பற்றிய கே.பி.வினோத் இயக்கிய நேர்த்தியான ஆவணப்படத்தோடு துவங்கிய விழா சுனீல் கிருஷ்ணன், ஸ்டாலின் ராஜாங்கம், தேவிபாரதி, அனிதா அக்னிஹோத்ரி, மதுபால் மற்றும் ராஜ்கௌதமனின் கச்சிதமான உரைகளோடு முடிவுக்கு வந்தது. மேடையிலிருந்த அனைவருக்கும் மேகாலயாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆளுயரச் சால்வையும், ராஜ் கௌதமனுக்கு கூடவே ஆளுயர மாலையும் விருதும் வழங்கப்பட தள்ளாடியதைப்போல் பாவனை செய்து கொண்டு அதைப் பெற்றுக்கொண்டார். அந்த பிரமாண்ட மேடையை ஒட்டுமொத்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைத் சேர்ந்வர்களும் நிரப்பி குழு புகைப்படம் எடுத்தபின் ஜெமோவிடம் விடைபெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பி பெட்டியை எடுத்துக்கொண்டு வழியில் தென்பட்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கத்தின் வாசலை அடைந்தபோது கோவை ஞானி அரங்கத்தின் வாயிலில் தனது வண்டிக்காக காத்திருந்தார் தன்னுடைய இருசக்கர நாற்காலியில். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில் நிறைந்திருந்த மனது ததும்பி வழிய ஆரம்பித்தது.


விஷ்ணுபுரம் விருது விழா 2018 – Day 2 Part 1

முன்பகுதி

ஜெமோவுடன் ஒரு காலை நடை

‘ஜெ இப்பத்தான் கீழ போனாரு…’ என்ற சத்தம் முணுமுணுப்பாய் அறையின் கதவு வழியே கசிந்து கொண்டிருந்தது, காலையில் முழிப்புத் தட்டியிருந்தபோது. சடுதியில் கிளம்பி மூன்றாவது தளத்திலிருந்து தரைதளத்திற்கு வந்தபோது, கச்சேரி களைகட்டியிருந்தது. தங்கும் அறைகளிருந்த கட்டிடத்தின் சுவர்களைச் சற்று நீட்டித்துக் கட்டப்பட்ட நீண்ட திண்ணையில் சிலர் அமர்ந்திருக்க, சுற்றிப்பலர் நின்றிருக்க நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெமோ. காந்தியம், கம்யூனிசம் என்று போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 40 பேரிருந்த அந்த கலந்துரையாடலில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.


ஆசியர்களை சற்றுத் தாழ்த்திப் பார்க்கும் மார்க்ஸியத்தின் இனவாதம், அதற்கான காரணம் என சுவாரஸ்யமாகச் சென்றது பேச்சு. ஆசியர்களை நாம்தான் இக்கட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற புரோலட்டேரியன்களுக்கும், அவர்களின் இருளைப் போக்கவேண்டி மெழுகுவர்த்தி ஏந்திய கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் ஏதும் வித்தியாசமில்லையென்று தோன்றியது. ‘மதம் மனிதர்களின் அபின்’ என்ற மார்க்ஸின் வாசகத்தை ‘அபின் ஒரு காயத்திற்கான மருந்து’ என்று வேறுகோணத்தில் யோசித்த மார்க்ஸியரான கோவை ஞானியும் நினைவுக்கு வந்தார். மார்க்ஸும் ‘இதயமற்றவர்களுக்கான இதயம் தான் மதம்’ என்ற தன் கூற்றின் மூலம் மதத்தின் தேவையை உணர்ந்தவராகவே தோன்றுகிறார். இலட்சியவாதத்தின் இலக்குகள் ஒன்றுதான், வழிமுறைகள்தான் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.

மணி 8ஐத் தொட்டுக்கொண்டிருந்தது. சுற்றி இருந்தவர்களின் எண்ணிக்கையும் இருமடங்காயிருந்தது. சற்றும் தொய்வில்லாமல் உரையாடல் சுவாரஸ்யமாகச் சென்று கொண்டேயிருந்தது.

காந்தி இலட்சியவாதி மட்டுமல்ல. நடைமுறைவாதியும்கூட என்பதை எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனும் ஜெமோவும் மாறி மாறி அவருடைய வெவ்வேறு வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து சுட்டிக்காட்டிக் கொண்டேயிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள ஏதாவது இருக்குமென்றால் குஜராத்தியர்கள் ‘வாடிக்கையாளர்கள் நம் கடவுள்’ என்பதை மட்டும் பெற்றுக்கொண்டார்கள் என்ற ஜெமோவின் பேச்சிலெழுந்த குபீர் சிரிப்பில் பீதியானார்கள் அன்றைய நிகழ்வுக்கான ஆரம்பகட்ட வேலைகளை ஒருங்கிணைத்து கொண்டிருந்த விஷ்ணுபுரம் வட்டத்தினர்.

காலையுணவுக்கான ஏற்பாடுகளனைத்தையும் முடித்திருந்த விஜயசூரியன் “மணி…இப்பவே எட்டரை.இன்னும் ஒருத்தரும் சாப்பிட வரல. எப்படி நீங்க திட்டமிட்டபடி ஒன்பதரைக்கு லீனா மணிமேகலையுடனான நிகழ்வை ஆரம்பிக்க முடியும்்…” என்று அரங்காவிடம் பதற ஆரம்பித்தார். நிலைமையைப் புரிந்து கொண்ட ஜெமோ அறை நோக்கி கிளம்ப கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தது. அங்கிருந்த காற்றில் மார்க்ஸும், காந்தியும் கலந்தேயிருந்தார்கள்.

லீனா மணிமேகலை –  பெண்ணியத்தின் இறுக்கம்


காலையில் சாப்பிட்டிருந்த பொங்கலில் கிடைத்த ஒரு மயக்க உணர்வை ‘தூக்கியடிச்சிருவேன் பாரு..’ என்ற வகையறாப் பதில்களால் கலைத்துப்போட்டு விட்டார் லீனா. அவர் முகத்தில் எப்போதும் இருந்த அந்த இறுக்கம் ஆணாதிக்க சமூகத்திற்கெதிராக தான் எப்போதும் கத்தியுடன் இருப்பவள் என்று சொன்னதின் விளைவென்றே எண்ணத் தோன்றியது. ஒரு பெண் என்ற காரணத்தால் மட்டும் தான் சந்தித்த வலிகளையும், அதை வென்றெடுத்த தன் வழிகளையும் நம்பிக்கைத் ததும்ப ததும்ப ‘பெண்கள் தின’ மேடைகளைப்போல பல மேடைகளில் பேசிய லீனாவிற்கு இது முற்றிலும் புதிய மேடை.


விழாவின் நாயகனான ராஜ்கௌதமனும் இந்த அமர்வில் கலந்து கொண்டார். பெண்களின் மாதவிலக்கு எப்படி தீட்டாக மாறியது என்ற திசையில் விவாதத்தை திருப்பிக் கொண்டார் லீனா. அவர் படைப்புகளிலிருந்து எந்த கேள்வியும் எழ அது அனுமதிக்கவில்லை அல்லது அதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட லீனா இழந்திருந்தார். அவரின் வலிமை, அவரது வலிகளை எதிர்கொண்ட வழி மட்டுமே. இதுவே பிற அமர்வுகளில் இல்லாத ஒரு காரசாரத் தன்மையை இவ்வமர்விற்கு அளித்தது எனலாம்.


