ஒரு சிறுகதையும் வாசிப்பும்

unnamed (2)

வாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது? காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா? இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா? இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா?. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கிறது எனலாம்.

 

இந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப் பொறுத்து அம்பியாகவோ ரெமோவாகவோ அந்நியனாகவோ உருமாறும் சாத்தியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் எழுத்தையே பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.

 

அப்படியான ஒரு சிறுகதையை எழுத்தாளர் ஜெயமோகனின்(ஜெமோ) தளத்தில் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு கோப்பை காப்பி’ என. புத்துணர்ச்சி தரும் காபி தான்.  பருகி சில நாட்கள் கழிந்தும் இப்பதிவை எழுதத் தூண்டும் அளவிற்கு நாவில் இன்னும் அந்தச்சுவை ஒட்டிக்கொண்டிருக்கிறது.

 

கதை

http://www.jeyamohan.in/104669#.WmSt1YFX7R4

 

இக்கதையைப் படித்து முடித்தவுடன் மனதில் பெரிதாகச் சலனம் ஒன்றுமில்லை தான். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் கதையின் நாயகன் தன் முதல் மனைவியிடம் தனக்கேற்பட்டிருக்கும் மனச்சிக்கலுக்கான தீர்வு கோரி நிற்கிறான். வாசித்த முதல் சில வரிகளிலேயே யூகித்தது போல் கதையின் களம் அமெரிக்காவில் தான்.  நாயகன் ஒரு இந்தியன்; நாயகி அமெரிக்கியான அவனுடைய முதல் மனைவி.

 

ஜெமோவின் பெரும்பாலான கதைகள் உடனடியாக எந்தச் சலனத்தையும் நம்முள் ஏற்படுத்துவதில்லை( என்னைப் பொறுத்தவரை). விழுங்கிய மாத்திரை சற்று நேரத்திற்குப் பிறகு வேலை செய்வது போல் கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து ஆச்சரியமூட்டும். அதிலும் மற்ற வாசகர்களுடைய அக்கதை பற்றிய அவதானிப்புகளை அவர்கள் எழுதிய கடிதங்கள் வாயிலாக வாசிக்கும் போது அந்த ஆச்சரியம் பன்மடங்காகும்.

 

கடிதங்கள்

http://www.jeyamohan.in/105339#.WmVOOYFX7R4

 

http://www.jeyamohan.in/105351#.WmVPmYFX7R4

 

http://www.jeyamohan.in/105361#.WmVQH4FX7R4

 

http://www.jeyamohan.in/105592#.WmVS4YFX7R4 (இதிலுள்ள இரண்டாவது கடிதம் நான் எழுதியது)

 

ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த நாலு பக்க சிறுகதை விரித்தெடுத்த சாத்தியங்கள் பிரமிப்பூட்டுபவை.

Advertisements

ஸ்கெட்ச் – ஒரு மெனக்கெடல்

images (14)

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

விக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை  திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல.

நான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே  வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத இயக்குனர்களிடம் தன்னை ஒப்புவித்து கொள்கிறாரோ இந்த அசாத்தியமான கலைஞன் என்றும் எண்ணத் தோன்றுகிறது. படம் நெடுகிலும் விக்ரமின் ஆடைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வேறெதற்குமில்லை. தமன்னாவின் உடைகளுக்குக் கூட. அந்த அடர் பச்சை நிற கைலியும், அடிக்கடி மாற்றப்படும் கட்டம் போட்ட சட்டைகளும், நம் இருக்கையை விட்டு எழுந்து வெளியே செல்ல வைக்கும் பாடல் காட்சிகளில் வரும் விடுமுறைகால தொல தொல பேண்ட்டுகளும் ஆண்களின் ஃபேஷன் உலகில் சில மாற்றங்களை கொண்டு வரலாம்.

 

கதைக்கு வரவே முடியவில்லை. பூதக்கண் ணாடி கொண்டு தான் தேடவேண்டும். வழக்கம் போல் வடசென்னை என்றாலே சேட்டு, வட்டிக்கடை,காட்சியில் வரும் அனைவரும் குடித்துக் கொண்டே இருப்பது என அயர்ச்சி அளிக்கும் காட்சியமைப்புகள். கிட்டத்தட்ட டாஸ்மாக் மற்றும் சிகரெட் விளம்பரம் போலத்தான் இருந்தது ஒட்டுமொத்தப் படமும்.

