கிரிக்கெட் வர்ணனை

download (1)

“நீண்ட தப்படிகள் ஓடிவந்து அதிவேகத்தில் நல்ல அளவில் வீசப்பட்ட பந்து. அதை பின்னால் சென்று தடுத்தாடினார் மட்டையாளர். பந்தை பந்துவீச்சாளரே தடுத்தெடுக்க ஓட்டத்திற்கான வாய்ப்பெதுவுமில்லை. அணியின் எண்ணிக்கையில் மாற்றமேதுமில்லை. 2 விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள். மீண்டும் பட்டாபிராம் முனையிலிருந்து கோர்ட்னி வால்ஸ், சுனில் கவாஸ்கரை நோக்கி…” ஒவ்வொரு நொடியும் நம்மை பந்தோடே பயணிக்க வைக்கும் கிரிக்கெட் பற்றிய வானொலி வர்ணனை இது.

தொலைக்காட்சிப் பெட்டிகள் பிரபலமாகாத காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் உற்ற தோழன் இந்த வானொலி வர்ணனையே. தொலைக்காட்சி வந்த பின்பும் கூட கத்துக் குட்டிகளின் வர்ணனையால், தொலைக்காட்சி ஊமையாக்கப்பட்டு சுவாரஸ்யமான வானொலி வல்லுநர்களின் வர்ணனைகளே கேட்கப்பட்டன. ஆனால் தொலைக்காட்சிக்கென்றே ஒரு பிரத்யேகமான வர்ணனை தேவைப்பட்டதை நாள் செல்லச் செல்ல உணர ஆரம்பித்தனர்.

“நீண்ட தப்படிகள் ஓடிவந்து சார்ட் மிட் ஆன் தடுப்பாளரைக் கடந்து நடுவருக்கு அருகில் வந்து திடீரென பக்கவாட்டில் விலகி எம்பிக்குதித்து அதி வேகத்தில் வீசுகிறார். கண் இமைக்கும் நேரத்தில் மறுமுனையை அடைந்த அந்த பந்தை, தன் இடது காலை முன்வைத்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் தட்டி அங்கிருந்த தடுப்பாளர் தடுத்தெடுக்கும் முன் ஒரு ஓட்டத்தை தன் கணக்கிலும் அணியின் கணக்கிலும் சேர்த்துக் கொள்கிறார் மட்டையாளர்”. இப்படி வானொலி போல ஒவ்வொரு கணமும் களத்தில் நடப்பதை விவரிக்க வேண்டிய அவசியத்தை இல்லாமலாக்கி விட்டது தொலைக்காட்சி. நாடகத்திற்கான உடல் மொழி, சினிமாவிற்கு உதவாதது போல தொலைக்காட்சிக்கென தனி வர்ணனை முறை தேவைப்பட்டது.

வர்ணனையாளர்கள் கிரிக்கெட் வல்லுநர்களாகவும், ஒரே சமயத்தில் பல தகவல்களை கையாளத் தெரிந்தவர்களாகவும், நல்ல மொழியறிவு கொண்டவர்களாகவும் மற்றும் கொஞ்சம் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் பரிணமித்தார்கள். மிக முக்கியமாக வர்ணனையாளரின் நல்ல குரல் வளமும் அதிலிருந்தெழும் சரியான உச்சரிப்புகளும், தொய்வேற்படும் தோறும் நம்மை ஆட்டத்தோடு பிணைத்திருப்பவை. கிட்டத்தட்ட ஒரு சிம்ஃபொனி கச்சேரியை நிகழ்த்தி காட்டும் இசைக் கலைஞனைப்போல தனக்கு இன்றைய தொழில்நுட்ப வசதி மூலம் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்கும் திறமைதான் வர்ணனையாளர்களுக்கும் தேவைப்பட்டது.

இத்திறமையை வளர்த்துக் கொண்ட ஆங்கில வர்ணனையாளர்களில் முக்கியமானவர்கள் என பட்டியலிட்டால் ரிச்சி பெனட்,ஜெஃப் பாய்காட், இயன் சாப்பல், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, ஹர்ஸா போகலே என நீளும். இவர்களின் அற்புதமான திறமை தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பதை மேலும் சுவாரசியப்படுத்தியது. அதிலும் ரிச்சி பெனட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு காட்சி ஊடகத்தொடர்பு சம்பந்தப்பட்ட டிப்ளமோ படிப்புகளை வர்ணனையாளர் ஆகவேண்டும் என்பதற்காக படித்திருக்கிறார்.