ஆனால் தீட்டு பற்றிய அவருடைய புரிதல்கள் ஒதுக்கித்தள்ளிவிட முடியாதவை. விவாசயத்திற்கு முந்தைய வேட்டைச் சமூகங்களிடம், மழையால் தன்னுள்ளிருந்தவற்றை விளைச்சலாக வெளிக்கொணர்ந்த நிலத்தின் மேலிருந்த ஓர் அச்ச உணர்வுதான் பெண்களின் மாதவிடாயை ஒரு விலக்கத்தோடு பார்க்க வைத்தது என்றால், விவசாயச் சமூகங்களிடம் அவ்வச்சம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதையே ‘Mensural blood has Medicinal values’ என்ற லீனாவின் வார்த்தைகள் உறுதிபடுத்தின என புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சங்க இலக்கியங்களிலிருந்து நம் பண்பாட்டைத் தொகுத்து மறுவரையறை செய்து புரிந்து கொள்ளும் ராஜ்கௌதமனும், சங்க இலக்கியத்தில் விளைச்சலற்ற தரிசு நிலங்களை மேம்படுத்த பெண்களின் மாதவிடாய் காலத்து குருதி அந்நிலங்களில் ஊற்றப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்றார். ஆக இதைத் தீட்டாக மாற்றிக்கொண்டதில் யாருக்கு லாபம் என்று அங்கிருந்த ஆண்களை நோக்கி லீனா கண் சிமிட்டுவது போலிருந்தது.

‘அடேய் ஆண் துரோகிகளே…’ என்று சூளுரைக்கும் பெண்ணியவாதிகளைவிட, ஆண்களை உரையாட அழைக்கும், அவர்களுடைய சமூக உளவியல் கட்டுமானங்களை அசைத்துப்பார்க்கும் பெண்ணியவாதிகளால்தான் மாற்றங்களை கொண்டுவர முடியுமென்ற ஜெமோவின் கேள்வியை, ‘ஆண்களை அறைந்துதான் உரையாடலுக்கு அழைக்க வேண்டும்…’  என்ற தொனியிலேயே லீனா எதிர்கொண்டார். கொஞ்சம் பயமும், அவர்மேல் பரிதாபமும் தொற்றிக்கொண்டது. அரங்கத்தின் அனைத்து மூலைகளிலும் இருந்து வந்த தொடர்கேள்விகளை லீனா எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், ஒதுக்கப்பட்ட ஒன்றரை மணி நேரத்தை தாண்டியிருந்ததால் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிகழ்வு முடிந்தும் அரங்கம் சலசலப்பிலேயே இருந்தது. ஜெமோவும் ஒருங்கிணைப்பாளர்களை நோக்கி சீறிக்கொண்டிருந்தார். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட இந்நிகழ்வு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இருக்கலாம்.

ராஜ்கௌதமன் – மார்க்ஸியத்திலெழுந்து பின்நவீனத்துவத்தில் துயில்பவர்

தொடர்ச்சி

விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2

முன்பு

நரன்- சாம்ராஜ் – ஒரு ‘அற்புதக்’ கூட்டணி

சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார்.

‘அற்புதம்’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் தோழர்களால் அவர்களைப்பற்றிய எந்த பெருமையையும் பேசமுடியாது என்ற பகடியில் ஆரம்பித்த சிரிப்பலையை  “அவர் வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்கு. அதனால அவர் ஒரு பூர்ஸ்வா (முதலாளி வர்க்கம்). அவர் வீட்டுக்கு போகக்கூடாது” என்ற தொடர் பகடிகள் மூலம் அமர்வு முழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்க வைத்தார் சாம். மேலோட்டமாக இது கம்யூனிச தோழர்களைப் பற்றிய பகடியாக தோன்றினாலும், பொன்னுலகக் கனவில் எப்போதுமே இருந்த தோழர்கள், இந்த உலகை திருத்தவந்த அறிவுஜீவிகளாக தங்களை எண்ணிக்கொண்ட தோழர்கள் மேற்கத்திய மார்க்ஸியத்திலிருந்து வெளியேறி தங்களுக்கான ஒன்றை உருவாக்கிக் கொள்ளும் திறனற்றவர்களாக ரஷ்யப் பெருமை பேசுபவர்களாக சுருங்கிப் போனதைப் பற்றிய சாம்ராஜின் ஆதங்கமாகவே இருந்தது.

சாம்ராஜ் அருவி மாதிரி கொட்டுபவராக இருந்தால், நரன் வார்த்தைகளை அளந்து பேசுபவராகவே இருந்தார். தான் எழுதவந்த விதம், தந்தையில்லாத தனக்கு தாயால் கற்பிக்கப்பட்ட ஒழுங்கு, தன் வாழ்வில் நேர்ந்த சில துயரச் சம்பவங்களிலிருந்து மீழ்வதற்காக எழுத ஆரம்பித்த முயற்சி என உணர்ச்சிப் பூர்வமாகவே இருந்தது. தோழர்கள் பாஸையில் சொல்லவேண்டுமானால் ‘இது ஒரு அற்புதமான அமர்வு’.

மணி 5த் தொட்டிருந்தது. என்னதான் வசதியான அரங்கமாக இருந்தாலும், அப்போதைக்கு வெளிக்காற்று வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பிணைத்திருந்த இவ்விரு அமர்வுகளுக்குப் பிறகு ஒரு மணிநேர இடைவெளி கிடைத்தது. அரங்கின் நுழைவாயிலில் சூடான சுண்டலும் தேநீரும் பருகத் தரப்பட்டது. அருகே தமிழினி, பாரதி புத்தகாலயம் மற்றும் நற்றிணை பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். கூடவே ஜெமோவால் ஊக்கம் பெற்ற நூற்பு மற்றும் குக்கூ தன்னற அமைப்பினரின் உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வெகு நாட்களாகவே அவர்களுடைய சைனீஸ் காலர் வெள்ளை நிறச்சட்டையையும், கருப்பட்டியில் செய்த கள்ளமிட்டாயையும் வாங்கும் எண்ணமிருந்தது. இன்று அதை ஈடேற்றிக் கொள்ளமுடிந்தது.

ராஜ்கௌதமனின் விடுபட்ட புத்தகங்களோடு, ஸ்டாலினின் அனைத்துப் புத்தகங்களும், எம.ஏ. சுசீலா அவர்கள் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் அசடனும் சேர்ந்து கொண்டபோது தோளும் கையும் சற்று வலிக்க ஆரம்பித்தது. அறையில் சென்று அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு, அரங்கு அமைந்திருந்த திவான் பகதூர் சாலையில் கால்தளர ஒரு மாலை நடையில் ஒவ்வொரு பத்து மீட்டருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளை வாசகர்கள் சுற்றியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாஞ்சில் நாடன், லஷ்மி மணிவண்ணன், தேவதேவன், ஸ்டாலின், வேணுகோபால், அடுத்த அமர்வைச் சிறப்பிக்க போகும் தேவிபாரதி என பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது. இது ஒரு ஜாக்பாட் நிகழ்வுதான். ஜெமோ மனக்கண்ணில் வந்து வந்து போனார்.