 

கடனுக்கு தவணை கட்ட தவறுபவர்களின் வண்டியை பறிமுதல் செய்து சேட்டிடம் ஒப்படைக்கும் வேலை விக்ரம்&Co விற்கு. ஒரு தாதாவின் வண்டியைத் தூக்கி சிக்கலில் மாட்டி தன் குடிகார நண்பர்களை ஓவ்வொருவராக இழக்கிறார். கடைசியில் அக்கொலைகளை செய்தவர்களை கண்டு அதிர்ந்து போகிறார். கிட்டத்தட்ட நாமும் தான். அதுவரை பல்லைக் கட்டிக் கொண்டும், முடியவே முடியாத தருணங்களில் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்ததிற்கும்  கிடைத்த ஒரு கடுகளவு ஆறுதல்.

 

குழந்தைத் தொழிலாளர்களை மையப்படுத்தி அசத்தியிருக்க வேண்டிய கதை. இயக்குனரின் அசிரத்தையால் வாலிழந்த பட்டமாய் காற்றில் இலக்கின்றி மிதந்து படம் பார்ப்பவர்களை பொறுமையிழக்கச் செய்து விடுகிறது.

 

விக்ரம் தன் இளமையையோ நடிப்புத்திறமையையோ நிரூபிக்க வேண்டிய நிலைமையிலில்லை தான். ஆனால் தமிழ் சினிமா அறம் அருவி என படுவேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. அவரது ரசிகர்களும் கூடத்தான்.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நாள்

images (6)

சமீபத்தில் என் ஆதர்ச எழுத்தாளர் ஜெமோ (ஜெயமோகன்) சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தபோது அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அச்சந்திப்பு பற்றி அவருக்கெழுதிய கடிதம் இது.

ஜெமோ,

மீண்டுமொரு படபடப்பு தொற்றிக் கொண்டது.  இரண்டாவது முறையாக உங்களை நேரில் சந்திக்கப்போவதை நினைத்து. முதல் தடவை குமரகுருபனின் நினைவு விருது விழாவில். இப்போது உங்கள் ஓவிய (ஓவியமான அல்ல) நண்பர் சீனிவாச நடராஐனின் ‘அச்சப்பட தேவையில்லை’ நூல் வெளியீட்டு விழாவில். ஆனால் முதல்தடவை போல் எனது சொற்களை என் உலர்ந்து ஒட்டிய உதடுகளும் நாவுகளும் சிறை பிடிக்காது என்ற நம்பிக்கை இருந்தது.

 

அன்று அப்பாவின் திதி என்பதால், வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியிருந்தது. ஞாயிற்று கிழமைகளில் காலை 6.30 மணி என்பது எனக்கு நடுஜாமமே. ஒரு பெரிய கட்டைப் பையில் அரிசி, வாழைக்காய், எள், பூசணி, வாழையிலை மற்றும் இதர பொருட்களுடன், ‘நிலைப்பதும் கலைப்பதும்’ (விகடன் தடத்தில் வரும் நத்தையின் பாதை தொடர்) பற்றி என்ன எழுதுவதென்று யோசித்தவாறே வீட்டின் அருகிலுள்ள கோயிலுக்குள் நுழைந்தேன். வீர நாராயண பெருமாளுக்கு பூஜை செய்யும் ரவி குருக்கள் கொஞ்சம் இணக்கமானவர் என்பதால் நேரில் அவரிடம் சென்றேன். மார்கழி மாதமென்பதால் 8 மணிக்கெல்லாம் களைத்திருந்தார். 15 நிமிடத்தில் எனக்கும் சேர்த்து அவரே மந்திரங்கள் சொல்லி கொண்டு சென்ற பொருட்களை தானமாகப் பெற்றுக் கொண்டார்.

 

திரும்பி வந்து வீடு சேரும்போது, கைப்பேசி சிமிட்டிக் கொண்டிருந்தது. தொடு திரையை விலக்கி வாட்ஸ் அப்பில் நுழைந்த போது, “ஜெவை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் இன்று காலை 11 மணிக்கு சந்திக்கலாம்” என்றிருந்தார் காளிபிரசாத். உங்களோடு தனியாக சந்திக்கக் கிடைத்த முதல் வாய்ப்பு.கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் வாய் உலர்ந்து ஒட்ட ஆரம்பித்தது. மணி ஏற்கனவே 10.30. பேருந்து ஓட்டுனர்களின் வேலைநிறுத்தத்தால் மெட்ரோ ரயில்கள் நிறைந்து வழிவதாக செய்தி வேறு.  சூழலியலுக்கு இணக்கமான முறையில் பயணித்தால் கண்டிப்பாக 11 மணிக்குள் சின்னமலையிலிருந்து வடபழனியைச் சென்றடைய முடியாது. வழக்கமான ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு, மனைவியிடம்  2மணிக்குள் காகத்திற்கு சோறளிக்க வந்து விடுவேன் என்ற உறுதி அளித்து விட்டு சௌந்தர் குருஜியின் வீட்டை அடைந்தபோது மணி சற்றே பதினொன்றை தாண்டியிருந்தது. நல்லவேளையாக நீங்கள் இன்னும் வந்திருக்கவில்லை.