“It is a short pitched delivery and the batsman flicked it elegantly towards finleg…” என சொல்லிவிட்டு, அசாருதீனிலிருந்து மார்க் வாக் வழியாக விராட் கோலிவரை எப்படி தங்களுடைய மணிக்கட்டை வெகுநேர்த்தியாக உபயோகிக்கிறார்கள் என்ற தொழில்நுட்பத்தை வர்ணனையாளர் விளக்கி முடிப்பதற்குள் அடுத்த பந்தை வீச பந்து வீச்சாளர் தயாராயிருப்பார். “This time, batsman is cleanly yorked and last his balance as well as his wicket…” எனச் சொல்லிவிட்டு இந்த பந்தைப் பற்றிய மிக விரிவான அலசலுக்கு மீண்டும் செல்ல முடியும். இப்படி வீசப்பட்ட பந்திற்கும், அடுத்த பந்திற்கும் உள்ள இடைவெளியை எவ்வளவு சமயோசிதமாக நிரப்புவது என்பது தான், தொலைக்காட்சி வர்ணனையாளர்களுக்குள்ள சவால்.

ஆங்கில வர்ணனை ஒரு முதிர்ச்சியை அடைந்து வெகு காலமாகி விட்டது. இப்போதுதான் தமிழ் வர்ணனை IPL வழியாக தன் ஆரம்ப படிக்கட்டுகளில் நின்று கொண்டிருக்கிறது. வல்லுநராக ஶ்ரீகாந்த் மட்டுமே உள்ளது தமிழர்களின் துரதிர்ஸ்டமே. “….அவன் வந்து ஸ்கொயர் லெக் சைடுல அடிச்சாம்பாரு… “ என்று எதார்த்தமான மொழி நடையில் அவர் பேசிக் கவர்ந்தாலும், தமிழ் வர்ணனை நீடித்திருப்பதற்கு மொழியின் சாத்தியங்களை அறிந்த ஒருவர் வேண்டும். அன்றாட பேச்சுத் தமிழுக்கும் சங்கத் தமிழுக்கும் இடைப்பட்ட ஒரு மொழியை கண்டடையவேண்டிய கட்டாயத்தில் தமிழ் வர்ணனையாளர்கள் இருக்கிறார்கள். இங்கேதான் முந்தைய தமிழ் வானொலி வர்ணனைகள் கைகொடுக்க கூடும். அதிலுள்ள நாடகத்தன்மையை மறைத்து ஒரு உரையாடல் தன்மையை கொண்டு வர முயற்சிக்கலாம்.

“நீண்ட தப்படிகள் ஓடிவந்து வீசினார்…” என்பதை “சென்னை கடற்கரையிலிருந்தே ஓடி வருகிறார் போலும்… .” எனலாம்.

“ஓட விருப்பமில்லாமல், தனக்காக பந்துகளை எல்லைக் கோட்டைத் தாண்டி ஓடவிட்டுக் கொண்டேயிருக்கிறார் கெயில்…” எனலாம்.

கல்லூரிக் காலங்களில் நான் சேர்ந்ந அணியினர் நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்வதற்கும், நடுவராக பணியாற்றுவதற்கும் பருவத்தேர்வுகளை தவறவிட்டிருக்கிறேன். கவாஸ்கர் அப்போதுதான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று வர்ணனையில் முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுழல் மன்னன் வெங்கட் ராகவன் நடுவராக கோலேச்சிய காலகட்டமும் கூட. கிரிக்கெட்டில் என்னைச் செலுத்திய இவ்விரு முக்கியமான ஆளுமைகளின் நினைவாகவே இந்தப் பதிவு.

Advertisement

2 thoughts on “கிரிக்கெட் வர்ணனை”

  1. Yes Muthukumar. We had watched so many matches just for English commentary. Added more colour and galore to the matches. Made us to mad for cricket. But lost our vigour in terms of tamil commentary

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s