இயக்கம், சிந்தனை, கட்சித் தொண்டர்கள் மற்றும் இவைகளை இணைக்கும் தலைமை என பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினைச் சூழ்ந்திருந்த வாசகர்களுடன் ஐக்கியமானேன். இயக்கங்களிலிருந்து தான் சிந்தனைகள்  தோன்றமுடியும். கழகங்கள் அல்லது கட்சிகள் மூலம் அச்சிந்தனைகளை தொண்டர்கள் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்பவரே சிறந்த அரசியல் தலைவராக முடியுமென்ற ஸ்டாலினின் வாதம் இவற்றைப் பற்றிய என்னுடைய புரிதல்களுக்கு ( https://muthusitharal.com/2017/11/20/கமலும்-தலைவனும்-தமிழகமும/ ) வலு சேர்ப்பதாக இருந்தது.

தேவிபாரதி – நேர்மை

மணி ஏழு இருக்கும் என்று நினைக்கிறேன் தேவிபாரதியின் அமர்வு தொடங்கியபோது. மேலை நாடுகளில் நடந்த Writers’ Residency நிகழ்வுகளில் கலந்து கொண்டதைப் பற்றிய கேள்விக்கு, அதனால் என் எழுத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்று விசிறியடித்துவிட்டார். அவ்வளவாக ஆங்கிலப்புலமை தனக்கிருந்ததில்லை என்பதை தஸ்தயேவ்ஸ்கியின் Idiot நாவலைப் படித்துவிட்டு, அதை மற்றவர்களுக்கு கதையாக சித்தரித்ததையும்; அதைக் கேட்டவர்கள் மெய்மறந்து, “கதை ரொம்ப அருமையா இருக்கு, ஆனால் Idiot கதை வேறு” என்று பகடி செய்ததையும் நேர்மையாக வெளிப்படுத்தினார்.

தன்னுடைய கதைகளில் ஏதாவது ஒரு இடத்தில் உண்மை ஒரு துளியாவது ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதை மகராஜ் கதையின் கரு உருவான விதத்தைப் பற்றி விளக்கியது, இந்திரா பார்த்தசாரதியின் கதையென்பதே உண்மையை வைத்துப் புனைவது தானே என்ற சொல்லாடலை நினைவு படுத்தியது. மகராஜ் கதை, தனக்கு கீழே வேலைபார்க்கும் ஊழியர் ஒரு அரண்மனையில் வசிக்கிறார் என்ற ஒரு உண்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு புனையப்பட்டது என்பது அவருடைய புனைவுத்திறமைக்கு ஒரு சான்று.

தன்னுடைய ஆதர்ச எழுத்தாளராக டால்ஸ்டாயை கொண்டிருக்கும் தேவிபாரதி, வாழ்க்கையின் நிலையாமையைக் கடக்க உதவும் ஒரு ஆசானாகவும் அவரைப் பார்க்கிறார். தன்னை இயக்கும் டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பெரும் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் தேவிபாரதி, அதை மற்ற எவரையும் தொடக்கூட அனுமதிப்பதில்லை என்ற ஆச்சரியத்தோடு அமர்வை முடித்தார்.

அவ்வப்போது அவருடைய வார்த்தைகள் உடைபட்டதை, அவரது நேர்மையின் குறியீடாக எடுத்துக் கொண்டேன். இரவு உணவுக்குப் பிறகு இலக்கிய வினாடி வினாவில் கலந்து கொள்ளும் விருப்பமுள்ளவர்கள் இதே அரங்கிற்கு வருகை தரலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இலக்கியப் பசி தணிந்து வயிற்றுப்பசி மேலோங்கியிருந்தது. எப்படித்தான் எரிபொருள் தீர்ந்துபோகிறதோ என்ற நினைப்போடு வயிற்றை நிரப்பிக் கொள்ள நிகழ்வுகள் நடக்கும் முதல்தளத்திலிருந்து உணவு பரிமாறப்படும் கிடைத்தளத்திற்கு விரைந்தேன்.

உணவுத்தட்டிலிருந்து, உணவு மேஜைகளின் விரிப்பு வரை மிக சிரத்தையுடன் ப்ளாஷ்டிக் பொருட்களை தவிர்த்திருந்தார்கள். வாழையிலை போர்த்தியிருந்த அந்தத் தட்டில் ஒரு வெங்காய ஊத்தப்பம், இட்லி, சில சேமியா வகையறாக்கள், அளவான நெய்யில் தளதளத்த கேசரி என வைத்திருந்த அனைத்தையும் மிச்சமில்லாமல் சாப்பிட்டிருந்தபோது, தட்டைப் போர்த்தியிருந்த இலை உணவின் சுவடேதுமற்று முன்பிருந்தது போலவே இருந்தது. தோழர்களின் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ‘அற்புதமான’ இரவுணவு. பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழினி வசந்தகுமாரிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, எதிரில் அமர்ந்திருந்த தேவிபாரதியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அறையில் சென்று சற்று சாய்ந்து அன்றைய நிகழ்வுகளை அங்கிருந்த சென்னை வட்ட நண்பர்களான மாரிராஜ், யோகேஸ்வரன் மற்றும் முரளியுடன் அசைபோட ஆரம்பித்தேன். பெரும் பணபலமும் ஆள்பலமும் நிறைந்த அமைப்புகளால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய இதுபோன்ற நிகழ்வை பிசிரில்லாமல் ஒருங்கிணைக்கும் இலக்கிய தன்னார்வலர்களை மட்டுமே கொண்டுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் நிபுணத்துவம் பொறாமைக்குரியது. இவர்களிடம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது என்றெண்ணியவாறே வினாடி வினா நிகழ்ச்சிக்காக மீ்ண்டும் அரங்கு நோக்கிச் சென்றோம்.

குவிஸ் நேரம் – இலக்கியப் பரிசோதனை

எதிர்பாராமல் கிடைக்கும் இடைவெளிகளை நிரப்பிக் கொள்வதற்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் நிகழ்வுகளில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று ஒரு முக்கிய அங்கமாக மாறிப்போயுள்ளது. சினிமா, இசை மற்றும் இலக்கியம் என அனைத்தையும் தொடர்புபடுத்தி மிக சுவாரஸ்யமான கேள்விகளை உருவாக்கியிருந்தார் ‘குவிஸ்’ செந்தில். கடினமானவையும் கூட. தமிழ் இலக்கியமட்டுமில்லாமல் இந்திய மற்றும் உலக இலக்கியத்திலிருந்தும் கேள்விகளிருந்தன.

கிட்டத்தட்ட நூறுபேர் கலந்து கொண்டனர். பதிலளிக்கும் ஒவ்வொருவருக்கும் வங்காள எழுத்தாளரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியும், இவ்விழாவின் முதன்மை சிறப்பு விருந்தினருமான அனிதா அக்னிஹோத்ரி மற்றும் ஜெமோ கையெழுத்திட்ட ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு சுற்றுகள். ஒவ்வொரு சுற்றிற்கும் 8 கேள்விகள். மேடயிலிருக்கும் புத்தகங்கள் பத்தாதென்று ஜெமோ சில புத்தகங்களை அங்கிருந்த பதிப்பகங்களிலிருந்து அள்ளி வந்தார்.