 

ராகவும், விலங்கியல் மருத்துவர் தங்கபாண்டியனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். தங்கபாண்டியனின் முகத்தில் இருந்த தீவிரத்தை நான் அப்போது உணரவில்லை. கலந்துரையாடலின் போது, வெண்முரசுக்கு விலங்கியல் முரசு என்று அவர் பெயர் வைக்க முனைந்தபோது தான் அதை உணர்ந்தேன்.

 

சிறிது நேரத்தில் வழக்கம் போல் ஒரு சிறு படை சூழ (மாரிராஜ்,யோகேஸ்வரன் மற்றும் சிலர் உட்பட)வந்தீர்கள். கச்சேரி ஆரம்பம். நான் இலகுவாகியிருந்தேன். ஆதலால் அனைவரும் இலகுவாயிருந்தது போல் தோன்றியது. குதிரையேற்றம் தெரிந்த அல்லது குதிரைகளிடம் பழகிய ஒருவரால் தான் வெண்முரசில் வருவது போல் குதிரைகளின் உடல்மொழியையும் உணர்வுகளையும்  சித்தரிக்க முடியும் என தங்கபாண்டியன் ஆரம்பித்த போது தான் அவர் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன். அதற்கு நீங்கள் அளித்த சுவராஸ்யமான பதில்கள் குதிரை ரேஸ், அவற்றின் உடலமைப்பு என நீண்டது. விஷ்ணுபுரத்தில் வரும் அஸ்வ சாஸ்திர மேதையான வீரநாராயணர் நினைவுக்கு வந்தார்.

IMG-20180107-WA0003

மனிதர்களுடன் கூடவே இருக்கும் விலங்குகள் அவர்களின் உள்ளுணர்வை மிக துல்லியமாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி, அதைத்தான் வெண்முரசிலும் சித்தரிக்கிறேன் என்றீர்கள். இதற்கு உதாரணமாக உங்கள் டோராவின் செய்கைகளை செய்து காண்பித்தது, அங்கிருந்த அனைவரையும் வெகுநேர சிரிப்பில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக வாயைக்கோணி நாக்கை வெளியே நீட்டியது டோராவே வெட்கப்பட்டிருக்கும். எனது 10 வயது மகளையும் அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது.

 

அடுத்த அதிரடியாக இங்கு ஆளாத பரம்பரையென்று ஏதுமில்லையென சாதி என்ற சூடான தலைப்பை நோக்கி உரையாடல் நகர்ந்தது. ஒவ்வொரு சாதியிலும் ஒரு கால கட்டத்தில் ஒரு மன்னன் இருந்திருக்கிறான் என்று அனைத்து சாதி தலைவர்களின் வயிற்றிலடித்தீர்கள். அந்த காலத்தில் குலக்கலப்பு ஏற்பட்ட விதங்களை விலக்கிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது. அதிலும் தங்களை சாதுவாக காட்டி கொள்ள விரும்புவர்கள் தங்கள் சாதிக்குப்பின்னால் ‘பிள்ளை’ என சேர்த்துக் கொண்டதை ‘பிள்ளைகள் எப்போதும் எடுப்பார் கைப்பிள்ளை’ என்றதும் ஒரு குபீர் சிரிப்பு அறை முழுவதும். தங்களுடைய ‘இந்திய ஞானம்’ புத்தகத்தில்  படித்த  பல விஷயங்கள் நினைவுக்கு வந்து சென்றது. அப்போது மிக சகஜமாக இருந்த குலக்கலப்பை பேரரசுகள் தடுத்தி நிறுத்தி தங்கள் ராஜ்ஜியத்தை நிலை நாட்டிக் கொண்டது. இதையேத்தான் பிரிட்டஷாரும் பினபற்றி தங்களை நிலைநாட்டிக் கொண்டார்கள். இன்றுவரை இது தொடர்கிறது. நிலைநிறுத்தப்பட்ட சாதி என்பது நாடாள்பவர்களின் சூழ்ச்சி என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது.

IMG-20180107-WA0002

நேரம் செல்லச் செல்ல சௌந்தரும், காளிபிரசாத்தும் பரபரப்பாக ஆரம்பித்தார்கள். மதிய உணவு அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்கள். வந்தாரை சோற்றால் அடிப்பதே அவர்கள் இயல்பு.