நாவலின் படிமம், கடைசிவரி, சினிமா மற்றும் இசை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி கேட்கப்பட்ட கேள்விகள் முடியும்முன்பே நிறைய கைகள் உயர்ந்தன. கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் எனக்கு ‘out of syllabus’ போல்தோன்றி சற்று நேரத்திலேயை ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி விட்டது. தமிழன் தாழ்வுணர்ச்சி கொள்வதற்கு காரணமா வேண்டும். இருந்தாலும் ‘காம்யூவின் பிளேக் நோயிலிருந்து தன் படிமத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்று ஜெமோவால் குறிப்பிடப்பட்ட நாவல் எது?’ என்ற கேள்விக்கு U. ஆனந்தமூர்ததியின் ‘சம்ஸ்காரா’ என்று கூறி ஜெமோ கையெழுத்திட்ட வேணுகோபால் அவர்களின் ‘ஆட்டம்’ நாவலை ஜெமோவிடமிருந்து பரிசாக பெற்றுக் கொண்டது ஆறுதலாக இருந்தது. “அது ஆனந்தமூரத்தி அல்ல அனந்தமூர்த்தி” என்று புன்னகையோடு என் பிழையைச் சரிசெய்தார் ஜெமோ.

அங்கிருந்த வாசகர்களின் இலக்கிய IQ அனிதா அக்னிஹோத்ரி அவர்களை மிகவும் ஆச்சரியத்திலாழ்த்தியது. அதை பெருமிதத்தோடு ரசித்துக் கொண்டிருந்த ஜெமோவின் புருவங்களையும் உயர்த்த வைத்தன சில கேள்விகளுக்கான பதில்கள். எழுத்தாளர் தன் படைப்பை வாசிக்கக்கோரும் உழைப்பை தயங்காமல் தரக்கூடிய ஆழ்ந்த வாசிப்பு கொண்ட உன்னதமான வாசகர் கூட்டமிது. இவர்களோடு நானிருந்தேன் என்ற பெருமையை அசைபோட்டுக்கொண்டே, அறைதிரும்பி உடைமாற்றி அடுத்த நாள் லீனா மணிமேகலை ஆண்கள் மேல் சொடுக்கப்போகும் சாட்டைபற்றியோ, ராஜ் கௌதமனின் பகடிப்பேச்சு பற்றியோ எந்தவித பிரக்ஞையுமற்று அசதியில் தூங்கிப்போயிருந்தேன். ஆனால் ஜெமோவுடனான அடுத்தநாள் காலை நடையை மட்டும் தவறவிட்டு விடக்கூடாது என்ற பிரக்ஞை மட்டும் தூக்கத்திலுமிருந்தது.

ஜெமோவுடன் ஒரு காலை நடை

தொடர்ச்சி

விஷ்ணுபுரம் விருது விழா 2018 -Day 1-Part 1

IMG_9210

தன் இரண்டு உள்ளங்கைகளையும் கைதட்டுவது போல் இணைத்து “எனக்கு இந்த ஆய்வும் புனைவும் இப்படித்தான் ஒட்டியிருக்கு. இப்படி இரண்டும் struck ஆகிப்போனது தான் என் கோளாறுன்னு என் வீட்டுக்காரம்மா கூட சொல்றாங்க” என்று ஒட்டிய உள்ளங்கைகளை பிரிக்க முயன்று தோற்பதுபோல் பாவனை காட்டினார் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் நாயகன் ராஜ்கௌதமன். “ஆனா..இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு…” என ஒட்டியிருந்த கைகளை பிரித்து இடதுதோளை உடம்போடு ஒட்டிக்கொண்டு, இடதுகை சுட்டுவிரலை மட்டும் உயர்த்தி, வலது தோளை சற்றுத் தாழ்த்தியது, பெரிய மேடைகளில் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான உடல்மொழி. அவரது பேச்சுமொழியும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இரண்டிற்கும் அப்படியொரு ஒத்திசைவு. இடதாகவும் வலதாகவுமற்றவர்கள் இரண்டு கெட்டான பார்க்கப்படும் சமகாலச்சூழலில்,

மார்க்ஸிய மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளோடு தன் உள்ளுணர்வையும் புனைவுத் தன்மையையும் துணைக்கு அழைக்கும் இவர்போன்ற நடுநிலையான தமிழ்பண்பாட்டு ஆய்வாளர்கள் ஒரு கலங்கரை விளக்கமே.

IMG_9344

IMG_9308

இலக்கியச் சரடில் விடுபட்ட முத்துக்களை கண்டெடுத்து கோர்ப்பதில் வல்லவர்களான, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர், ராஜ்கௌதமனை கண்டடைந்ததில் வியப்பொன்றுமில்லை. 2010ல் வெறும் தயிர்சாதத்துடன் தொடங்கிய இம்மகத்தான பணி இந்த ஒன்பதாவது வருடத்தில் 200 பேர் தங்கி 500 பேர் பங்கேற்கும் இலக்கியத்திருவிழாவாக மாறிப்போயுள்ளது. மார்க்சியர் கோவை ஞானி போன்றவர்களின் இதுபோன்ற ஆரம்ப காலத்து இலக்கியச் செயல்பாடுகளை ஒரு இயக்கமாக விரித்து முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் ஜெயமோகனை ( ஜெமோ) ஆதர்சமாகக் கொண்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த பெருங்கொடை.

IMG_9259

IMG_8217

2016ன் டிசம்பரின் இறுதிவாரத்தில் ஒருநாள் உடம்பிலுள்ள கற்களை உடைத்தெறியும் பட்டறைகள் நிறைந்த அந்த மதுரையின் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலில் எதிர்பாராதவிதமாக எழுத்தாளர் வண்ணதாசனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து ஓரிரு நாட்களாயிருந்தது அப்போது. ஜெமோவின் வாசகர் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “கோயம்புத்தூர் வந்திருந்தீங்களா?” என்பதே அவருடைய முதல்கேள்வியாக இருந்தது. அந்த வருடம் அவருக்குத்தான் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்தது. சந்தித்த ஓரிரு நிமிடங்களிலேயே அவர் கதைகள்போல் மனதில் வாஞ்சையாக ஒட்டிக்கொண்டார். நிகழ்வுக்கு போயிருந்தால் இதுபோ‌ன்ற நிறைய தருணங்கள் கிட்டியிருக்கும். அடுத்த வருடமும் இப்பெரு நிகழ்வை தவறவிட்டேன்.

இம்முறை 2 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டும் சென்னையிலிருந்து கிளம்பிய இரண்டடுக்கு குளிரூட்டிப் பெட்டியில் தரையில் படுக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. மனைவியையும், மகளையும் திண்டுக்கல்லில் விட்டுவிட்டு கோவை கிளம்பியபோது மணி காலை ஒன்பதைத் தொட்டிருந்தது. இன்னும் அரை மணிநேரத்தில் ராஜஸ்தான் சங்கத்தில் நிகழ்வுகள் தொடங்கியிருக்கும். கூகுள் வழிகாட்டியோ, அச்சங்கமிருக்கும் ஆர்.எஸ்.புரம் போய்ச் சேர்வதற்கு இன்னும் 166 கி.மீ என்று காட்டியது. அன்று காலை முழுதும் நடக்கப்போகும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களான கலைச்செல்வி, சரவணன் கார்த்திகேயன் மற்றும் சரவணன் சந்திரனின் கலந்துரையாடலை தவறவிடப்போகிறோம் என்ற எரிச்சலை ‘நினைவோ ஒரு பறவை…விரிக்கும் அதன் சிறகை…’ என்று 80களின் இளையராஜா சற்று குறைத்தார்.

IMG_7837

IMG_8207

90களில் கல்லூரி காலங்களில் கோவையிலுள்ள CIT கல்லூரியின் வருடாந்திர கலைநிகழ்ச்சியான Harmonyக்கு சென்றது நினைவடுக்களிலிருந்து மேலெழுந்து வந்தது. சில பொருளாதாரக் காரணங்களால், படிக்க வாய்ப்புக் கிடைத்தும் தவறவிட்ட கல்லூரியிது. அந்நினைவுகளை மீண்டும் கீழடுக்குக்கு அனுப்பிவிட்டு, அந்த பிப்ரவரி மாதத்திலும் ஆட்டிப்படைத்தக் குளிரில் குளிப்பதற்குக் கூட மனமில்லாமல் அக்கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் உலாவிய நினைவுகளை மட்டும் மேலடுக்கில் வைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு இப்போது தான் கோவை நோக்கிய பயணம். அந்த குளிரெல்லாம் இப்போது விட்டுப் போய்விட்டதென்று கோவை நண்பர்கள் சொல்லியும் சில குளிராடைகளை எடுத்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 3 மணிநேரப்பயணத்திற்குப் பிறகு கோவையை நெருங்கியபோது மணி 12த் தொட்டிருந்தது. சென்னையின் டிசம்பர் மாதக்குளிர்கூட அங்கில்லை. மென்வெயில் சற்றே சுட்டெரித்தது.

சில நிமிடப் பயணங்களில் தெருவுக்குத் தெரு வித்தியாசம் காண்பிக்கும் சென்னையின் பன்முகத்தன்மையின் ஒழுங்கீனங்கள் ஏதுமற்று கோவையின் தெருக்கள் எல்லாம் ஒன்றுபோலிருப்பது போலத் தோன்றியது. வண்டியின் இயந்திரம் எந்நேரத்திலும் எரிபொருள் வேண்டி கூவும் நிலையிலிருந்தது. எங்களுடைய இயந்திரமும்தான். இரண்டையும் நிரப்பிவிட்டு நிகழ்வு நடக்கும் ராஜஸ்தான் சங்கத்தை அடைந்தபோது மணி 1.30த் தொட்டுத் தாண்டியிருந்தது. காலை அமர்வுகள் அனைத்தும் முடிந்து மதிய உணவிற்காக நிகழ்வு நடக்கும் முதல்தளத்திலிருந்து ஒவ்வொருவராக கீழிறங்கி வந்து கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்த பெட்டியை எடுத்துவிட்டு சாரதிக்கும் வண்டிக்கும் விடை கொடுத்துவிட்டு, சில நிமிட ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு வித்தியாசமான அக்கட்டிடத்தின் வரைபடம் புலப்படத் தொடங்கியது. கூகுளைப் போல எல்லா இடத்திலும் வழிகாட்டுவதற்கு ஏதாவதொன்றைத் தேடும் பழக்கத்திற்கு வந்திருக்கிறோம். இப்படி அனைத்தையும் out source செய்து விட்டால் நம்முடைய உடம்பின் பாகங்கள் அனைத்தும் பயனற்று நாம் ‘மச்ச’ அவதாரத்திற்கே திரும்பி விடுவோம் போலுள்ளது. பரிணாம வளர்ச்சிக்கு சரியான எதிர்ப்பதம் என்னவென்று தெரியவில்லை. Devolution? ஆனால் அது ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதுபோல் எனக்கொரு பிரம்மையுண்டு.

IMG_8405

முகப்புப் படிகளில் ஏறியவுடனே நம்மை உள்வாங்கிக் கொள்ளும் பிரமாண்ட அரங்குகளைப் போலன்றி ஒரு நீண்ட செவ்வக வடிவிலான சுவற்றோவியம் நம்மைத் தடுத்து ஆச்சரியப்படுத்துகிறது. அதையொட்டி இடதுபுறம் மேலேறிச் செல்லும் படிக்கட்டுகள் சென்றடையும் இடைமட்டத் தளத்தில் உணவருந்தும் அறையிருந்தது. அங்கே பெட்டியோடு நின்றிருந்த எனக்கு சாகுல் தங்கும் அறைக்குச் செல்லும் வழியைக் காட்டி மீனாவிடம் என் வருகையைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். இந்நிகழ்வை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் சிலர் இவர்கள் என்று தெரிய ஆரம்பித்தது. சாகுலின் இந்தக் கரிசனம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் கல்யாண நிகழ்வை நினைவுபடுத்தியது. முத்து என்று அறிமுகம் செய்து கொண்ட என்னிடம் “லண்டன் முத்துவா? என்று வினவியவரிடம் “ இல்லை. ‘முத்துச்சிதறல்’ முத்து “ என்றேன். ஜெமோவின் வாசிப்பு தந்த அடையாளமிது.

IMG_8141

சற்றுநேரத்தில் அங்கு பரபரப்போடு வந்த ஜெமோவிடம் காலதாமதத்திற்கான காரணத்தை தயங்கித் தயங்கி சொல்லியதும் என்னைச் சாப்பிடச் சொல்லிவிட்டு மீண்டும் பரபரக்க ஆரம்பித்தார். சற்று அருகில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. உருவத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத கணீர் குரல். இப்படி பேசிப்பேசியே உடல் சிறுத்தவர் போல இருந்தார். இந்த இரண்டு நாட்களிலும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு வாசகர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. விழா நாயகன் ராஜ்கௌதமன் அவர்களின் சமகாலத் தொடர்ச்சி இவர். மிக முக்கியமான பண்பாட்டு கள ஆய்வாளர். ஜெமோவால் பெரிதும் மதிக்கப்படுபவர். இவரை மட்டுமல்ல, தீவிர களப்பணியாளர்கள் அனைவரையுமே பெரிதும் மதிப்பவர். என்னால் முடியாததை அவர்கள் செய்கிறார்கள் என்பார்.

அந்த வளாகத்தினுள்ளேயே இருந்த பக்கத்து கட்டிடத்தில் தங்கும் அறைகள் இருந்தன. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விசாலமான தனித்தனி அறைகள். மூன்றாவது தளத்திலிருந்த எனக்கான அறையை மீனாவிடம் உறுதி செய்து கொண்டு பெட்டியை அங்கு கிடத்திவிட்டு கீழிறங்கியபோது சரவணன் சந்திரனை வாசகர்கள் சூழ்ந்திருந்தார்கள். நானும் சென்னை வட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரும் வள்ளியப்பனும் அவர்களோடு சேர்ந்து கொண்டோம். தன்னுடைய ‘சுபிட்ச முருகன்’ நாவல் பற்றியும் கிட்டத்தட்ட 4000 சொற்கள் அடங்கிய தன்னுடைய முகநூல் பற்றிய பதிவுகளையும் சுவாரஷ்யமாக விளக்கிக் கொண்டிருந்தார். காலையில் நடந்த இவருடைய கலந்துரையாடல் இதைவிட சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மணி 2.30த் தொடவிருந்தது. அடுத்த நிகழ்வுக்காக அரங்கம் தயாராய் இருந்தது. ஒரு 500 பேர் வசதியாக அமரலாம். நெருக்கியடித்தால் ஒரு 600 பேர் அமரலாம். அனைவரின் மூச்சுக்காற்றையும் பரவலாக்கி விடும் வகையில் மிக உயரத்திலிருந்தது மேற்கூரை. முதன்மை நிகழ்வுகளுக்கான பெருமேடைக்கு சற்று முன்னால் ஒரு நான்கு பேர் மட்டும் அமரும் வகையில் செயற்கையாக ஒரு சிறுமேடை அமைக்கப்பட்டிருந்தது, கலந்துரையாடல்களுக்காக.