 

கொஞ்சம் சீரியஸாக தலைப்பு மலேசியத் தமிழர்கள் பக்கம் திரும்பியது. அங்குள்ள  சிலரின் இக்கட்டான் நிலைமை. அவர்களின் குற்றப்பின்புலம் என. அதிலும் சில கொலைகள் புரிந்து இன்று சமையலைத் தொழிலாளாக ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த இளைஞன் இனிமேல் கொலை எதுவும் செய்வாயா? என்ற கேள்விக்கு அளித்த அந்த பதில், அங்குள்ள அனைவருக்கும் அவர்களின் தாயை நினைவு படுத்தியிருக்கக் கூடும்.

“சமைச்சு போட்டுட்டேன்ல சார். இந்த கைய வச்சு இனிமே கொலை பண்ண முடியாது.” மிக நெகிழ்வான தருணம்.

 

மதிய உணவும் தயாராகி விட்டது. பாக்கெட்டுகளில் இருந்த சாம்பாரை பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்த காளியிடம் காக்கைக்கு நான் சோறளிக்க வேண்டியிருப்பதை சங்கடத்தோடு சொல்லிவிட்டு விடை பெற்றேன், மாலையில் சூறாவளியாய் தாக்கப் போகிற உங்கள் உரை பற்றி அறியாமல்.

 

தமிழிலுள்ள இசை மற்றும் ஓவிய விமரிசன நூல்களின் போதாமையில் தொடங்கி, ஐரோப்பிய மறுமலர்ச்சியை நம் கலையில் காப்பியடிப்பதின் முட்டாள்த்தனம்; பகுத்தறிவென்றாலே கலைக்கெதிரானதாக இருக்கவேண்டும் என்ற போலி அறிவுஜீவிகளைச் சாடியது என நீண்ட அந்த பிரமாண்ட உரையை இக்கடிதத்திற்குள் நான் அடக்கிவிட விரும்பவில்லை. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவரையும் ஆட்கொண்டிருந்தது அந்த உரை.

IMG-20180107-WA0009

உரை முடிந்து உங்களிடம் விடை பெற்றுச் செல்லலாம் என்று நெருங்கினேன். ம்ஹூம்…முடியவில்லை. உங்களைச் சுற்றி மொய்த்திருந்தார்கள். ரசிகர்களா…வாசகர்களா என்று தெரியவில்லை. பெரும்பாலும் இளையவர்களே. ஒருவழியாக அங்கிருந்து உங்களால் நகரமுடிந்தது.

 

எந்தவித பாவனையுமில்லாமல் என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள். இதற்கு முன்னால் ஒருதடவை தான் உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன். மிக பிரமிப்பாக இருந்தது. அடுத்தமுறை உங்களை சந்திக்கும் வரை இந்த பிரமிப்பு நீடிக்கும் என்றே எண்ணுகிறேன்.

 

அன்புடன்

முத்து

2018 – பயணங்களும் இலக்குகளும்

images (13)

“எதுக்கு வேணாலும் தரகர் வச்சுக்கலாம்டா…ஆனா…காதலுக்கு மட்டும் கூடவே கூடாது மாப்ள….” கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மின்சாரகனவை பார்த்தபோது கிடைத்த ஞானம். ஆனால் சமீபத்தில் மீண்டும் பார்த்தபோது கிடைத்த ஞானமே வேறு. இருக்காதா பின்ன…எலக்கியம்லாம் இப்ப நிறைய படிக்கிறோம்ல..

 

கடவுளைத் தேடிய பயணத்தில் கஜோல் கண்டடைந்தது தன் காதலை. காதலைத் தேடிய பயணத்தில் அரவிந்த்சாமி கண்டடைந்தது கடவுளை.

 

ஹெகல் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளையும்; புத்தர், ஆதி சங்கரர் போன்ற கீழை நாட்டு தத்துவ ஞானிகளையும் கேட்டால் கடவுள், காதல் எல்லாம் ஒன்றின் வெவ்வேறு வடிவங்கள் என்பார்கள். ஆனால், இப்பதிவு இதைப்பற்றியதல்ல.

images (12)

எது முக்கியம்? பயணமா அல்லது பயணிக்கத் தூண்டும் இலக்குகளா? இலக்குகளை அடைந்து திரும்பிப் பார்க்கையில் கிடைக்கும் பயண அனுபவங்களே இலக்குகளை  கொண்டாட வைக்கின்றன; தேவைப்பட்டால் இலக்குகளையும் மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள உதவுகின்றன.

 

வரலாற்று நெடுக இதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன, கடந்த வருடம் தமிழகம் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான போராட்டப் பயணம் உட்பட.  தனிமனித இலக்குகளுக்கும் இது பொருந்தும்.

 

இலக்குகள் முக்கியமாக இருந்தாலும், அதற்கான பயணங்கள் மிக முக்கியமானவை.

 

2018லும் உங்கள் இலக்கை நோக்கிய பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.