IMG_8108

IMG_7872

ஸ்டாலின் ராஜாங்கம் – காந்தியை நான் படிக்கத் தேவையில்லை

IMG_8366

நிகழ்வு ஆரம்பிக்கும்போது சரியாக மணி 2.30த் தொட்டிருந்தது. இந்த வரியை அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் எழுதவேண்டியிருக்கும். அத்தனை இராணுவ ஒழுங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் நிபுணத்துவம் ஆச்சரியமான ஒன்று. பெரும்பாலான இலக்கிய வட்டங்கள் வெறும் வட்டங்களாகவே(பூஜ்யம்) மாறிப்போவது இந்த ஒழுங்கு வளர்த்தெடுக்கும் நிபுணத்துவம் கைகூடாமல் போவதால்தான். அரங்கு முழுதும் நிரம்பியிருந்தது. அமைதியான அந்த அரங்கின் மேடையில் கடலூர் சீனுவால் அமரவைக்கப்பட்ட ஸ்டாலின் தன்னுடைய கணீர் குரலில் அயோத்திதாசர் பற்றி பேச ஆரம்பித்தார்.

IMG_8504

IMG_7960

19ம் நூற்றாண்டில் தமிழ் பண்பாடு மறுவரை செய்யப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி காலகட்டம் எனலாம். ஆனால் இந்த மறுமலர்ச்சியை பெரும்பாலும் கையிலெடுத்த பிராமண-சத்திரிய-வேளாள கூட்டணியின் குறைபாடுகளையும் திரிபுகளையும் சுட்டிக்காட்டுபவராக அயோத்திதாசர் இருந்ததை விளக்கினார். வணிகர்களுக்கான மதமான சமணம் தமிழ் மேல் கொண்டிருந்த செல்வாக்கை மறைப்பதாகத்தான் இருந்தது இம்மறுமலர்ச்சி. குறிப்பாக சமண மொழியான பிராகிருதத்தின் ‘திரி’ சைவத்தின் தனித்தமிழ் இயக்கத்தால் ‘திரு’ என மாற்றப்பட்டது. திரிகுறள், திருக்குறள் ஆனது என நூல் தொடங்கி ஊர்ப்பெயர்கள் வரை சுட்டிக்காட்டினார்.

IMG_8232

பெரும்பாலும் தலித் சமூகத்தினருக்கு எதிரியாகவே சித்தரிக்கப்படும் காந்தியைப் பற்றி நான் வாசிக்க வேண்டியதில்லை என்று ஒருவரின் கேள்விக்குப் பதிலாக அளித்தார். பெரும்பாலும் முன்முடிவுகளையும் ஊகங்களையும் தரவுகளின் அடிப்படையில் நான் உதறியிருக்கிறேன் என்ற ஸ்டாலின், அதற்கு உதாரணமாக காந்தியின் மேல் தன் சமூகம் வழியாக கொண்டிருந்த முன்முடிவுகளை எவ்வாறு கள ஆய்வில் தான் கண்கூடாக கண்ட ஹரிஜன் இயக்கதின் விளைவுகள் மாற்றின என்பதைக் கூறினார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்த முஸ்லிம்களுக்கான இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு வேண்டாம் என அம்பேத்கரின் பூனா ஒப்பந்தத்தை தோல்வியுறச் செய்திருந்தாலும், அதை ஈடுகட்டுவதற்காக அவர் ஆரம்பித்த ஹரிஜன் இயக்கத்தால் நாடெங்கிலும் தலித்துகளுக்கு கிடைத்த நன்மைகள் மிக முக்கியமானவை என தரவுகளின் வழி உணர்ந்ததால், நான் காந்தியைப் பற்றி செவிவழியோ அல்லது படித்தோ தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்றார்.

நம்பிக்கையான உடல்மொழியும், கணீர் பேச்சு மொழியும் அவருடைய கள ஆய்வுப்பணிகளிலிருந்து கிட்டியவை. இதுவே அவரை இதுபோ‌ன்ற கலந்துரையாடல்களை எதிர்கொள்வதில் எழுத்தாளர்களைவிட ஒருபடிமேல் வைக்கிறது. இதற்கு முத்தாய்ப்பாய் இதுவரை எழுதப்பட்ட தலித் வரலாறுகள் ஒன்றை நிரப்பியோ, மற்றொன்றை எதிர்த்தோதான் எழுதப்பட்டுள்ளது என்றும்; ஆனால் ஒரு முழுமையான தலித் வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்றும்; அதை எழுதும் தகுதியுள்ளவராக உங்களை மட்டும்தான் நான் சொல்வேன் என்று ஜெமோ கூறியதை நம்பிக்கையான புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட சுவாரஸ்யமான பதில்களை அளித்ததில் நொடிகளில் நிகழ்வுக்கான ஒட்டுமொத்த நேரமும் முடிந்தது போலிருந்தது. நாள் முழுவதும் பதிலளிப்பதற்குத் தேவையான ஆற்றலோடும் அறிவோடும் ஸ்டாலின் இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடுத்த அமர்வு பற்றிய பதற்றம் தொற்றிக் கொள்ள மிக முக்கியமான இந்த அமர்வு அவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வளர்ந்து வரும் எழுத்தாளரும் கவிஞருமான நரனும், தமிழ் மற்றும் மலையாள இலக்கிய வட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான சாம்ராஜ் கூட்டணியின் கவிதைக்கான அமர்வு ‘’அற்புதமாக’ தொடங்கியது. இந்த அற்புதம் என்ற வார்த்தையை வைத்து த.மு.எ.ச வை வச்சு செய்துவிட்டார் பகடிக்கு பெயர்போன சாம்ராஜ்.

IMG_8382

IMG_8393

நரன் சாம்ராஜ் – ஒரு ‘அற்புதக் கூட்டணி’


தொடர்ச்சி

டிசம்பர் கொண்டாட்டம் – Part 2

DSC_1637

https://muthusitharal.com/2018/12/15/டிசம்பர்-கொண்டாட்டம்-part-1/

மணி 12த் தொட்டுக்கொண்டிருந்தது. அந்த சதுர வடிவ அறையிலிருந்த அடர் சிவப்பு நிற இருக்கைகள் மொத்தமாக நிரம்பியிருந்தது. அறையின் கிழக்குப்பகுதியை வெண்திரையும், மையப்பகுதியை தொகுப்பாளர்களும் கணிணிகளும் எடுத்துக்கொள்ள மூன்று திசைகளிலும் ‘ப’ வடிவில் அமர்ந்திருந்த அனைவரும் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். “என்னது மறுபடியும் வர்ணாசிரமா? “ என்று திராவிடச்சிங்கங்கள் சிலர் முழங்கினர்.

DSC_1542

DSC_1552

DSC_1553

DSC_1559

வழக்கம்போல், எங்களுடைய தொழில்நுட்பப் பிரிவு வங்கிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தல உமா சுருக்கமாக முடித்துக்கொள்ள, அங்கிருந்த தொகுப்பாளர்கள் வெகு இலாவகமாக ஒட்டுமொத்த நிகழ்வையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். மாலையின் மயக்கத்தில் கடற்கரைக்குச் செல்லவேண்டாமென்று அக்கறையோடு உமா எங்களை கேட்டுக்கொண்டது, எப்படியோ பக்கத்து கட்டிடத்திலிருந்த ‘மருதமலை மாமுனிக்கு…’ கேட்டிருக்கும்போல. மாலையின் மயக்கத்தை ‘’ஏறுமலையேறு…ஈசனுடன் சேரு..” என்று முருகையா கலைக்கப்போகிறார் என்பது தெரியாமல் நிகழ்வுகளில் மூழ்க ஆரம்பித்தோம்.

DSC_1569

அடுத்த இருமணி நேரங்களுக்கு அங்கிருத்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்பிடியில் எடுத்துக் கொண்ட அந்த இரு தொகுப்பாளர்களின் நிபுணத்துவமும் எங்களை வாய்பிளக்கச் செய்தன.

எல்விஸ் மிக நிதானமாக தன் இறுக்கமான உடல் மொழியாலும், நேர்த்தியான ஆங்கில உச்சரிப்பாலும் அனைவரையும் ஈர்க்க ஆரம்பித்தார் என்றால், லக்ஸயா ஆராவார வகை. அருவி மாதிரி தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி, மாறி படபடவென கொட்டிக்கொண்டேயிருந்தார். அக்குரலிருந்த துள்ளலும் எள்ளலும், உடல்மொழியில் இருந்த சீண்டலும் எளிதாக அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அவருக்கு தலையசைக்க வைத்தது. இவ்விருவருமே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். தன்னுடைய பொழுதுபோக்கையும் ஒரு தீவிர செயல்பாடாக மாற்றிக் கொண்டவர்களால் மட்டுமே, அதற்குரிய நிபுணத்துவத்தைப் பெறமுடியும் என்பதற்கு இவ்விரு தொகுப்பாளர்களும் ஒரு உதாரணம்.

DSC_1554

DSC_1557

10 பேர் இருக்கும் ஒரு அணியிலேயே 20 வாட்ஸ்அப் குழுக்கள் முளைக்கும் சமகாலச்சூழலில், அனைவரையும் கலையாமல் ஒரே இடத்தில் தக்கவைப்பது மிகச் சிரமமான காரியம். ஆனால் , தங்கள் கைவசம் இருந்த சுவாரஸ்யமான விளையாட்டுக்களால் இரு தொகுப்பாளர்களும் அங்கிருந்தவர்களின் எல்லைகளை கரைத்து ஒன்றாக்க முடிந்தது. ஆரம்பத்திலேயே தடாலடியாக ஒவ்வொரு வர்ணத்தின் தலைவருக்கும் ‘ஆள் கடத்தும்’ பொறுப்பு கொடுக்கப்பட்டது. அனைத்து வர்ணங்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து பரபரப்பாகினர்.

DSC_1576

அறைமுழுதும் ஆராவாரமும் கூச்சலுமாக ஒவ்வொரு அணியினரும் தரையில் நீண்ட வரிசையில் அமர்ந்தனர். தரையில் இப்படி சம்மணமிட்டு உட்கார்ந்து வெகு நாட்களாகியிருக்கலாம் சிலருக்கு. வரிசையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அண்ணாந்து படுத்தவாக்கில் இருக்கும் ஒருவரை கடத்தும் இந்த விளையாட்டை ‘Passing the Person ‘ என்றார்கள். முதலில் கொஞ்சம் பயம் எழுந்தாலும், கடத்தப்படவேண்டியவர் காற்றைவிட எடை குறைவாக இருந்ததாலும், நானிருந்த காவி வர்ண அணியின் தல ஜெரோம் எங்களை உற்சாகப்படுத்துகிறேன் என்ற பேரில் ஏத்திவிட்டதாலும் பயம் குறைந்தது. பல்லக்கில் பயணிப்பதுபோல அசைந்து மிதவேகத்தில் கடத்தப்பட்டார் அந்த காற்றின் மைந்தன். இப்படி ஒவ்வொரு அணியினரும் ஒருத்தரை கடத்தி முடிக்க, எந்த வர்ணத்தின் ஆள் முதலில் கடத்தப்பட்டார் என்பதில் இருந்த குழப்பத்தால் அறை முழுதும் அலறியது, ‘ஜாக்சன்…ஜாக்சன்..’என்று ஒருபக்கமாகவும்; ‘விஜய்..விஜய்…’ என்று ஒருபக்கமாகவும்.

DSC_1591

DSC_1590

DSC_1599

DSC_1600

சிறிது நேரத்தில் குழப்பம் வடிந்து அறை தன் அமைதிக்கு மீண்டது. ஆனால் அனைவரின், மனதிலிருந்த உற்சாகமும் தற்போதைக்கு வடிவதாக தெரியவில்லை. நிரம்பி முகத்தில் புன்னகையாக நுரைத்துக் கொண்டேதான் இருந்தது. அடுத்து, வேடிக்கையான சில நடன அசைவுகளைக் கொண்ட காணொளிக்கு (Video) தோதாக ஆடமுயன்று தோற்றனர் ஒவ்வொரு வர்ணத்தினரும். வயிற்றில் மணியடிக்க ஆரம்பித்தது. மணியும் சற்று நேரத்தில் 2த் தொட இருந்தது. சாப்பாட்டிற்கான அழைப்பும் வந்தது. அறையிலிருந்து வெளியேறி மீண்டும் தரைதளத்தை அடைந்தோம்.

DSC_1611

DSC_1613

சில ரொட்டிகளை, கோழிக் குழம்பில் நனைத்து மென்று விழுங்கிக் கொண்டே, அங்கிருந்தவர்களிடம் சற்றுபேசி விட்டு வெளியே வந்தபோது சற்றே வெம்மையாக இருந்தாலும், முகத்தில் வருடிய வெளிக்காற்று அப்போதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. கால்கள் தன்னையும் அறியாமல் கடற்கரை நோக்கி தள்ள ஆரம்பித்தது. உண்ட களைப்பா, அறையில் அலறிய களைப்பா என்பதறியாத ஒரு மோனத்தில் உடலும் மனமும் இ்ருந்தது.

நமக்குள்ளிருக்கும் நாமறியாத விஷயங்களை பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இதுபோன்ற கூட்டுச் செயல்பாடுகளும் ஒருவகையான தியானம்தான் என்று எண்ணத்தோன்றியது. நவீனம் என்ற பெயரில் நாம் தொலைத்த பாரம்பரியமான திருவிழாக்கள் நினைவுக்கு வந்துபோயின.

கடற்கரையிலிருந்து திரும்பி மீண்டும் நடந்த ஆர்பாட்டங்கள், நடனங்கள்,பரந்து விரிந்த அப்புல்தரையில் நடந்த ஏமாற்றங்கள்,அதைத்தாண்டியும் 80களின் இளையராஜாவை வைத்துக்கொண்டு நாங்கள் நடத்திய கொண்டாட்டங்கள் என எல்லாவற்றையும் இன்னொரு பகுதியில் எழதவே மனம் எண்ணுகிறது.

ஆட்டம் தொடரும்….

டிசம்பர் கொண்டாட்டம் – Part 1

DSC_1832

“I need a queen from this Group to Play the Game called ‘Queen of Sheeba’…” என புன்னகைத்துக் கொண்டே தொகுப்பாளர் அந்த அறையில் கூடியிருந்தவர்களை சுற்றுமுற்றும் நோக்க, இயல்பாகவே அங்கிருந்த பெண்களின் கைகள் தங்கள் கூந்தலை கோத ஆரம்பித்திருந்தது, எங்கே தன்னை அழைத்து விடுவார்களோ என்ற மெல்லிய பதற்றத்தோடு. அங்கிருந்த ராணிகளின் முகத்தில் சிறு கீற்றாக தோன்ற ஆரம்பித்த வெட்கப் புன்னகை, “All women are Queens only” என்ற அங்கிருந்த கிருஷ்ணரின் வார்த்தைகளில், கண நேரத்தில் வெடித்துச்சிதறி பரவி அறைமுழுதும் நிறைந்தது.

DSC_1557

அங்கிருந்த பசுமையை ஊடறத்து (இரண்டாக வெட்டி) செல்லும் சாலையில் எங்களை ஏந்திச்சென்று கொண்டிருந்தது ‘Ellamman’ஐ (அதாங்க எல்லையம்மன்) துணையாக கொண்ட டெம்போ ஊர்தி. அவசரத்தில் ‘i’ஐ விட்டிருக்கிறார்கள். ஓட்டுநரும் ‘நான்’ஐத் துறந்த ஐயப்பசாமி போலதான் இருந்தார். சென்னையின் எஞ்சியிருக்கும் பசுமை எப்போதுமே கிளர்ச்சியூட்டுவது. வெகுநாட்களுக்குப் பிறகு பசுமை நிறைந்த வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் வார இறுதியில் ஒரு பயணம். மேற்சொன்ன அழகிய தருணங்களை உள்ளடக்கிய அலுவலகத்தின் ஆண்டு இறுதி கொண்டாட்டத்திற்காக.

டிசம்பர் மாத சென்னைமேல் காதல் கொள்ளாத சென்னைவாசிகளே இருக்கமுடியாது. வெள்ளம் மற்றும் வர்தா புயலால் கொஞ்சம் பயம் கூடியிருந்தாலும், காதல் இன்னும் குறையவில்லை. இசை, மழை, குளிர், அடர்தாடி முகங்கள் (ஐயப்பன் சீசன்) போன்றவற்றுடன் இதுபோன்ற அலுவலகம் சார்ந்த ஆண்டு இறுதி கொண்டாட்டங்களும் டிசம்பரின் பன்முகங்களில் ஒன்றாகிப் போயிருக்கிறது.

காங்கிரீட் சுவர்கள் அமைத்த செயற்கை எல்லைகளை மீறி வளரத்துடிக்கும் புரட்சி மரங்களை அச்சாலை முழுதும் காணமுடிந்தது. அங்கிருந்த பசுமையில் நனைந்து போயிருந்த கண்கள், திடீரென உலர ஆரம்பித்ததை உணர்ந்த போது, டெம்போ கேளம்பாக்கம் தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பசுமைக்கு வழியில்லாத உப்பு நிலங்கள் இருபுறமும் காங்கிரீட் வனங்களாக மாறிபோயிருந்தது. அந்நிலங்களில் எஞ்சியிருக்கும் உப்புத்தன்மையை, முகத்திலறைந்த வெம்மையான காற்று உணர்த்தியது. மணி 11ஐத் தொட்டிருந்நது. அலுவலகத்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணிநேரமாயிருந்தது. உள்ளிருந்த இருபது பேரும் தங்களுடைய கைப்பேசியின் தொடுதிரையில் மூழ்கிப் போயிருந்தார்கள். பக்ஷிராஜன் நினைவுக்கு வந்து பயமுறுத்தினார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சொல்வளர்காடு’ எனும் நாவலில் வரும் சாந்தீபனக் காட்டில், கிருஷ்ணரால் வளர்த்தெடுக்கப்பட்ட சாந்த்யோக் உபநிடதத்தைப் பற்றிய என்னுடைய உரையின் காணொளியைக் ஏற்கனவே கேட்டிருந்த ஶ்ரீராமும் “என்ன முத்து, அடுத்த இலக்கியச் சொற்பொழிவுக்கு ரெடியாய்ட்டிங்க போல” என்று கலாய்த்துக் கொண்டே அயர்ச்சியில் தூங்கிப்போயிருந்தார். செய்வதறியாமல் மீண்டும் கண்களை சன்னல் வழி வீசியபோது உத்தண்டி கோயிலிலுள்ள குளத்தில் ஒருவரை திருமண பாக்கியம் வேண்டி மூழ்கடித்துக் கொண்டிருந்த காட்சி சிக்கியது. கல்யாணத்திற்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதை குறிப்புணர்த்துவது போலிருந்தது அக்காட்சி.

கிழக்கு கடற்கரை சாலையின் மிக முக்கிய அடையாளமான MGM விடுதியைத் தாண்டியிருந்தது டெம்போ. மணியும் 11.30த் தாண்டியிருந்தது. சற்று நேரத்தில், சாலையின் இடதுபுற ஓரம்வரை நெருக்கியடித்து பிரமாண்டமாய் கட்டப்பட்டிருந்த Landmark Pallava எனும் விடுதியின் நுழைவாயில் எங்கள் டெம்போவை உள்வாங்கிக் கொண்டது. முற்றிலும் வெள்ளை நிறக் கட்டிடங்களால் நிரப்பட்டிருந்த அந்நிலப்பரப்பில் சில்லென்ற காற்றையள்ளி வீசும் கடற்கரை எங்கிருக்குமோ என்று மனம் பதறினாலும், தொண்டையை நனைத்துக் கொள்ள நாக்கிற்கு தண்ணீர்தான் தேவைப்பட்டது. வழக்கமான டிசம்பரின் மென்மையை இழந்து சற்றே சுட்டெரித்தது வெயில்.

தரைதளத்தில் வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டுமாய் நிறைய விடலைப் பையன்கள் நின்றிருந்தார்கள், அவ்விடுதியின் சிப்பந்திகளாக. அவர்கள் கண்களிலிருந்த மிரட்சியும், முகத்திலிருந்த வெட்கமும் எனது முதல் நிறுவனத்தின் முதல் வேலைநாளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்தது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பரிட்சயமாகாத இவர்கள், இங்கு புற்றீசல்போல பெருகிவிட்ட விருந்தோம்பல்(Hospitality) சார்ந்த தொழில்துறைகளில் பணியாற்றுவதற்கு தேவையான மனிதவளத்தை உருவாக்கும் கல்லூரிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கலாம்.

வழக்கமான ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு நிகழ்வுக்கான முதல் தளத்தை அடைந்து அங்கிருந்த லஷ்மி மற்றும் ஶ்ரீராமிடம் வருகையைப் பதிந்து விட்டு அறையில் நுழைந்தவுடன் பருகத் தரப்பட்ட திராட்சைப்பழச்சாறு இதமாக தொண்டையை நனைத்து ‘திராட்சை பழம்போலே…’ என்ற ‘சொர்க்கம் மதுவிலே….’ பாடலின் வரிகளை நினைவுக்கு கொண்டுவந்து ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கூடவே மென் ரொட்டிகளுக்கிடையே வைத்து தரப்பட்ட பச்சைக் காய்கறிகள் (அதாங்க சேண்ட்விச்) அங்கு நடைபெறப்போகும் நிகழ்வுகளுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு போதுமானதாக இருந்தது.

அடுத்த இருமணி நேரங்களுக்கு அங்கிருத்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்பிடியில் எடுத்துக் கொண்ட அந்த இரு தொகுப்பாளர்களின் நிபுணத்துவமும் நம்மை வாய்பிளக்கச் செய்பவை…

The Game….To be continued… .

தொடர்ச்சி…

https://muthusitharal.com/2018/12/19/டிசம்பர்-கொண்டாட்டம்-part-2/